இந்தியசிந்தனை- ஒரு கடிதம்,விளக்கம்

ஆசிரியருக்கு,

வணக்கம்.

நேருவும் அவரது அணுக்கர்களான மகாலானோபிஸ் பி.என்.ஹக்ஸர் போன்றவர்களும் இணைந்து இங்கே உருவாக்கிய கல்விமுறை என்பது இந்திய மரபு சார்ந்த அனைத்தையுமே மதம்சார்ந்தது என விலக்கிவைப்பதாக இருந்தது. ஒரு தேசம் அதன் தத்துவப்பாரம்பரியத்தை – உலகின் மிகப்பெரிய தத்துவப்பாரம்பரியங்களில் ஒன்றை- ஒரு சொல்கூட தன் மாணவர்களுக்கு கற்பிக்காத கல்விமுறை ஒன்றை உருவாக்கியிருக்கிறது என்றால் அது இந்தியாவில் மட்டும்தான். உலகவரலாற்றிலேயே முன்னும் பின்னும் அதற்கு உதாரணம் இல்லை. முழுமையான ஐரோப்பியக்கல்வி இங்கே பொதுக்கல்வியாக ஆகியது. சோறிடும் கல்வியே கல்வி என்றாயிற்று

இந்தியாவை முழுக்க நேசித்த, அதன் வரலாற்றை பாராட்டிய நேருவை சிலுவையில் அறைந்தது சரியா?

நேரு செய்யாத மாபெரும் இந்திய கல்வி அமைப்பை வேறு யாரேனும் முன்னேடுத்து தனியார் துறையில் செய்து காட்டியிருக்கலாமே? ஆங்கிலா இந்தியன், மெட்ரிக், மாண்டிசாரி, ICSE, CBSE இன்னும் இதற பிற கல்வி முறைகள் தனியார் முதலீட்டில் குவியும் இடத்தில் இந்திய கல்வி முறையும் இந்து மதத்தில் அக்கறை உள்ள ஆன்மாக்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு இருக்கலாமே. பிள்ளையின் கல்விக்காக கடைசி சொத்தையும் விற்க தயாராக இருக்கும் இந்திய மக்களிடத்து நல்ல கல்வி முறை என்றைக்குமே கொண்டாப்படும்.

இன்றைக்கும் நல்ல இந்திய தத்துவ பாண்டித்யம் பேசும் நபர்கள் வலைத்தளங்களில் மாற்று நம்பிக்கையாளர்கள் மீது வெறுப்பை உமிழ்தலை சகஜமாக காணமுடியும். ஓன்றிரண்டு விதிவிலக்குகளை இந்திய தத்துவ மனங்களில் கண்டெடுக்கலாம். அவர்கள் காந்திய நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். தத்துவம் படித்த ஆளெல்லாம் பாரதியாகவோ, காந்தியாகவோ பார்வை கொண்டு தேசத்தை காண முடியாது என்பது கண்கூடு.

காந்திக்கு பிறகு தேசத்தின் எந்த தேசிய பிரச்சனைக்கு(உதாரணம்: நதி நீர் பங்கீடு, சாலை வசதிகள், அறிவியல் முன்னேற்றம்,சகோதரத்துவம், வரி கொள்கைகள் , வணிக விதிகள்) இந்திய தத்துவ மரபில் இருந்து விடை காணும் பாதை எழுதப்பட்டு இருக்கின்றது?

மிக பெரிய சிக்கல்கள் முளைக்கும் பொழுது தத்துவம் தெரிந்த சிலரும் கட்சி ரீதியாகவும், சாதி ரீதியாகவும் அடித்து கொள்வதை பார்த்தால் என்ன தத்துவம் வேண்டும் என்றே தோன்றுகின்றது.

தேசத்தின் மீதான ஓட்டு மொத்த பார்வை மிக கடினம். மிக பெரிய நாடு. காந்தியின் கொலை, பிரிவினை. அதை ஒட்டிய மிக பெரிய அவநம்பிக்கைகள். இந்த சூழலில் நேரு போல் நம்பிக்கை தரும் மனிதர்களே தேசத்தை இணைத்திருக்க முடியும். அவர் அதையே செய்தார்.

ஒரு பில்லியன் மக்கள் உள்ள இடத்தில் அந்நிய சதி என்றே சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? வளரும் எல்லா நாடுகளுக்கும் சவால் உண்டு. மார்க்கெட் பொருளாதாரம் சவாலையே வைக்கும். ஓவ்வொரு நாட்டிலும் பசிக்கும் வயிறும், வேலை தேடும் இளைஞனும் உண்டு. அவரவருக்கு அவரவர் நாடே முக்கியம். நவீன சூழலில் நட்பு நாடுகள் என்ற கருத்தே கிடையாது. shared interests, shared values என்பதே மையம்.

இன்று உலகமெங்கும் வாழும் இந்திய பொறியாளனின் வாழ்க்கையில் ஒரு துளி நேருவின் பங்கு உண்டு. IIT, JNU போன்ற கல்வி நிலையங்களில் படித்து உலக அறிவியலுக்கு, வரலாற்றுக்கு, தொழில் நுட்பத்துக்கு பங்களிக்கும் இந்தியரிடத்தும் நேருவின் பங்கு உண்டு. நேரு அவர் பங்கை மனமாற செய்தார். மற்றவரும் அவரவர் பங்கை செய்யலாம் என்றே கருதுகின்றேன்.

அன்புடன்
நிர்மல்.

அன்புள்ள நிர்மல்,

இந்த ஒரு கடிதத்தில் உள்ள குழப்பங்களே நான் எழுதியிருப்பவற்றை வலுவாக நிறுவ போதுமானவை என நினைக்கிறேன்

நான் தொடர்ந்து எழுதிவருபவற்றுக்கு சம்பந்தமில்லாமல் ஒரு குறிப்பின் சில வரிகளிலிருந்து முடிவுகளுக்குத்தாவி உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றுகிறீர்கள். எளிய ஒற்றைப்படையாக்கத்தைச் செய்துவிட்டுப் பேச ஆரம்பிக்கிறீர்கள். முன்னரும் இதேபோல சிலமுறை நாம் பேசியிருக்கிறோம்

திரும்பத்திரும்ப இந்தத் தளத்தில் இந்தியாவின் நவீன ஜனநாயகத்துக்கு, அறிவியலுக்கு, தொழில்வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பை வலியுறுத்தி பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். நேரு மீதான எந்த விமர்சனமும் அந்த பங்களிப்பை குறிப்பிடாமல் முன்வைக்கப்படலாகாது என சொல்லியிருக்கிறேன். இந்தக்கட்டுரையில் கூட அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

நான் ஒற்றைப்படையாக சொல்வதில்லை. நான் சொல்வது நேர்நிலைப் பங்களிப்பையும் எதிர்நிலைப்பங்களிப்பையும் இருபக்கத்திலும் வைத்துப்பார்க்கும் ஒரு பார்வை. மறுபக்கத்தையும் சுட்டிக்காட்டித்தான் ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறேன். கருத்துக்களை எப்போதும் இப்படி இருபக்கத்தையும் கருத்தில்கொண்டுதான் வகுத்துக்கொள்ளவேண்டும். இது சிந்தனையின் ஆதாரமானவிதி. ஒரு கருத்தை சொன்னவன் அதை ஒற்றைப்படையாகத்தான் சொல்வான் என எடுத்துக்கொண்டு அதற்கு மறுபக்கத்தை சொல்ல ஆரம்பிப்பது நல்ல விவாதமுறை அல்ல

நேருவின் தொழில்நுட்ப- அறிவியல் துறைப் பங்களிப்பை நான் சொன்ன அளவுக்கு எவருமே சொல்லவில்லை. நேருவை ஒரு யுகபுருஷராகவே சித்தரித்து எழுதித்தள்ளியிருக்கிறேன்.நீங்கள் புதியதாக கிளம்பிவந்து அவர் தொழில்நுட்பம் மூலம் சாதித்தார் என்றெல்லாம் சுட்டிக்காட்டும்போது நான் எப்படித்தான் எதிர்வினையாற்றுவது?இந்தியாவை முழுக்க நேசித்த, அதன் வரலாற்றை பாராட்டிய நேருவை சிலுவையில் அறைந்தது சரியா? என்றெல்லாம் கேட்டால் நான் எப்படித்தான் விவாதிப்பது?

நேருவும் சகாக்களும் இந்தியாவின் நவீனக் கல்வியை வடிவமைத்தபோது அதன் தத்துவப் பாரம்பரியத்தை முழுமையாகவே தவிர்த்தனர் ,அது இந்திய சுதந்திரப்போராட்டகால இலட்சியங்களுக்கும் காந்திய இலட்சியங்களுக்கும் முழுமையாக எதிரானது என்பது ஒர் உண்மை. அதைச் சுட்டிக்காட்டுவது நேரு இந்திய ஜனநாயகத்துக்கும் தொழில்நுட்பத்திற்கும் அறிவியலுக்கும் எந்த பங்களிப்பையும் ஆற்றவில்லை என்று சொல்வதாக எப்படிப் பொருள்படும்? அதிலும் அக்கட்டுரையிலேயே அவர் அப்படிச் செய்தமைக்கான காரணங்களும் தெளிவாக பட்டியலிடப்பட்டு அவரது நோக்கமும் சரியானதே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஒருதேசத்தின் கல்விக்கொள்கை குறிப்பிட்டவகையில் வடிவமைக்கப்பட்டு தேசமே ஒரு திசையில் செல்லநேரிட்டதை சுட்டிக்காட்டியிருக்கிறேன். தேசத்தின் கல்வி அரசாங்கத்தால் தான் நூறுசதவீதம் வடிவமைக்கப்படுகிறது

காந்திக்கு பிறகு தேசத்தின் எந்த தேசிய பிரச்சனைக்கு(உதாரணம்: நதி நீர் பங்கீடு, சாலை வசதிகள், அறிவியல் முன்னேற்றம்,சகோதரத்துவம், வரி கொள்கைகள் , வணிக விதிகள்) இந்திய தத்துவ மரபில் இருந்து விடை காணும் பாதை எழுதப்பட்டு இருக்கின்றது?
என்கிறீர்கள். இந்திய தத்துவ மரபு மேலெடுக்கப்படாமல் அறுபட்டுவிட்டது என்று சொல்கிறேன். அது ஏன் அன்றாட விடைகளை அளிக்கவில்லை என்கிறீர்கள். மேலும் தத்துவ மரபு என்பது நதிநீர்பங்கீடுக்கும் சாலைகளை அமைக்கவும் என்ன பங்களிப்பை உடனடியாக ஆற்றமுடியும்? தத்துவ மரபு என்னும்போது நீங்கள் எதை உத்தேசிக்கிறீர்கள்? மேலைநாட்டு மொழியியல் குறியியல் மானுடவியல் பண்பாட்டியல் ஆய்வுகள் சாலை அமைக்கவும் பர்கர் சமைக்கவும் நதிநீர்பங்கீட்டுக்குமா பங்களிப்பாற்றுகின்றன?

உண்மையிலேயே இங்கு ஒரு திட்டமிட்ட விலக்கம் உள்ளது. வெல்லமுடியாத அளவுக்கு எதிர்பிரச்சாரம் உள்ளது. கொஞ்சம் சிந்திப்பவர்கள்கூட அதன் அடிமைகள். உங்கள் கடிதமே சான்று. அந்தச் சதியைப்புரிந்துகொள்வதென்பது அதில் இருந்து வெளிவருவதற்கான முதல் அவசியம். செல்லும் வழி முழுக்க அதன்பின்னர்தான்.

ஜெ


நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

நேரு

நேரு பட்டேல் விவாதம்

காந்தி நேரு கடிதங்கள்


எம் ஓ மத்தாயின் நேரு நினைவுகள்

சங்குக்குள் கடல்

முந்தைய கட்டுரைகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு
அடுத்த கட்டுரைஇலக்கியமெனும் நுகர்பொருள்