‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7

பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 1

புலரிமழையின் நிறம். அது விண்நீலமா, நிறமின்மையின் விழிமயக்கா என்று அறியமுடியாமல் குளிரக்குளிர பெய்துகொண்டிருக்கும். மயிற்தோகைக்குவியல்கள் அறைந்து அறைந்து விலக இலைக்குவைகள் தத்தளிக்க மரங்கள் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும். நீர்ப்பரப்புகள் புல்லரித்து அலைமறந்திருக்கும். புலரி மழை விண்ணின் கை என நீண்டு மண்ணின் தலைகோதும் பரிவு. இதழ்களிலிருந்து நேரடியாக செவிக்குச் செல்லும் ஒரு சொல்.

புலரிமழைக்கென ஏங்கியபடிதான் சத்யபாமை ஒவ்வொருநாளும் கண்விழிப்பாள். இளங்காற்று கடந்தோடும் ஒலியோ பனித்துளிகள் சொட்டும் தாளமோ அதுவென தன்னைக்காட்டி சிலகணங்கள் உவகையிலாழ்த்தி பின் தெளியும்போது ஏக்கம் கொண்டு விழியோரம் கசிய முலைக்குவைகள் எழுந்தமர பெருமூச்சு விடுவாள். இளமழை எங்கு பெய்தாலும் அது தன் முலைதழுவுவதாக உள்ளம் மயங்குவதென்ன? முலைமொட்டுகள் எழுந்து சிலிர்த்து நின்று அதை முதலில் அறிவதுதான் எப்படி?

பெய்வது காற்றல்ல காலையிளமழையே என்று தெளிந்தால் எழுந்தோடி புறவாயிலைத் திறந்து ஏணியில் ஏறி மேலே சென்று கன்று நோக்கும் சிறுமூங்கில் மேடையில் ஏறி மழையை நோக்குவாள். மழைப்பீலிகள் கால்களை வந்து அறைந்துகொண்டே இருக்கும். முலைமுனைகள் தெறித்து முன் எழுந்து அவளையும் கொண்டுசென்றுவிடும் என்று தோன்றும். நோக்க நோக்க நிறையாத நிறம். விழிநீலம். மண் நீலம். விண்நீலம். அப்பால் நீர் நீலம். காற்றும் ஒளியும் கொள்ளும் இந்திரநீலம்.

கீழே அன்னையின் குரல் கேட்காமல் சத்யபாமையால் இறங்கி வரமுடியாது. “அப்படி என்னதான் பார்க்கிறாயடி? மழைபார்த்து ஏங்க நீ என்ன பெரும்பாலை நிலத்திலா பிறந்திருக்கிறாய்?” செவிலியன்னை மஹதி கூவுவாள். உண்மையிலேயே பாலையில் பிறந்து நீருக்காக ஏங்கி மறைந்த ஓருயிரின் மறுபிறப்பே அவள் என்று ஆயர்முதுமகள் கலிகை சொல், நடை, விழி, கை, கால் என ஐந்துகுறி தேர்ந்து சொல்லியிருந்தாள். “பெருகிச்செல்லும் யமுனையை கண்டு கண்டு நிறைக என்று நல்லூழ் பெற்று நம்மிடம் வந்திருக்கிறாள். ஏழுமுறை பாலையில் பிறந்தவள். ஏழுபிறப்பின் தணியா விடாயை இப்பிறவியில் அருந்தி நிறைப்பாள்” என்றாள்.

“என்னடி இது? அத்தனை ஆயர்மகளிர் இல்லங்களுக்குப் பின்னாலும் யமுனை ஓடிக்கொண்டிருக்கிறதே? யமுனையை மறந்த ஒரு கணம் உண்டா நமக்கெல்லாம்?” என்றாள் செவிலியன்னை. ”யமுனைக்கரையில் வாழும் பெண்ணல்ல இவள் அன்னையே. யமுனையின் தங்கை” என்றாள் முதுமகள். “காளிந்தி கரையில் நிற்கச்சொல்லுங்கள் இவளை. கரியநீரலை வந்து இவள் கால்தொட்டுச் செல்லும். அவளறிவாள் இவள் எவளென”. அன்றுமுதல் உபகாளிந்தி என அவளை நகையாடத்தொடங்கினர் தோழியர். அவள் யமுனைக்கரைக்குச் செல்லும்போது பெண்கள் கூட்டமாக நகைத்து “அலைகளைப் பாருங்களடி” என்று கூவுவர். அதற்கேற்ப ஒவ்வொரு முறையும் ஒரு காற்று வந்து அலைவளைத்து அவள் காலடியை அணைக்கும். நாணிச்சிரித்தபடி கரையேறி நின்றுவிடுவாள்.

கருநீர் பெருகி கடல்சேரும் யமுனை விண்ணென எழுந்து விழுந்து மண்நிறையவேண்டும் என விழைந்தாள். மழையை ஊர்த்துவ யமுனா என்று சொன்னார்கள் ஆயர்குலப்பெண்கள். எழுந்து பொழியும் யமுனை. அணைக்கும் விழைவுகொண்டு ஆயிரம்கோடி கை விரித்தவள். பேருவகை எழுந்த கால்களால் துள்ளி நடமிடுபவள். கண்ணாடிக்கூந்தல் சுழற்றி கூத்தாடுபவள். முற்பகல்மழை ஒளிரும் முத்துக்களால் ஆனது. பிற்பகல் மழை ஒரு சுடுமூச்சு. நீராவியை இல்லத்து அறைகளுக்குள் நிரப்பி மூச்சுத்திணறச்செய்வது. அந்திமழை என்பது தனிமை. இருண்டு இருண்டு இருள்துளிகளாக மாறி மண்ணில் விழுவது. இருளுக்குள் ஒன்றையே மீள மீளச் சொல்லி அரற்றுவது. புலரிமழையே நீலம். கனவின் நிறம். குளிரின் நிறம். விண் நிறம். விண்மேவிய விழைவின் நிறம்.

நினைவறிந்த நாள் முதல் புலரிமழையை அவள் அறிந்திருந்தாள். அதன் நிறமொரு முகமாக மாறிய நாளில் அவள் உடல்பூத்திருக்கவில்லை. அன்று அவள் தந்தையும் தமையன்களும் களிந்தபுரியில் இருந்து வந்திருந்தனர். காடுகளுக்குள் இருந்து தாய்மாமன்களும் சிறியதந்தையரும் வந்து தனிக்குடில்களில் தங்கியிருந்தனர். குளிர்காலத்தின் முதல் பௌர்ணமியில் ஆயர்குடியின் மூத்தோர் கூடும் அவை நிகழும் என்று முழவறிவிப்பு இருந்தது. முந்தையநாள் இரவே காடுகளுக்குள் ஆநிலைகளில் இருந்து குலமூத்தார் ஒவ்வொருவராக முழவுகள் முழங்க அகம்படியினருடன் வந்து ஊர்மன்றில் தங்கினர். அவர்களுக்கான அமுது அவள் வீட்டிலிருந்துதான் சென்றது.

மதுவனத்திலிருந்து அக்ரூரர் யமுனை வழியாக வந்துகொண்டிருக்கிறார் என்று மட்டும்தான் மஹதியும் அறிந்திருந்தாள். அன்றுமாலையே அவர் வருவதாக இருந்தது. கம்சனின் படைகள் யமுனையில் சுற்றிவருவதனால் வழியில் ஓர் ஆயர்குடியில் தங்கி இரவிருண்டபின்னர் கிளம்புவதாக சொன்னார்கள். ”ஆயர்குலங்கள் கூடும் செய்தி அரசருக்கு சென்றிருக்கும். நம்மில் நால்வருக்கு ஒருவர் கம்சரின் ஒற்றன் என்று நாமறியோமா என்ன?” என்று போஜர்குலத்தின் சக்கரர் சொல்ல “அந்த ஒற்றராக நீரே இருப்பீரோ என நான் ஐயுறுகிறேன்” என்றார் விருஷ்ணிகுலத்து கர்க்கர். “வாயைமூடும்” என்று சக்கரர் சீற இரு முதியவர்கள் எழுந்து அவரை அமைதிப்படுத்தினர். “என்ன இது? நாம் பூசலிடவா வந்திருக்கிறோம்?” என்றார் மூதாயர். “இல்லையா? பூசலிடாது யாதவர் கூடிய அவையென ஏதுள்ளது?” என்றார் ஒருவர்.

ஆயர்கள் காடுகளில் தன்னந்தனியாக வாழ்ந்து பழகியவர்கள். சேர்ந்தமரவும் பேசவும் அவர்கள் பயின்றிருக்கவில்லை. ஆகவே இரவெல்லாம் சேக்கணையாத பறவைகள் போல கலைந்து ஓசையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சொலியை அவளுடைய இல்லத்தில் இருந்தே கேட்கமுடிந்தது. சாளரம் வழியாக நோக்கிய அன்னை “பசுவுக்கு கால் நான்கா என்று கேட்டாலே பூசலிட்டு கோலெடுத்துவிடுவார்கள். இவர்கள் எங்கே படைதிரட்டி போர்செய்யப் போகிறார்கள்?” என்றாள். “போரா? யார் போருக்குச் செல்கிறார்கள்?” என்றாள் அவளருகே நின்ற முதுமகள். “இங்கே என்ன செய்கிறாய் நீ? அடுமனைக்குப்போ” என அன்னை சீறினாள்.

சென்ற பலமாதங்களாக ஆயர்மன்றுகள் முழங்கிக்கொண்டேதான் இருந்தன. மழைபிழைத்து ஆறுமாதம் கடந்துவிட்டது. விண்ணிலிருந்து அனல் பெய்துகொண்டிருந்தது. காய்ந்த புல்வெளிகளை கன்றுகள் கரம்பி மண்ணாக்கிவிட்டன. புதர்களெல்லாம் இலையுதிர்த்து முட்குவைகளாயின. மரங்களின் இலைகளைக் கொய்து ஆநிரைகளுக்கு ஊட்டினர். மலைச்சுனைகள் சேறாகி உலர்ந்து வெடித்து புழுதிக்குழிகளாயின. பசுமை விரிந்து கிடந்த புல்வெளிகளில் ஆழத்துக்கிணறுகளின் அடிக்குழியில் பாம்புவிழி என நீர் இருந்தது. அவற்றை அள்ளி குடுவைக்குள் ஊற்றி அளந்து அளந்து பசுக்களுக்கு ஊட்டினர்.

பின்னர் காடுகளிலிருந்து ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு காளிந்தியின் கரைகளுக்கு வந்தனர். காட்டுக்குள் சென்று கொய்து கட்டி தலைச்சுமைகளாகக் கொண்டுவரும் புல்லை மட்டுமே அவை பகிர்ந்து உண்டன. விலாவெலும்புகள் வரிவரியென அசைய தோல்கிழித்து வெளிவரவிருப்பவை போல புட்டஎலும்புகள் புடைக்க நீருலர்ந்து நோவுதேங்கிய விழிகளுடன் பசுக்கள் தலைதாழ்த்தி நின்றன. அஞ்சிய நாகங்கள் என அவற்றின் வாய்க்குள் இருந்து உலர்ந்த செந்நாக்கு வந்து நெளிந்து மறைந்தது. வெம்மூச்சு சீறி அவை கால்மாற்றும் ஒலி தொழுவங்களிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. இரவிலும் மண்ணிலிருந்து எழுந்த அனல் காற்றிலேறி வந்து சூழ்ந்துகொண்டது.

ஆயிரமாண்டுகாலத்தில் அப்படி ஒரு கோடை வந்ததில்லை என்றனர் கணியர். ‘கதிர் கனலாகும். காளிந்தி உலையாகும். தளிர் தழலாகும். தாய்முலைப்பால் குருதியென்றாகும்’ என நூல் நோக்கி சொன்னார்கள். ஆயர்மன்றுகளில் தொன்றுதொட்டு வரும் மழைநோன்புகள் அனைத்தையும் செய்தனர். ஆல், அத்தி, அரசு, வேங்கை, கடம்பு என ஐந்து ஆண்மரங்களுக்கு மா, பலா, வாழை, செண்பகம், மரமல்லி ஆகிய பெண்மரங்களை மணம்புரிந்து வைத்தனர். சேற்றுக்குழி அமைத்து காட்டில் பிடித்துவந்த ஆயிரம் இணைத்தவளைகளை அதிலிட்டு ஓயாது மழைக்குரல் எழுப்பச்செய்தனர். அன்னைதெய்வங்களுக்கும் மலைத்தெய்வங்களுக்கும் குருதிச்சோறும் செம்மலரும் கொண்டு பலிகொடைகள் அளித்தனர். மழை விலக்கி நின்றிருக்கும் அனலுருவனுக்கு வைக்கோலால் உருவம் அமைத்து அடித்து இழுத்துச்சென்று எரியூட்டி நீர்க்கடன் செய்தனர்.

ஆனால் வானம் வெண்பளிங்குவெளியாக கண்கூச விரிந்துகிடந்தது. அதற்கு அப்பால் உலகங்களே இல்லை என்பதுபோல. இரவில் எழுந்த விண்மீன்கள் சினம் கொண்டவை போல சிவந்து உதிர்பவை போல முழுத்து எழுந்து நின்றன. விடியற்காலைகளில் வானைக்கிழித்தபடி விண்கொள்ளிகள் சரிந்து சென்றன. தொலைதூரத்து இருளில் இருந்து பசித்த ஓநாய் கைக்குழந்தைபோல குரலெழுப்பி அழுதது. எரியெழுந்த வான்கீழ் அமர்ந்து குலமூத்தார் கேட்டனர் “மூச்சுவெளியில் வாழும் எந்தையரே, நாங்கள் வாழவேண்டுமென நீங்கள் எண்ணவில்லையா? விண்ணடுக்குகளில் நிறைந்திருக்கும் தேவர்களே, தேவர்களை ஆளும் தெய்வங்களே, எங்களுக்கு அளிக்க ஒரு சொல்லேனும் உங்களிடம் எஞ்சவில்லையா?”

மேலும் மேலும் பலிச்சடங்குகள் நடந்தன. பிழைபொறுக்கக்கோரும் நோன்புகள் முடிந்தன. வானம் வெறுமைகொண்டபடியே சென்றது. ஒவ்வொருநாளும் என காத்திருந்த தென்மேற்கு மழைக்காற்று வெறும் பெருமூச்சாக வீசி கூரைகளைப்பிய்த்துவீசி மணல்சரங்களாக மரங்கள் மேல் கவிந்து அமைந்து இனி செய்வதற்கேதுமில்லை என்ற நிலை வந்தபோதுதான் ஆயர்குடிகளின் பொதுமன்று ஒன்றை கூட்டவேண்டும் என்று அக்ரூரர் அனுப்பிய செய்தி வந்தது. ”மழைபிழைத்திருப்பது ஒரு செய்தி. ஓர் எச்சரிக்கை. நம்மீது மூதன்னையர் தீச்சொல்லிட்டுவிட்டனர். இனியும் சோம்பியிருந்தால் நம் ஆநிரைகள் அழியும். நம் மைந்தர் வாழும் காடு வெறிக்கும். இதுவே தருணம்.”

ஆனால் என்ன செய்வதென்று எவரும் அறிந்திருக்கவில்லை. “எரிக்கவேண்டியது நம்மை. நம் குலக்குழவிகள் வாளுக்கு இரையானபோது உயிர்பொத்தி ஒடுங்கியிருந்த நம் கீழ்மையை… நம்மை பூண்டோடு அழிக்க தெய்வங்கள் எண்ணின என்றால் அது முறையே” என்றார் ஆயர் ஒருவர். “என்ன செய்யச்சொல்கிறீர்? வளைதடிகளுடன் மகதத்தின் சதக்னிகளின் முன்னால் சென்று நிற்கச் சொல்கிறீரா? இங்கே நம் பெண்கள் குங்குமமும் மங்கலமுமாக எஞ்சுவதையும் பொறுக்கமாட்டீரா?” என இன்னொருவர் கூவினார். “அறப்பிறழ்வுக்கு முன் உயிர்துறக்காத குலங்கள் அழிவதே இறைவிருப்பம்” என்றார் இன்னொருவர். “நாம் பறவைகள் அல்ல. விலங்குகள் அல்ல. வெறும் புழுக்கள். உயிருடனிருப்பது ஒன்றே புழுக்களின் அறம்” என்றார் மூதாயர்.

மன்றமர்ந்த முதியோருக்கு வெல்லச்சுக்குநீரும் சுட்ட இன்கிழங்கும் கொண்டுசென்று கொடுத்துவிட்டு இருளில் நெய்யகலை பொத்தி எடுத்தபடி திரும்பும்போது செவிலியன்னையின் ஆடைபற்றி உடன் வந்த பாமா “யார் வருகிறார்கள் அன்னையே?” என்று கேட்டாள். கால்களால் தரையில் உதிர்ந்துகிடந்த நெற்றுக்களை எற்றி எறிந்தபடி “இவர்களெல்லாம் யாருக்காக காத்திருக்கிறார்கள்?” என்றாள். “சும்மா இரடி… என்ன விளையாட்டு இது? நீ என்ன கைக்குழந்தையா?” என்றபின் மஹதி “யார் வந்தால் என்ன? இந்த யாதவரெல்லாம் கூடி கம்சனை வெல்லவா போகிறார்கள்? சிற்றெறும்புகள் கூடி சிம்மத்தை என்ன செய்யமுடியும்?” என்றாள். ”ஏன்? அவர் என்ன வெல்லமுடியாதவரா?” என்றாள் பாமா.

“குழந்தை, வேளிராயினும் ஆயராயினும் தொழிலென ஒன்றைச்செய்தால் தவிர்க்கமுடியாத பழி ஒன்றையும் சூடியாகவேண்டும். மண்புழுக்களை வெட்டிக்கிளறி பறவைகளை கடிது ஓட்டி பயிர் வளர்க்கிறார்கள் வேளிர்கள். நாமோ கன்றை விலக்கிக் கட்டி அது நா நீட்டி ஏங்கித்தவிக்க பால் கறந்து விற்கிறோம். அந்தப்பழியெல்லாம் ஆவியாக மேலே சென்று வானில் எங்கோ சேர்ந்துகொண்டே இருக்கிறது. அது முழுத்துத் துளித்துச் சொட்டி நம் மீது பெரும்பாறையாக விழுகிறது. யுகத்துக்கு ஒரு பேரழிவை நாம் கண்டேயாகவேண்டும். அது நெறியென நின்றிருக்கும் தெய்வங்களுக்கு நாம் அளிக்கும் பலி. அப்பலிகொள்ள வந்தவன் கம்சன். அவன் குடிக்கும் நம் குலத்துக்குருதியெல்லாம் உண்மையில் வஞ்சம் கொண்ட தெய்வங்களின் விடாய் தீர்க்கவே.”

விழியோரம் நீர் மல்கி மஹதி சொன்னாள் “எத்துணை குருதி! எண்ணவே நெஞ்சு நடுங்குகிறது. நாம் கறந்த பாலெல்லாம் குருதியென ஆனதுபோல. காளிந்தியே குருதியென பெருகிச்செல்வதுபோல கனவுகாண்கிறேன். விழிமணிகளில் திகைப்புடன் வெட்டுண்டு இறந்த குழந்தைகளைக் கண்டு எழுந்தமரும்போது என் முலைக்கச்சு நனைந்திருப்பதை உணர்வேன். அதன் மேல் என் விழிநீர் சொட்டும். அவை முந்தைக் கடன் தீர்த்து விண்ணேகும் மூதாதையர் என்று குறிசொல்லும் முதுமகள் சொன்னாள். அப்படியென்றால் அவை ஏன் அப்படி பதைத்து விழிக்கவேண்டும் என நான் கேட்டேன். அவள் விடையின்றி விழிதாழ்த்தி பெருமூச்சு விட்டாள்.”

பாமா “அரக்கர்களைக்கொல்ல தெய்வங்கள் வந்து பிறக்கும் என்கிறார்களே?” என்று கேட்டாள். “நம் கடன் தீர்வது வரை தெய்வங்களும் காத்து நின்றிருக்கும் மகளே” என்றாள் மஹதி. “நான் தெய்வங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்…” என்று பாமா சொன்னாள். அவள் தோளில் வெம்மையான கைகளை வைத்து மெல்ல அணைத்தபடி “வேண்டிக்கொள் மகளே. வில்திறன் கொண்ட மாவீரன் ஒருவன் நம் குடியில் தோன்றவேண்டும் என்று. அவன் கருணையை வலக்கையில் படைக்கலமாகக் கொண்டிருக்கவேண்டும். இடக்கையில் ஒருபோதும் பிழைபொறுக்காத பெருஞ்சினம் ஒளிவிடவேண்டும்…” என்றாள் மஹதி. ”என்றும் மாவீரர்கள் கன்னியரின் நோன்பின் பயனாகவே பிறக்கிறார்கள் என்கின்றன கதைகள்.”

புழுதிமணத்துடன் இருளில் சுழன்று வந்த காற்றில் இலைகள் ஓசையிட்டு அமைந்தன. தொலைவில் ஒரு வேழாம்பலின் விம்மல் எழுந்தது. மஹதி பெருமூச்சுடன் “மூச்சுத்திணறுகிறது. பால்கொதிக்கும் அறைக்குள் நிற்பதுபோல. மழை பெய்யும் இன்றிரவு” என்றாள். ”தவளைதேர்ந்து சொல்லும் முதுமகன் இந்த வளர்பிறையிலேயே மழை விழும் என்றான். ஆனால் அவர்கள் சொன்ன குறிகள் பன்னிருமுறை பிழைத்துவிட்டன. வானத்தை நோக்கினால் எண்ணுவதற்கும் நோக்குவதற்கும் ஏதுமில்லை என்றே தோன்றுகிறது” என்றாள்.

அமைதியில் இருளாழ்ந்துகிடந்த குறுங்காட்டை சூழ நோக்கி செவிலியன்னை சொன்னாள் “மழைக்குரலே இல்லை. தவளைகள் நாசோர்ந்துவிட்டன போலும். ஆனால் மழை வருமென்று என் உள்ளம் சொல்கிறது. என் விழைவாக இருக்கலாம்… இதோ இந்த செண்பகம்கூட வெள்ளாட்டின் காதுகளைப்போல எஞ்சிய இலைகளைத் தாழ்த்தி பெருமூச்சுவிட்டபடி நிற்கிறது. அதன் இலைகளிலிருந்து நீர் வற்றிவிட்டது. எஞ்சிய ரசத்தை வேர்களில் வைத்துக்கொண்டு அது காத்திருக்கிறது. புல்வெளிகளும் காடும் காத்திருக்கின்றன… அத்தனை இலைகளும் விடாய் மூத்து வெளிவந்த நாக்குகள் என தோன்றுகின்றன. இரவில் காடு மழைமழைமழை என்று புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கிறேன்.”

பாமா அவள் கைகளைப்பிடித்து தலையை அவள் இடையுடன் சேர்த்துக்கொண்டு “ஆம், நானும் கேட்டேன்” என்றாள். ”நானும் அதனுடன் சேர்ந்துகொண்டு மழைமழை என்று சொல்லிக்கொண்டே விழித்திருந்தேன். பின்னர் உள்ளம் கரைந்து கலுழ்ந்தேன். நீங்களெல்லாம் துயின்றுகொண்டிருந்தீர்கள். இருளில் தனிமையில் விடியும்வரை விழிகரைந்து கொண்டிருந்தேன்” என்றாள்.

மஹதி அவளை தோள் சேர்த்து நிறுத்தி “அழுதாயா? எதற்கு?” என்றாள். “தெரியவில்லை அன்னையே. ஆனால் விடியலில் நான் எப்போதும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன்” என்றாள். கனிந்த குரலில் ”ஏனம்மா? உனக்கு என்ன துயர்?” என்றாள் மஹதி. பாமா பெருமூச்சுவிட்டு “தெரியவில்லை. ஆனால் நெஞ்சு முழுக்க துயர் நிறைந்திருக்கிறது அன்னையே. எத்தனை அழுதாலும் துயர் குறைவதுமில்லை” என்றாள்.

சில கணங்களுக்குப்பின் “இந்தக்கோடை…” என்று சொல்லி பாமா பெருமூச்சுவிட்டாள். ”அன்னையே, நான் கோடையை எண்ணிக்கொள்வதே இல்லை. வெளியே மண்பொழியும் காற்றைக்கூட மழையென்றே எண்ணிக்கொள்கிறேன்” என்றாள் பாமா. “அந்த ஓசை என்னை கிளர்ச்சிகொள்ளச் செய்கிறது. சிலசமயம் குளிராக வந்து சூழ்ந்துகொண்டு புல்லரிக்கக்கூட வைக்கிறது. அதன்பின்னர்தான் நான் அழத்தொடங்குகிறேன்.”

மஹதி சற்று சிந்தித்தபின் “நீ கனவு காண்கிறாயா?” என்றாள். பாமா “ஆம்” என்றாள். “என்ன கனவு?” பாமா “நான் எங்கோ செல்வதுபோல… புதிய நிலங்கள். நான் இதுவரை பார்த்தேயிராத ஒரு நகரம்” என்றாள். மஹதி “நகரமா?” என்றாள். “ஆம், அன்னையே. வியப்புக்குரிய நகரம் அது. மண்ணில் அப்படி ஒரு நகரம் இருப்பதாக எவரும் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை…” மஹதி இருளில் நின்றுவிட்டாள். அவர்களைச் சுற்றி யமுனையின் பாசிநீர் மணத்துடன் வந்த தென்காற்று சூழ்ந்து வளைத்துச்சென்றது.

“அந்த நகரம் கடலின் கரையில் பெரிய இரு குன்றுகளின் மேல் இருந்தது” என்று பாமா சொன்னாள். “தாமரைக்குளம் போல வெண்ணிறமான மாடங்கள் சூழ்ந்த வட்டச்சுருள் வடிவமான நகரம். அதன் உச்சியில் பொன்னிறத்தாமரைகள் போல அரண்மனைகள். அங்கிருந்து நோக்கினால் கீழே கடலுக்குள் துறைமுகம்.” மஹதியின் கைகளைப்பற்றிக்கொண்டு “அந்தத் துறைமேடை நமது துறைமேடையைப்போல பல ஆயிரம் மடங்கு பெரியது. அங்கு வந்திருந்த கலங்களுக்கெல்லாம் சிறகுகள் இருந்தன. வெண்ணிறமும் செந்நிறமும் பொன்னிறமும் கொண்ட சிறகுகள். வண்டுகள் போல தும்பிகள் போல வண்ணத்துப்பூச்சிகள் போல பெரும் நாவாய்கள். ஒவ்வொன்றும் நமது படகுகளைப்போல ஆயிரம் மடங்கு பெரியவை. ஆனால் அவை கடலில் நீந்தவில்லை. கடலுக்குமேல் எழுந்து பறந்து சென்றன” என்றாள்.

“கந்தர்வர்களின் நகர்” என்றாள் மஹதி. “வெண்முகில்களின் அடுக்குகளுக்கு அப்பால் எங்கோ உள்ளது அது. கந்தர்வர்கள் கண், குழல், இதழ், கன்னம், முலை, கை, இடை என்னும் ஏழு அழகுகள் கொண்ட கன்னியரை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மண்ணில் மலர்தேடும் தும்பிகளாக இறங்கி வருகிறார்கள். இசைமீட்டியபடி சுழன்று இல்லங்களுக்குள் நுழைந்து பெண்களை தேடுகிறார்கள். எப்போதாவது தும்பியோ தேன்வண்டோ உன் மேல் அமர்ந்ததா? நன்றாக நினைத்துப்பார்.” பாமா “ஆம் அன்னையே ஒருமுறை சிறிய நீலப்பொன்வண்டு ஒன்று என் மேல் அமர்ந்தது” என்றாள். மஹதி “எங்கே?” என்றாள். பாமா ஒருகணம் தயங்கி “என் நெஞ்சில்” என்றாள்.

“அது கந்தர்வனேதான். அவர்கள் மட்டுமே அங்கே அமர்வார்கள்…” என்று மஹதி சொன்னாள். “பெண்ணை கண்டுகொண்டதுமே கந்தர்வர்கள் அவள் கனவுக்குள் வரத்தொடங்கிவிடுவார்கள். வண்ணச்சிறகுகளுடன் கைகளில் யாழேந்தியவர்கள். அவர்களின் கண்கள் இந்திரநீலக் கற்கள் போல ஒளிவிடும். அவர்கள் பேசுவதில்லை. அவர்களுக்கு குரலே இல்லை. இசையே அவர்களின் மொழி.” பாமா “எனக்கு அச்சமாக இருக்கிறது அன்னையே” என்றாள். மஹதி “என்ன அச்சம்? கந்தர்வர்கள் தொட்ட மலரும் பெண்ணும்தான் மண்ணில் தெய்வங்களுக்கு மிகப்பிடித்தமானவை” என்றாள். ”அந்த நகரம் அவ்வளவு பெரியது… ஆனால் நான் இறகுபோல எடையில்லாமல் பறந்தபடி அதன்மேல் ஒழுகியலைந்தேன்.” மஹதி மகிழ்ந்து “சொன்னேன் அல்லவா? கந்தர்வர்களின் நகரமேதான்” என்றாள்.

இல்லம் திரும்பும்வரை பாமா பேசாமல் வந்தாள். திண்ணைவிளக்கின் செவ்வெளிச்சம் விரிந்துகிடந்த முற்றத்தை அடைந்ததும் மெல்ல மஹதியின் கையைப்பற்றி “அன்னையே” என்றாள். “என்னம்மா?” என்றாள் மஹதி. “அந்த கந்தர்வன் ஏன் நெஞ்சின் மேல் அமர்ந்தான்?” என்றாள். மஹதி குனிந்து விழிகளில் விளக்கின் சுடர்மணிகள் தெரிய சிரித்து “அங்கே இரு அழகிய வெண்மலர்கள் விரியப்போகின்றன. இப்போது அவை அரும்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்” என்றாள்.

முளைக்காத நீலச்சிறு மணிகள் கூசிச் சிலிர்த்து எழ அவள் மார்பை கைகளால் கட்டி இறுக்கியபடி “சீ” என்றாள். மஹதி சிரித்தபடி அவள் தோளை அணைத்து “அவை அப்படித்தான் இப்போதிருக்கும். பின்னர் கூச்சம்தரும் சுமைகள் ஆகும். ஆனால் எவருக்காக அவை படைக்கப்பட்டிருக்கின்றனவோ அவரது விழிகள் பட்டபின்னர் அவையே நீ என உணர்வாய்” என்றாள். காலால் தரையைத் தேய்த்து “இல்லை” என்றாள். மஹதி சிரித்து “என்ன இல்லை?” என்றாள். “ஒன்றுமில்லை… எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை” என்றாள். “சொல்… என்ன பிடிக்கவில்லை?” என்றாள் மஹதி. “இவற்றை!” அவள் தலைமுடியைப்பிடித்து “எவற்றை?” என்றாள். ”ப்போ” என்று அவள் சொல்லி உதட்டைக் கடித்து தலைகுனிந்தாள்.

“என்னடி கண்ணே?” என்றாள் மஹதி. “எனக்கு இவை வேண்டியதில்லை.” மஹதி சிரித்து “அவை அமுதசுரபிகள் அல்லவா? வேண்டாமென்றால் ஆயிற்றா?” என்றாள். பாமாவின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. தலைகுனிந்து “நான் அப்படியெல்லாம் ஆவது எனக்குப்பிடிக்கவில்லை” என்றாள். மஹதி “ஆகாமல் இருக்கமுடியுமா கண்ணே?” என்றாள். “நான் ஏன் இப்படியே இருக்கக் கூடாது? நான் இப்படியே இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்” என்றாள். “ஏன்?” என்று மஹதி சிரிப்புடன் கேட்டாள். “என்னை இன்னொருவர் பார்த்து…” என்றதும் அவளுக்கு விம்மல் வந்துவிட்டது. மஹதி அவள் தலையைப்பற்றி மெல்ல உலுக்கி “காதல்கொண்ட ஆணின் பார்வையும் தொடுகையும்தான் பெண்ணை மலர்விக்கின்றன…“ என்றாள்.

அன்னை முற்றத்தில் இறங்கிநின்று “அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நாளை மன்றுகூடலுக்கான உணவு முழுக்க இங்கிருந்துதான் செல்லவேண்டும். இப்போதே அடுப்பில் கலமேற்றினால்தான் காலையில் அமுது சித்தமாக இருக்கும்” என்றாள். “நூறு பேருக்கு அமுதளிப்பதென்பது யாதவ மன்னர் சத்ராஜித் இல்லத்திற்கு ஒரு சுமையா என்ன?” என்றபடி மஹதி முன்னால் சென்றாள். “நூறு பேருக்கு என்று சொல்லாதே. நூறு கிழவர்களுக்கு என்று சொல். அத்தனைபேரும் பாக்கு மென்று நாக்கு தடித்தவர்கள். வானமுதை அள்ளி வைத்தாலும் உப்பில்லை புளியில்லை என்றுதான் சொல்வார்கள். பாமை, நீ சென்று படுத்து துயில்கொள். நாளை பிரம்மமுகூர்த்தத்திலேயே எழுந்தாகவேண்டும்” என்றாள்.

பாமா அங்கிருந்து விரைந்து விலகத் துடித்துக்கொண்டிருந்தாள். திண்ணையில் ஏறி உள்ளே ஓடினாள். தன் அறைக்குள் சென்று ஈச்சைப்பாயை எடுத்து விரித்து படுத்துக்கொண்டு பின்னலைத் தூக்கி மார்பின்மேல் போட்டு பிரித்தும் பின்னியும் அளைந்தபடி அவள் கூரையை நோக்கிக்கொண்டிருந்தாள். வெளியே காற்றின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. மழையென. அதுவும் மழையே. நீரற்ற மழை. மண் அறியாத மழை. ஆனால் இளமயக்கு கொண்ட துயிலில் அவளை குளிர்நீராட்ட அதனாலும் முடியும்.

மழை இல்லை என்று அவள் எப்போதுமே எண்ணியதில்லை. அது நெடுந்தொலைவில் எங்கோ இருக்கிறது. பல்லாயிரம் காதத்துக்கு அப்பால். அங்கே பெரும்பாலை வெளிகள் காய்ந்து உலர்ந்து கனன்று தவம் செய்கின்றன. அவற்றின்மேல் மெல்லிய குளிர்காற்று பரவுகிறது. அதன்பின் முத்துக்கள் போல குளிர்ந்த சொட்டுக்களாக உதிர்ந்தபடி காற்று வருகிறது. மென்குளம்புகளுடன் மான்குட்டிகள் தாவிச்செல்வது போன்ற மழை. மழை வெந்துபழுத்த மலைகளை மூடி அவை சீறி ஆவியெழச்செய்கிறது. சரிவுகளில் கரவுகளில் குளிரக்குளிர வழிந்து நிறைகிறது. பின் இலையுதிர்த்து நிற்கும் காடுகள்மேல் பரவுகிறது. ஆறுகளை சமவெளிகளை ஊர்களை மூடியபடி வந்துகொண்டே இருக்கிறது.

கண்களைமூடியபடி அவள் அந்த நகரத்தை எண்ணிக்கொண்டாள். அந்தக் குவைமாடங்களுக்குமேல் மெல்ல ஒழுகத்தொடங்கினாள். அந்நகரம் அவள் மிக அறிந்ததாக இருந்தது. அதன் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு மாளிகை முகப்பும் அவள் வாழ்ந்து பயின்றவை என தெரிந்தது. கீழே ஓசையின்றி அலைகள் தழுவும் துறைமேடையில் சிம்மமுகம் கொண்ட நாகம் நெளியும் கொடியுடன் ஒரு பெருநாவாய் வண்ணச்சிறகு விரித்து ஓசையின்றி காற்றில் எழுந்து முகில்களில் பறந்து மறைந்தது. இது கந்தர்வர்களின் நகரா? ஆனால் சாலைகளில் பார்த்தவர்கள் அனைவருமே மானுடர்கள். சந்தைகளில் தலைப்பாகைகளின் வண்ணங்கள் சுழித்தன. அரண்மனை முகப்பில் முரசுகளுடன் நின்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள்.

மழைக்காக உடல்கூர்ந்தபடி அவள் விழிமயங்கினாள். “இந்த அறைக்குள் ஓர் அகல் எரியவேண்டுமென சொன்னேன் அல்லவா? கன்னியர் துயிலும் அறைக்குள் எப்போதும் ஒளியிருக்கவேண்டும்…” என்று செவிலியன்னை சொல்வதை கேட்டாள். துயிலிலேயே புன்னகை செய்தாள். சாளரத்துக்கு அப்பால் இருளுக்குள் மரங்கள் இலையசையாமல் காத்திருந்தன. அவள் தன் நெஞ்சில் இரு மொட்டுகள் மெல்ல இருப்புணர்த்துவதை உணர்ந்தாள். பெருமூச்சுடன் குப்புறப்படுத்து அவற்றை ஈச்சம்பாயுடன் சேர்த்து அழுத்திக்கொண்டாள். பாறைக்கு அடியில் நீர்பட்டு உயிர்கொண்டன இரு கருநீல விதைகள்.

முந்தைய கட்டுரைமன்னிக்கவும்…
அடுத்த கட்டுரைகரடி-கடிதம்