மனைவியிடம் காந்திய வழியில் நடத்திய கடும் அற போராட்டத்திற்கு பிறகு எனக்கு ஊட்டி முகாம் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால் அதற்குள் நேரம் முடிந்த விட்டப்படியால், விஜயராகவன் மன்னித்து கொள்ளுங்கள், ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார். (என்ன செய்வது, காந்திய வழி என்றாலே நேரம் ஆகதானே செய்யும்). ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் சௌந்தர்யிடம் ஃபோன் செய்து பேருந்து முன் பதிவு செய்ய சொல்லி விட்டேன். ஆனால் பிறகு எந்த செய்தியும் வாராததால், எனது தொங்கி போயிருந்த முகத்தை பார்த்து என் மனைவிக்கே மிக கவலை ஆகி விட்டது. செந்தில் குமார தேவன் ஃபோன் செய்து எனது முகாம் அனுமதியை உறுதி செய்த பிறகு, என்னை விட என் மனைவிக்கே மிக மகிழ்ச்சியை கொடுத்தது. (காந்திய வழியே உறுதியான வெற்றியை தரும் என்ற எண்ணம் மேலும் பலபட்டது).
தமிழர்களின் punctuality மேல் அபார நம்பிக்கை இருந்தாலும், ஏதோ ஒரு நப்பாசையால் ஏழு மணிக்கே கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று விட்டேன். பிறகு ஒருவர் ஒருவராக வர தொடங்கினார்கள். சௌந்தர் மற்றும் காளி இருவரையும் முன்னரே பார்த்து இருந்தேன், மற்றவர்களை அப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.
சௌந்தர்க்கு மிக ஆன்மீகமயமான தேஜஸ் கொண்ட முகம். தான் ஒரு யோக மாஸ்டர் என்ற அறிமுக படுத்திய போதுதாண் அதற்கான காரணம் புரிந்தது. (என்றாவது நமது குழுமத்திற்கு நிதி நெருக்கடி வந்தால், சௌந்தர்க்கு காவி உடை அணிவித்து “ஹர ஹர மகா தேவக்கீ” என்று சொல்ல வைத்தால் போதும், பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்). சிறிது நேரம் கழித்து ஒருவர் மிக வேகமாக “நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாய்” எங்களை நோக்கி வந்து கொண்டு இருந்தார். நான் யாருடா இது இரவு எட்டு மணிக்கு மேல ரோட்ல “March Fast” பண்ணிக்கிட்டு வரான் என நினைத்து கொண்டு இருந்தேன். அவர் தன் பெயர் அறிவழகன் என்று அறிமுக படுத்தி கொண்டார். பரவாயில்லே, ஜிம் பாய்ஸ் எல்லாம் இப்ப இலக்கியம் படிக்க ஆரம்பித்து விட்டாராகளே என்று பெருமிதம் கொண்டேன். ரப்பர் ஃபேக்டரி யில் வேலை பார்க்கிறார்.
பின்னர் டாக்டர் ஜீவியும், நமது குழுமத்தின் இளம் ஆண் ஆழகன் ரவியும் வந்தார்கள். (கொஞ்சம் வயதான ஆண் அழகர்கள் பட்டதிற்கு ஜாஜாவிற்கும் அரங்காவிற்கும் கடும் போட்டி இருக்கும்). ரவி நான் எப்பொழுதோ பார்த்த போர்னோ படத்தின் கதாநாயகன் போல இருந்தான். கடைசியாக கவிதை printout களை எடுத்து காளி வந்தார். சிறிது நேர பழக்கதிற்குள்ளே நெடுங்கால நண்பர்கள் போல் பேச ஆரம்பித்தோம். காளி பார்பதற்கு சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையின் அடுத்த வாரிசு போலவே இருந்தார்.
பஸ் ஏறியவுடனே இலக்கிய ஜமா ஆரம்பித்து விட்டது. வண்டியின் க்ளினரும் சக பயணிகளும், எங்களை ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தனர். கத்திபாராவில் ஸ்ரீநிவாசன் தம்பதிகள் ஏறியவுடன் எங்கள் ஜமாவின் குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. வெண்முரசுவின் எல்லா பகுதிகளையும் இவர்கள் தான் முதலில் படிக்க தொடங்குகிறார்கள் என்ற பொழுது எங்களுக்கு எல்லாம் பொறாமையாக இருந்தது. அவர்கள் பிழை திருத்தம் அனுபவத்தை பற்றி கேட்டு கொண்டு இருந்தோம். ஒரு பகுதியை பிழை திருத்த ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள். பெரும்பாலும் எழுதி வரும் போதே பிழைகள் அதிகம் இருக்காது என்று சொன்னார்கள். என்ன சார், வியாசர்க்கு பிள்ளையார் போல், ஜெவிற்கு நீங்களா என்று கேட்ட பொழுது, ஜெ பல சமயம் பித்து பிடித்தவர் போல் எழுத தொடங்கி விடுவார் என்றும், அப்பொழுது அவர்கள் அதை பிழை திருத்துவதே மிக கடினம் ஆகி விடும் என்று சொன்னார்கள். அவ் தம்பதிகள் கடமையாக இதை செய்ய வில்லை என்பதும் மிகவும் ரசித்து ரசித்து இதை செய்கிறார்கள் என்பதை நாங்கள் உடனடியாக புரிந்து கொண்டோம்.
இலக்கிய விவாதங்கள் ஆரம்பித்த ஒரு சில மணி துளிகளில் எனக்கு தெரிந்து விட்டது நான்தான் அங்கு இலக்கியத்தின் இளம் வாசகன் என்று. வயதில் அல்ல உண்மையான இலக்கியம் படிப்பதில். நான் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தன் காந்தி வழியாக ஜெமோ விற்கு வந்து வெண்முரசு படித்து இருந்தேன். அறம் தொகுப்பும் படித்து இருந்தேன். ஆனால் அங்கு இருந்தவர்களோ குறைந்த பட்சம் 5-6 வருடங்கள் ஜெயை படித்து கொண்டு இருக்கிறார்கள். நான் படித்த நாவல்கள் என்று பொன்னியின் செல்வன், கடல் புறா, உடையார் என்ற பொழுது அவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அவர்கள் விவாதம் நாஞ்சில், சாரு, எஸ்ரா, புதுமை பித்தன், ஜெயகாந்தன் என்று நீண்டு கொண்டே இருந்தது.
வெள்ளி அன்று முதல் நாள் எட்டு மணி அளவு நாங்கள் குருகுலம் வந்து சேர்ந்தோம். வழியிலே பலர் சிறு கூட்டம் கூட்டமாக பேசி கொண்டு இருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் ஏதோ ஒரு படைப்பு பற்றியே பேசி கொண்டு இருந்தார்கள். பல்லை விளக்கும் பொழுது ஒருவர் “தத்.. கி” என்று ஏதோ சொல்லி கொண்டு இருந்தார். அட பாவி காலம் காத்தலையே இப்பிடி கெட்ட வார்த்தை பேசி கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன். அவர் வாய் கொப்பளித்த உடன் தான் தெரிந்தது அவர் பேசி கொண்டு இருந்தது “தத்ஸாவத்ஸ்கி” பற்றி என்று. காலை சிற்றுண்டி பொழுதே நண்பர்கள் அறிமுகம் ஆகி கொண்டே இருந்தார்கள். இங்கு வருவதற்கு சில நாட்கள் முன்னர் தான் “ஒரு கனத்திற்கு அப்பால்” சிறு கதை பற்றி ஒரு பாராட்டு பதிவு குழுமத்தில் எழுதி இருந்தேன் மற்றும் அதில் பாலியல் தளங்கள் பார்த்த அனுபவங்களும் எழுதி இருந்தேன். என் பெயரை கேட்டவுடன் பலர் “ஒ!! நீங்கள் தான் அந்த மேட்டர் பத்தி எழுதினதா” என கேட்பது சங்கடமாக இருந்தாலும் பிறகு அது பழகி விட்டது.
காலை பத்தரை மணிக்கு அரங்கு ஆரம்பம் ஆகியது. விழாவின் நிகழ்ச்சிகள் பற்றி யோசித்து வைத்து இருந்தாலும், ஸ்ரீநிவாஸ் மிக சிறப்பாக பதிவு செய்து விட்டதால் அதை மறுபடியும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். நிகழ்ச்சி நாஞ்சிலின் சிறிய உரையில் இருந்து ஆரம்பம் ஆகியது. நாஞ்சில் தன் ஆரம்ப கால எழுத்து உலகில் ஜெகேவின் பாதிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து கடந்த பல வருடங்களாக இந்த இலக்கிய முகாமில் பங்கேற்ற அனுபவங்களை பற்றி சிலாகித்து சொன்னார்.
ஜடாயுவின் ஆரம்ப உரையுடன் ஜெகே சிறுகதை அரங்கு ஆரம்பம் ஆகியது. ஜெகேவின் எழுத்து, அவரின் ஆளுமை பற்றி ஒரு கோட்டு சித்திரம் வரைந்து விட்டு சிறுகதைகள் பற்றி பேச தொடங்கினார். ஜடாயு ஏழுதிய பல கட்டுரைகளை “தமிழ் ஹிந்து” தளத்திலும், இங்கும் வாசித்து இருப்பதால் காலையிலே அவரிடம் அறிமுக படுத்திகக்கொண்டேன். ஜெகேவின் சிறுகதைகள் விரிவாக விவாதிக்க பட்டது.
பிறகு மதியம் கோவை சுரேஷ் ஜெகேவின் நாவல்கள் பற்றி பேச தொடங்கினார். சில நொடிகளில்லேயே சுரேஷின் வாசிப்பு அனுபவமும் அவர் அதை தொகுத்து கொள்ளும் விதமும் மிகவும் பிடித்து இருந்தது. பிறகு அவரிடம் பேச பேச அவர் ஒரு “multi faceted personality” என தெரிந்தது. அவரிடம் சிறுகதை, நாவல் மட்டும் அல்ல வரலாறு, கவிதை, தத்துவம் மற்றும் இசை பற்றி ஆழமான சிந்தனை இருந்தது. இரவு “எனக்கு பிடித்த சிறுகதை” அமர்வு நடந்தது. ஒரு சிறுகதை என்றால் என்ன, அதை எப்படி வாசித்தல் வேண்டும், அதன் உட்கருத்து என்ன, என்று எனக்கு ஒரு பெரிய தெளிவை ஏற்படுத்தியது. முக்கியமாக ஜெ “கடன் தீர்ந்தது” என்ற சிறுகதை சாதார்ணமாக சென்று அதன் கடைசி பகுதி எப்பிடி அதை ஒரு நல்ல சிறுகதையாக மாற்றியது என்று கூறியது ஒரு நல்ல சிறுகதையின் மாதிரி வடிவத்தை கண் முன்னே நிறுத்தியது.
அரங்கா மற்றும் செல்வா கூட்டணி போட்டு எல்லாரையும் கலாய்த்த படியே இருந்தனர். அவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் சிரிப்பும் கூத்துமாக இருந்தது. செல்வா “கண்டி வீரன்” பற்றி பேச போகிறார் என்ற பொழுதே நண்பர்கள் அதை ஆவலாக எதிர் பார்க்க தொடங்கினர். செல்வா மூனரை தி.க. பற்றியும் பேனாமுனை பேரின்பன் பற்றியும் பேசி அரங்கை படு சுவார்ஸ்யமாக நடத்தி சென்றார். குறிப்பாக அவர் “எதிரி” கதையில் வரும் ஒரு பழங்குடி பாடலை இளையராஜா பாணியில் பாடியது அரங்கை குலுக்கியது.
அடுத்த நாள் காலை “கம்ப ராமாயானம்” – கிட்கிந்தா காண்டம் ஆரம்பம் ஆகியது. முதல் முறையாக “கம்ப ராமாயணம்” வாசிக்க கேட்ட எனக்கு அது பெரிய மயிர்கூச்சரியும் அனுபவமாக இருந்தது. நாஞ்சில் அதை வாசித்து பொருள் விளக்க, ஜடாயு தன் வாசிப்பில் அதை விரிவாக விளக்கி, தேவையான இடத்தில் வான்மிகி ராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டி, சில இடங்களில் பாடியும் ஒரு பெரிய அனுபவத்தை எங்களுக்கு வழங்கி கொண்டு இருந்தார். ஜெ கம்ப ராமாயணத்தை மரபு ரீதியாக அல்லது உரைகள் ரீதியாக பார்க்காமல் ஒரு உச்சபச்ச அழகியில் ரீதியாக அதை கொண்டு சென்றது, ஒரே படத்தை ஒரே திரையில், இரண்டாக பார்ப்பது போல் இருந்தது. கீதா அவர்கள் கம்ப ராமாயணத்தின் ஒரு செய்யுளில் “வஞ்சனை அரக்கன்” என்பதற்கு பதில் “வஞ்சனை அரங்கன்” என்று வேண்டும் என்றே படித்த பொழுது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்தது. அரங்கா மேல் எத்தனை பேர் காண்டாக இருக்கிறார்கள் என்றும் புரிந்தது.
மதியம் “எனக்கு பிடித்த கவிதை” அரங்கு ஆரம்பம் ஆகியது. சௌந்தர், ரவி, காளி போன்ற நண்பர்களோடு நாங்கள் அந்த கவிதைகளை பற்றி பேசி கொண்டு இருந்தோம். அந்த கவிதைகளில் Poetic moments என்று சொல்லக்கூடிய தருணங்கள் என்று எதுவும் இல்லயே என்று. முக்கியமாக “ தனி தவில் கலைஞர்” மற்றும் “எனது ஆட்டம்.. “ போன்ற கவிதைகள். ஆனால் அரங்கு ஆரம்பித்து, கவிதைகள் படித்து விவாதிக்கும் பொழுது அந்த கவிதைகள் எனக்குள் பெரியதாக விரிய தொடங்கின. இன்று இருக்கும் நவீன கவிதை என்பது குறைந்த பட்ச வார்த்தைகளை பிரியோகித்து அதிக அர்த்தங்களை வாசகன் மனதில் விரிய செய்தல் என்று ஜெ சொன்னார். கவிதையும் அதன் வரையறைகளும் காலம் காலமாக எப்பிடி மாறி கொண்டே வருகின்றன என்பதை ஜெ விளக்கினார். நவீன கவிதைகள் மக்களிடயே புழங்க கூடிய சாதாரணமான வார்தைகளைதான் உபோயாக படுத்தி கொள்கின்றன என்றும் சொன்னார். சங்க கால, மரபு கவிதைகள் காலம் காலமாக மாறி இன்று இருக்கும் நவீன கவிதைகளாக எப்பிடி உருமாற்றம் அடைந்து இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது, இப்பொழுது உள்ள நவீன கவிதைகள் பிற்காலத்தில் எப்பிடி மாறும்? கவிதை வடிவு மாற்றம் அதன் உச்சத்தை அடைந்து விட்டதா? இல்லை மேலும் மாற்றம் வரும் என்றால் எத்தகைய மாற்றம் வரும்? என்று எல்லாம் நினைக்க தூண்டியது. இதை பற்றி அரங்கில் விவாதிக்க ஆசையாக இருந்தது ஆனால் அப்பொழுது அங்கே படிக்க பட்டு கொண்டு இருந்த கவிதை மழையில் அனைவரும் நனைந்து கொண்டு இருந்ததால் அப்பொழுது பேச வேண்டாம் என்று இருந்து விட்டேன்.
அங்கு படித்த கவிதைகளிலே கல்பற்றா நாராயணின்” டச் ஸ்கிரீன்” கவிதை வெகுவாக கவர்ந்தது. தபூ சங்கர், வைரமுத்து, கண்ணதாசன் வகை கவிதைகளை வாசித்து கொண்டு இருந்த எனக்கு இது பெரும் அனுபவமாக இருந்தது. ஜடாயு கவிதைகளின் தலைப்பு பற்றிய விவாதத்தை ஆரம்பிதார். ஒரு கவிதைக்கு தலைப்பு இன்றி அமையாதது என்றும் தலைப்புடன் சேர்த்தே கவிதை படிக்கபட வேண்டும் என்று ஜெ விளக்கினார். அருண்மொழி அக்கா தேவ தேவனின் “ஒற்றை மரம்” கவிதையை அருமையாக விவரித்தார். கவிதையில் கூறப்பட்ட கண்ணாடி சுவர் என்பது என்ன என்று தெளிவாக புரிந்தது. அவர் கூறிய மற்ற கவிதைகளும், மறு நாள் படிம அரங்கில் அவர் கூறிய கவிதைகளும் அவர் ஒரு தேர்ந்த கவிதை ரசிகர் என்று பறை சாற்றின. ஸ்ரீநிவாஸ் போலவே நானும் ஜெயை பார்த்து கொண்டே இருந்தேன். அவர் கண்களை மூடி கொண்டு கேட்டு கொண்டு இருந்தார் கூடவே ஒரு அடக்க முடியா சிறு புன்னகையும் அவர் உதடுகளில் வருடின. எனக்கு என்னோவா காலை கம்ப ராமாயனத்தில் சீதையை நினைத்து ராமன் பாடிய இந்த வரி ஞாபகம் வந்தது.
“யாழ் இசை மொழியாடு அன்றி,
யான் உறும் இன்பம் இன்னோ”?
மூன்றாம் நாள் காலை தேயிலை தோட்டத்தை பார்த்து கொண்டு இருந்த தேவதேவனிடம் பேசி கொண்டு இருந்தேன். சிறிது நேரம் பேசிய பிறகு கவிதை என்றால் என்னவென்று கேட்டேன்? அதிர்ந்த அவர் , “தம்பி தப்பா நினைச்சிக்கிடாதீங்க, இதை வார்தைகளால் விவரிக்க முடியாது என்றும், அனுபவங்களை வைத்தே புரிந்து கொள்ள முடியும் என்று கூறினார்”. பிறகு மெல்ல மெல்ல மற்ற விஷயங்களை பேசினோம், பல வருடங்களுக்கு முன்னர் யதி அங்கு உட்கார்ந்துதான் அனைவருடன் பேசி கொண்டு இருப்பார் என்றும் சொன்னார். பழகுவதற்கு மிக எளிமையான அவர் மனதிற்க்குள் இனிமையாக நிறைந்தார். “நான் சொன்னதை தப்பா நினைச்சிக்கிடாதீங்க தம்பி” என்று சொல்லி கொண்டே இருந்தார்.
அவரை போலவே நாஞ்சிலும் மிக இனிமையான மனிதர். மற்றவர்களிடம் பேசி கொண்டு இருக்கும் பொழுது கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும், இவரிடம் பேசும் பொழுது மட்டும் இவர் பேசுவதையே கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஒரு கிராமத்து பெரியவரிடம் பேசிய உணர்வு தோன்றும். “எட்டு திக்கும் மத யானை” நாவல் எழுதும் பொழுது அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளை சொல்லி கொண்டு இருந்தார். மேலோட்டமாக கதைகளை எழுத முடியாது எனவும் ஆழ்மனதின் ஒரு உந்துதலால் தான் அதை எழுத முடியும் என்று கூறினார். பாம்பேயில் பெட்டியை தூக்கி கொண்டு அவர் மார்கெட்டிங் வேலைக்கு செல்லும் பொழுது எப்படி அவர் ஆழ் மனதில் உணர்வுகள் வழியும் என்று அழகாக விளக்கினார். ஜெவும் பல முறை அவரது படைப்புகள் ஆழ் மன நிலையிலிருந்து தான் வருகின்றன என்று கூறியுள்ளார். தேவதேவனிடம் நான் கேட்ட கேள்விக்கான விடை அன்று நடந்த படிம அரங்கில் கிடைத்தது. Image (படிமம்), metaphor (உருவகம்), allegory பற்றி விரிவான விவாதம் நடந்தது. அனைவரும் தாங்கள் ரசித்த கவிதைகளை சொல்லி அதில் எங்கே படிமம் இருக்கிறது என்று விவாதித்தோம்.
ஊட்டி முகாமில் அரங்கில் விவாதிப்பதை விட ஜெ உடனான நடை பயிற்சியில் நிறைய பேச முடியும் என்று முன்பே கூறி இருந்தார்கள். ஆதலால் நான் நான்கு நடை பயிற்சியிலும் அவர் உடன் சென்றேன். வெண்முரசு பற்றியும், தாகூர் பற்றியும், இயற்கையிலே பெண்கள் கூந்தலுக்கு மனம் உண்டா என்பதை போல இயற்கையிலே சீர்மை தன்மை (Symmetric) உண்டா என்பதை பற்றியும் பேசி கொண்டே சென்றது இன்னமும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. ஜெவை சுற்றி கூட்டமாக பலர் நடந்து செல்வார்கள் என்பதால் ஜெவின் குரல் கேட்கும் தூரம் நடந்து சென்று அவர் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம். தனி குழுக்களாகவும் பலர் நடந்து பேசி கொண்டே சென்றார்கள். குறிப்பாக ஜடாயுவும் நம் யோக சித்தர் சௌந்தரும் பேசி கொண்ட “Yoga therapy” பற்றிய உரையாடல் மிக நன்றாக இருந்தது. ஜடாயுவுடனான தனிப்பட்ட உரையாடலும் மிக நன்றாக இருந்தது. மனிதர் கம்ப ராமாயணம் மட்டும் அல்ல அனைத்து Areaவிலும் தூள் கிளப்பிகிறார். அரவிந்தன் நீலகண்டனை பற்றியும் பேசி கொண்டே சென்றோம். அநீ, ஜடாயு போன்றவர்களுக்கு 90% எதிர்ப்பு உள்ளே இருந்து தான் வருகிறது என்றும், அவர்களுக்கு உரிய மரியாதையும் முழுமையாக தரப்படுவதில்லை எனவும் தோன்றியது. மலை சரிவில் ஏற தடுமாறிய பொழுது என்னை மாதிரியே தடுமாறிய விஜயசூரியனின் நட்பு கிடைத்து. கிஷ்கிந்தா காண்டத்தில் ராமனும் சுக்ரீவனும் செய்த சபதத்தை போல நாங்களும் பேலியோ டயட் இருந்து உடம்பை குறைப்போம் என்று சபதம் எடுத்தோம். (அதிசயமாக என் பெயர் ராமன் அவர் பெயரில் சூரியன், சுக்ரீவன் சூரியன் மகன் அல்லவா?)
அனைவரும் மிக சாதாரணமாக இருப்பதால் அவர்கள் அருமை பல நேரம் புரிவது இல்லை. குறிப்பாக கோபால், அரங்கநாயகம் போன்றவர்கள். தம்பி ராதாவிடம் கோபால் ஜீ அருமையாக பேசினார் என்று சொல்லி கொண்டு இருந்த பொழுது.. “அண்ணா அவர்தான் “சூத்ரதாரி”.. அவர் சொல் புதிதுவில் எடிட்டர் ஆக இருந்துருக்கிறார் மற்றும் பல நாவல்களும் எழுதி இருக்கிறார் என்று சொன்னான். தம்பி ராதாவும் ஒரு interesting personality.. “அண்ணா.. ஒருத்தர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார்.. தலைப்பு மறந்து போய்டிச்சு.. அதுல ஒரு வரி வரும் பாருங்க. அது சூப்பர்ஆக இருக்கும்.. “ என்பான்.. ஒன்றுமே புரியாவிட்டாலும் அப்பிடியா என்று கேட்டு கொண்டு இருந்தேன். திருமூல நாதனின் கவனக நிகழ்ச்சி அற்புதமாக இருந்தது… அடுத்த நாள் அவரை வாழ்த்திவிட்டு சொன்னேன், “கல்யாணதிற்கு பிறகு இப்பிடி எல்லாவற்றையும் ஞாபகம் வைத்து கொள்ள கூடாது.. மறதி தான் நல்ல மகிழ்ச்சியான இல்லறதிற்கு இட்டு செல்லும்”.. அவர் என்னை ஒரு மாதிரியாக மேலும் கீலுமாக பார்த்தார்.
மூன்றாம் நாள் மதியம் அனைவரும் ஊருக்கு கிளம்பிக்கொண்டே இருந்தார்கள். ஜெ எங்களுடன் உரையாடி கொண்டே இருந்தார்.. கார் அருகில் வந்ததற்கு பிறகும் கூட அனைவரையும் தழுவி கொண்டே, பேசி கொண்டே இருந்தார்.. வாய் சிரித்து கொண்டே இருந்த்தாலும், கண்களில் பிரிவின் கனிவு தெரிந்தது.. அருண்மொழி அக்கா பொறுமையாக இதை பார்த்து கொண்டே இருந்தார்.. நாம்தான் அவரை கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்கிறோம் என நினைத்து கொண்டு இருக்கிறோம், ஆனால் ஜெவிற்கோ எங்களுடன் இருப்பதும், பேசுவதும் தான் மனதிற்கு மிகவும் பிடித்திற்கிறது என நினைத்து கொண்டேன். அந்த மூன்று நாட்களும் எங்கள் உடனே உட்கார்ந்து, சிரித்து, பேசி, தூங்கி, செலவழித்து கொண்டு இருந்தார்.
மூன்றாம் நாள் மாலை சிறிது நேரம் முத்துராமன் உடன் பேசி கொண்டு இருந்தோம், பிறகு நாங்களும் கிளம்பி சென்றோம்.. அப்பொழுது நாங்கள் அத்யந்த நண்பர்களை போலவே உணர்ந்தோம். நானும், காளியும், ஆண் ஆழகன் ரவியும் சிறிது நேரம் ஊர் சுற்றி விட்டு பேருந்து நிலையத்திற்கு விரைந்தோம். நாங்கள் ஊட்டி வந்த அதே பேருந்து. ஐய்யோ இன்னிக்கும் பேசியே சாவடிக்க போரங்களே என்பதை போல க்ளினர் எங்களை பார்த்து கொண்டே இருந்த்தார். பஸ்ஸில் மறுபிடியும் இலக்கிய விவாதம். ரவி பெண் நாகர்கோவில் என்பதால் நான் ஓகே சொல்லி விட்டேன் என சொல்லி கொண்டு இருந்தார்.. “ டே, அக்கா திருவாரூர் தெரியுமுல்லே!! நம்ம ஆசானே சூதானமா நாகர்கோவில் பொண்ண பாக்காம வெளியிலதான் எடுத்து இருக்கிறார்.. “ என்றேன்.. ஜிம் போய் அறிவு உலக சினிமா பற்றி பேசி கொண்டு இருந்தார்.
பிறகு தூங்க சென்றோம். எனக்கு ஜெ உடைய பேச்சும் அந்த நடைபயிற்சியும் ஞாபகம் வந்தது. அப்பொழுதுதான் எனக்கு ஒரு படிமம் ஞாபகம் வந்த்தது. மதியம் நூலகத்தில் இருந்து முன் ஆறைக்கு கம்பளி எடுத்து செல்ல வேண்டி இருந்தது. உடனே ஒரு 100 மீட்டர்க்கு ஒரு மனித சங்கிலி உருவானது. ஒருவர் ஒருவராக கம்பிளி தர அதை கை மாற்றி கொண்டே இருந்தோம். சற்றே சிந்தித்து பார்த்தால் நாம் மூன்று நாட்களாக அதை தான் செய்து கொண்டு இருந்தோம். ஒருவர் மாற்றி ஒருவர் நம் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டே இருந்தோம்.
இந்த மூன்று நாட்கள் கண்டிப்பாக என் ஆழ் மனதில் பல ஞாபகங்களை பதிந்து விட்டு இருக்கும்..