ஸ்ரீனிவாசின் பதிவு

ஆசிரியருக்கு,

ஸ்ரீனிவாசின் பதிவு இப்போது படித்தேன், மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் தருகிறது. நமது நண்பர்களில் சீனுவையும், செந்தில் குமார் தேவனையும் விட்டால் பேசியதை அப்படியே மனதில் நிறுத்தி, திரும்ப எழுத்தில்/பேச்சில் விவரித்தல் என்பது அனேகமாக இல்லை என்பதைக் காணலாம். ஒரு வேளை இதை வெறுக்கிறார்களோ என்கிற ஐயம் கூட எனக்குண்டு. ஸ்ரீநிவாசும் சீனு, செந்தில் பட்டியலில் சேரக் கூடும்.

பி.கெ.பாலகிருஷ்ணனை சந்திக்கும் போது அவர் அணிந்திருந்த முண்டா பனியனுடன் விவரிக்கத்துவங்கும் எழுத்து உங்களுடையது, இவ்வளவு வாசகர்கள் மிக நெருக்கமாக உங்களைப் பின்தொடர்ந்தும் இதன் தாக்கம் அனேகமாக சிறிது கூட இல்லை என்பதைக் காண்கிறேன். இன்று சிந்திக்கும் தீவிர இலக்கிய உலகை பிடித்திருப்பது பாலுணர்வு எழுத்தும் அடுத்ததாக சற்று தூக்கலாக பகடியும் தான். எனக்குத் தெரிய ஒரு 108 முறை ஒருவர் எழுதியதை, பேசியதை அவ்வாறே நினைவில் இருந்து திரும்பக் கொண்டுவந்து பேசவேண்டும் அதன் பிறகே அதை மறுத்து விவாதிக்க வேண்டும் என விவாதிக்கும் முறைமை குறித்து சலியாமல் கூறியுள்ளீர்கள், இப்படி பேசிப்பேசியே உங்கள் பாதி தலை கொட்டி மீதி நரைத்து விட்டது. சில சமயங்களின் உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும்.

ஸ்ரீனிவாசை வியாழன் மாலை சந்தித்த போதே கடந்த ஆண்டு அவர் உங்களிடம் கேட்ட இயற்கையில் அறம் உள்ளதா என்கிற கேள்வியும் அதற்கு நீங்கள் அளித்த நீண்ட பதிலும் ஞாபகம் உள்ளதா எனக் கேட்டேன்.

நிறக்குறைபாடுடைய முயல்கள் உதாரணம் முதற்கொண்டு, அவ்வாறே ஒப்பித்தார். இதுபோன்ற முகாமுக்கு ஒரு 80 பக்க ஏட்டை கொண்டுவருகிறார், முதல் நாளே அதை நிரப்பி விடுகிறார்.

ஸ்ரீனிவாசின் மொழிநடையும் சரளமாக இருக்கிறது, அதே சமயம் இதை 30 வயதுக்கு மேல் துவங்க ஒருவருக்கு சாத்தியமில்லையோ எனவும் தோன்றுகிறது.

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 6
அடுத்த கட்டுரைமன்னிக்கவும்…