‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 6

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 6

விழைவு விழிகளை ஆயிரம்பல்லாயிரமென பெருக்குகிறது. சென்றவழியெங்கும் கருநீலப்பளிங்கு மணிகளென அவன் விழிகள் உருண்டு விழுந்து சிதறிக்கொண்டே இருந்தன. இமைப்பழிந்து நோக்கிக்கிடந்தன. குழல்களில், செவிக்குழைகளில், முலைக்குவை நடுவே ஆடிய பொன்னிழைகளில் ஒட்டியிருந்து மின்னின. ஒவ்வொரு பெண்ணையும் முழுமையாக பார்த்தான். அவளையன்றி பிறிதெதையும் அறியாமல் அவளுடன் இருந்தான். அந்தத்தெருவில் ஆயிரக்கணக்கான பெண்கள் சென்றுகொண்டிருந்தனர். அழகிகள். பெண்களிலும் மலர்களிலும் அழகின்மை என்பதில்லை. மலர்மையை, பெண்மையை அழகென யாத்தவன் அதில் வகைமையை மட்டுமே சமைத்தான். முடிவிலிவரை சென்று திரும்பி புன்னகைத்தான். அவனை நோக்கி நாணிப் புன்னகைத்தது பேரழகு கொண்ட அவன் ஆடிப்பாவை.

பொற்பிறை நெற்றிகள். நேர்வகிட்டின் இருபக்கமும் மென்சுருள் பிசிறி நிற்பவை. அலை வளைவு என இறங்கி காதருகே விலகி சுருளாகி அசைபவை. மயிர்மெலிந்து முன்னெற்றி மேலெழுந்தவர்கள் முலையூட்டிய பெண்கள். செந்நிறச் சிறுபருக்கள் பரவிய கன்னியர். விரிந்த நெற்றி கருணையெனக் காட்டுகையில் குவிந்த நெற்றி குழந்தையென வெளிப்படும் மாயம் எங்குள்ளது? என் விழியிலா? வட்டமுகத்தின் நெற்றிக்கு சின்னஞ்சிறு துளிப்பொட்டு. நீள்முகத்து நெற்றிக்கு மழைத்துளி சரிந்துவிழுந்த வடிவம். குங்குமத்தின் மீது தீற்றப்பட்ட மஞ்சள்கோடு. வெண்நறுஞ்சுண்ணத்தின் சிறு வரி. பொன்னெழுந்த தளிரிலை மேல் அமர்ந்திருக்கும் இந்திரகோபம். ஒளிர்வாளில் எஞ்சிய செங்குருதித் துளி. நிலவென்று, தாழை மடலென்று, தாமரை இதழென்று மயங்கும் சொற்கள். அப்படியென்றால் இம்மாமை நிறத்துக்கு என்னபெயர்? இளமாந்தளிர். இக்கருமையின் ஒளிக்கு என்ன பெயர்? நீலம்? இந்திரநீலம்?

மனம்கனியாமல் பெண்ணின் மூக்குக்குழைவை வரைந்திருக்கமாட்டான் பிரஜாபதி. ஆயிரம் கோடி கோடிழுத்த ஓவியனின் கைவீச்சில் பிறந்த வளைவு. வாழைமடல்மெழுக்கில் வழிந்தோடும் நீர்த்துளி. சின்னஞ்சிறு குமிழ்மூக்கிற்கென பிறந்தவை துளித்து மின்னும் வைரங்கள். மலர் கனிந்த பனித்துளி என நுனியில் ஆடட்டும் புல்லாக்கு. கூர்மூக்கின் நிழல் விழுந்த மேலுதடு. பனித்து துளித்த மூக்குநுனிகள். பிஞ்சு மாங்கனி என சற்றே வளைந்தவை. சிரிக்கையில் நடுசுளிப்பவை. குழந்தைமையை விட்டுவிட தயங்கி அழுந்தியவை. வினவிச் சுருங்குபவை. சிரிப்பில் விரிந்து மூக்குத்தியை அசைப்பவை. விழிமலர்கள் விரிந்த பசுங்கணு. சிறகடித்து இரு பட்டாம்பூச்சிகள் வந்தமர்ந்த செண்பகம். சங்குபுஷ்பத்தின் மொட்டு. முத்தமிடுகையில் முந்திவந்து தொடும் வேட்கை.

வெளிநிறைத்துப் பறந்தலைந்தன விழிகள். விழிபூக்கும் செடிகளே பெண்ணின் உடல்களென்று சொன்ன சூதன் ஞானி. நீண்ட விழிகளில் நிலைத்த நாணம். சின்னவிழிகளில் மாறாதது சிரிப்பு. ஓரவிழிகளில் காமம். நேர்நின்று நோக்கும் விழிகளில் மேலும் காமம். இமைத்து இமைத்து இவை பறந்தகன்றுவிடுமா என்ன? காற்றில், வானில், இவ்வொளிப்பெருக்கில் எழுந்து சுழலுமா? விழியென்றால் வேட்கை மட்டும்தானா? விழி சொல்லாததை மொழி சொல்லக்கூடுமா? தொட்டுத்தொட்டுச்செல்கின்றன. அணைக்கின்றன. முத்தமிட்டு சிரித்து விலகுகின்றன. கணத்துக்கொருமுறை தொட்டணைத்தபின்னரும் விழிகளில் எஞ்சும் தனிமைக்கு என்ன பொருள்? எத்தனை வண்ணங்கள். சற்றே திரும்பும்போது நீலக்கல் என மின்னுபவை. மயில்கழுத்து என பச்சையும் நீலமும் கருமையும் ஒன்றேயானவை. கருவிழியில் ஒளியே ஈரமென தன்னைக் காட்டுகிறது. ஒளியீரமே வேட்கையென்றாகிறது. ஈரவேட்கை கனலாகிறது. அனலில் விழுந்து பழுத்த கற்சில்லுகள். தொட்ட இடம் அதிரும் கருங்கனல்கள்.

செந்நிறம் கனிந்த முகப்பருக்கள் கன்னங்களை கொதிப்பவை என காட்டுகின்றன. கனி என்று தேன்கிண்ணம் என்று பொற்பதக்கம் என்று சொற்கள் சென்று பொருளழியும் கதுப்பு. காதிறங்கிய கரிய மென்மயிர்கள் மழைகொணர்ந்த நீலமணல்வரிகள். சிரிப்பில் விரியும் உதடுகளுக்கு அருகே இருகோடாக, பட்டுமடிப்பாக, தளிர்ச்சுருக்கமாக மெல்ல அதுங்கி இளமையென உவகையென தன்னைக்காட்டுகின்றன குமிழ் எழும் கன்னங்கள். சிரிக்கையில் சுருங்கி மூடும் சிறுவிழிகளுக்கு உகந்தவை. மிரளும்விழிகளுடன் இணைபவை. இழுபட்டு நீள்குழி விழுபவை. சிறுசுழி எழுபவை. வட்டமுகங்களுக்கு உரியவை. நதிநீர் கரந்த சுழலின் வடிவம். கன்னத்திலெழும் உந்தி. கரந்துறையும் உவகையின் தடயம். இளம்பாளைப் பளபளப்பில் படிந்திருக்கும் பொற்துகளின் சின்னஞ்சிறு மின்னல் ஒரு சொல். வானுறை நெருப்பின் துளி. குழைநிழல் நீண்டு விழுந்து விழுந்தசையும் பொதுப்பு. சுருள்குழல் தொட்டாடும் மென்பரப்பு.

ஒவ்வொரு சொல்லும் முத்தத்திலிருந்து பிறக்கிறது. செம்மென்மை குவிந்து குவிந்து உதிரும் சொல்முத்தங்கள். ஈரம் பளபளக்க விரிந்து பெற்றுக்கொள்ளும் கனிமுத்தங்கள். சிறுசெந்நாநுனி வருடிச்செல்லும் நாணமுத்தங்கள். உதடுகள் மட்டுமே உள்ளுடல் வெளித்தெரியும் இடம். முகத்தில் மலர்ந்த இதயம். அகமாகிய செவ்வூன். உள்ளுறைந்த குருதியின் ஈரம். துடித்து துடித்தோடும் அனல். கனியெனத் தடித்து மலர்ந்த கீழுதடுக்குமேல் விழைவுடன் வளைந்த மேலிதழ். ஈரவெண்மை மின்னும் இருபற்களின் கீழ்நுனி தெரிந்த செவ்விரிதல்கள். அவை மெல்லக்கவ்விய பதிவுகள். வளைந்த மலர்வரிகள். நடுவே பிளந்து இருபக்கமும் விரிந்த இணைமொட்டுகள். சிறுமுகைகள். விரிந்தவை. பருத்தவை. நாணத்தால் இழுத்துக் கவ்வப்பட்டவை. எக்களிப்பால் சுழித்தவை. உஸ்ஸ் என குவிந்தவை. ஓ என வளைந்தவை. அழைப்பில் விரிந்தவை. மேலுதடுக்குமேல் விரிந்த நீலப்புகை மயிர்பூச்சு. இரு பக்கநுனிகளிலும் இறங்குவதென செம்பூமயிர் எச்சங்கள். செஞ்சுனைச் சேறென சற்றே விளிம்பு உலர்ந்தவை. மையம் கனிந்தவை. செம்முகத்தில் அரளி. சந்தன முகத்தில் எழுந்தவையோ வாழைமடல் வண்ணம். உள்ளே சற்று சிவந்தவை காமம் கொண்டவை. கனிந்து முழுத்தவை. காமத்திலாடுபவை. பேசிப்பேசி சிரித்துச் சிரித்து அவை காற்றில் அனுப்பும் கோடி முத்தங்களைப் பெற ஒளியில் சிறகசைத்து குளிர் காற்றென வந்து ததும்பும் கண்ணறியா கந்தர்வர்களுக்கு வணக்கம்.

அஞ்சித் திரும்புகையில் மயில். அஞ்சாமல் திரும்பும்போது நாகம். தன்னை தான் நோக்கி குனிகையில் அன்னம். சரிகையில் கொக்கு. தளர்கையில் மணிப்புறா. இளமையென்றானது கழுத்து. மென்மையென்றானது. வெம்மை கொண்டு மிளிர்வதற்கென்றே உருக்கொண்டது. வியர்த்து ஈரம் பூக்கும்போது ஒளி. ஒளியென வளைந்த சிறுவரிகள். தளிர்ப்பாளை கொண்ட கோடுகள். பூங்கதுப்பு மடிப்புகள். நீண்டு அடுக்கென எலும்பின் வளையங்கள் தெரிபவை. மூடிய மென்தசையால் ஆனவை. குமிழ்முகவாயின் நிழல் சரிந்தவை. வெண்பளிங்கு. செந்தழல் பட்ட சுண்ணம். தேய்த்த செம்பு. நீர்வழியும் கருமையின் ஒளி. தோளெனச் சரிந்து பொன்னணிச் சங்கிலி பாலமிட்ட கழுத்தெலும்பாகும் மென்மை. இரு குமிழ்கள் நடுவே அச்சமும் ஆவலும் என மூச்சு நின்று துடிக்கும் சிறு பள்ளம். நத்தைக்கோடென மின்னும் மேல்மார்பின் தோல்வரிகள். ஈரம் வழிந்திறங்கி மின்னும் முலைக்குவை வழி. தளிர்வாழையிலையின் பள்ளம். வியர்வைத் துளி செல்லும் வழுக்குப்பாதை.

இருதுளி திரண்ட தளிர்கள். ததும்பி தயங்கி அசைபவை. இறுகி அழுந்தியவை. தழைந்தவை கருணை என்கின்றன. ஒன்றோடொன்று செறிந்தவை அஞ்சுகின்றன. இன்னும் முகிழாதவை நகைக்கின்றன. புயம்நோக்கி விரிந்தவை சற்றே சலிப்புற்றிருக்கின்றன. ஒசிந்து அமர்கையில் ஒன்றன் மேல் ஒன்றமர்கின்றன. எழுந்து கை தூக்கி குழல் திருத்துகையில் மேல்நோக்குகின்றன. தாவி மரக்கிளை மலரை கொய்யமுயல்பவளில் துள்ளிக்களிக்கின்றன. ஊடலறியாதவை. குழைபவை. நெகிழ்ந்து விழிதிறப்பவை. மலரில் எழுந்த மொட்டுகள். செம்பட்டில் காந்தள். செம்பில் கத்தரிப்பூ. வெண்பளிங்கில் கருங்குவளை. தீண்டுபவை. பின் அணைப்பவை. நடையில் துவள்பவை. ஒருகணத்தில் விழிதொடும் இத்தொலைவையெல்லாம் நிறைத்து முகிழ்த்து காய்த்து கனிந்து கனிந்து செறிந்திருந்தது பெண்மை. அதுமட்டுமே திசை திசையென அங்கிருப்பது போல. ஆயிரம் பல்லாயிரம் அமுதக்கிண்ணங்கள். மென்திரை ஒன்றுக்கு அப்பால் ஊறி நின்றது பாற்கடல். வெங்குருதி அனலென்றாகி ஓடும் ஊன் கனிந்து பாலாகும் சுனைமுகப்புகள். கனிதல்கள். கனிவுக்கு இரு விழிகள்.

அவன் உருகிப் பரவி அங்கெலாமிருந்தான். மன்மதனுக்கு உடலிருக்கலாகாதென்று கண்ட மூதாதை போல காமத்தை அறிந்தவன் எவருமில்லை. உடல்கொண்டது காமம் அல்ல. உடலெங்கும் விழிகொண்டதும் காமம் அல்ல. உடலற்று ஒளியாகி காற்றாகி நிறைவது காமம். தழுவுவது காமம். உடலிலி போல் தழுவிக்கொள்ளலாகுமோ உடல்? சுளையென இடைப்பிதுங்கல்கள். ஆடை தாழ்ந்து தெரிந்த வடுக்கள் பதிந்த வெண்சதை . பட்டில் பட்டு பதிந்த பட்டுத்தடம். கூழாங்கல் எழுந்துசென்ற செம்மண் சதுப்பு. தோள்வளைகள் கவ்வி பின் நெகிழ்ந்து விட்டுச்சென்ற சதைச்சித்திரம். திரண்ட புயங்கள் செஞ்சாந்து என வழிந்தவை. பித்தளைக் குத்துவிளக்கின் உருள்நிலை என இறுகியவை இளம்புயங்கள். தோள்முழை எழுந்தவை இவை. எலும்பின்றி குழைந்தவை அவை.

நீலநரம்போடும் மெலிந்த கரங்கள். மிகச்சிறிய மணிக்கட்டும் விரல்குவைகளும் கொண்டு உருண்டவை. இரையுண்டு துயில்கொண்ட வெண்ணிற மலைப்பாம்புகள். தயங்கி இறங்கும் தேனருவி வழிவுகள். வளையல் வழுக்கிச்சரிந்தது. கடையம் பின்னகர்ந்து ஒட்டி இறுக்கி தடம் விட்டு பின் மணிக்கை வந்தது. நீலநரம்புக் கிளைவிரிவுகள். செண்பகமொட்டு விரல்கள். ஓயாது அசைந்தன கரங்கள். அழைத்தன. துள்ளி எழுந்தன. ஆடை அள்ளி சீரமைத்தன. நுனிபற்றிச் சுருட்டி மருண்டன. ஈரம் கசங்கும் மெல்லிய உள்ளங்கைகளுக்கு என்னென்ன நிறங்கள். தாமரை மலரிதழ்ச்செம்மை. பழுத்த அத்தி இலைகளின் வெண்மை. சிறுசிப்பிகள் என நகங்கள். கிளிமூக்குகள். சிட்டுக்குருவி அலகுகள். விரல்கள் அறியாத்தெய்வங்களின் நாக்குகள். அவை சொல்லும் சொற்களால் நிறைந்திருந்தது அவ்வெளி. சொல்லிச் சொல்லித் தவித்தன. நாணி அஞ்சி ஏங்கி எழுந்து கூவி அமைந்தன.

சாத்யகி வந்து தன் தோளைத் தொட்டபோது திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு உடல்விதிர்த்தான். அவன்தோல் மிகமிக நுண்மைகொண்டு ஒரு தூசுத்துளி விழுந்தால்கூட உணருமளவுக்கு மாறிவிட்டிருந்தது. சாத்யகியை அவனால் பலகணங்களுக்கு அடையாளம் காணமுடியவில்லை. நடுங்கிக்கொண்டே இருந்த உடல் மெல்ல புரவியிலிருந்து சரிய சாத்யகி அவன் தோள்களைப் பற்றி நிறுத்தி “எங்கு செல்கிறீர்கள் பாஞ்சாலரே? என்ன, கனவா?” என்றான். திருஷ்டத்யும்னன் உடல் கூசி, கண்கள் கலங்க சிலகணங்கள் அமர்ந்திருந்த பின் “யார்?” என்றான். “யாரா?” என்று சிரித்த சாத்யகி “எங்கள் யாதவப்பெண்களைக் கண்டவர்கள் மீள்வதில்லை என்று சூதர்கள் பாடுவது உண்மைதான்போலும்” என்றான். திருஷ்டத்யும்னன் விழித்துக்கொண்டு சாத்யகியின் தோள்மேல் கையை வைத்து அடைத்த குரலில் “யாதவரே” என்றான்.

அந்தக் கைமேல் தன் கையைவைத்துப் பிடித்துக்கொண்ட சாத்யகியிடம் திருஷ்டத்யும்னன் “நான்…” என்றபின் சுற்றுமுற்றும் நோக்கி “வழிதவறிவிட்டேன்” என்றான். சாத்யகி புன்னகைசெய்து “இங்கே வழிதவறுவது இனியது. இந்நகரில் எப்படி வழிவிலகினாலும் இறுதியில் இளையயாதவரின் அரண்மனைக்கு சென்றுசேர்ந்துவிடலாம். ஆகவே நானும் விட்டுவிட்டேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “எங்கு நோக்கினாலும் பெண்கள். விழிகளை விலக்கவே முடியவில்லை” என்றான். “இது பெண்கள் மட்டுமே வாழும் நகரம் என்று ஒரு யவன சூதர் பாடியிருக்கிறார். இளைய யாதவருக்கு பதினாறாயிரத்து எட்டு மனைவியர் என்றும் அவர்கள் மட்டுமே இந்நகரில் வாழ்வதாகவும் அவரது புராணம் சொல்கிறது.”

திருஷ்டத்யும்னன் சிரித்து “பதினாறாயிரத்து எட்டுபேரையும் ஒருவர் எப்படி அடைகிறார்?” என்றான். “ஒவ்வொரு வீட்டிலும் ஓர் ஆடி உள்ளதாம். அதன்முன் நின்று அந்தப்பெண் அவரை எண்ணிக்கொண்டால் நீரலையிலிருந்து எழுவதுபோல அவர் தோன்றுவாராம்” என்று சொன்ன சாத்யகி “ஒவ்வொரு பெண்ணும் பதினாறாயிரத்தெட்டு முகங்களாக அவரை எண்ணுகிறாள் என்பது அடுத்த வரி. வைரத்தின் முடிவிலாப்பட்டைகளை போல முகம் கொண்டவர் என்று இளைய யாதவரைப் பற்றி பாடுகிறார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “சூதர்கள் பாடத்தொடங்கினால் இளைய யாதவரே எண்ணினாலும் நிறுத்தமுடியாது” என்றான். “இங்குள்ள அனைவருமே பெண்கள். அவர் ஒருவரே ஆண் என்று ஒரு சூதர் பாடினார்” என்று சாத்யகி சொல்ல தெருவெங்கும் சிரித்துக்கொண்டே சென்ற பெண்களை நோக்கி திருஷ்டத்யும்னன் “ஒருவகையில் அது உண்மைதான்” என்றான்.

திருஷ்டத்யும்னன் சிரித்துக்கொண்டு ஓடிவந்த பெண்கள் குழு ஒன்றை நோக்கினான். அதில் ஒரு பெண் அவனிடம் “வீரரே, உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்” என்றாள். “சொல்” என்றான் திருஷ்டத்யும்னன். அவள் அருகே வந்து தன் கையில் மறைத்துவைத்திருந்த மஞ்சள்குங்குமக் கலவையை அவன் முகத்தில் வீசிவிட்டு ஓடிச்சென்றாள். முகத்தைமூடி கண்களை கொட்டித்திறந்து நாவில் பட்ட மஞ்சளைத் துப்பியபடி திருஷ்டத்யும்னன் சிரித்தான். “இனி நீங்கள் எந்தப்பெண்ணை அடைந்தாலும் அவள் யார் என கண்டுபிடித்துவிடுவோம்” என்று அவள் அப்பால் நின்று கூவினாள். ”நீதான் முதலில்… உன் உடலில்தான் மஞ்சளும் குங்குமமும் இருக்கிறது” என்றான் திருஷ்டத்யும்னன். அவள் அறியாமல் குனிந்து நோக்க அவள் தோழிகள் உரக்கச் சிரித்தனர். சிரிப்பும் வளையல்களின் ஓசையும் சிலம்போசையும் கலக்க ஓடி மறைந்தனர்.

திருஷ்டத்யும்னன் திரும்பி “பெண்களை இத்தனை அழகாக எங்கும் கண்டதில்லை” என்றான். “அவர்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலை” என்று சாத்யகி சொன்னான். ”ஆழத்தில் பெண்கள் கட்டற்றவர்கள். அவர்கள் களியாடவிழைகிறார்கள்.” பெண்களை நோக்கிக்கொண்டே புரவியில் மெல்ல சென்றபடி “அந்த விடுதலையை அவர்களுக்கு அளிப்பவர் ஒருவர். ஆழங்களை அறிந்தவர். அனைத்தையும் ஏற்றுக்கொள்பவர். விடுதலையின் பேரழகை மட்டுமே விழைபவர். இன்றுவரை இப்புவியில் பிறந்தவர்களில் பெண்களை விடுதலைபெற்றவர்களாக மட்டுமே பார்க்க விழையும் ஆண் அவர் ஒருவரே” என்றான். திருஷ்டத்யும்னன் அவன் சொல்வதென்ன என்று புரியாமல் நோக்கிக்கொண்டு புரவியில் அமர்ந்தவனாக அலையடித்துச்செல்லும் மலர்க்கூந்தல்களுக்குமேல் மிதந்து சென்றான். அவனைச்சூழ்ந்து விழிகளும் புன்னகைகளும் மின்னி ஒழுகின.

“அவர் ஒருவரே பெண்களின் தனிமையை கலைக்கமுடியும் என்று ஒரு முதுமகள் சொன்னாள். தொண்ணூறுவயதானவள். விழி மங்கி மொழி குழறி உடல் வளைந்தவள். நான் அவளை இங்கு ஓர் ஆலயத்தில் கண்டேன். நரைத்த குழலில் மலர் சூடியிருந்தாள். வேடிக்கையாக அந்த மலரை சுட்டிக்காட்டி ஏதோ சொன்னேன். மலர் நெஞ்சில் பூக்குமென்றால் குழலிலும் பூக்கலாம் என்றாள். அழியாக்காதலை அகத்தே கொண்டவளுக்கு எப்போதும் வாடாத மலர் ஒன்று உண்டு என்றாள்.” திருஷ்டத்யும்னன் அவனை நோக்கி ஏதோ சொல்ல முயன்றபின் உரிய சொற்கள் அமையாது தலையை அசைத்தான். “அவர்களை அவர் எங்கோ ஓரிடத்தில் தீண்டுகிறார். கட்டுகளை அவிழ்த்துவிடுகிறார். அவரிடம் ஒருசொல்லேனும் பேசியவர்கள் இங்கே குறைவுதான். ஆனால் அவரை தனக்குமட்டுமே உரியவரென எண்ணுபவர்களே மிகுதி.”

“மது வேண்டுமென்று சொன்னீர்கள்” என்றான் சாத்யகி. “இல்லை, தேவையில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்து “இனியமதுவால் அந்தக் கனவை நனைத்துவைப்பது நல்லது. இல்லையேல் தீப்பற்றிக்கொள்ளும்” என்றான். திருஷ்டத்யும்னன் அவன் சொற்களை நீருக்குள் என கேட்டான். தலைக்குள் ஒரு தம்புரா வண்டுபோல முழங்கிச்சுழன்றுகொண்டிருந்தது. மது என்ற சொல் காதில் விழுந்ததும் உடலை உலுக்கியபடி எழுந்த விடாயை உணர்ந்தான். “ஆம், எனக்கு மது வேண்டும்” என்றான். சாலையோரத்தில் அணிப்பந்தலிட்டு அதில் பெரிய மரப்பீப்பாய்களை வைத்து மது அளித்துக்கொண்டிருந்தனர். அவர்களைக்கண்டதும் முகப்பில் நின்ற பீதன் “வருக வருக! உயர்தர மது! ஆயிரமாண்டுகாலம் மண்ணிலிருந்து அனலை உண்டு பருவம் அடைந்தது…” என்றான். இருவரும் இறங்கியதுமே பீதர்நாட்டு ஏவலன் மூங்கில்குவளைகளில் மதுவை அவர்களுக்கு வழங்கினான்.

மலர்மணமும் துவர்ப்புமணமும் கொண்ட மதுவை திருஷ்டத்யும்னன் விழுங்கினான். மது தொண்டையை தொட்டதும் உடலெங்கும் காத்திருந்த பல்லாயிரம் நாக்குகள் எழுந்தன. தழலென எழுந்தாடி மேலும் மேலும் என்று குரலெழுப்பின. “நான் இன்னமும் வந்துசேரவில்லை என்று தோன்றுகிறது. வந்த வழிகள் முழுக்க எனக்குத்தெரிகிறது” என்றான் திருஷ்டத்யும்னன். “பெண்கள்…” என்று சொல்லி சாத்யகி மதுவைப்பருகி “வருத்துகிறார்கள். பித்தெழச்செய்கிறார்கள். உவகையிலாழ்த்துகிறார்கள். நம்மை உண்டு தான் மிஞ்சுகிறார்கள். பெண்ணில் நின்று விளையாடுகின்றன தெய்வங்கள்” என்றான். பீதன் “மீண்டும் குவளையை நிறைக்கவா வீரர்களே?” என்றான். “ஆம், மீண்டும்” என்றான். “இவர்களின் மது தெய்வங்களை நம்முள் எழச்செய்கிறது” என்றான் சாத்யகி.

வெயில் வெம்மைகொண்டு உருகிப்பரவத் தொடங்கியிருந்தது. சுவர்களும் சாலையின் கற்பாறைகளும் அனல்கொண்டன. கீழிருந்து வந்த கடற்காற்று இடைமுறியாமல் வீசிக்கொண்டிருந்தமையால் வெம்மைதெரியவில்லை என்றாலும் ஒவ்வொன்றும் கொண்டிருந்த ஒளியிலிருந்து சித்தம் வெம்மையை உணர்ந்தது. வெளிச்சம் விழிகளை மயங்கச்செய்தது. சித்தம் உடன் மயங்கியது. எண்ணங்களனைத்தும் இழுபட்டு நீண்டன. பின் காட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய ஒளித்திரையில் என விரிந்து மெல்ல நெளிந்தபடி நின்றன. ஓசைகள் வேறெங்கோ கேட்டன. ஒன்றை கூர்ந்து நோக்கியபோதுமட்டும் அவை வந்து இணைந்துகொண்டன. விடாய் சற்றும் குளிராமல் உள்ளே இருந்துகொண்டே இருந்தது. விடாய் என எண்ணியதுமே அது வளர்ந்தது. “இன்னமும் மது” என்றான் திருஷ்டத்யும்னன். “அதற்கென்ன?” என்று சாத்யகி சொன்னான்.

பெண்கள் மட்டுமே நிறைந்திருந்த நகரின் தெருக்கள் வழியாக சென்றனர். அவர்களின் உடல்வழியாக போதையின் அசைவை அடைந்த புரவிகளும் கால்பின்னி நடந்தன. “இங்கே பெண்கள் மட்டுமே இருக்கிறார்களா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆண்களும் பெண்களாகிவிடும் நாள் இது” என்று சாத்யகி சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கினான். “என்ன சிரிப்பு?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை. ஆனால் நிறுத்தமுடியவில்லை” என்றான் சாத்யகி. திரண்ட துதிக்கைதொடைகள் பட்டாடைகளுக்குள் எழுந்து அடங்கின. நீருக்குள் படம் மோதி பருத்த உடலுரசிப் போரிடும் பெருநாகங்கள். அணிப்பட்டு முகபடாமுக்குள் அசையும் மத்தகம். அல்குல் தடம் மீது கொன்றைப்பூவென கவிழ்ந்த மேகலை. அதன் மணி. மணிகொண்ட மேகலை நெளிந்து நெளிந்து… படமெடுத்த அரவின் வாய்க்குள் அமைந்த ஒற்றைச்செம்மணி. சிறுமணி. உயிர்கொண்டு அதிரும் சிட்டுமூக்கு. தவிக்கும் மயில்நாக்கு. கருங்குழல்கள் பறந்தன. சுருளருவியென இறங்கி உலைந்தன. பெண்களன்றி எவர்? பெண்களன்றி எவர் தேவை? இப்பெண்கள். பின்னர் பெண்கள் என்ற சொல்லாகவே சித்தம் தேங்கி நின்றது.

உரக்கநகைத்தபடி “இதோ இங்குதான் நடனம்” என்றான் சாத்யகி. “இங்கா?” என்று சொல்திகழாச் சித்தத்துடன் திருஷ்டத்யும்னன் கேட்டான். “ஆம்” என்று சொல்லி சாத்யகி மீண்டும் நகைத்தான். “இங்கு என்ன செய்கிறார்கள்?” வெடித்துச்சிரித்தபடி சாத்யகி “நடனம்” என்றான். திருஷ்டத்யும்னன் உள்ளே நோக்கினான். பெரிய கூடத்தில் தலைப்பாகையணிந்த வேளாண்குடிமக்கள் கூடியமர்ந்திருந்தனர். திருஷ்டத்யும்னன் “அவர்களெல்லாம் அங்கிருக்கிறார்களே?” என்றான். சாத்யகி சிரித்தபடி கைசுட்டி “கதை கேட்கிறார்கள்… கதை!” என்றான். “நடனமிட்டு கதை சொல்வார்கள்… வருக!” அவன் திருஷ்டத்யும்னனின் கையைப்பற்றி உள்ளே அழைத்துச்சென்றான். ”என் கால்கள் தடுக்குகின்றன..” என்றான் திருஷ்டத்யும்னன். “கால்களா?” என்று சாத்யகி வெடித்துச்சிரித்தான். அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைப்புடன் கையை உதறி சற்று பின்னடைந்து “இவர்களெல்லாம் யார்?” என்றான் திருஷ்டத்யும்னன். “கதை கேட்கிறார்கள்… நடனத்துடன் கதை சொல்வார்கள்.” திருஷ்டத்யும்னன் “என்ன கதை?” என்று கேட்டபடி நின்றுவிட்டான். “கதை…” என்று சொல்லி சாத்யகி சிரித்துக்கொண்டே அமர்ந்தான். ஒருவர் பின்னால் நின்று “அமருங்கள்… அமருங்கள்” என்றார்.

திருஷ்டத்யும்னன் அமர்ந்தபின்னர்தான் எதிரே கல்லால் ஆன வட்டவடிவ மேடையை நோக்கினான். அங்கே ஒரு முதியவள் நின்று மெல்ல நடனமிட்டுக்கொண்டிருந்தாள். அவளுக்கு வலப்பக்கம் நட்டுவர் இருவரும் பாடகர் மூவரும் அமர்ந்து பாட யாழுடன் இணைந்து முழவு அதிர்ந்துகொண்டிருந்தது. கூட்டத்திற்குள் அசைந்து இடம் பெற்ற சாத்யகி தலைக்குக் கைவைத்து கால் நீட்டிப்படுத்தபடி “முதியவள்!” என்றான். “எங்கே?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி சிரித்துக்கொண்டே “முதியவள் நடனமிடுகிறாள்… முதியவள் கூந்தலில் மலர்…” என்று கால்களை ஆட்டினான். அருகே இருந்த ஒருவர் பாதிமூடிய விழிகளுடன் “உஸ்ஸ்” என்று வாயில் விரல் வைத்துக்காட்டினார். ஆகட்டும் என்ற பாவனையில் சாத்யகியும் “உஸ்ஸ்” என்று வாயில் கைவைத்துக் காட்டினான்.

திருஷ்டத்யும்னன் முதியவளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். அந்த மாடத்தின் சுவர்கள் வழியாக நீர் சொட்டி வழியும்படி அமைக்கப்பட்டிருந்தமையால் காற்று நீர்த்துளிகளுடன் குளிராக வீசியது. திருஷ்டத்யும்னனின் இமைகள் தாழ்ந்து தாழ்ந்து வந்தன. படுத்துவிடக்கூடாது என்று அவனே சொல்லிக்கொண்டான். திரும்பிப்பார்த்தபோது சாத்யகி மலர்ந்த முகத்துடன் துயின்றுகொண்டிருப்பதை கண்டான். அவன் தோளை உலுக்கி “யாதவரே, யாதவரே” என்றான். சாத்யகி புன்னகையுடன் “பெண்கள்…” என்றான். அவனை மேலும் சிலமுறை உலுக்கியபின் நிமிர்ந்தபோது திருஷ்டத்யும்னன் அந்த முதியவளின் கண்கள் முதிராச்சிறுமியென இளமையுடன் இருப்பதைக் கண்டு திகைத்துப்போய் திரும்பி சாத்யகியை நோக்கி “யாதவரே” என்றான். அருகே இருந்தவர் ”உஸ்ஸ்” என்றார்.

அவன் மீண்டும் அந்த முதியவளை நோக்கினான். அவள் கண்கள் நகைத்தன. இதழ்கள் இணைந்துகொண்டன. அவளுடைய உடலில் இருந்து மெல்லிய பட்டாடை உரிந்து சரிவதுபோல முதுமை மறைந்துகொண்டிருந்தது. நெற்றி பொன்னொளி கொண்டது. சிறுமூக்கு மெருகு கொண்டது. கன்னங்களில் சுருக்கங்கள் மறைந்தன. கழுத்தின் தசைகள் இறுகின. முலைகள் இறுகி மேலெழுந்தன. அசைவுகள் கொடியென பட்டுத்திரையென தழலென விரைவழகு கொண்டன. திருஷ்டத்யும்னன் அச்சத்துடன் சாத்யகியின் கால்களை அசைத்து “யாதவரே… யாதவரே” என்றான். சாத்யகி துயிலிலேயே சிரித்துக்கொண்டு “பெண்கள்… எங்கே பார்த்தாலும்” என்றான். காற்று உலைக்கும் பொன்னூல் என அவள் ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு முறை அவள் சுழன்றுவந்தபோது அவன் அவளை முன்னரே கண்டிருப்பதை உணர்ந்தான். மிக அண்மையில் மறக்கமுடியாத முகம். ஆனால் நினைவின்மேல் கண்ணாடிமேல் எண்ணையென ஏதோ படிந்திருந்தது. அதை அழிப்பதுபோல அவன் தலையை அசைத்து கண்களை மூடித்திறந்தான். அவளை அறிந்துகொண்ட கணம் நெஞ்சில் குளம்புபதிய மிதித்து மறுபக்கம் தாவிச்சென்றது இளமான்.

அவள்தான். அரசியென அமர்ந்து அவனை பிடித்துவர ஆணையிட்ட யாதவப்பெண். அவன் முழங்காலை ஊன்றி எழுந்து நின்று நோக்கினான். மீண்டும் அவள் சுழன்றுவந்தபோது அவன் அரையாடையைப்பற்றி இழுத்த பெண்ணை அவ்வுடலில் கண்டான். மறுகணமே அவள் ஓடிவந்து அவன் புரவியைப்பற்றி சுழன்று சென்ற சிறியபெண்ணென ஆனாள். பின் அவன் முலைக்கண்ணில் கணையாழி அணிவித்த பெண். அவனை நோக்கி உதட்டைக்குவித்து கூச்சலிட்டவள். அவனை பாஞ்சால அரசனா என்றவள். அவன் மேல் மஞ்சளையும் குங்குமத்தையும் வீசிச்சென்றவள். அவனை நோக்கி உதடு சுழித்து ஏதோ சொன்னவள். விழிமின்ன அவனை நோக்கியவள். கணம் கணமாக அங்கே அன்று கண்ட பெண்கள் அவள் உடலில் மின்னிமின்னிச் சென்றுகொண்டிருந்தனர். மெல்ல பின்னால் சரிந்து அமர்ந்து அவன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு பெண்ணும் அவனை அறிந்திருந்தாள். அவனை நோக்கவில்லை என்றாலும் அவன் நோக்கை உடலுணர்ந்திருந்தாள். நாணமும் ஆணவமும் விலக்கமும் ஆவலுமாக அவர்களின் விழிகள் திகழ்ந்து திகழ்ந்து மறைந்துகொண்டிருந்தன.

அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு சாத்யகியை பிடித்து உலுக்கினான். “என்ன? புரவிகள் வந்துவிட்டனவா?” என்றபடி எழுந்து அமர்ந்த சாத்யகி “என் தலைப்பாகை எங்கே?” என்றான். திருஷ்டத்யும்னன் “அதோ… அங்கே… அந்தப்பெண்கள்…” என அரங்கை சுட்டிக்காட்டினான். சாத்யகி சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “இது பழைய கதை. சியமந்தக மணி” என்றான். மீண்டும் படுக்கப்போன அவனைப் பற்றி “என்ன மணி?” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “அந்தக குலத்து சத்ராஜித்தின் மகள் சத்யபாமையை இளைய யாதவர் மணம்கொண்ட நிகழ்ச்சி… இன்று அதை பல இடங்களில் நடிப்பார்கள்” என்றபின் மீண்டும் படுத்து வாயை சப்புக்கொட்டி “அழகிய கனவு. கலைத்துவிட்டீர்கள்” என்றான். “சியமந்தக மணி என்றால் என்ன?” என்றான் திருஷ்டத்யும்னன். “சியமந்தகமலருக்கு சூரியன் அளித்தது. மலரை அனலுருவாக்கும் வல்லமைகொண்டது” என்றபின் “பாஞ்சாலரே, என்னை கனவுக்கு திரும்ப விடுங்கள்” என்றான்.

அவன் சப்புக்கொட்டியபடி திரும்பிப்படுத்ததை நோக்கியபின் திருஷ்டத்யும்னன் நிமிர்ந்து மேடையை நோக்கினான். திருஷ்டத்யும்னன் மேடையில் அந்தப்பெண்ணின் உடலில் கூடிய பெண்களை நோக்கினான். நகரமே ஒரு பெண்ணாக வந்து நின்றாடிக்கொண்டிருந்தது. குழைந்த முலைகள், எழுந்து மறைந்த இடைகள், ஊடே சுழன்ற குழல். அஞ்சி ஒல்கி நடந்து வந்து தயங்கி நின்றாள். திகைத்து பின்னகர்ந்து என்ன என்றாள். ஏங்கி விழிதூக்கி ஏன் என்றாள். துயர் கொண்டு துவண்டு எங்கு என்றாள். கண்ணீருடன் இன்னுமா என்றாள். மகிழ்ந்து துள்ளிவந்து நீ என்றாள். நாணித் தழைந்து நான் என்றாள். அவன் தன் தலை எடை மிகுந்து பக்கவாட்டில் அசைவதை உணர்ந்து விழிகளை உறுத்துக்கொண்டான். அவையில் அமர்ந்திருந்தவர்களின் விழிகளை ஒவ்வொன்றாக நோக்கினான். ஈரப்புதர்களின் இலைநுனிகளிள் போல மின்னிக்கொண்டிருந்தன.

எங்கிருக்கிறேன்? அவன் நெஞ்சு கண்ணுக்குத்தெரியா கரங்களால் மாவென பிசையப்பட்டது. வேண்டாம், வேண்டாம் என சித்தம் அலறியது. அந்தப் பீதர்நாட்டு மது. பித்தெழச்செய்கிறது. இறப்பின் கணம். இறந்துவிட்டேன். என் சடலத்தைப்பார்க்கிறேன். விழிவிரித்து குளிர்ந்து அமர்ந்திருக்கிறது அது. இதோ மேடையில் ஆயிரம்பல்லாயிரம் பெண்களாலான பெண் உருகி உருகி ஒன்றாகி செந்தழலென்றாடி பின் அமைந்து நீலம்கொண்டு ,மணிநிறமும் கார்குழலமர்ந்த பீலியும் நீள்விழிகளும் செவ்விதழ்களும் ஏந்திய நீங்காச் சிரிப்புமாக குழலிசைத்து நின்றிருக்கும் அழியா இளமையென்றாகிறாள். அறிந்த முகம். அகம் மறக்காத முகம்.

முந்தைய கட்டுரைசவரக்கத்தியும் துப்பாக்கியும்
அடுத்த கட்டுரைஸ்ரீனிவாசின் பதிவு