கித்தாரில்…

திரு. ஜெயமோகன்,

வணக்கம். சென்ற முறை தங்களிடமிருந்து மின் அஞ்சல் வந்ததிலிருந்து தங்களின் வலைப்பூவை பைத்தியம் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். தாங்கள் என் நாவலைப் படித்திருந்ததைத் தெரிவித்ததனால் தங்கள் மேல் காதல் கொண்டு இதில் இறங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன். இதைச் சொல்லும் போதே தங்கள் வலைப் பூவைப் படிக்கப் படிக்க நான் அப்படி ஒன்றும் காலத்தை வீணாக்கி விடவில்லை என்று தோன்றுகிறது. அடேங்கப்பா!எப்படித் தான் இப்படி எழுதிக் குவிக்கிறீர்களோ என்று பிரமிப்பும் பொறாமையும் எழுகின்றன. நாம் இருவருக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகத் தோன்றுகிறது. ( தங்களுக்கு மடல் எழுதும் ஒவ்வொரு வாசகனையும் இப்படி நம்ப வைப்பதில் தான் உங்கள் வெற்றியும் அடங்கி இருக்கின்றது என்றும் தோன்றுகிறது.) இது நிற்க.

நான் எழுத வந்த காரணமே வேறு. சந்தானம் பற்றித் தாங்கள் எழுதியதைக் கண்டு நான் எல்லை இல்லாக் களிப்பில் மூழ்கினேன். ஏனெனில் அந்த காந்தர்வனின் இசை சாகரத்தில் பல காலம் மூழ்கிக் கிடந்தவன் நான். என் இரண்டாம் நாவல் ‘ஒரு தேவதையும் வண்ணத்துப் பூச்சிகளும்’ சந்தானத்தின் ஒரே தில்லானாவில் (பசந்த் பஹார்) விளைந்த நெட்டுயிர்ப்பில் எழுதப் பட்டது. என் எக்களிப்பில் தங்களுக்கு ஒரு இசைச் செண்டு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது இதோ:

இதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். இது உங்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இதை சாதித்த கலைஞனைப் பற்றி பின்னர் தெரிவிக்கிறேன்.

அஸ்வத்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2
அடுத்த கட்டுரைமாபெரும் பயணம்