தேன்மலர்

அன்புள்ள ஜெயமோகன்,

நானும் என் நண்பனும் ஒரு கனத்த மனதுடன், ஒரு விரக்த்தியான மனநிலையில் நடந்து கொண்டிருந்தோம். வேலை இல்லை, அம்மா அப்பா சண்டை, அண்ணன் வீட்டை விட்டு வெளியேறியது, தோழி காதலியாக மறுப்பு , நட்பிடையேயான பொறாமைகள், பேசிக்கொள்ளப்படாத மன வருத்தங்கள்… என வகை வகையான பிரச்சனைகள். நட்பு கூட விரக்திக்கு வழி காண முடியாத ஒரு நிலை. பேசிக்கொள்ளவும் இல்லை. எவ்வளவு சிக்கலான ஒன்று இம்மனது! அச்சமயம் ஒரு கார் எங்கள் அருகே வந்து நின்றது. நாங்கள் ஓரமாக ஒதுங்கிக் கொண்டோம். காரிலிருந்து தன் அப்பாவின் கையை பிடித்து இறங்கியது ஒரு சிறு குழந்தை. அதன் ட்ரௌஸர் ஊதிப் பெருத்து அதன் சின்ன கால்களை மறைத்துள்ளது. தத்தி தத்தி ஒரு நடை. வேகமாக அப்பாவை இழுத்துக்கொண்டு எங்கோ நடக்கிறது. ஒரு கணத்தில் எல்லாம் அகன்று நாங்கள் இருவரும் சிரித்தோம். எல்லாம் அகன்றது ஒரு நொடியில். மலர்ந்தது மனது. வீடடைந்தேன். சின்னஞ்சிறு தேன்மலர்…. வந்ததும் தேவதேவன் கவிதையைத் தேடினேன்….

காட்டுச்செடி

காக்கை திருடிவைத்திருக்கும் வடையோ
அதைப் பறிக்க நினைத்த நரியோ அல்ல

மர்மமான துக்க இருள் நடுவே
ஒரு காட்டுச் செடி
தூய்மையின் வண்ணத்துடன்
பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர்
ஆக மெல்லிய அதன் மணக்கைகள்
தட்டுகின்றன எல்லோர் கதவையும்

முதலில் இக்கவிதயைப் படித்த போது தேவதேவன் ஸார்தான் அந்த தேன்மலராகாத் தோன்றினார். ஒரு ஜெர்க்கின் கோர்ட், ஒரு குல்லாய், ஒரு தோல் பை…தன் கவிதையால் பிறர் கதவைத் தட்டும் ஒரு தேன்மலர். பின் நான் கொஞ்ச நாட்கள் முன் புரிந்து கொண்ட தொன்மமான ஜீஸஸ் நினைவுக்கு வந்தார். நேற்று அக்குழந்தை கவிதைக்குள் வந்தது ஒரு அழகான அனுபவம். கவிதையின் பரவசம் என்னுள். இதற்கு முன் நான் கவிதைகள் வாசித்தவன் அல்ல. இம்முறை முகாமில் கவிதை அரங்கு என்னுள் இருந்த கவிதை வாசகனை திறந்து விட்டது. இம்மாதம் கவிதை ஷாப்பிங் உண்டு. பல கவிதைகள் என்னுள் பல திறப்புகளை அளிக்கின்றன. தேவதேவனுடன் காதலில் விழுகிறேன்.

மேலும் இன்று காலை பைக்கில் செல்கையில், ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டி…ரொம்பவும் சின்னது. தூய்மையின் நிறம். சின்னஞ்சிறு தேன்மலர். என் கதவு தட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இப்படிக்கு,
மூன்று சீனிவாஸன்களில் நான்
மோட்டார் சீனிவாஸ்

முந்தைய கட்டுரைமீட்சியும் மீளுருவாக்கமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 1