இன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..

அன்புள்ள ஜெ

இந்தமுறையும் ஊட்டி முகாமிற்கு வெளியேவே நின்றுகொண்டிருக்கிறேன். முந்தாநாள் உங்களுக்கு எழுதிய கடிதத்தை இரவு மீண்டும் படித்த போது அதில் அறம் வரிசை நாயகர்களை நான் பார்த்ததில்லை என்ற ஒரு தொனி இருந்த்து என்பதை கவனித்தேன். அது தவறு என தோன்றியது. நான் அவர்களை அறியாதிருந்திருக்கலாம். அப்படியிருந்தால் அவரை விரைவில் காணவேண்டும் என நினைத்தேன்…எந்த சூதர் ஓம் அவ்வாறே ஆகுக என்றாரோ ….

சென்னையிலிருந்து நாங்கள் எட்டு பேர் வந்த போது எங்களுடன் ஒரு பையும் வந்தது. முத்துகுமாரின் பை என யாரோ சொல்லக்கேட்டேன். அவர் நேரடியாக முகாமிற்கு வருவதால் அவர் பையை செளந்தர் வைத்திருந்தார். திரும்பி வரும. போதும் அந்த பை அறிவழகனிடம் இருந்தது. ஏனென கேட்டதற்கு அவர் நேராக திருவண்ணாமலை செல்வதால் பை மீண்டும் நம்முடனே வருகிறது என்றார்.

குருகுலத்திலிருந்து ஊட்டி பஸ்டாண்ட் வரும்வரை அறிவழகனுடன் அவரும் வந்தார். பஸ்ஸில் கடல் பட பாடல் ஃபுல் வால்யூமில் இருந்தது. சிறிது நேரத்தில் அவர் போனை எடுத்து பார்த்தார். இரண்டு மிஸ்டுகால்கள். பாட்டு சத்தத்தில் கேட்க வில்லை…ஒன்று பாரீஸிலிருந்து…மற்றொன்று 591 என ஐஎஸ்டி கோட் இருந்தது. எந்த நாடு தெரியுமா என என்னிடம் கேட்டார்.. நண்பர்கள் கூகுள் செய்து பார்த்ததில் பொலிவியா என வந்தது. யாருன்னு தெரியல ஆனா திரும்ப கூப்பிடுவாங்க… சேகர் போனத்துக்கப்புறம் ஜெயமோகன் ப்ளாக்கில் எழுதினாரில்லையா அத படிச்சுட்டு கால் பண்றாங்க என்றார்….

அப்பொழுதுதான் சரேலன அனைத்தும் நினைவிற்கு வந்தது.. இவர் முத்துகுமார் இல்லை… முத்துராமன்…. இவர்தான் இந்தியாவில் பிறந்த ஈழ குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார். மறைந்த நமது நண்பர் சந்திரசேகரும் இவர் மூலமாகத்தான் உதவி செய்து வந்திருக்கிறார். அதன்பிறகு அவரிடம் பேச ஆரம்பித்தேன். நிறைய சொல்லிக்கொண்டு வந்தார். பத்துக்கு பத்து ரூமளவே வீடுகள். அதிலிருந்தபடி படிச்சு 80, 85ன்னு மார்க்வாங்கியிருக்காங்க… ஆனா மேற்கொண்டு படிக்க முடியாமல் ஏதோ வேலைக்கு போறாங்க… இந்தியாவில் அகதி என்பதை தவிர வேறு எந்த அடையாளமும் இல்லீங்க…

ராஜீவ் படுகொலைக்குப்பிறகு வலுக்கட்டாயமாக திருப்பியனுப்பப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த இன அழிப்பில் கொல்லப்பட்டார்கள். இங்கே உயிரைத்தவிர வேறேதுமில்லை..அங்கே போனால் அதுவுமில்லை என்ற நெருக்கடியிலும் படித்து 80% வாங்கிய குழந்தைகள்…அவர்கள் படிப்பிற்காக இவர் அலைந்து கொண்டிருக்கிறார். காலேஜ் காலேஜாக…

பஸ் டிரைவர் செய்த குளறுபடியில் தள்ளி இறங்கிய அறிவழகன் அவர் பையை மறந்து போனார்..அது இறுதியிலிறங்கிய என்னிடம் வந்தது… ஒரு போத்தீஸ் பை. ஜிப் கிழிந்து பை திறந்திருந்தது.. உள்ளே விஷ்ணுபுரம் பழைய புத்தகமும் சில துணிகளும்…இன்று மாலைதான் பையை அவரிடம் திரும்ப சேர்த்தேன். ஆட்டோவில் வந்துகிட்டிருக்கேன்..அசோக் பில்லரருகே உள்ள சரவணபவன் வாசலில நில்லுங்க என்று சொன்னார். ஒவ்வொரு ஆட்டோவாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அந்த பக்கமாக வந்த ஷேர்ஆட்டோவிலிருந்து இறங்கினார்.. டீ சாப்பிடுறீங்களா என்று அருகிலிருந்த டீக்கடைக்கு கூட்டிச்சென்றார்.

நிறைய பேசினார்.. அவர் ஈழ குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. அவ்வப்போது நாள் / வார இதழ்களில் நான் கண்டு கடந்துபோகிற அனைவருக்கும் இவர் உதவி செய்துகொண்டிருக்கிறார். இவரே சம்பந்தப்பட்ட பத்திரிக்கையை அணுகி அவர்கள் மூலமாக பாதிக்கப்பட்டவரை அணுகி உதவி செய்கிறார்… அதில் ஒருவர் நான் சமீபத்தில் வார இதழில் படித்த ஒரு பெண்…காலேஜில் சேர்த்து விடுவது மட்டுமன்றி அவ்வப்போது பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் பேசி் சரியாக படிக்கிறார்களா என விசாரிக்கிறார்… நண்பர்கள் செய்யும் உதவி தவிர இவரும் தனது அம்மாவுக்கு வரும் ஃபேமிலி பென்சன் வரை இதற்காக எடுத்துக்கொள்கிறார்.
இதுவரை 24 பேர்… அடுத்த வருடம் இன்னும் அதிகமாவார்கள்

உங்கள் அறிவிப்பை பார்த்து பலர் போன் செய்து அவர்களால் இயன்ற பணத்தை அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு பெண் மூவயிரம்தான் இருக்கு.. அனுப்பறேன் என்றதற்கு உங்கள் சக்திக்கு மீறியது வேண்டாம் என மறுத்திருக்கிறார்.

சேகர் மாதம் பத்தாயிரம் தந்து உதவியிருக்கிறார்..அடுத்த வருடம் முதல் இருபதாயிரம் தருவதாக சொல்லியிருக்கிறார். அதற்குள் வேறுமாதிரி ஆகிவிட்டது. ஆனாலும் இவர் நம்பிக்கையோடு இருக்கிறார். சேகர் கொடுத்ததில் ஏதேனும் ஒரு பங்காவது நான் முயற்சிக்கிறேன். சிறுதுளி பெரு வெள்ளமாகாதா….

அன்புடன்

ஆர்.காளி ப்ரஸாத்

முந்தைய கட்டுரைஊட்டி ஒரு பதிவு
அடுத்த கட்டுரைஉன்னதம் இருவகை