ஜெயகாந்தன் நாவல்கள்- வெ.சுரேஷ்

jeyakanthan-l

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி

என்ற பெயர் என்னுடைய மிக இளவயது நினைவுகளில் ஒன்று. எப்போதும் புத்தகங்கள் சூழந்த எனது வீட்டில் கல்கி, லக்ஷ்மி ரசிகையான என் அம்மாவுக்கும் ஜெயகாந்தன், கண்ணதாசன் ரசிகரான என் அப்பாவுக்கும் இடையே ஒரு நட்பார்ந்த பனிப்போர் உண்டு. அப்பா எப்போதும் ஜெயகாந்தன் எழுத்துக்களை பற்றி உயர்வாக சொல்லிக்கொண்டிருக்க, அம்மா, “ஐயோ, எப்ப பாத்தாலும் வளவளன்னு பேசறதையே எழுதிண்டு…” என்பார். அப்போது என் அப்பா சிரித்துக் கொள்வார், எதுவும் விவாதிக்க மாட்டார்.

அந்த வயதில் என் அப்பாவின் ஆகிருதி மீதிருந்த கவர்ச்சியால் ஜெயகாந்தன் என்ற பெயரை என் ஆழ்மனது குறித்து வைத்துக்கொண்டது. மேலும் அவரும் என் அப்பாவைப் போலவே பெரிய மீசை வைத்திருந்தது எனக்குப் பிடித்திருந்தது. அவரது ஆக்கங்களை நான் என் பதின்பருவத்தில் வாசிக்கத் தொடங்கியபோது அது பற்றி விவாதிக்கவும், உண்மையில் ஜேகேவின் படைப்புகள் குறித்து என் தந்தை என்ன எண்ணங்கள் கொண்டிருந்தார் என்பதை தெரிந்து கொள்ளவும் என் தந்தை உயிருடன் இல்லை.

எனினும் அரசு நூலகங்களில் ஜேகேவின் படைப்புகளைத் தேடித்தேடி வாசித்து நண்பர்களுடன் விவாதித்தேன். நான் வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியவுடன் வாங்கிய முதல் 20 புத்தகங்களில் பத்தாவது ஜெகேவுடையதாக இருக்கும். இப்படித் தொடங்கிய ஜெகே வாசிப்பு அவ்வப்போது விட்டுவிட்டு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

எந்த ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளனும் அவனது காலத்தால் உருவாக்கப்படும் கலைஞன். ஜேகேவை உருவாக்கியதில் அவர் வாழ்ந்த காலத்தின் தாக்கத்தை சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொன்றுதொட்டு வரும் கலாச்சார ரீதியாகவும் மூன்று பின்னணிகளிலும் வைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற அண்மைக்காலத்திலேயே மிக வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்த இந்திய, தமிழக சமூக நிகழ்வுகளே அவரது அக்கறைகள். இதில் இந்தச் சமூகத்தின் விழுமியங்களை நிர்ணயிப்பதிலும் மாறுதல்களை கொண்டு வருவதிலும் மிக முக்கியமான மூன்று விசைகளாக திகழ்ந்து கொண்டிருந்த இந்திய தேசிய இயக்கம், பொதுவுடைமை மற்றும் தமிழகத்தின் திராவிட இயக்கம் ஆகிய அக்காலத்தின் முக்கியமான மூன்று இயக்கங்களில் மார்க்ஸ், லெனின், பாரதி, காந்தி, நேரு என்று தனக்கான ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் ஜேகே. இதை அவரது படைப்புகளில் நாம் காணலாம். அவரது வார்த்தைகளில் சொன்னால், “பொதுவுடமை மனிதாபிமானம், சமத்துவம் என்ற நல்லுணர்ச்சிகள் எல்லாம் ஐரோப்பிய சிந்தனைகள் நம்மை ஆக்கிரமிப்பதற்கு முன்னாலேயே நமது சித்தத்தில் நன்கு வேரோடியிருந்தன என்று கம்யுனிஸ்ட் கட்சியில் நான் வளர்ந்த காலத்திலேயே புரிந்து கொள்ள கற்றுக் கொண்டேன். இதன் காரணமாகவே நமது புராதன இதிகாசங்களையும் புராணங்களையும் இலக்கியங்களையும் மறுத்து அக்காலத்தில் பெருகியிருந்த அரசியல்- நாத்திகவாதத்துக்கு நான் எதிராக நேர்ந்தது.” மேலும் ” மனிதனுக்கும்சமூகத்துக்கும் ஏற்பட்டுவிட்ட வழக்கில் நியாயமான தீர்ப்பை சமூகத்திடம் எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை.எனவே சமூகத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரையுமே தனித்தனியே சந்திக்க விரும்புகிறேன்.தீர்ப்பை எதிர்பார்த்து அல்ல.எனது தீர்ப்பை பிரகடனம் செய்யா இந்தத் தீர்ப்பு சமூகத்துக்கோ தனி மனிதனுக்கோ உபதேசிக்கும் பொது தர்மமல்ல…..ஒரு ஞானம் என்று புரிந்து கொள்ள மட்டும் உரிமை உள்ள எனது சுதர்மம்.

இந்தப் பிரகடனமே அவரது படைப்புகளின் பின்புலமாக அமைகிறது. மேலும், இதுவே அவரது சமகால எழுத்தாளர்களான சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற நவீனத்துவர்களிடமிருந்தும், க நா.சு., தி ஜானகிராமன் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையைச் சேர்நத கு.ப.ரா, மௌனி போன்றவர்களிடமிருந்தும் அவரைப் பிரித்துக் காட்டியது, இவர்களிடம் காணக் கிடைக்காத வகையில் தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவுகளைக் குறித்து அவர் அதிகம் பேசியதும் நவீனத்துவத்தின் மீதான அவரது மரபிலிருந்து விலகாத அக்கறையும் ஜெயகாந்தனின் தனித்தன்மைகள். அதனாலேயே அதுவரை வந்த தமிழ் படைப்புகளில் இடம்பெறாத இடங்களையும், மக்களையும் அவர் பேசுபொருளாக்கினார்.

அதே சமயம், அன்று பெரும்பத்திரிக்கைகளிலும், வலுவோடு திகழ்ந்து கொண்டிருந்த லட்சியவாத எழுத்து என்னும் அடையாளம் இருந்தாலும் கற்பனாவாத எழுத்தையே படைத்துக் கொண்டிருந்த அகிலன், நா.பா போன்றவர்களிடமிருந்தும் தனித்துத் நின்றார். அதனால்தான், ஒரு தலைமுறையே அவரை ஆசானாகக் கொண்டது. தமிழின் நவீன இலக்கியத்தில் அவர் வரையிலான படைப்பாளிகளில் ஒரு காலகட்டம் வரை புதுமைப்பித்தனுக்குப் பிறகு அவரையே ஒரு பெரும் நிகழ்வாக சொல்ல வேண்டியிருந்தது. இன்று இந்தச் சிந்தனையில் மாற்றம் இருக்கலாம்.

ஜேகேவைப் பற்றிய இந்தப் புரிதலின் பின்னணியிலேயே அவரது அனைத்துப் படைப்புகளையும் பார்க்கவேண்டியுள்ளது.

oOo

ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள் முன்னுரைகள் என்று ஒரு காலகட்டம் வரை எழுதிக் கொண்டிருந்த ஜேகே இவை போக மொத்தம் 12 நாவல்கள் எழுதியுள்ளார். அவை எல்லாமே நாவல் என்று நாம் இன்று (ஜெயமோகனின் நாவல் நூல் வெளிவந்தபிறகு) புரிந்து கொள்ளும் அர்த்தத்தில் உள்ளனவா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். நாவல் என்பதன் அர்த்தமும் தன் படைப்புகள் அந்த அர்த்த்தத்தில் உள்ளனவா என்ற கேள்வியும், அதில் ஒரு அதிருப்தியும் ஜெகேவுக்கு நிச்சயமாக இருந்திருக்கிறது. அவரது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முன்னுரையில் “நாவல் என்ற ஒன்று இருப்பதாக நம்பியதுண்டு அது தமிழில் வளம் பெறவில்லை என்று விமர்சகர்கள் சொன்னார்கள். அந்த வசை என்னால் கழியட்டும் என்று பெரும் ஆசை கொண்டு (பேராசை அல்ல) நான் பேசியதும் உண்டு. ஆனால் அதற்குரிய நேரமும் நிதானமும் எனக்கில்லை. எனவே நாவல் என்பது என்னைப் பொருத்தவரை கைக்கெட்டாத கனவு என்று அது பற்றிய கனவுகளிலேயே சஞ்சரித்தேன். இந்த படைப்பைக்கூட ஒரு தொடர்கதை என்றே அழைக்க விரும்புகிறேன்,” என்கிறார். ஆகையால் அவரது அந்த 12 படைப்புகளையும் ஒரு வசதி கருதியே நாவல்கள் என்று நாமும் சொல்லிக் கொள்ளலாம்.

ஜெயகாந்தனின் இந்த நாவல்கள் ஒரு புள்ளியில் தொடங்கி விரிந்து எதையும் புதிதாகக் கண்டடைபவையா என்றால், இல்லையென்றே கூறலாம். உறுதியாக அவர் மனதில் உருவாகிவிட்ட கருத்துகளுக்கும் அவற்றுக்கு எதிரான கருத்துக்களுக்கும் ஸ்தூல உருவங்கள் கொடுக்கப்பட்ட பாத்திரங்கள் மூலம் நடைபெறும் மோதல்களும் விவாதங்களுமே அவரது நாவல்கள் எனலாம்

அவரது நாவல்களில் நான் ரசித்தவற்றையும், அவை என்னுள் எழுப்பிய கேள்விகளையும் உங்கள் முன் வைக்க இருக்கிறேன். இது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட ரசனை அடிப்படையில் ஆனது. நான் வாழும் காலத்தின் சமூக நிகழ்வுகளின் தாக்கம் என்னுள் எழுப்பும் கேள்விகளையும் அடிப்படையாகக் கொண்டே அவரது மூன்று நாவல்களை அணுகவிருக்கிறேன்.

1

1. ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்

இது முதன்மையாக ஒரு அற்புதமான feelgood novel. அதாவது, நன்னம்பிக்கை அளித்து, நல்லுணர்வுகளால் நிறைக்கும் நாவல்- உயர் இலக்கியம் என்று சொல்ல முடியாவிட்டாலும், நல்லிலக்கியம் என்று தீர்மானமாகச் சொல்லலாம். மனது சோர்வுறும் போதெல்லாம் இந்த புத்தகத்தை எடுத்து கொஞ்ச நேரம் ஹென்றியோடு இருந்தால் மனம் லேசாகிறது. ஹென்றி, படிப்போர் மனதிலெல்லாம் புன்னகையை உருவாக்கும் ஒரு பாத்திரப்படைப்பு. இந்த நாவலே ஹென்றியின் பாத்திரத்துக்காகத்தான் என்றும் சொல்லலாம். விரிந்த கண்களும் திறந்த மனமுமாக எதையும் உள்ளவாறு அப்படியே உள்வாங்கி ஏற்றுக் கொள்ளும் ஹென்றியைப் புரிந்து கொள்வதே இந்த நாவலை புரிந்து கொள்வது.

தன் வளர்ப்புத் தந்தையின் மரணத்துக்குப்பின் அவரது சொந்த ஊரான கிருஷ்ணராஜபுரத்துக்கு ஹென்றி வரும் காட்சியோடு தொடங்குகிறது நாவல். கிருஷ்ணராஜபுரத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் லாரியில் ஏறி, அந்த ஊரைச் சேர்ந்த தேவராஜன் மற்றும் லாரி ஓட்டுனர் துரைக்கண்ணு ஆகியோரிடம் அறிமுகம் ஆகி, அந்த கிராமத்தில் தேவராஜன் வீட்டிலேயே தங்கி கிராமத்தில் ஒருவனாக அவன் மாறிவிடுவதுதான் கதை. மிக அன்னியமான ஒரு தோற்றத்திலும், அந்தக் கிராமத்துக்கு முற்றிலும் அன்னியமான ஒரு பேச்சு வழக்கோடும் அவர்களுக்கு ஒரு வெள்ளைக்கார தொரையாகவே அறிமுகமாகும் ஹென்றி அந்தக் கிராமத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் திடீரென்று மறைந்துவிட்ட சபாபதி பிள்ளையின் மகன் என்றாலும், அவன் தன உரிமைகளை நிலைநாட்டவோ சொத்துக்களை மீட்கவோ அங்கு வராமல் தன் தந்தையின் சொந்த பந்தங்களோடும் அவர் மண்ணோடு நேசம் பாராட்டவும் அவர்கள் மத்தியில் சபாபதிப் பிள்ளையின் மகன் என்ற அங்கீகாரத்தை நாடியும் மட்டுமே வந்திருக்கிறான். அந்த கிராமத்தினர் அவனை முழுமனதுடன் தங்களில் ஒருவனாக, ஹென்றி பிள்ளையாக, ஏற்றுக் கொள்கின்றனர்.

பெரும் உணர்ச்சிப் போராட்டங்களோ, பெரும் திருப்பங்களோ எதுவும் ஏற்படாத, அதன் போக்கில் மிக நிதானமானச் சென்று முடிந்து விட்டதா என்றேகூட நிச்சயமாக சொல்ல முடியாத ஒரு படைப்பு. அன்றாட வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களில் உள்ள அழகை அவை நிகழும்போது இழந்து விடுகிறோம். ஆனால் இந்த நாவலில் அவைகளின் அழகுகள் ஹென்றியின் கண்கள் வழியாக திரும்பக் கிடைக்கின்றன. அவை விடுமுறைக்கு கிராமத்தில் பாட்டி வீட்டுக்குச் சென்று தங்கும் பரவசத்தை உருவாக்குகின்றன.

இதற்கு மற்றுமொரு காரணம் ஹென்றியின் பாத்திரப் படைப்புக்குச் சற்றும் குறையாத வகையில் அமைந்திருக்கும் கிராமத்தில் உள்ள மற்ற மனிதர்களின் பாத்திரப் படைப்பும்தான். அந்தக் கிராமத்து மக்கள் ஹென்றிக்கு தன் பப்பாவின் மூலம் அறிமுகமாகியுள்ளது போலவே நமக்கும் அறிமுகமான, நாமும் நம் அன்றாட வாழ்வில் சந்தித்திருக்கும் சர்வ சாதாரணமான, ஆனால் தனித்த அடையாளங்கள் கூடிய மக்கள். ஜேகே பாத்திரங்களின் தனி அடையாளங்களை அவர்களின் குணாம்சங்களை மட்டுமல்ல, அவரவர் ஜாதியையும் குறிப்பிட்டே நிறுவுகிறார்.

இங்கு ஜாதி ஒரு ஆதிக்க சக்தியாக இருப்பதில்லை. ஒரு அடையாளமாக மட்டுமே இருக்கிறது. அந்த அளவுகோலின்படியே, ஹென்றி அங்கே ஹென்றி பிள்ளையாகிறான். ஆனால் அந்த அடையாளமும் ஹென்றியின் மீது எந்த பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை. ஜாதி, மதம் போன்றவற்றை எல்லாம் எளிதாகக் கடந்த ஒரு நிலையில் இருக்கும் ஹென்றி, தான் ஒரு ஹிந்து சாமியைக் கும்பிட்டபின், “கிறித்துவனான நீங்கள் இப்படிச் செய்யலாமா?” என்று கேட்பவரிடம், “மதத்துக்கும் சாமிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?” என்று கேட்பது ஒரு முக்கியமான இடம். அதைப் போலவே பேபி என்ற அந்த விசித்திரப் பெண்ணிடம் ஹென்றி காட்டும் அக்கறையும் அவள் அவனை விட்டு தன்னிச்சையாக பிரிந்து செல்லும் போதுகூட அதை வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டு இந்த வீட்டின் கதவுகள் அவளுக்காக எப்போதும் திறந்தே இருக்கும் என்று நினைத்துக் கொள்வது ஹென்றியின் மனப்பன்மைக்குச் சான்று.

ஒரு குழந்தையின் ஆச்சரியத்தையும், விகல்பமற்ற தன்மையையுமே அதிகம் வெளிப்படுத்தும் ஹென்றி (அந்த சோப்பெங்கேப்பா நடனம்) சில சமயங்களில் நன்கு கனிந்து முதிர்ந்தவனாகவும் தெரிகிறான்- குறிப்பாக, பேபி பற்றிய விவாதத்தில், “ஒரு மனிதன் நிர்வாணமாகத் திரிவதை மட்டும் வைத்து அவனைப் பைத்தியம் என்று எப்படிச் சொல்வது? அவர்கள் நடத்தை உங்கள் வழக்கப்படி ‘இன்டீஸண்ட்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஆடைதானே நம் நாகரிகத்தின் குறைந்தபட்ச அடையாளம்?” என்று சொல்லுமிடம். அதே போல் எந்த இடத்திலும் அவன் அடுத்தவரின் பிரச்சனைகளில் தன் கருத்துகளை அழைக்காமல் சொல்பவனாக இல்லை. தன நண்பன் தேவராஜனின் இல்வாழ்க்கைச் சிக்கல்களைக்கூட அவன் தள்ளி நின்றே கவனிக்கிறான். பெங்களூர் என்னும் நவீன நகரிலிருந்து மேற்கத்திய பாவனைகளுடன் வரும் அவன், தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டுக்கு மின்சார இணைப்பு எடுத்துக் கொள்ளலாமே என்ற யோசனையை மறுத்து அகல் விளக்கே போதும் என்று சொல்லும் இடம் தேவைக்கு மட்டுமே நவீன உலகின் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்னும் புரிதலைக் காட்டுகிறது.

ஹென்றியின் குணச்சித்திரத்துக்கு மூல காரணமாக அமைந்திருக்கும் அவனது பப்பா சபாபதி பிள்ளையை ஜேகே ஹென்றியின் வார்த்தைகளிலும் நினைவோட்டங்களின் மூலமாகவுமே நிறுவிவிடுகிறார். ஆனால் அந்த அளவுக்கு அவனது அன்னை பற்றிய பதிவுகள் ஹென்றியிடம் இல்லை என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது.

ஹென்றியின் வளர்ப்புத் தாய்தந்தையரின் பின்னணியை இந்திய இராணுவத்துடனும், இந்திய ரயில்வேத் துறையுடனும் பிணைத்திருப்பது தற்செயலானது அல்ல. இந்தியாவை நவீனப்படுத்துவதில் இரு முக்கிய விசைகள் குறித்த ஜேகேவின் புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டு இவை. முக்கியமாக, ரயில்வே துறை என்பது பல்வேறு ரயில்வே காலனிகளில் அங்கு கூடி வாழும் பணியாளர்களிடையே, ஒரு தனித்த அடையாளத்தை எழுப்பியிருப்பதையும், பிற அடையாளங்களை அது அழித்திருப்பதையும் காணலாம்- சென்னையில் பெரம்பூர், திருச்சியில் பொன்மலை, கோவையில் போத்தனூர் போன்ற இடங்கள் இதற்கு சாட்சி (இப்போது இது நிறைய மாறிவிட்டது என்ற போதிலும்).

ஜேகே எப்போதும் சமூகம் தனி மனிதர்களின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களின் மீது போடும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை எதிர்த்தே இருப்பவர். மனிதன் வெறும் புல்லுக்கும் புகையிலைக்குமா பயப்படுவது என்று கேட்பவர். அவர் படைப்புகளில் அது குறித்த விமர்சனம் எப்படியும் பாத்திரங்களின் வாயிலாக வரும். இதிலும் மதுவிலக்குக்கு எதிராகவும் கஞ்சா உபயோகம் குறித்தும் அவரது கருத்துகள் இயல்பாக பதிவாயிருப்பதைக் காணலாம். மது அருந்தியதற்காக போலிசால் கைது செய்யப்பட கண்ணியமான மணியக்காரர் அந்த அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் இடம் தனி மனித பழக்க வழக்கங்களை சமூகமும் அரசும் கட்டுப்படுத்தும் விதம் குறித்து யோசிக்க வைக்கிறது.

அதைப் போலவே, லாரி க்ளீனர் சிறுவர்கள் டீக்கடை, மெக்கானிக் கடை, உதிரி குழந்தைத் தொழிலாளிகள் போன்றவர்களிடம் அவருக்குள்ள இயல்பான கரிசனம் இந்த நாவலிலும் வெளிப்படுகிறது. இந்த நாவலில் பாண்டு என்ற அந்த கிளீனர் சிறுவன் பாத்திரம் ரசிக்கத்தக்கது. அவனுக்குத் தன் எஜமானன் துரைக்கண்ணுவிடம் உள்ள பயபக்தியும் பாசமும் வெகு அழகாக பதிவாகியுள்ளது. ஆரம்பக் காட்சியில், ஹென்றி லாரியில் க்ருஷ்ணராஜபுரத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் என்று கேட்க, தேவராஜன் இன்னும் 4 மைல்கள் என்று ஆங்கிலத்தில் கூறுவான். உடனே லாரி ஓட்டுனர் துரைக்கண்ணு, “நோ நோ ஒன்லி 3 மைல்ஸ்,” என்று ஆங்கிலத்தில் கூறும்போது பாண்டுவுக்கு உண்டாகும் பெருமையும் பரவசமமும் நமக்கும் ஏற்படுகிறது.

இவ்வளவு பீல் குட் தன்மைகள் இருந்தாலும் இந்த நாவல் குறித்து சில நெருடல்களும் கேள்விகளும் நிச்சயமாக உண்டு.

சபாபதி பிள்ளை க்ருஷ்ணராஜபுரத்திலிருந்து 10 ஆண்டு மணவாழ்க்கைக்குப்பின் வெளியேறுகிறார். அதன் பிறகு அவர் ராணுவத்தில் சேர்ந்து அங்கிருந்து வெளியேறி ரெயில்வேயில், பயர்மேனாக இருந்து ஒய்வு பெற்று மறைவதன் கால அளவுகளை குறித்தெல்லாம் ஜேகே அவ்வளவு அலட்டிக் கொள்ளவேயில்லை. அதைப் போலவே துரைக்கண்ணு பிள்ளைக்கும் சபாபதி பிள்ளைக்குமான வயது வித்தியாசம், ஹென்றி க்ருஷ்ணராஜபுரத்திற்கு வரும்போது துரைக்கண்ணு பிள்ளையின் வயது போன்றவைகள குறித்து அதிகமும் அலட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

இப்போது இதை படித்து முடித்தபோது இவற்றைத் தாண்டி ஒரு கேள்வி என் மனதில் எழுந்தது. ஹென்றியின் பேதமற்ற மனதை புரிந்து கொண்டு அவனை அரவணைக்கும் கிராமத்தினரை அவரவரின் தனி ஜாதியடையாளங்களோடுதான் காட்டுகிறார் ஜேகே. முன்பே சொன்னது போல ஜாதி ஓர் ஆதிக்க சக்தியாக இல்லாமல் வெறும் அடையாளமாகவே இங்கு வருகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் முக்கியமான உரைகல் என்பது ஊருக்கும் சேரிக்குமான உறவுதானே? ஏன் க்ருஷ்ணராஜபுரத்தில் சேரியோ தலித் பாத்திரங்களோ இல்லை? பேபி என்ற அந்த விசித்திரப் பெண்ணை அரவணைத்துக் கொள்ளும் ஹென்றி அதே போல ஒரு தலித்தை எந்த பேதமுமின்றி ஏற்றுக் கொண்டிருந்தால், கிருஷ்ணராஜபுரத்தில் காட்டப்படும் தர்மகர்த்த முதலியார், மணியக்கார கவுண்டர், தேவராஜ் நாயக்கர், பஞ்சாயத்தார் கிராமணி, டீக்கடை தேசிகர், அக்கம்மாள், துரைக்கண்ணு பிள்ளை ஆகியோர் ஹென்றியை ஏற்றுக் கொண்டிருப்பார்களா?

இந்தக் கேள்வி இந்த நாவலைப் பற்றிய எந்த விமர்சனத்திலும் உள்ளதாக எனக்கு நினைவில்லை. எழுதப்பட்டதைத்தான் விமர்சிக்கலாம், எழுதப்படாததை ஏன் இழுக்க வேண்டும் என்று நிச்சயம் கேட்கலாம். அடையாள அரசியல் என்பது மிகக் கூர்மை அடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் இந்த நாவலை வாசிக்கும், சமூக பிரக்ஞையுள்ள ஒரு வாசகனின் மனதில் இந்தக் கேள்வி இயல்பாக எழும் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக முன்பு புதுமைப்பித்தனுக்கு நிகழ்ந்தது போல ஜேகேவையும் ஒரு தலித் விரோதி என்றோ, அவர்கள் மேல் அக்கறை இல்லாதவர் என்றோ நான் புது பூதம் எதையும் கிளப்பவில்லை. இந்த காலகட்டத்தில் இந்நாவலை மீண்டும் வாசிக்கும்போது என் மனதில் இயல்பாக எழுந்த கேள்வியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.

ஒரு லட்சியவாத உலகப் பிரஜையான ஹென்றியின் பார்வைக்கு ஒரு தமிழக கிராமத்தின் சேரி ஏன் காட்சிப்படுத்தப்படவில்லை என்று எனக்குப் புரியவில்லை. அந்த ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் அவனை உலுக்கியிருக்குமல்லவா? அது ஒரு முக்கியமான முரண்பாட்டை நாவலில் உருவாக்கியிருக்கும் என்பதையே நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இப்படி பார்க்கும்போது இந்த நாவல் முற்றிலுமாக ஒரு கற்பனாவாத, தமிழ் சமூகம் குறித்த ஆழமான, கடினமான கேள்விகளைச் சந்திக்க விரும்பாத, அந்தரத்தில் ஊசலாடும் ஒரு நல்லெண்ணப் படைப்பாக மட்டும் சுருங்கி விடுகிறதோ என்ற ஐயத்தையும் உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

3

2. பாரிசுக்குப் போ

இரு இசை மரபுக்களுக்கு இடையே, இரு கலாசாரங்களுக்கு இடையே, தொன்மையான மதிப்பீடுகளுக்கும் நவீன மதிப்பீடுகளுக்கும் இடையேயான மோதலை இந்த இருவேறு தன்மைகளுக்கும் அடையாளங்களாக விளங்கும் தந்தை- மகன் என்ற இரு பாத்திரங்களின் மோதலின் வாயிலாக நிகழ்த்திக் காட்டுகிறது இந்த நாவல். தந்தை சேஷையா அவர் காலத்தில் அவரது முன்னோர்களின் மரபாகக் கருதப்பட்டவற்றைத் தூக்கி எறிந்து ஒரு புதிய பாதை தேடி புறப்பட்ட புரட்சிக்காரர் என்பதும், மகன் சாரங்கன் நவீனத்துவத்தின் (இங்கு இது modernity, modernism அல்ல) பிரதிநிதி என்ற போதிலும் இந்தியாவின் நவீனத்துவம் என்பது இந்திய மரபிலிருந்து கிளைத்து வருவதேயன்றி மேற்கை நகலெடுப்பது அல்ல என்ற மரபின் மீது தீவிர பிடிப்பும் உள்ள புரட்சியாளன் என்பதும் சுவாரசியமானது.

இந்த நாவலில் இசை ஒரு முக்கிய குறியீடாகவும் ஸ்தூலமான இருப்பாகவும் விளங்குகிறது. இந்தியா நவீனம் அடைவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஜேகே இசையை ஒரு குறியீடாகக் கொண்டு விளக்குகிறார். அதே சமயம் இந்தியாவின் பாரம்பரிய இசை அதன் சாதாரண மக்களிடமிருந்து விலகி, பண்டிதர்களின் வெற்றிலைச் செல்லத்திற்குள் இருப்பதையும், இந்தியாவின் சாமானிய மக்களுக்கான இசை என்பது அதன் பாரம்பரிய இசையிலிருந்து இயல்பாக உருவாகி நவீனமடையாமல் மேற்கின் படைப்புகளை கள்ளத்தனமாகத் தழுவி, தன் ஆன்மாவைத் தொலைத்து நிற்கும் சினிமா இசையாக சீரழிந்து நிற்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார் ஜேகே.

சாரங்கனுடனான உரையாடலில் மகாலிங்கம் சினிமா இசையே தற்கால சாமான்ய ஜனங்களின் இசை என்று ஆகிவிட்டதை சுட்டிக் காட்டும்போது, அந்த சினிமா இசை என்பது மேற்கத்திய இசையின் அப்பட்டமான நகலும், இந்திய பாரம்பரிய இசையின் ஒரு குறைபட்ட உருவமும் கலந்து செய்யப்பட்ட குமட்டல் ஊட்டக்கூடிய ஒன்று என்றே சாரங்கன் காண்கிறான். இந்தியாவுக்கெனவும் தமிழகத்துக்கெனவும் நம் மரபிலிருந்து ஒரு நவீன இசை முகிழ்த்து வராமல் மேற்சொன்ன ஒரு கலப்பட இசையே இங்கு வெகுஜன இசையாக கொடி நாட்டியிருப்பதும், அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் ஒரு சிறு உயர்வர்க்கத்தினரிடம் நமது பாரம்பரிய இசையறிவு சிறைபட்டிருப்பதுமே சாரங்கனின் கவலைகள். இந்த நிலையை மாற்றி இந்தியாவின் மரபிசையிலிருந்து நவீன இசை ஒன்றை உருவாக்கும் அவனது முயற்சி தோல்வியடைந்து இங்கிருக்கும் பழமைவாதமும், கலை உணர்வற்ற முழுமையான வணிக அணுகுமுறையும் அவனை பாரிசுக்குப் போய்விடு என்று விரட்டுவதே இந்த நாவல். ஆனால் சாரங்கனின் முயற்சி ஒரு முழுமையான தோல்வியாக முடியாமல் அவனைக் காப்பாற்றுகிறது அக்காலத்தில் இந்தியாவின் கலாச்சாரத் தலைநகரான கல்கத்தாவில் அமைந்திருந்த சாந்தி நிகேதன் கல்லூரி. பாரிசுக்குப் புறப்பட்டவன் கல்கத்தாவுக்குத் திரும்புகிறான்.

இதில் சாரங்கன் தரப்பும் அவன் தந்தையின் தரப்பும் தேர்ந்த உரையாடல்கள் மூலமே சொல்லப்படுகின்றன. ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்வது அரிதாகவே நிகழ்ந்தாலும், சாரங்கனின் பத்திரிகை பேட்டியில் அவன் மரபிசை குறித்து சொல்வதும் அதற்கு லலிதாவிடம் சேஷையா அளிக்கும் எதிர்வினையும் மிக முக்கியமானவை. பின் மேனனின் ஓவியக் கல்லூரியில் சாரங்கன் நவீனத்துவம் குறித்து நிகழ்த்தும் உரையும் இந்த நாவலின் சாரம் எனலாம்.

இதைப் படிக்கும்போது, நவீனத்துவ அலை பாரம்பரிய கலைகளின் மரபு மீதும், அந்த வாழ்க்கை நோக்கு மீதும், அது மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மையமாகக் கொண்ட பிற இந்திய நாவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். முக்கியமாக ஆரோக்கிய நிகேதனத்தின் ஜீவன் மஷாயும், சேஷையாவும் ஒப்புநோக்க சாத்தியமுண்டா? அப்படி பார்க்கும்போது ஜீவன் மஷாயின் திறந்த மனது செஷையாவிடம் இல்லையோ என்று நினைக்க வேண்டியுள்ளது, எவ்வளவுதான் தன் கலையின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் உள்ளபோதும், அவர் தன் காலத்தில் வெளியிலிருந்து வரும் ஒரு நவீன முறையையும்புரிந்து கொள்ளவே முயல்கிறார். ஆனால் சேஷையா நிர்த்தாட்சண்யமாக அதை புறக்கணிக்கிக்கிறார்.

இது மட்டுமே பாரிசுக்குப் போ இல்லை என்பதும் அதன் சிறப்பு. இந்தப் படைப்புக்குள் மூன்று இழைகள் உள்ளன. ஒன்று, சாரங்கன்- சேஷையா மோதல், இரண்டு, சாரங்கன்- லலிதா உறவும் பிரிவும், மூன்றாவதாக அதிகம் கவனிக்கப்படாமல் உள்ள சேஷையாவின் மகள் பாலம்மாள் கணவன் நரசய்யாவின் உறவும் பிரிவும் அவர்களது மகன் முரளி தன் தந்தை மீது கொள்ளும் ஈடுபாடும். நரசய்யாவின் கதை ஒரு தனி நாவலுக்கான அம்சங்கள் கொண்டதாக உள்ளது. இந்தப் பகுதியை இப்போது படிக்கும்போது ஜெயமோகனின் அனல்காற்று துவங்கும் புள்ளியோ இது என்றும் தோன்றியது. நரசய்யா ஒரு விதத்தில் கண்ணகியிடம் திரும்பாமல் மாதவியுடனேயே வாழ விதிக்கப்பட்ட கோவலன். அவரது காதலுக்காக தன் புகழைத் தியாகம் செய்யும் கங்காவும் ஒரு வலிமையான படைப்பு. இன்னொரு கோணத்தில் சாரங்கன் மேற்கத்திய இசையைக் காதலிப்பதன் காரணமாக தந்தையால் புறக்கணிக்கப்படுவது போலவே அவரும் கங்கா என்ற நடன மாதுவிடம் தன மனதைப் பறி கொடுத்ததற்கு பாலம்மாளால் தண்டிக்கப்படும் உண்மையான கலைஞன். ஆனால் சாரங்கனை ஒரு கலைஞனாக ஏற்றுக் கொள்ளாத சேஷைய்யாவின் உள்ளத்தில் நரசய்யா ஒரு உத்தமராக உயர்ந்த இடத்தையே பெறுகிறார். ஒருவேளை அதுதான் அவர் சாரங்கனையும் வருங்காலத்தில் அங்கீகரிப்பதற்கான அடையாளமோ?

ஜேகே அதிகமும் அறிவுத்தளத்தில் நின்று எழுதும் எழுத்தாளர் என்பதற்கு இந்த படைப்பிலும் அமைந்துள்ள மிகமிகத் துல்லியமான தர்க்கங்களுடனும் கூர்மையுடனும் அமைக்கப்பட்டிருக்கும் உரையாடல்கள் சாட்சி. குறிப்பாக லலிதாவும் சாரங்கனும் தம் உறவின் எல்லைகளை உணர்ந்து வகுத்துக் கொள்ளும் இடம், சாரங்கனின் ஓவியக் கல்லூரி உரை, மகாலிங்கத்துடனான அவனது தமிழ் சினிமா இசை குறித்த உரையாடல்கள் மற்றும் கல்கத்தா சுந்தரத்தின் கடிதங்கள் என்று நிறைய சொல்லலாம்.

இப்படைப்பின் இன்னொரு முக்கிய அம்சம், ஜேகே சேஷையாவின் குடும்பத்திற்கு அளித்துள்ள தெலுங்கு பின்னணி, இடையிடையேவும் இறுதியில் நரசய்யாவின் வாயிலாகவும் வரும் சுந்தரத் தெலுங்கின் மணம் படைப்புக்கு ஓர் அபூர்வமான நம்பகத்தன்மையும், அழகும் அளிக்கிறது. அதே போல பாத்திரங்களின் தனித்துவம்- முக்கிய பாத்திரங்களை தவிர அதிகம் இடம் பெறாமல் இருந்தாலும், முரளியும் அவன் மனைவியும், நரசிம்மனும் நாகன்னாவும் அவரது மனைவியும், முக்கியமாக குழந்தை கண்ணனும், அவன் தாய் லக்ஷ்மியும், அவனது கனவும் சேஷையாவின் பிரியத்துக்குரிய இரண்டாவது மகனுமான ஆவலில் உயிருடன் வராத ரெங்கையாவையும் மறக்க முடியாதவர்கள் (இந்த வாக்கியம் சரியாக வரவில்லை).

சமீபத்தில் நடந்த ஒரு விவாதத்தைப் போல் இது ஒரு முழுமையான படைப்பா, செவ்வியல் தளத்தை அடைந்த ஒன்றா என்ற கேள்விகள் எனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நான் ரசித்த, பலவிதங்களில் இசை குறித்த, நவீனத்துவம் குறித்த என் எண்ணங்களை மாற்றியமைத்த, நான் இன்றும் ரசிக்கும் ஒரு படைப்பு இது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இதுவரை இந்த படைப்பின் நேர்மறையான, நான் ரசித்த அம்சங்களை மட்டுமே சொன்னேன். இதில் மிகவும் விவாதத்துக்குரியதாகவும், என்னால் இன்றும்கூட ஒப்புக் கொள்ள முடியாததாகவும் உள்ளது ஜேகே சாரங்கன் வாயிலாகக் கூறும் தமிழ் சினிமா இசை குறித்த கருத்துக்கள். இந்த நாவல் எழுதப்பட்டது 1966ல். இன்று பார்க்கும்போது தமிழ்த் திரை இசையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் அந்த காலக்கட்டம், விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி மகாதேவன், சற்று முன்னால் ஜி.ராமநாதன் போன்ற மேதைகளின் கைவண்ணத்தில் இன்றும் மறக்க முடியாத பாடல்கள் வெளிவந்த ஒரு காலகட்டம். ஆனால் அந்த இசை ஜெகேவைத் தொடவேயில்லை என்று தெரிகிறது. ஜேகே மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தின் திரையிசைப் பாடல்களை முற்றிலுமாகப் புறக்கணித்த இன்னொரு இசை ஆராதகர் தி. ஜா. என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜேகே அதை மிகக் கடுமையாக நிந்தித்து நிராகரிக்கிறார். தி.ஜாவோ அவரது ஒரு பயணக் கட்டுரை நூலில் கிண்டல் செய்கிறார். இது நாவலுக்கு வெளியே இருந்தாலும் விவாதத்துக்குரியது என்றே நான் நினைக்கிறேன். இது ஒரு வகை மேட்டிமைத்தனமா என்பதை நாம் விவாதிக்கலாம். மேலும், பாரிசுக்குப் போ நாவல் மூலம் ஜேகே எதிர்பார்த்திருந்த அந்த இந்திய இசை மரபின் நவீன வடிவம் என்பது உருவாகவேயில்லை என்பதும் அவர் வெறுத்த சினிமா இசை மேலும் வலுப்பெற்றே வந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயங்கள்.

2

3. ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

நாலைந்து வருடங்களுக்கு முன் என் குழந்தைகளின் விருப்பத்துக்காக சந்தோஷ் சுப்ரமணியன் என்ற ஒரு படம் பார்த்தேன். ஓரளவு நல்ல நகைச்சுவையுடன் தமிழ் வணிக சினிமாவின் வரையறைகளுக்குள் எடுக்கப்பட்ட ஒரு டீசண்ட்டான படம் என்று சொல்லலாம். அந்தப் படத்தின் மையம் தந்தையர் தம் குழந்தைகளை வளர்க்கும் விதம் குறித்து பேசிய ஒன்று என்றே அறியப்பட்டது. ஆனால், படத்தின் நாயகன் நாயகியிடம் தான் கொண்ட காதலின் அடிப்படையில், தம் இருவருக்குமிடையில் திருமணம் நடைபெற்றுவிட வேண்டும் என்ற ஒரே முகாந்திரத்தில் அவன் நாயகியின் இயல்பை எப்படிச் சிதைக்கிறான் என்ற கோணமும் என்னுள் எழுந்தது. “என் சிரிப்புக்காகத்தானே என்னை காதலித்தேன் என்று சொன்னாய்? ஆனால் இப்போ உன் வீட்டுக்கு வந்ததும் ஏன் சிரிக்கவே கூடாது என்கிறாய்?” என்று அந்த நாயகி நாயகனிடம் கேட்கிறாள். நாயகனிடம் பதிலில்லை. இந்த கோணத்தில் படம் விரியவில்லை. அதன் அக்கறை வேறு.

ஆனால் ஒருவர் மீது அன்பு வைக்கிறோம், காதல் கொள்கிறோம், அவருடன் ஆயுசு பரியந்தம் வாழ ஆசைப்படுகிறோம் என்ற பேரில் செய்வது ஆக்கிரமிப்பன்றி வேறென்ன என்ற கேள்வி இயல்பாக எனக்குள் எழுந்தது. கூடவே இந்தக் கேள்வியை மிக ஆழமாகவும் வலிமையுடனும் சொன்ன இந்த படைப்பும் நினைவுக்கு வந்தது. சொல்லப்போனால் பாரிசுக்குப் போ அல்லது ஒ.வீ.ஓ உலகம் ஆகிய இரண்டையும் நாவல்களாகச் சேர்த்துக் கொள்ளும் அளவுக்குக் கூட இந்தப்படைப்பு நாவல் என்ற பிரிவுக்குள் வருமா என்பது சந்தேகமே. ஒரே ஒரு மையம்தான், ஒரு முடிச்சுதான், ஆனால் அந்த மையத்தின் முக்கியத்துவம் கருதியே இதை ஜேகேயின் முக்கியமான நாவல்களில் ஒன்று என்று கருதுகிறேன்.

நாம் ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறோம் அல்லது காதல் கொண்டிருக்கிறோம் என்பதன் உண்மையான பொருள் என்ன? நம் அன்போ காதலோ அதற்கு உரியவரிடம் நாம் செலுத்தும் அதிகாரத்துக்கான உரிமையா அல்லது அவரை நாம் உண்மையில் மதித்து அப்படியே ஏற்றுக் கொண்டு, நட்புடனும் பரிவுடனும் இருப்பதா? உண்மையில் ஒருவருக்கொருவர் கொள்ளும் காதலும் அன்பும், குறிப்பாக மண உறவுகளில், அடுத்தவர் மீதான ஆக்கிரமிப்பு இல்லாமல் சாத்தியமா என்ற கேள்வியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதே ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல். நான் முதன் முதலில் இதை வாசித்தபோது இம்மாதிரியான ஒரு நாவலை ஜேகே எழுதியிருக்கிறார் என்று நம்பவே முடியவில்லை.தமிழில் இந்தக் களம் ஆதவனுக்கே சொந்தமானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆதவனின் புகைச்சல்கள், நிழல்கள், அகதி போன்ற சிறுகதைகளும் மேலதிகமாக, காகிகத மலர்கள் நாவலில் விஸ்வமும் பத்மினியும், தங்களது சுயம் தங்கள் உறவினால் அல்லது தங்கள் உறவு தங்கள் சுயத்தினால் அடையும் பாதிப்பு குறித்து விவாதித்துதுக் கொள்ளும் அந்த மிருககாட்சி சாலை காட்சியின் ஒரு பெரும் விரிவாக்கமே இந்த நாவல் என்றுகூட சொல்லலாம். ஆனால் ஒ.ந.நா.பா காகித மலர்களுக்கும் முன்னால் வந்தது. ஒரு சுய அடையாளம் கொண்ட தன்னம்பிக்கை மிகுந்த ஒரு பெண் முன் ஒரு ஆண், எவ்வளவு முற்போக்கானவன் என்று தன்னைக் கருதி கொண்டிருந்தாலும் உணரும் போதாமைகளை வெளிப்படுத்தும் வகையில் கு.ப.ராவின் கனகாம்பரம் சிறுகதையையும் இது நினைவுக்குக் கொண்டு வருகிறது.

நாவலின் நாயகி நாடக நடிகையான கல்யாணியும், நாயகன் முற்போக்கான பத்திரிக்கையாளன் ரங்காவும் ஒருவருக்கொருவர் விரும்பி மணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் மணவாழ்வின் போக்கில் கல்யாணியின் இயல்பு ரங்காவின் மனதில்அவள் தன் மேல் உண்மையில் காதல் கொண்டிருக்கிறாளா என்ற ஐயம் எழுப்புகிறது. ஏராளமான விவாதங்கள் மூலம் தங்கள் நிலைப்பாடுகளை உறுதி செய்து கொள்கிறார்கள் இருவரும். ரங்கா கல்யாணியைப் பிரிந்து வாழ்வதென்று முடிவு செய்து விவாகரத்து கோருகிறான். கல்யாணியும் அவளது இயல்புக்கு ஏற்ப அதற்கு ஒப்புக் கொள்கிறாள். ஆனால் இறுதியில் கல்யாணிக்கு ஏற்படும் சுகவீனம் மீண்டும் ரங்காவை அவளிடம் சேர்க்கிறது. இது மிகையுணர்ச்சி ஏதுமில்லாமலும் வெகு இயல்பாகவும் மிகவும் அறிவுபூர்வமான விவாதங்களின் வழியாகவும் சொல்லப்படுவதே இந்த நாவலின் வெற்றி.

அந்த வகையில் மிக அற்புதமான ஆழமான விவாதங்களும் உரையாடல்களையும் கொண்ட நாவல் இது. ஒரு கட்டத்தில் வாழ்க்கையில் காதலின் பங்கு பற்றி கல்யாணி சொல்வது எவ்வளவு ஆழமானதோ அதே அளவு அது ரங்காவின் விலக்கத்துக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

“வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம் நேர்மை ஒழுக்கம் பரிவு ஆகியவைதான்,” என்று கல்யாணி சொல்வது மிக முக்கியமானது. “ஒருவருக்கு ஒருவர் நேர்மையுடனும், உண்மையான பரிவுடனும் இருப்பதே முக்கியம். இது காதல் இல்லையென்றால் அந்த உயர்வான காதல் அது இருக்கும் உயரத்திலேயே இருக்கட்டும்,” என்கிறாள் கல்யாணி. ஆனால் ரங்காவுக்கு இதுபோதாது என்று படுகிறது. இங்கு ஒரு நுட்பமான role reversal நிகழ்கிறது. மிகையுணர்ச்சியை முன்னிறுத்தும் தமிழ்ப்பெண் கல்யாணி அதிலிருந்து விலகி சிந்திக்க அறிந்திருக்கிறாள். அந்த மிகையுணர்ச்சியை கிண்டல் செய்யக் கற்றிருக்கும் முற்போக்காளன் ரங்கா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த மிகையுணர்ச்சியயை எதிர்பார்க்கிறான். இந்த பேதமே அவர்களின் பிரிவுக்கு வித்திடுகிறது.

இதைப் போலவே கல்யாணியின் ரோஜாப்பூக்களுக்கான விருப்பை முன்வைத்து வாழ்வின் மெல்லுணர்வுகளுக்களுக்கான இடம் குறித்த விவாதமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

மேலும் நாவலின் மையக் கருத்து செயல்படுவதற்கு ஜேகே பாத்திரங்களின் பின்னணியை அமைத்திருக்கும் விதம் குறிப்பிடத்தகுந்து.தமிழ்ச் சமூகத்தில் மணவாழ்வு என்பது அந்தத் தம்பதியினரை பொறுத்த ஒன்று மட்டும் அல்ல. அவர்களது இரு குடும்பங்களும் இணைந்து உருவாக்கும் பந்தம் அது. அதில் பல்வேறு அதிகார மையங்கள் உண்டு. கல்யாணியின் தேவதாசி குலப் பின்னணியும், சுதந்திரமான நாடக நடிகை என்பதும் ஒரு நாடகக் குழுவின் அதிபர் என்பதும், ரங்கா மனைவியை இழந்து மகளை மனைவியின் பெற்றோர் வசம் ஒப்படைத்து தனித்து வாழும் முற்போக்கான பத்திரிக்கையாளன் என்பதும் இந்த நாவலின் மையக்கருத்துக்கு முக்கியமான அம்சங்கள்.

கல்யாணியை ஒருவகையில், ஹென்றியின் பெண் வடிவம் என்று சொல்லலாம். பற்றற்றவள், தன்னுள் இயல்பாகவே பிறர் மீது எழும் பரிவையும் அன்பையும் ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொள்ளாமல் அமைதியான தன் செயல்களில் மூலமாகவே வெளிப்படுத்துபவள்.அவளது காதலில் பொறாமை இல்லை. அவளது அன்பில் ஆக்கிரமிப்பு இல்லை. இதுவே ரங்காவை அந்நியப்படுத்துகிறது. பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இரூந்தால்தான் ஆணும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழையும் பலவீனம் கொண்டிருந்தால்தான், பெண்ணும் திருப்தியுறுவார்களோ என்று ஜேகே கேட்கிறார்.

நாவலின் இறுதியில் கல்யாணிக்கு ஏற்படும் சுகவீனமே ரங்காவை அவளிடம் மீட்டுத் தருகிறது. இது சற்றே வலிந்து செய்தது என்று தோன்றலாம், ஆனால் அதற்கு ஜேகே கொடுக்கும் விளக்கம் என்னைப் பொருத்தவரை அந்த முடிவை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. ஹென்றியைப் போலவே கல்யாணியும் ஒரு லட்சியவாத படைப்பு என்றே ஜேகே ஒப்புக் கொள்கிறார். அதனாலேயே அவள் பறந்து போகாமலிருக்கும் பொருட்டு காலை ஒடித்து உட்கார வைக்க வேண்டியிருக்கிறது என்றும், மனதை ஓடிப்பதற்கு காலை ஒடிப்பது கொடுமை குறைவல்லவா, என்றும் நம்மைக் கேட்கிறார்.

DSC05066

ஜேகேவின் பல படைப்புகள் கால ஓட்டத்தில் பின்தங்கி போயிருக்கலாம், தேவையற்றும் போகலாம். ஆனால் ஆணும் பெண்ணும் அவர்களுக்கு இடையே உள்ள பேதங்களும் உள்ளளவும் கல்யாணியும் ரங்காவும் அர்த்தமுள்ளவர்களாக இருப்பார்கள் என்றே தோன்றுகிறது

[22,23,24 தேதிகளில் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை ]

முந்தைய கட்டுரைஉன்னதம் இருவகை
அடுத்த கட்டுரைஊட்டி காவிய முகாம் ,பதிவு