ஊட்டி ஒரு பயணம்

DSC04936

அன்பின் ஜெயன்,

கடந்த ஐந்து நாட்களாகவே (உதகை வந்து சேர்ந்த வெள்ளி முதல்) மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் கேள்வி – “எப்போது ஒரு சிறுகதையை, ஒரு கவிதையை, ஒரு நாவலை என்னால் அதன் படிமங்கள், நுண்மைகள், இன்னபிற அனைத்து ரசனை சார்ந்த விஷயங்களை இனங்கண்டு, ரசித்து வாசிக்க முடியுமென்பதே”.

என்னை பற்றியும் சிறிது சொல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் என்னை ஒரு ரசிகனாக, இன்னும் சொல்வதென்றால் மேம்பட்ட ரசிகனாக, சராசரிக்கு மேலான புத்திசாலியாக, வயதை மீறிச் சிந்திப்பவனாக, மற்றும் இன்னபிற சூப்பர்லேட்டிவ் தன்மைகளுடனே இனங்கண்டு வந்திருக்கிறேன். ஆனால் இந்த மூன்று நாள் அமர்வு என்னை நிலைகுலைய வைத்துள்ளது. ஒரு சாதாரண நுட்பம் சார்ந்த விஷயத்தைக்கூட என்னால் இனங்காண முடியவில்லை – உதாரணம் ‘எதிரி’ சிறுகதை – ‘ம்வாங்கி பாம்பு வடிவில் தன்னைத்தான் பார்க்கிறான்’ என்ற எளிய படிமத்தைக் கூட நீங்கள் விளக்கிய பிறகே புரிந்து கொள்கிறேன். எனில் நிச்சயம் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகமே!

DSC05092
கவிதையில் இன்னும் அதிகம் – ‘தனித்தவில் கலைஞரில்’ நான் முடிவு என நினைத்தது – ‘அந்த லாரி ஓட்டுனர் சண்முகசுந்தரத்தை அவர் வீடு வரை லிஃப்ட் கொடுத்து கூட்டிச்சென்றார்; எனவே கடவுள் அப்பாவிகளைக் கைவிடுவதில்லை என!’ இப்போது பார்த்தால் அப்படி ஒரு வாசிப்பில் கவிதை என்ற சமாசரமே, ஒரு உயரமே இல்லை என்று உறைக்கிறது! அரங்கிலிருக்கும் பெரும்பாலான நேரம் நான் அஞ்சியேதான் அமர்ந்திருந்தேன் – ஆசிரியர் எங்கே தன்னை கேள்வி கேட்டு விடுவாரோ என்று அஞ்சும் மாணவனைப்போல!
DSC05110
ஆனால் நிச்சயம் சொல்வேன் – இந்த நாட்கள் ஒரு பெரிய திறப்பு, வீணல்ல என்று – நடை செல்லும்போது தங்களின் இயல்பான பேச்சில் வரும் அதிசயங்கள், சாதரணமாய் நீங்கள் சொல்லும் ஒரு தகவல் கூட எனக்கு எப்பேர்பட்ட ஒரு தரிசனம் … முக்கியமாய் சனியன்று காலை திரும்பி வருகையில், ‘ஐ’ படம் பற்றி குறை கூறுகையில் தங்களின் கண்டிப்பு – “வாழ்க்கையே பேரானந்தம். அதிலும் நீங்கள் பணம், நேரம், இன்னும் என்னென்னவோ முயற்சி எடுத்து இங்கு வரும் மூன்று நாட்களிலும் கூட இழிவாய் நினைக்கும் ஒன்றை விதந்தோதி ஊதிப்பெருக்குகிறீர்கள்? பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாமே?” – நினைத்து பார்த்தால் ஒரு சாதாரண வரி – ஆனால் கடைபிடிப்பது எவ்வளவு கடினமாயுள்ளது!
DSC04897
அதன் பிறகு 2 நாட்களில் பெரும்பாலும் வெட்டிப் பேச்சினை குறைத்துக்கொண்டேன் – முழுவதும் குறைத்துக்கொள்வதற்கு முயல்வேன்.

உதகை முதல் கோவை வரை தங்களுடன் காரில் வந்தது பெரியதொரு பம்பர் பிரைஸ்! அருண்மொழி அவர்களுடனும், உங்களுடனும் பேசிக்கொண்டே வந்த தருணங்கள்… க்ளிஷேவாகச் சொன்னால் “மறக்க முடியாதவை”.

DSC05095

ஆனால் இந்த பயணத்தில் எனக்கு சில அதிர்ச்சிகள் .தயாரிப்பு இல்லாமல் வந்தவர்களைப்பற்றி நீங்கள் சொன்னது.அப்போது உணர்ந்தேன் – என்னை நீங்கள் எவ்வளவு மென்மையாய் கண்டித்திருக்கிறீர்கள் என்று. அரங்காவிடம் அலைபேசிய பிறகு தங்களின் கருத்துக்கள்- சம்பளவேலை, முதலாளித்துவம் உலகம் முழுக்க ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் (சம்பளவேலை, வேலையை மட்டுமே மையப்படுத்திய வாழ்க்கை), அஜிதனின் இதற்கு எதிரான மனநிலை (“பட்டினி கிடந்தாலும் ‘வேலைக்கு’ போக மாட்டேன்”), சுகா பற்றிய அக்கறை, திருமணத்திற்கு பிறகு ஆண் குறைந்தபட்சம் 25 ஆண்டுகளாவது சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், உங்கள் இல்லற வாழ்வின் இனிய தருணங்கள் (‘டீ பிரேக்கில் கூட சேர்ந்து போவது’), விமானபயணம் குறித்தான பயம்-குழப்பங்கள், அருண்மொழியின் அலட்டிக்கொள்ளத மனோபாவம், கிருஷ்ணனின் இரக்கமில்லாத மனோபாவம் – [60 வயது வரை வாழ்க்கையில் சுவரசியமேயில்லாத மனிதனிடம் எந்தவித கரிசனமும் காட்டத்தேவையில்லை ], பாரதி மணி போன்ற ஒருவருக்கு (வயதாகிவிட்டாலும்) வாழ்க்கையில் சுவை குன்றாதது, அஜிதன் மணிரத்னத்தின் அலுவலகத்தில் பார்த்து அதிசயித்த டைப்ரைட்டர், உங்கள் குழந்தைகளுக்கு எட்டாங்கிளாஸ் வரை சோறூட்டிய செல்லங்கொஞ்சுதல் …

எவ்வளவு எழுதினாலும்,சொன்னதை விட எஞ்சியதுதான் அதிகமாயிருக்கும்!

DSC05077

அந்த பயணத்தில் ஒவ்வொரு சொல்லையும் பலமுறை ஒத்திகை பார்த்தபின்பே பேசினேன். தங்களின் கூரிய கவனிப்பை மனதில் வைத்தே உரையாடினேன், ஒரு விதத்தில் பார்த்தால் என் இயல்புக்கு மாறாய், சற்றே அவஸ்தையாய்த்தான் உணர்ந்தேன். ஆனால் சற்றே யோசித்தால் மற்ற நேரங்களில் மொண்ணையாய் பேசி, சிந்தித்துக் கொண்டிருப்பதனால்தான் இந்த அவஸ்தை என்றே உணர்கிறேன்.

நீங்கள் ‘ஒவ்வொருநாளும்’ எழுதியபோது சொன்னதைத்தான் சற்றே மாற்றிச்சொல்லவேண்டிருக்கிறது – உங்கள் மனைவி மக்களும் சரி, செல்வேந்திரன் போல தங்களுக்கு அருகிலிருக்கும் நண்பர்களும் சரி – “மிகவும் கொடுத்துவைத்தவர்கள்”. உங்கள் வாசகனாயிருப்பதே என்னைப்போன்றவர்களுக்கு பெரும் பேறு, பாக்கியம்! இன்னுமோர் நூற்றாண்டிரும்! (சரி, பிடிக்கலைன்னா இந்த வரியை அடிச்சுடுங்க! – “வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!”)

அன்புடன்
வெங்கட்ரமணன்
பி.கு. இன்னும் சீர்மை, பௌத்தம், அபேதம், அத்வைதம், வேளுக்குடி, ஹரியண்ணா, என நிறைய பேசினீர்கள் – அநேகமாய் முருகவேலன் போல 2,3,4நு கடிதங்கள் எழுதுவேன்னு நினைக்கிறேன்!

முந்தைய கட்டுரைநண்பர்கள்
அடுத்த கட்டுரைஊட்டி ஒரு பதிவு