ஊட்டி ஒரு பதிவு

1

அன்புள்ள ஜெ,

இது என் முதல் கடிதம்

கொஞ்ச நாட்களாக உடல்செல்லும் இடங்களுக்கு மனம் சென்று அமைவதில்லை.அத்தனை எளிதாக அது அமைந்துவிடமுடியாது என்ற எண்ணமும் வலுப்பெற்றுக்கொண்டே இருந்த நிலை. வறண்ட மூளைக்குள் ஒட்டாத வாசிப்பும் இறுகிய சிந்தனையுமாக கடந்த இரு மாதங்கள். விரக்தியும் கூட.இப்பொழுது எனக்கு செமஸ்டர் விடுமுறை. சில தேர்வுகளுக்கான ஆயத்தங்கள்.காலை எழுந்தவுடன் சைக்கிளை எடுத்து நெரிசலில்லாத நெடுஞ்சாலையில் களைக்கும் தூரம் ஓட்டி மீள்வேன்.அப்பொழுது இருக்கும் உற்சாகம் திரும்பி வந்து படிக்கும்போது வரிக்குவரி கீழிறங்கும்.மேலும் மனம் குவிக்கமுயலும்போது சரியாக அமையாத காரணத்தால் சுயஎரிச்சலும் நம்பிக்கையின்மையும் ஓங்கும். இம்முகாம் ஒருவகையில் பெரிய மீட்பு.

DSC04888
கிளம்பும்போது நண்பனிடம் ஊட்டி போறேன் , மூணு நாள் ,நாலு மணிக்கெல்லாம் எழுந்திருச்சிடுவேன், காட்டுகுள்ளே இருப்பேன், குளிர்ல வாக்கிங் போவேன், ஒரு ரைட்டர் முகத்துல கண்முழிப்பேன், ஜாலியோ ஜாலி என்றெல்லாம் கூறிவிட்டு வந்தேன். அவன் வனவிலங்குகள் உன்னை மன்னிக்கட்டும் என வாழ்த்தி அனுப்பினான். ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து குருகுலத்திற்கு நடக்க முடிவெடுத்து வழிகேட்டு பராக் பார்த்தபடி வந்தேன். முந்தைய நாள் பிற்பகல் வந்துசேர்ந்தேன். மெலிதாக ஒரு பயம் இருந்தது. பிற கூட்டங்கள் வந்து சென்றிருக்கிறேன். முகாமிற்கு இதுதான் என் முதல் முறை. என் வயது இருபது. இருப்பவர்களிலேயே இளையவன். குறைந்த நபர்கள்தான் இருந்தார்கள். மாலைக்குப்பின் பின் எண்ணிக்கை ஏறத் தொடங்கியது. அந்த மாலை கிருஷ்ணன் விஜயராகவன் ஆகியோருடன் நடை. இரவுணவிற்கு முன் ராஜமாணிக்கம் அவர்கள் நெடுநேரம் பேசிகொண்டிருந்தார். முந்தைய நாள் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை பேசியபடி அடுத்த காலையில் அனைவரும் தயாராகியிருந்தனர். பத்துமணிக்கு அனைவரும் வந்திருந்தனர். பத்தரைக்குமேல் அரங்கு தொடங்கியது.

DSC05027 (1)
நாஞ்சில் நாடனின் தலைமையுரை ஜெயகாந்தன் எழுத வந்த காலத்திலிருந்து தொடங்குவதாக உள்ளது.ஜெயகாந்தனை சந்தித்த தருணங்கள், அப்போது வாசித்த புனைவுகள் அவை வெளிவந்தபோது அதன் விளைவுகள் என தொட்டு தொட்டுச் சொன்னார்.வெகுநாட்களுக்குப் பிறகு நான் ஜெயகாந்தனை எடுத்துப்பார்க்கும்போது அதனுள் இப்போது நுழைய முடியாது என்று படுகிறது.ஆனால் ஜானகிராமன் ஒருவகையில் என்னை இன்றும் வசீகரிப்பவராக உள்ளார் என்றபிறகு முந்தைய முகாம்களைபற்றி கூறி வாழ்த்தி அரங்கை தொடங்கி வைத்தார்.

DSC04860
ஜடாயு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிறுகதைகளை பற்றி பேசும்முன் அவர் தனியாக சிறந்ததென்று கருதிய சிறுகதைகளிலிருந்து ஜெயகாந்தனின் காலம் அதன் அரசியல் பின்னணி அப்போதிருந்த எழுத்து ஆகியவற்றிலிருந்து அவர் கதைகளைப் பற்றிய ஒரு முன்வரைவை அளித்தார். அதிலிருந்த ஜெகேவின் ஆளுமை பற்றிய சித்திரத்தை பிறர் அவரவருடைய வாசிப்பிலிருந்து ஒத்துக்கொண்டும் முரண்பட்டும் பேசினர்.அக்னிப்பிரேவேசம் தவிர்த்து பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.


ஜெயகாந்தன் நாவல்கள் – சுரேஷ்

சுரேஷ் அவர்கள் தெளிவத்தை ஜோசப் விழாவில் வாசித்திருந்த கட்டுரையிலும் சென்ற வருட விருது விழாவிற்கு முந்தைய நாட்கள் கலந்துகொண்ட விவாதங்களிலும் அவர் பேசியதை வைத்து நிறைய எதிர்பார்க்க வைத்திருந்தது.நிறைய வாசிப்பாரென்றும் holistic-காக அவற்றை அவரால் தொகுத்துக்கொள்ள முடிகிறது என்றும் தோன்றியது. இந்த ஜெகே பற்றிய உரையில் அது உறுதியானது.
DSC05133

தான் பேசவேண்டிய விஷயங்களுக்கு ஜடாயு அவரது உரையில் ஜெகேவின் ஆளுமைபற்றி ஒரு முன்வரைவை அளித்துவிட்டார் என்று கூறிய பிறகு உரையைத் தொடங்கினார் சுரேஷ். இளவயதில் அறிமுகமான ஜெயகாந்தனின் பெயர் வீட்டில் அப்போது வாசித்துகொண்டிருந்த அவருக்கும் அம்மாவுக்கும் ரசனையில் உருவாக்கியிருந்த முரணை நகைச்சுவையாக விளக்கினார். கல்லூரியில் வாசிப்பும் நல்ல நண்பர்களும் ஜெகே பற்றிய ஒரு தொடர் வாசிப்பை ஒரு புதிய இடத்திலிருந்து அவரை தொடங்க வைத்திருகின்றன. நெடுநாட்களுக்குப்பின் ஜெயகாந்தனின் மூன்று நாவல்களை வாசிக்கிறார். அவ்வாறு அவர் தொடங்கியது “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” இருந்து.
DSC05066

ஜெ நாவல் புத்தகத்தில் விவாதித்திருக்கும் நாவல் என்றதன் வடிவத்தை நாம் ஜெயகாந்தனிடம் எதிர்பார்க்கமுடியாது. அவரின் நாவல்களுக்குள் இத்தகைய வரையறைகள் செல்லுபடியாகும் என்று சொல்வதற்கில்லை. ஜெயகாந்தனே ஒரு விளக்கம் போல “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” நாவல் முன்னுரையில் நாவல் என்ற வடிவம் பற்றி தமிழுலகம் கொண்டிருக்கும் அபிமானத்தையும் , இந்நாவலை தொடர்கதை என்றே அழைக்கலாம் என்று கூறியிருப்பதையும் கோடிக்காட்டினார்.

DSC05068
இதன்பிறகு ஜெகேவின் தனிப்பட்ட அறம் மனிதாபிமானம் சார்ந்து, தேசியவாதம் ஜனநாயகவாதம் ஆகிய கருத்துருவாக்கங்கள் மீது அவரது மதிப்பீடு சார்ந்து பேச்சு நகர்ந்தது. ஜெகேவின் ஐரோப்பா (மேற்கு) ஆகியவற்றின் விலாசமான பார்வைகள், கம்யூனிசம் சார்ந்து அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளுக்கு நம் மரபிலிருந்தே வேர்களை அவர் எடுத்துக்கொண்டார். இந்தப் புள்ளி சுரேஷ் அவர்கள் பேச ஆரம்பித்து சென்றதிலிருந்து முதல் திருப்பம் என்று சொல்லலாம்.

DSC05083
ஒருவரியில் ஜானகிராமனோடும் அகிலனோடும் ஒப்பிடுகையில் ஜெகேவிடம் தனித்து தெரியும் விஷயங்களாக இதைச் சொன்னார். modernism பற்றி அப்போதிருந்த உரையாடல்களில் ஒருபோதும் சமூகம் தனிமனிதனுக்கு நீதிவழங்காதது, அவனுடன் தனியாகவே உரையாட விரும்புகிறேன் என்பது ஜெயகாந்தனின் எதிர்வினை. புனைகதைகளில் அப்போது பிறரிடம் இல்லாதிருந்த யதார்த்தவாதம் இவர் எழுத்தில் இருந்ததால் புதுமைப்பித்தனுக்குப் பிறகு ஒரு காலத்திற்கு மக்களின் ஆசிரியராக ஜெகே இருந்தார்.
DSC04952

இவர் எழுத்தில் மறைபொருள்கள் ஏதுமில்லை என்பது ஒரு தரப்பாக உள்ளது.”ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” வாசிக்கும்போது இதை ஜெயகாந்தன் எழுதியிருக்கமுடியாதென்று தோன்றும் தன்மை ஒன்றுள்ளதாக பட்டது.நாவலின் கதையை மேலோட்டமாக கூறும்முன் ‘காகித மலர்களி’ல் நாயகனும் நாயகியும் தங்கள் உறவைப் பற்றி பேசும்போது சுயம் என்பதைப் பற்றி அவர்கள் உரையாடும் பகுதி மிக முக்கியமானதென்று சேர்த்து குறிப்பிட்டார் சுரேஷ். பெண்கள்-கல்யாணம்-சுயம்-அது அழிவது என்பன பற்றி விரிவாக பேசினார்.ஜெகே எழுதிய நேரத்தில் ‘சுயம்’ என்ற சொல் புழங்கி வந்ததா என்று தெரியவில்லை , பதிலிற்கு ‘self’ என்ற ஆங்கிலச் சொல்லை அந்நாவலில் பயன்படுத்தியுள்ளார்.கல்யாணி ரங்கா அவர்களின் உறவில் காதல் பற்றி பேசும்போது ‘compassion’, ‘devotion’ என்ற அளவிலும் அவர்களின் காதல் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.மிகையுணர்ச்சியின்மை இல்லாததாக உள்ளது அது.அந்நாவலின் முடிவைப்பற்றி பேசியபிறகு , “அன்பு என்றால் என்ன?” என்ற ஒரு சாராம்சமான கேள்வி நம் மனதில் எழுகிறது. ‘சில நேரங்களில்..’ நாவல் நம் சமூகத்திலிருந்து ஆண் பெண் உறவிலுள்ள இறுக்கம் தளரும்போது outdated ஆகும். ஆனால் இந்நாவல் இத்தன்மை உள்ளவரை நீடிக்கலாம் என்று ஜெ சொன்னார்.இந்த அளவில் இந்த நாவல் பிடித்தமானதாக உள்ளது என்று சுரேஷ் முடித்தார்.

DSC05102
எதிர்வினையாக மோகனரங்கன் காலையிலிருந்து ஜெயகாந்தனை defend செய்து பேசுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது என்றும் ஒரு கலைஞன் எழுதி எழுதி கண்டுபிடிக்கும் பாதையில் ஜெயகாந்தன் அவர் மக்களை நோக்கி பேசும் உரத்த குரலாலும் அரசியலாலும் அவரெழுத்து அதன் அடுத்த கட்டங்களை சென்று தீண்டவில்லை என்றும் வாதிட்டார்.

DSC05097
சிறுகதை அரங்கிலும் இடையிலான பேச்சிலும் இலக்கியத்தில் அரசியல் என்பது பற்றி நிறைய பேசப்பட்டது. அவ்வகையில் ஜெகேவின் அரசியல் பற்றி பேசிய விஷயங்கள் ஒரு வரைவுபோல உருவாகி வந்திருந்தது.உதிரி எதிர்வினைகளுக்கு பிறகு இதை விரிவு செய்து பேசிய ஜெயமோகன், அப்போது ஜெகே மீதிருந்த விமர்சனங்களையும் விளக்கினார்.எளிமையான அரசியல்களையும் பொதுவான மேலோட்டமான வாசிப்புகளையும் கொண்டு எழுதப்பட்ட அன்றைய விமர்சனங்களை நிராகரித்து அழகியல் பூர்வமான விமர்சனங்களை தான் தொடர்ந்து எழுதியதை கூறினார்.Comment , opinion , உதிரி சொற்கள் என்பதைத் தாண்டி விமர்சனம் என்பது என்ன என்பது அப்பேச்சின் மையமாக இருந்தது.இது மிக விரிவான பேச்சு, ஒருவகையில் அவ்விமர்சனங்களே இக்கேள்விகளுக்கு பதிலாக அமையும்.
DSC04973

சுரேஷ் தொடர்ந்தார்.உலகமுழுக்க நவீனத்துவம் (modernity என்று குறிப்பிட்டார்) பயின்று வந்து அது தொடர்பாக எழுந்த படைப்புகளில் தமிழ் நாவல் பங்கேற்கவில்லை.ஜெகே ஓரளவிற்கு இந்த அலைக்கு நம் பாரம்பரியத்தால் பதிலளித்திருக்கிறார், பாரிசுக்கு போ நாவல் மூலம்.சாரங்கனின் உரையில் இசை பற்றி ஆராய்தலும் தனிப்பார்வையும் இருப்பதைப்பற்றி கூறினார். modernity – aching the west – மேற்கத்திய இசை – திரையிசை குறித்த பார்வை மேலும் விரிவாகப் பேசப்படுகிறது.சேஷய்யா பற்றி கூறும்போது சாரங்கனை ஒரு கலைஞனாக அவர் பார்பதில்லை என்றும் பேசினார்.அவரின் திறந்த மனதை ஆனந்த நிகேதனின் ஜீவன் மஷாயோடு ஒப்பிட்டார்.சாரங்கனின் கல்கத்தா(இந்தியாவின் பாரிஸ்) – சினிமா அனுபவம் பற்றி கூறும்போது அதில் வரும் இசை modernityயின் குறியீடாக வடிவம் கொள்வதைச் சொன்னார்.
DSC04995

“இந்தியாவிற்கான அதன் இசைக்கான நவீனத்துவம் எது? பேசப்படாத கதாப்பாதிரங்களைக் கூறுகையில் நரசையா பாலம்மாள் ஆகியோர் உள்ளனர்.நரசய்யாவின் உறவுகள் ஒருவகையில் அனல்காற்றில் நாயகன் அவன் தாய் தந்தையுடன் கொண்டிருக்கும் உறவுகளுடன் ஒப்பிட முடியும். இதில் வரும் தெலுங்கு குடும்பப் பின்னணி இந்நாவலுக்கொரு நம்பகத்தன்மையை அளிக்கிறது.இது 1966ல் வெளியிடப்பட்டது.”அப்போதே ஜெகேவால் முன்வைக்கப்பட்ட கேள்விகளை முன்வைத்து இந்நாவல் பற்றி சுரேஷ் பேசிமுடித்தார்.நவீன இசைக்கான தேவையை தமிழர் உணர்ந்தனரா? ஜெகே எதிர்பார்க்கிற இசைக்கான scope இருக்கிறதா?

DSC04947
கேட்கும்போதே சற்று சிக்கலான கேள்வியாகப் பட்டது.மீண்டும் விரிவான எதிர்வினையாக ஜெயமோகன் பேசினார்.மேற்கத்திய இசை , பாப்பிசை, மரபிசை பற்றி விரிவாக ஜெகேவின் ரசனையை விளக்கி அதில் கலப்பு வேண்டும் என்று அவர் சொன்னதாகச் சொன்னார்.இதை எழுதமுடியும் என தோன்றவில்லை.மேலும் சிறு சிறு தனிப்பட்ட (ரமணியுடன் ஜெகேவிற்கு) நிகழ்ச்சிகளையும் கூறினார்.

இறுதியாக ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ தொடங்கும்போதே புன்னகையுடன் ஒருவகையான feel good (நல்லுணர்வு) நாவல் எனக் கூறினார். படித்தால் மனதை இலகுவாக்கக்கூடிய ஒன்று.ஆனால் இந்நாவல் பேசுகிற என்று சொல்லக்கொடிய விஷயங்களை உண்மையிலேயே இது ஆழமாகப் பேசுகிறதா?

DSC05105
பிறகு சிறு சிறு அழகான விஷயங்கள் என்று தோன்றுகிறவற்றை கூறிச்சென்றார்.ஹென்றியின் குணத்தன்மைகள்.அவன் அபேதவாதியாக இருப்பது.பப்பாவின் குணம். பப்பா ஹென்றியின் மொழியில் எழுந்து வரும் அழகு.பிற சிறிய கதாப்பதிரங்களின் நுட்பங்கள்.ஹென்றி ஹென்றிப்பிள்ளையாக அழைக்கப்படும் தருணம். ஜெகே நாவலில் வரும் டீக்கடை , கிளீனர் பையன்கள் இவையெல்லாம் இணைந்து லீவு விட்டால் பாட்டி வீட்டுக்கு போய்வரும் அனுபவத்தைத் தருவதாகச் சொன்னார்.இதன் பிறகு நிறைய பேரை பேசவைத்த கேள்வியைக் கேட்டு உரையை முடித்தார்.ஏன் இந்த நாவலில் தலித்துகள் சித்தரிக்கப்படவில்லை? ஹென்றி தலித்தாக இருந்திருந்தால் அவனை மக்கள் திரும்ப சேர்த்திருப்பார்களா? அவர் மனம் இயல்பாக இணைந்திருக்கும் இடம்-மக்களைத் தவிர்த்து இந்நாவல் எப்படி அமைந்தது?
DSC04844

அதிகம் பேர் கருத்து சொன்னார்கள். ஜெ விரிவாக ஜெகேவின் ஆளுமைப் பற்றியும் படைப்புருவாகும் மனநிலைப்பற்றியும் பேசினார். gap என்ற விஷயம் பற்றி விளக்கினார்.சுரேஷ் இதே கேள்வி விழுதுகளுக்கும் செல்லுமா என வினவினார். ஜெ.வால் அது நிராகரிக்கப்பட்டது.(பெரிய மெர்குரி விளக்க போட்டு அங்க தலித் காணாம்னா அது கேள்வி, torch light அடிச்சு அங்க ஒண்ணு காணாம்னா அர்த்தமில்லை)

DSC04851
மாலை தேநீருக்கான இடைவேளைக்குப் பிறகு நீண்ட நடை. மக்கள் வசிக்கும் தெருக்களைத் தாண்டி சரிவில் இறங்கி தேயிலைத் தோட்டங்கள் வழியாக ஏறி ஓர் இடத்தில் அவரும் உடன் வந்த நாற்பது பேரும் அமர பேசிக்கொண்டே இருந்தார்.ஆரம்பத்தில் இசைபற்றி, இரவு முழுதும் கேட்டு மீளும் மனநிலை பற்றி பேசிக்கொண்டே வந்து கேள்விகள் குவிய குவிய வெண்முரசு பற்றிய உரையாடலாக அமைந்தது.மலையாளத்தில் உள்ள வாசகர்கள், வெண்முரசின் வாசகர்கள், காண்டவம் நின்றது, வெண்முரசு எழுதும் அனுபவம் (சாத்யகி வழியாக கிருஷ்ணன்), எழுதப்படும் விதம்,வியாச பாரதம், நாகர்கள், தட்சன்-தட்சகன், மகாபாரதத்தின் மூன்று தளங்கள் என்று கேள்விகளும் பதில்களுமாக அமைந்தன.

DSC04854

இருள் வரத் தொடங்கியபோது இறங்கிவரத் தொடங்கினோம்.அவ்விவாதத்தில் மனம் முழுதாகக் குவியவில்லை. காலையில் ஜெகே சிறுகதை அரங்கில் நான் கேட்ட கேள்வியிலிருந்து எனக்கு கிடைத்த பதிலிலேயே மனம் சுற்றி கொண்டிருந்தது. முகம் கழுவிய உடனே சிறுகதை ரசனை அரங்கு தொடங்கியது. ஒருவகை இறுக்கம் தளர்ந்தது போல இருந்தது.விஜயராகவன் அவர் கதையை முன்வைத்து பேசி தொடங்கியவுடன் முறையே விஜய்சூரியன், யோகா மாஸ்டர் (பேர் தெரியவில்லை), சவாரி வேட்டை கதை பற்றி பேசியவர்(இவர் பேரும் தெரியவில்லை),ராதாகிருஷ்ணன், செல்வேந்திரன் ஆகியோர் அவரவர் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுத்திருந்த சிறுகதைகளை முன்வைத்து பேசினார்.இக்கதை தனக்கு ஏன் இது சிறந்த கதை என்றும் இங்கு முன்வைத்து பேசவேண்டுமென்றும் தோற்றியது ஏன் என்னும் வினாவிற்கு ஒருவகையில் அனைவரும் பதிலளிக்க வேண்டி வந்தது.

DSC05135
மிலன் குந்தேராவின் ‘சவாரி வேட்டை’ பேசப்பட்டபோது சுவாரசியமான கதை எனத் தோன்றியது. ஆண் பெண் உறவுகள் எப்போதும் ஒருவர் மற்றொருவருக்கு தொடர்ந்து காட்டிக்கொள்ளும் முகமூடிகளிலானதாக உள்ளது.அதை விளக்கி ஒருவர் மற்றொருவரை உண்மையில் காணும்போதுள்ள திகைப்பு இக்கதையில் உள்ளது என்று மட்டும் ஜெ கூறினார்.

‘எதிரி’ கதை அரங்கில் சில நேரத்திற்கு சுற்றி வந்தது. அதன் நாயகனின் காதல் வாழ்க்கையையும், பின்பு அவன் பம்பை எதிர்கொள்ளும் விதத்தையும் பொருத்தி பாருங்கள். initial reading ஒன்று கொடுக்காமல் second , third என்று தாவி அதை மேலும் மர்மமாக்கி புரிந்துகொள்ள முயலும் மனநிலையை ஜெயமோகன் சுட்டிக்காட்டினார். (சார் உதவியாளனா ஜோசப் என்றொருவன் வரானே? – முதல்ல ஒரு கதைய அதோட எளிமையான லெவெல்ல வச்சு வாசிக்கணும்.அவன் பேர் ஜோசப் ஆச்சே, அவன் ஏசு கிறிஸ்துவுக்கு அப்பனாச்சேன்னு யோசிக்க கூடாது…)

DSC05117
ராதாகிருஷ்ணன் நாஞ்சில் நாடனின் ‘விதியும் விலக்கும்’ என்ற கதையை தன் வாழ்க்கை சம்பவத்தோடு இணைத்து சொன்னார்.செல்வேந்திரன் அவர்கள் ‘கண்டிவீரன்’ கதைப் பற்றி பேசிய விதம் சுவாரசியமானது. கதையிலிருந்து தொடங்கவில்லை. “எங்கூர்ல ஒரு சுவத்துல மூணரை திக ஒழிகன்னு எழுதிருக்கும். நான் எங்க அப்பாட்ட அது என்ன மூணரை திகன்னு கேட்டேன். அதுவா அந்த கழகத்துல மொத்தமே நாலு பேர்தான்.ஒருத்தன் மட்டும் ஒல்லியா இருப்பான். அதான் அப்படி …” என்ற பாணியில் கண்டிவீரன் கதைக்கு இணையாக சில காட்சிகளைச் சொல்லி பேச ஆரம்பித்தார். பேனாமுனை பேரின்பனில் தொடங்கி கதையைச் சொல்லி அதன் கூறுமுறையை பற்றியும் ஷோபாசக்தி பற்றியும் பேசினார்.அக்கதையை இனி பேசும்போது இவர் நினைப்பு அகலாது,
DSC05101

இரவுணவிற்குபின் ஜெ உடனே தூங்கிவிட்டார். பயணக் களைப்பிருந்திருக்கும். சுரேஷ் அவர்களின் இசையை விருது விழாக்கூட்டத்தில் கேட்டிருக்கிறேன். அதிக பாடகர்கள் இல்லை. இம்முறை அவர் மட்டுமே நம்பியாராகவும் PB ஸ்ரீநிவாஸாகவும் SPB ஆகவும் மாறிக்கொண்டிருந்தார். ஆச்சர்யமாக மிக நன்றாக சீனிவாசன் அவர்கள் மலையாளப் பாடலொன்றை பாடினார்.

அடுத்த நாள் காலை நடை செல்லவேண்டுமென்ற நினைப்புடன் தூங்கி 5 மணிக்கு விழித்தேன்.இன்னும் யாரும் நடை செல்லவில்லை என்ற தகவலும் நடுக்கிய குளிரும் இன்னும் பத்து நிமிடம் தூங்கிக்கொள்கிறேன் என்று சமாதானம் செய்து கொண்டு தூங்க வைத்தன. ஸ்ரீநிவாஸ் எழுப்பி “எல்லாரும் ஜெ கூட வாக்கிங் போயாச்சு. sorry சொல்ல முடியலை” என்று சொன்னபோது மேலும் ஒரு மணி நேரமாகியிருந்தது.கடிந்துகொண்டு எழுந்து குளித்தபிறகு தனியாக குருகுலத்தை சுற்றி வந்துகொண்டிருந்தேன்.ஸ்ரீநிவாஸ் அவன் எழுதியிருக்கிற எழுதத் தோன்றுகிற விஷயத்தை பற்றியெல்லாம் கூறினான்.

DSC05080
காலையுணவிற்கு பின் நாஞ்சிலின் கம்பராமாயணம் – கிட்கிந்தா காண்டம் அரங்கம். அப்பா கல்லூரியில் பயிலும்போது பேச்சாளராக இருந்திருக்கிறார். சில கம்பராமாயணப் பாடல்களை மனனம் செய்திருக்கிறார். அவர் திரும்ப திரும்பச் சொல்லும் சில பாடல்கள் உள்ளன. பெரும்பாலும் ஓசை நயம் மிக்கவை.எனக்கும் அந்த ஆவல் இருந்துள்ளது.ஆனால் கதை மட்டுமே இன்றுவரைத் தெரியும். கட்டுரைகளைப் படித்த பிறகு கம்பராமாயணம் படிப்பது பற்றிய எண்ணங்கள் பலவாறாக மாறியுள்ளது. வரும்போது இந்த அமர்வு பற்றிய பெரிய எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது.பலரிடம் கேட்டபோது போன முறையெல்லாம் கிட்டத்தட்ட கண்ணில் நீர் வந்துவிட்டதென்று கூறினார்கள். கிட்கிந்தா காண்டமென்பதால் அத்தனை உணர்ச்சிகரமாக எதிர்பார்க்க முடியாது என்றார்கள்.

அந்த வகையில் எனக்கு சற்று கூடுதலாகவே பிடித்திருந்தது. நான் முதுகலை ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவன். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நாற்காலியில் அமர்ந்து வாசிப்பதற்கானவை அல்ல , கூட்டாக அமர்ந்து வாசிக்கும்போது ஒருவகையில் நியாயம் செய்ய முடியும் என பேராசிரியர் சொன்னதை கேட்டு வகுப்புத்தோழர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பவன். கூட்டாக அமர்ந்து காவியம் வாசித்தது நல்ல அனுபவம்தான்.என் முதல் கம்பராமாயண அனுபவமும் கூட. நாஞ்சில் புதிதாக வந்தவர்களுக்கு இவ்வரங்கு பற்றி அறிமுகம் செய்த பிறகு அரசியற் படலத்திலிருந்து தொடங்கினார்.

DSC05101

ஜடாயு தன் வாசிப்பிலிருந்து வான்மீகி ராமாயணத்திலிருந்தும் உரைகளிலிருந்து சொற்களையும் தருணங்களையும் பின்னணியையும் பாடல்களுக்கேற்ப விளக்கினார். முதலில் நாஞ்சில் பாடலை வாசித்து பொருள் கூறியதும் இரண்டு முறைக்குமேல் வாசிக்கப்பட்டது, வெவ்வேறு நபர்களால். ஜடாயு பேசிய பிறகு ஜெ பாடலில் இருக்கும் சொற்கள் விவரணைகள் மூலம் அதில் உள்ள உச்சபட்ச அல்லது சாத்தியமான வேறு அழகியல் பூர்வமான வாசிப்பை சுட்டிக்காட்ட முயல்வார்.சுற்றியிருப்பவர்கள் தங்கள் புரிதலிலிருந்து மேலும் கூறும் சொற்களில் அவ்வாசிப்பு விரிவதை உணர முடிந்தது. ஒரு வகையில் விஷ்ணுபுரம் ஞானசபை என்று தோன்றியது. விவாதத்தில் பங்கேற்கும் பெரும் அறிஞர்கள். ஒருவேளை மூவரும் வெவ்வேறு இடத்தில் அமர்ந்திருந்ததாலும் தோன்றியிருக்கலாம் J))) அரசனே தாயாகும் தருணம், மழைத்த வானம், வாலி காதலன், மின்னலென ஒளிரும் எண்திசை நாகங்கள், மலர் காய் வருணனைகள், இலக்குவன் தாரையை சந்திக்கும் காட்சி வாசித்தபோதே கவர்ந்த இடங்கள். ‘வார்ஆழிக் கலசக் கொங்கை’ என்ற சொற்களில் சபை நெடுநேரம் நின்றிருந்தது.தனியாகப் பார்த்தால் இவ்வரங்கு மட்டும் ஒரு கிளாசிக் என சொல்வேன்.

DSC04983
முகாமின் இரண்டாவது நாளின் இரண்டாவது அரங்காக அமைந்தது மோகனரங்கன் அவர்கள் தலைமை வகித்த கவிதை ரசனை அரங்கு. கவிதை என்பது பற்றி பொதுவான புரிதல் என்ன உள்ளது என்பதிலிருந்து அவர் பேச்சு தொடங்குகிறது. “கவிதை புரியவில்லை என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள். புரியவைப்பதன் வாயிலாக அல்ல உணர்த்துவதன் வாயிலாக அது தொடர்புறுத்துகிறது.அது முக்கியமானது.கவிதை நம் மனதில் கனிந்தெழுவதை காலப்போக்கில் உணரமுடியும். அவ்வகையில் கவிதையிலிருந்து பிற வடிவங்கள் வேறுபடுகின்றன. சிறுகதை நாவல்களில் அதன் contextஐ உடனே புரிந்துகொள்ளமுடியும், ஓரளவிற்காவது. subtext மட்டுமே தவற விடப்படும். கவிதை அப்படி இருப்பதில்லை.அதில் context இல்லை.கவிதைக்காக முழுகவிஞனையும் படித்தல் என்பது முக்கியமான செயல். நல்ல கவிதை புரிவதற்கு முன்பே உணர்த்திவிடும் என்று டி.எஸ்.எலியட் கூறுகிறார்.” இதற்காக தனக்கு சென்னையில் ஏற்பட்ட முதல் அனுபவத்தை இணைத்து கூறினார்.தான் கவிதை எழுதும் அனுபவம், மொழி பிரதி வாசகன் ஆகியவற்றின் உறவு பற்றி பேசும்போது காலையில் கம்பராமாயணத்திலிருந்து ஆழ்வாருக்கும் திருமூலருக்கும் சென்றது, free verse வந்தது, வானம்பாடி இயக்கங்களின் பங்களிப்பு, இப்போதுள்ள கவிஞர்கள் எழுதிப்பார்க்கும் விதம் பற்றியெல்லாம் பேசி இவையெல்லாம் தமிழ் கவிதையை புரிந்துகொள்வதற்கு தோராயமான விஷயங்கள் என்றார்.
DSC04964

அமர்வு தொடங்கும் முன்பே ஜெ கம்பராமாயணத்தை விட மேலதிகமாக நவீன கவிதை படிப்பதற்கு எது தேவையாகிறது எனக் கேட்டிருந்தார். மோகனரங்கன் ‘தனித்தவில் கலைஞர்’ கவிதை வாசித்தபின் விவாதம் தொடங்கியது. அக்கவிதையிலுள்ள imagesஐ பலரும் பலவிதமாக விளக்கினார்கள். ஜெ கவிதை என்பது நவீன வாசகன் வரை மாறி வந்துள்ளது, அதன் வரையறைகளும் மாறிக்கொண்டேயிருப்பதையும் பேசினார். குறைந்தபட்ச வார்த்தைகளால் அதிக அர்த்தங்களை தொடர்புறுத்தக்கூடிய ஒரு சாதனம் என தோராயமாக சொல்லிக்கொள்ளலாம். பிறகு poetry – applied poetry என்பதற்கான வேறுபாடுகளை விளக்கி எங்கெல்லாம் பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறினார். இது கவிதையில் சந்தமோ இசையோ ஏன் இப்போதெல்லாம் பயில்வதில்லை என்ற கேள்வியிலிருந்து தொடங்கியது.

எண்ணிகையில் ஒன்றுக்கு அதிகமான வாசிப்பு சாத்தியமா என கிருஷ்ணன் அவர்கள் கேட்ட கேள்விக்கு ஜே, ‘ஒரு கவிதைக்கு உச்சபட்ச reading ஒண்ணு இருக்கு.அது ஒரு sensibility.இடையில tilt ஆனா பல readings வரும்.அத தாண்ட முடியும்போது ஒரு உச்ச bliss அல்லது sensibilityயை அடையறோம்’ என்றார்.

DSC05098
டாக்டர் வேணு வெட்ராயன் ‘யாரின் நினைவிலும்’ கவிதை வாசித்து புகழ்பெற்ற ஓவியங்களை நினைவுப்படுத்துகிறது என்று சுருக்கமாக முடித்தார்.இதிலுள்ள சொற்கள் பற்றி பேச்செழும்போது ‘மீபொருண்மை’ விஷயங்களை சொல்வதற்கு படிமங்களை விட metaphorsதான் உதவுதோ என தனக்கு தோன்றுவதாக ஜெ சொன்னார்.’டச் ஸ்க்ரீன்’ ‘எனது களம்… எனது ஆட்டம்… நானே நாயகன்’ ‘நகரில் சிக்கியவன்’ கவிதைகள் நெடுநேரம் பேசப்பட்டன. ‘காதுவலியாகிய நீ’’உரையாடல்’ ஆகிய கவிதைகள் வாசிகப்பட்டவருக்கு அவ்விரு கவிதைகளும் அவரை அதிகம் பாதிக்கமலிருக்குமாறு வாழ்த்தப்பட்டது.(இவ்ளோ சிரமப்பட்டு டாக்டர்ட்ட போறதுக்கு பதிலா அவள்ட்டையே இன்னும் ரெண்டடி வாங்கிருக்கலாம் :)) ) தேவதேவனின் ’ஒற்றைமரம்’ அருண்மொழிநங்கை அவர்கள் வாசிக்கும்போது ஜெவின் முகத்தைப் பார்த்திருந்தேன்.கண்மூடி கேட்டிருந்தார். ’புலன்களுக்கெட்டாத கண்ணாடிச்சுவர்’, ‘இசைவெள்ளம்’ ஆகிய பதங்கள் தந்த அனுபவம் பற்றி விரிவாகப் பேசினார். காலச்சுவடில் வெளியாகிய முகுந்த் நாகராஜனின் கவிதை ஒன்றையும் குறிப்பிட்டார். அவர் முடித்தவுடன் ஜெ நித்யாவின் பேட்டி ஒன்றை குறிப்பிட்டார்.குளிர்ந்த பாறையொன்றில் கை பட்டவுடன் விரிசலிட்டு அணுகமுடியாத பேரிரைச்சலுடன் பிரயகையாக வீழும் நதி பற்றிய அனுபவம் அது.

DSC04943
இரண்டாம் நாள் மாலை நடையின்போது நானும் ஸ்ரீநிவாஸும் இணைந்து முன்னால் நடந்தபடி வந்தோம். watch towerக்கு செல்வதாக தீர்மானிக்கப்பட்டது. தேயிலைத்தோட்டம் வழியாக இறங்கி வன அலுவலகத்தை அடைந்து அனுமதி வாங்கியபின் காட்டிற்குள் சென்றோம். அது reserved area என்றும் மிகக்குறைவான மக்களையே அனுமதிக்கின்றனர் என்றும் ஜெ சொன்னார்.செல்லும் வழியில் ஒரு ஆட்டோவில் வெட்டியடுக்கப்பட்ட மரக்கட்டைகள் இருந்தன.கீழே சரிவில் மரங்களுக்குள் சிலர் வெட்டிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.ஏற ஏற சிலருக்கு வியர்க்க ஆரம்பித்திருந்தது. watch towerஐ அடைந்து மேலேறி சில நிமிடம் நின்றபின் கீழிறங்கும்போது சபை கூடியிருந்தது. ஜெ, கலையின் பயன்மதிப்பு பற்றி ஒருவரின் கேள்விக்கு PT Usha பற்றி மலையாளத்தில் வெளிவந்த இரு கட்டுரைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். திரும்பி வரும்போது ஸ்ரீநிவாஸ் மிக உற்சாகமாக பேசியபடி வந்தான். விஷ்ணுபுரத்தின் பிங்கலன், கனவு, நீலம் எனத் தொடர்ந்தது.வரும்போது சரிவிலிருந்த காட்டெருதுகள் திரும்புகையில் ஏற்றத்தில் தலைக்கு மேலே நின்றிருந்தன. துணிந்து அரங்கசாமி அவர்கள் சொன்ன வழியில் நடந்து திரும்பினோம்.

அன்றைய இரவணவிற்குபின் திருமூலநாதன் அவர்களின் நிகழ்ச்சி திடீர் ஆச்சரியம்தான்.அஷ்டாவதானம், தசாவதானம் போன்ற சொற்களை அப்பொழுதுதான் கேள்விப்பட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்தபோது உறங்கிய இடத்திலேயே எழுந்தவுடன் அமர்ந்து ஜெ பேச ஆரம்பித்திருந்தார். முகம் கழுவி வந்து அருகமர்ந்துகொண்டேன்.எப்பொழுதுமே அது நகைச்சுவையாகத்தான் இருக்கும்.எழுந்து அமர்ந்த இடத்திலிருந்தே ஒருநாள் சீரியஸாக தொடங்க வாய்ப்பில்லை.

DSC04940
இம்முறை காலை நடையில் இணைந்துகொண்டேன்.Symmetry பற்றிய உரையாடல்.வெண்முரசும் கதாப்பாத்திரங்களும் வந்தாலும் ஒட்டுமொத்தமாக அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.பலரிடம் ஜெவே கேள்வி கேட்டு கேட்கப்படும் கேள்விகளையும் இணைத்து செறிவாக விளக்கியபடி வந்தார்.இயற்கை வடிவங்கள், மனிதமூளை, geometry, மேம்படுத்தப்பட்டுள்ள கோட்பாடுகள் என கண்முன்னே மலைகளும் அடர்ந்த மரங்களும் இருந்த பாதையில் கேட்டபடி நடந்தது பேரனுபவம்.

மூன்றாம் காலையில் படிமங்கள் அரங்கு. கிருஷ்ணன் அவர்கள் கவிதையுடன் தொடங்கிவைக்க தேவதேவன் சிறிய முகவுரையாற்றினார். “சென்றவருட விஷ்ணுபுரம் விருது விழா அரங்கில் டி.பி.ராஜீவன் படிமங்களைப் பற்றி பேசியது ஒரு விவாதத்தை உருவாக்கியது.படிமங்கள் மனித மனதை நார்சிசம் நோக்கி இழுத்துச் செல்லுமென ஒரு கருத்தை அவர் அங்கு பதிவு செய்தார். அதற்கு என் பதிலாக படிமம் என்பது ஆதாரம், அது கடவுளின் மொழி என பேசினேன். விரிவாகப் பேசுவது எனக்கு கடினமாக இருந்தாலும், அனுபவங்களை சொல்லமுடியும் என நினைக்கிறேன். தாகூர் கடவுள் தன்னை படிமமாக வெளிப்படுத்துகிறார் என கூறுகிறார். சி.சு.செல்லப்பா ‘எழுத்து’ இதழில் எஸ்ரா பவுண்டின் imagist movement அறிக்கையை மொழிபெயர்த்தார். அதில் எஸ்ரா பவுண்ட் ஒரு கவிஞன் வாழ்நாள் முழுக்க எழுதுவதைவிட உருப்படியான ஒரு அழகான படிமத்தை எழுதிவிட்டால் போதும் எனச் சொல்கிறார். பிரமிள் பற்றி சி.சு.செல்லப்பா அவர் ஒரு ஆன்மீகக் கவிஞன் என்றும் அதிக படிமங்களை பயன்படுத்துபவர் என்றும் கூறுகிறார்.படிமங்கள் உருவகங்கள் பற்றி இவ்விவாதத்தில் கேள்வி எழுவது இயல்பு.படிமம் பற்றி முடிவாக ஏதும் சொல்லிவிட முடியாது என்று ஜெயமோகன் அவரது வாசிபிர்லிருந்து சொல்கிறார்.இதை பிறப் பேச்சாளர்கள் பேசியபின் விரிவாக விளக்க நினைக்கிறேன்.”
DSC04926

அரங்கில் இரண்டாவதாக எம்.கோபாலகிருஷ்ணன் தன் சொற்களைக் கூறினார்.”யாரும் எளிதாகக் கையாளக்கூடிய வடிவமாக கவிதை இருக்கிறது.கவிதையில் படிமம் மையம் என்று எனக்கு தோன்றுகிறது.அதன் பொருளை மீறிய ஒரு அசைவு கவிதையில் தேவைப்படுகிறதென்று தொடருகிறது.குழந்தைக்கு அம்மாவின் முகம்தான் முதலில் சென்று சேர்கிறது.பிறகுதான் ‘அம்மா’ என்ற சொல்.சொற்களின் சித்திரங்கள் வழியாக தொடர்புறுத்துவது கவிதையில் உள்ளது.அவையெல்லாமே படிமம்தான்.அது கணினித் திரையிலுள்ள ஒரு cursor போல. சரியான அழுத்தம் வெவ்வேறு புதிய உலகங்களுக்கு அழைத்துச் செல்லக்கூடும்.காத்திருந்து நேரம், இடம் அனுபவங்கள் பொறுத்து படிமங்கள் திறப்பது அழகான விஷயம்.பாரதியின் ‘அக்கினிக்குஞ்சு’ கவிதை அது எழுதப்பட்ட காலத்தையும் தாண்டி இப்பொழுதும் அதன் படிமங்கள் நம்முடன் தொடர்புறுத்துவதாக உள்ளன.” மேலும் metaphor , image குழப்பம் பற்றியும் தனக்கு பிடித்த கவிதையிலிருந்து படிமங்களைப் பற்றியும் பேசிமுடித்தார்.

உண்மையில் இதற்கு பிறகுதான் விவாதம் தொடங்கியது என சொல்லவேண்டும். Image என்ற சொல் குறித்து அரங்கிலிருந்து நெடுநேரம் விளக்கப்பட்டது.அச்சொல் பல்வேறு துறைகளில் பல்வேறு தளங்களில் பயன்படுத்தப்பட்டு புரிந்துகொள்ளும் விதம் விளக்கப்பட்டு , கவிதையின் image (படிமம்) என்பது பற்றி விரிவாக ஜெ பேசினார். முந்தைய விருதுவிழாவில் metaphor, allegory, symbol, image என்பதை வரையறுத்துக்கொண்டு அன்றைய விவாதம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இங்கு மீண்டும் விரிவாக அதை பல கோணங்களில் விளக்கிய பின்னர் கவிதைகள் பேசப்பட்டன.தேநீருக்குப்பின் பெரும்பாலானவர்கள் தாங்கள் ரசித்த கவிதையை பற்றிகூறி அதில் எங்கெல்லாம் படிமம் பயின்று வந்திருக்கிறது என்று பேசப்பட்டது. அதனூடாக படிமம் பற்றி முன்னர் விளக்கி பேசப்பட்டது விரிவடைந்தது.

DSC04937
மதிய உணவின்போது இறுதியாக குருகுல நூலகத்திலிருந்த புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். வெளி நூலகங்களில் பார்த்திராத பார்க்க நினைத்திருந்த பல புத்தகங்கள்.ஜெ வரலாற்று நூற்பட்டியலில் குறிப்பிடிருந்த சில நூல்கள்.மேலைத்தத்துவம் இந்தியத்தத்துவம் சார்ந்த பழைய நூல்கள். Story of Civilization அனைத்து நூல்களும் அட்டைக் கிழியாமல் அடுக்கிவைக்கபட்டிருந்தன.யக்ஞவால்க்யஸ்மிருதியை இங்குதான் பார்க்கிறேன்.இடதுபுறம் மலையாள நூல்கள்.வலதுபுறம் முழுக்க உலக இலக்கியங்கள்.விஷ்ணுபுரம் ஆகப் பழைய பதிப்பொன்று புதிதாகக் கண்ணாடிக்குள் இருந்தது.

ஊர்திரும்பும்போது பேருந்தில் ராதாகிருஷ்ணன் தனது அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.என்னை அழைத்து வந்தவர் அவர்தான்.அவரிடமும் விடைபெற்று இரவு வீடு திரும்புகையில் விழிகளுக்குள் நீங்கள் பேசும் காட்சிகள், பேசாத சொற்கள் கூட ஓடிக்கொண்டிருந்தன. பகிரமுடியாதவை. ஒன்று மட்டும் சொல்லமுடியும், இம்முகாம் ஒற்றை அனுபவம் அல்ல.

ஸ்ரீநிவாஸ் அறிவரசு

முந்தைய கட்டுரைஊட்டி ஒரு பயணம்
அடுத்த கட்டுரைஇன்னும் ஊட்டி முகாமிற்கு வெளியே..