பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 4
அஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான். அவன் பணிந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்கள் வருகையால் அரண்மனை மகிழ்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்துவிட்டு தேரை முன்செல்லப்பணித்ததும் ஓர் எண்ணம் தோன்றி திரும்பிப்பார்த்தான். அங்கே காவல்கோட்டத்தில் நின்றிருந்த அத்தனை காவலர்களும் இளைஞர்கள்.
உடனே அதுவரை அவன் கடந்துவந்த ஏழு காவல்கோட்டங்களும் நினைவில் எழுந்தன. அனைவருமே இளைஞர்கள். வியப்புடன் முகங்களை நினைவில் ஓட்டிக்கொண்டான். அஸ்தினபுரியின் மையநிலைகள் அனைத்துமே இளைஞர்களால் ஆனவையாக மாறியிருந்தன. அவன் முதலில் வந்தபோது அவையனைத்திலும் நடுவயது கடந்தவர்கள் இருந்தனர். அரண்மனை முகப்பில் குதிரைக்காவலர் இருவர் எதிரே வந்து நின்றனர். இளைஞர்கள் மட்டுமல்ல, அழகர்களும் கூட. ஒவ்வொருவரையும் திரௌபதியே நேரில் தேர்வு செய்திருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டான்.
சயனன் தொடர்து வர அரண்மனைக்குள் நுழைந்து இடைநாழியில் நடக்கையில் அவன் அவளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். சிலமாதங்களுக்குள்ளாகவே அந்நகரம் முழுக்கமுழுக்க அவளுடையதாக ஆகிவிட்டிருந்தது. அவள்தான் எங்கும் பேசப்பட்டாள். அவள் விழி செல்லாத ஓர் இடம்கூட நகரில் இருக்கவில்லை. மிகமென்மையாக அப்படி நிறைத்துக்கொள்ள பெண்களால் மட்டுமே முடியும் என்று தோன்றியது. சிறியவை ஒவ்வொன்றிலும் அப்படி முழுமையாக ஈடுபட ஆண்களால் முடியும் என்று தோன்றவில்லை.
அரசியர்கோட்டத்தின் வாயிற்காவலன் பணிந்து வாழ்த்துரை சொல்லி உள்ளே செல்லும்படி அறிவித்தான். திருஷ்டத்யும்னன் தன் மேலாடையை சீர்செய்து கச்சையை இன்னொரு குறை இறுக்கிவிட்டு உள்ளே சென்றான். முற்றிலும் அயலவளான ஓர் அரசியை சந்திக்கும் உளநிலைதான் அவனிடமிருந்தது. பதற்றத்தை வெளிக்காட்டாமலிருக்க கைகளை இடையிலிருந்த வாளுறைமேல் வைத்துக்கொண்டு அப்படி வைப்பதே பதற்றத்தை காட்டுகிறது என எண்ணி விலக்கிவிட்டு கூடத்தில் நின்றான். அமரலாமா என்று தோன்றினாலும் உடல் தயங்கியது.
உள்ளிருந்து வந்த சிற்றமைச்சர் சௌபர்ணிகர் “அமருங்கள் இளவரசே” என்றார். அஸ்தினபுரியின் சுங்கநாயகமாக இருந்த சோமரின் மைந்தர் அவர். பளிச்சிடும் வெண்பற்களும் பெண்களுடையவை போன்ற நீண்ட கண்களும் சுண்ணப்பாறையில் செதுக்கப்பட்டதுபோன்ற உறுதியான உடலும் கொண்டவர். திருஷ்டத்யும்னன் அமர்ந்து தன் மேலாடையை இழுத்துப்போட்டுக்கொண்டு விழிதூக்காமல் அமர்ந்திருந்தான். சௌபர்ணிகர் “இளவரசி இன்னமும் அறைவிட்டு கிளம்பவில்லை. சிற்பிகள் வந்திருக்கிறார்கள் என்று சேவகன் செய்திகொண்டுவந்தான். அவர்களுடனான சந்திப்புக்கு ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
திருஷ்டத்யும்னன் சௌபர்ணிகரின் குரலை வெறுத்தான். பாடகனுக்குரிய ஆழ்ந்த அடிக்குரல். அமைச்சனுக்கு எதற்கு அது? ஆனால் அதற்காகவே அவள் அவரை தெரிவுசெய்திருக்கக்கூடும். அவள் அவையில்தான் பாரதவர்ஷத்திலேயே சிறந்த ஆண்மகன்கள் வந்துசேர்கிறார்கள். சிற்பிகள், பாடகர்கள், கவிஞர்கள், தளபதிகள், அமைச்சர்கள்… அவளைப்பணிவதே தங்கள் ஆண்மையின் உச்சமென்பது போல வந்தபடியே இருக்கிறார்கள். அவள் முன் துர்க்கைமுன் பூதகணங்களாக பணிந்து நிற்கிறார்கள்.
அப்பால் மங்கல ஓசை கேட்டது. சௌபர்ணிகர் “இளவரசி” என்றார். திருஷ்டத்யும்னன் அறியாமல் நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கினான். அவை உள் வாயிலை நோக்கி பேருவகையுடன் விரிந்திருந்தன. அவர் இனிமேல் எதையும் பேசப்போவதில்லை, எதையும் எண்ணவும்போவதில்லை. மங்கல இசை அணுகிவந்தது. உள்ளறையின் கதவு திறக்கப்பட்டபோது சிறிய அலைபோல எழுந்து வந்து மோதியது. திருஷ்டத்யும்னன் எழுந்து நின்றான்.
‘அஸ்தினபுரியின் அரசி, பாஞ்சால ஐங்குலநாயகி, திரௌபதி வருகை’ என நிமித்திகன் அறிவித்தான். பல்லியம் எழுப்பிய மங்கல இசை திறந்த கதவினூடாக பீரிட்டு அறைக்குள் நிறைந்தது. கதவு விரியத்திறக்க திரௌபதி உள்ளே வந்தாள். தலையில் இருந்து வழிந்த நீள்கூந்தல்மேல் முத்துச்சரங்கள் அணிந்திருந்தாள். சிறிய கையசைவால் அகம்படியினரை வெளியே நிற்கச்செய்துவிட்டு அவள் உள்ளே வந்ததும் தடித்த கதவம் மூடப்பட்டு இசை தொலைவுநோக்கி விழுந்து மூழ்கி மறைந்தது.
திருஷ்டத்யும்னன் திரும்பி சௌபர்ணிகர் முகத்தை நோக்கினான். கனவுகண்டு மலர்ந்த முகம். ஒளிவிடும் கண்கள். திரௌபதி அருகே வந்ததும் “அஸ்தினபுரியின் அரசியை வணங்குகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லி தலைவணங்கினான். “பாஞ்சால இளவரசருக்கு வாழ்த்து” என்றபடி அவள் பீடத்தில் கால்மேல் கால்போட்டு கைகளை பீடத்தின் இரு கைமேடைகளிலும் வைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். “சௌபர்ணிகரே, சிற்பிகளை உச்சிக்குப்பின் சந்திக்கிறேன். சிற்பிகள் அனைவரும் அதற்கு முன் நம் சூத்ராகிகளிடம் ஒரு முறை பேசிவிடட்டும்” என்றாள். “ஆணை இளவரசி” என்றார் சௌபர்ணிகர்.
திரௌபதி “பேரரசியிடம் அனைத்து ஓலைகளையும் ஒருமுறை காட்டிவிடுங்கள். அவர்கள் அறியாமல் எதுவும் நிகழலாகாது” என்றபின் திரும்பி “நகரம் ஒன்றை அமைப்பது காவியத்தை இயற்றுவதற்கு நிகர். ஏனென்றால் நாம் இருப்போம், மறைவோம். நகரங்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் நாம் எதிர்காலம் பற்றியே எண்ணவேண்டியிருக்கிறது” என்றாள். “ஆம், ஆனால் சிறந்த அரசர்கள் எதிர்காலம் பற்றி எண்ணத்தெரிந்தவர்கள்.” திரௌபதி புன்னகைத்து “எதிர்காலம் பற்றிய அச்சம் வேறு, கனவு வேறு. கனவுகாண்பதற்கு நாம் நிகழ்காலத்தை வென்று எதிர்காலத்தை கையாளப்போகிறோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தேவை” என்றாள். “நான் என் எதிர்காலக்கனவில் இருந்து இந்நகரை உருவாக்கவில்லை. இந்நகரை கட்டுவது வழியாக உண்மையில் அக்கனவைத்தான் புனைந்துகொள்கிறேன்.”
அவள் நகரம் பற்றி பேசவிழையவில்லை என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். பேசவிழைவதைச்சுற்றி அப்படி ஒரு சொற்புதரை உருவாக்குவது அவள் வழக்கம். அவற்றை மிகுந்த பற்றுடன் உறுதியுடன் சொல்லி அவற்றிலேயே எதிர்தரப்பை கட்டிவிட்டு அவள் மட்டும் பேசவிழைவதை நோக்கி செல்வாள். அவன் நன்கறிந்தவள், ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதாக எழுபவள். நகரமைப்பிலிருந்து எவ்வழியாக அவள் வாயில் திறந்து விரும்பியதற்குச் செல்லப்போகிறாள் என அவன் எண்ணிக்கொண்டிருந்தபோதே அவள் “ஆகவேதான் சூதர்களை வரச்சொல்கிறேன். அவர்கள் இங்கு விராடவடிவாக நிறைந்திருக்கும் பாரதவர்ஷத்து மானுடரின் நாக்குகள். அவர்களைக்கொண்டு கனவுகளை சேர்க்கிறேன். இந்திரப்பிரஸ்தம் அவர்களின் தலைமுறைக்கனவுகள் திரண்டு வந்ததாக இருக்கவேண்டும்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகை ஒன்றை அடைந்தான். “இந்திரப்பிரஸ்தம் அனைவருக்கும் பிடித்த பெயராக இருக்கிறது. இந்திரன் பாரதவர்ஷத்தின் முதல்பெருந்தெய்வம். வேதவடிவன். அத்துடன் நம் இளையபாண்டவரின் தந்தை…” அவள் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. “இந்நகரமே நீங்கள் உங்கள் இளையகொழுநருக்கு அளிக்கும் பரிசுதான் என்கிறார்கள் சூதர்கள்” என்றான். அவள் விழிகளை நோக்கியபடி “அர்ஜுனபுரி என்றுகூட ஒருவன் சொல்லக்கேட்டேன்” என்றான். அவள் கண்கள் உடைக்கமுடியாத நீலவைரங்கள் போலிருந்தன. ”ஆம், இந்திரனின் வஜ்ராயுதத்தை வில்லென ஏந்தியவர் அவர்” என்றபின் “எப்போதும் சிற்பிகள் நம்மிடமிருக்கும் பொருளை கரைப்பதில் வல்லவர்கள். அதை நான் எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் இம்முறை நம் கருவூலம் ஒரு எளிய மடிசீலை மட்டுமே என்று எண்ணச்செய்துவிட்டனர்” என்றாள்.
”முழுச்செலவையும் அரசக்கருவூலத்திலிருந்தே அளித்து கட்டப்படும் முதல்நகரம் இதுவாகவே இருக்கும்” என்றான் திருஷ்டத்யும்னன். “வழக்கமாக நகரங்களை அமைக்கையில் அரண்மனையையும் கோட்டைகளையும் மட்டுமே கட்டுவது வழக்கம். மற்ற நிலங்களை வணிகர்களுக்கும் பிறருக்கும் அளித்து மாளிகைகளையும் பண்டசாலைகளையும் கட்டிக்கொள்ளச்சொல்வார்கள்…” திரௌபதி உறுதியான குரலில் “இந்நகரம் ஒற்றைச் சிற்பம் போன்றது. ஒவ்வொரு பகுதியும் முழுமையாக ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். மானுட உடல் போல” என்றாள்.
திருஷ்டத்யும்னன் ”ஆனால் மானுட உடல் எவராலும் அமைக்கப்படுவதல்ல. அது பார்த்திவப்பரமாணுவிலிருந்து முளைத்தெழுகிறது” என்றான். திரௌபதி “நான் இதை பத்துவருடம் கருவறையில் சுமந்திருக்கிறேன்” என்றாள். திரும்பி சௌபர்ணிகரிடம் “சுலக்ஷணரிடம் நான் சொன்னதை சொல்லுங்கள் சௌபர்ணிகரே. இன்றுமாலைக்குள் முதல் வரைபடம் என் கைக்கு வந்துவிடவேண்டும் என்பதை மீண்டும் உறுதியாக கூறிவிடுங்கள்” என்றாள். சுலக்ஷணர் ஓர் அழகிய இளைஞர் என்பதில் அவனுக்கு ஐயமே இருக்கவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே அவள் அதற்காகத்தான் அப்பெயரை சொல்கிறாளோ என்றும் தோன்றியது.
சௌபர்ணிகர் தலைவணங்கி வெளியே சென்றதும் “இளவரசே, நகரின் முதல் வாஸ்துபுனிதமண்டலம் வந்துவிட்டது… பார்க்கிறீர்களா?” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், பார்க்க விழைகிறேன்” என்றான். அவள் எழுந்து சென்று அங்கிருந்த பீடத்தின்மேலிருந்த பெரிய தோல்சுருளை எடுத்து விரித்தாள். அதன்மேல் செந்நிறக்கோடுகளாலும் நீலநிறப்புள்ளிகளாலும் வெண்ணிற வட்டங்களாலும் ஆன நகர வரைபடம் இருந்தது. “கலிங்கச்சிற்பி கூர்மர் வடிவமைத்த முதல் வரைவை தட்சிணசிற்பி முதுசாத்தனார் முழுமைசெய்திருக்கிறார். முன்னர் பன்னிரு படித்துறைகளை திட்டமிட்டிருந்தோம். இப்போது அவை முப்பத்தாறாக பெருகிவிட்டன. அறுகோணவடிவிலான ஆறு துறைமுகப்புகள் யமுனைக்குள் நீண்டிருக்கும்.. துறைமுகப்புகளுக்குப் பின்னால் வட்டவடிவமான பெருமுற்றத்திலிருந்து பன்னிரு சாலைகள் பிரிந்து செல்லும்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் “இருநூறு வாரைக்குமேல் உயரமுள்ளது நகரத்தின் முதல்கோட்டை. அதுவரைக்கும் படிக்கட்டுகள் அமையுமா?” என்றான். “சரியாகச்சொன்னால் நூற்று எழுபத்தெட்டு வாரை” என்றாள் திரௌபதி. ”படிக்கட்டுகளும் சுழல்பாதையும் உண்டு. அங்காடிமுற்றம் ஆயிரத்தைநூறு வாரை விட்டம் கொண்டது. எட்டு பெருஞ்சாலைகளில் இரண்டு நகருக்குள் நுழையும், இரண்டு கோட்டையை வளைத்துச்செல்லும். நான்கு சாலைகள் நகரிலிருந்து கிளம்பிச்செல்லும். குன்றுக்குப்பின்னாலுள்ள செம்மண்நிலத்தில் அறுநூறு பண்டகசாலைகளை அமைக்கவிருக்கிறோம்.”
திருஷ்டத்யும்னன் அந்த வரைவை முன்னரும் பலமுறை பார்த்திருந்தமையால் விரலை திருத்தங்கள் மேலே மட்டும் வைத்தான். “ஏழடுக்கு நகரம். முதலடுக்கில் படைகள். அடுத்து அங்காடிகளும் வணிகர்குடிகளும். பின்னர் வேளாண்குடிகளும் ஆயர்களும். சூதரும் பரத்தையரும் வைதிகரும் நான்காவது அடுக்கில். பெருவணிகரும் அரசகுடியினரும் ஐந்தில். ஆறில் அரசகுலம். ஏழில் அரண்மனை.” திருஷ்டத்யும்னன் “செந்நிறமான நகர்…” என்றான். “ஆம், குன்றையே வெட்டி அங்கேயே கட்டிவிடலாமென எண்ணியிருந்தோம். ஆனால் இன்றுள்ள பெருந்திட்டத்திற்கு அங்குள்ள கற்கள் போதாதென்று அறிந்தோம்.”
திருஷ்டத்யும்னன் “மொத்தக் கற்களையும் மேலே கொண்டுசெல்லமுடியுமா என்ன?” என்றான். “முடியும். யமுனையின் ஒழுக்கில் படகுகளை பாய்விரித்து ஓடவைத்து அவற்றுடன் வடங்களால் பிணைக்கப்பட்ட வண்டிகளை குன்றின் மேல் ஏற்றமுடியும். கற்களை மிக எளிதாக மேலே கொண்டுசெல்லலாம். துவாரகையில் பத்துமடங்கு பெரிய கற்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.” திருஷ்டத்யும்னன் “எங்கிருந்து வருகின்றன அக்கற்கள்?” என்றான். “வடக்கே களிந்தமலையின் அடிவாரத்தில் ஒரு செந்நிற மலையை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் பாறைகளை முழுமையாகவே வெட்டி எடுத்து நீரொழுக்கில் கொண்டுவந்து சேர்க்க திட்டமிட்டிருக்கிறோம்.”
அவள் பேசப்பேச சிறுமியாகிக்கொண்டே வந்தாள். “குன்றின் மேல் ஊற்றுதேர்ந்து குளங்களை வெட்டும்பணி தொடங்கிவிட்டது. இந்திரப்பிரஸ்தத்தின் மேல் மழை எப்போதும் பெய்துகொண்டிருக்கும் என்கிறார்கள். ஆகவே அத்தனை குளங்களும் நிறைந்துவழிந்துகொண்டுதான் இருக்கும்… பீதர்களின் நாட்டிலிருந்து செந்நிறமான ஓடுகளை கொண்டுவர ஆணையிட்டிருக்கிறேன். இன்னும் எட்டுமாதங்களில் தாம்ரலிப்தியில் அவை வந்திறங்கும். அப்போது நகரின் கட்டடங்களில் சுவர் எழுந்திருக்கும். நகரின் அத்தனை கூரைகளும் சுவர்களும் செந்நிறம்தான். கதவுகள் வெண்ணிறமானவை. ஆனால் அரண்மனையின் கதவுகளனைத்தும் பொன்னிறம். பித்தளைத்தகடுகளை மரத்தில் உருக்கிப்பொருத்தும் கலையறிந்த வேசரநாட்டு மூசாரிகள் நூற்றைம்பதுபேரை அங்கே ஒரு சிற்றூராகவே குடியமர்த்தியிருக்கிறேன். ஒரே ஒரு வாயிலேனும் கிளிச்சிறைப் பொன்னால் ஆனதாக இருக்கவேண்டும்.” கிளர்ச்சியுடன் நகைத்து “இந்திரப்பிரஸ்தத்தில் கதவுகள் பொன்னாலானவை என்று சூதர்கள் பாடவேண்டுமல்லவா?” என்றாள்.
கதவு பின்பக்கம் மெல்லத்திறந்து சேடி ஒருத்தி எட்டிப்பார்த்து தயங்கி நின்றாள். “வருக” என திரௌபதி திரும்பாமலேயே சொன்னாள். “காலவர் வந்துவிட்டாரா?” சேடி “ஆம் இளவரசி” என்றதும் திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு ஏறிட்டுப்பார்த்தான். சுஃப்ரையின் விழிகள் ஒருகணம் அவனைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டன. படபடப்பை வெல்வதற்காக அவன் அந்த வாஸ்துபுனிதமண்டலத்தை பார்த்தான். திரௌபதி “மரங்கள் அனைத்தும் கோடையில் தளிரிட்டு மலர்வனமாக இருக்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன். ஐம்பதாயிரம் மலர்மரங்கள் செடிகளாக நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. அவை பெரிதான பின்னர் கொண்டுசென்று வேண்டுமிடங்களில் நடுவதே சிறப்பு. இப்போதே நட்டால் கட்டுமானப்பணிகளுக்கு இடைஞ்சலாக ஆகக்கூடும்” என்றாள்.
திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். திரௌபதி திரும்பி சுஃப்ரையிடம் “காலவரிடம் நான் இளவரசரிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொல்…” என்று சொல்லி தலையசைக்க அவள் தலைவணங்கி திரும்பிச்சென்றாள். “நேற்று இவள் நடனத்தைப்பார்த்தேன். தென்னகச் சிற்பிகளின் விரலில் இருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். காலை இவளை அழைத்துவரச்சொன்னேன். என்னுடன் இருக்கிறாயா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டாள்” என்றாள். “ஆனால் அவள் நடனக்காரி…” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், இங்கும் அவள் நடனம் பயிலலாமே. எனக்குத்தேவை அழகை அறிந்த விழிகள். நான் உருவாக்கும் நகரில் சிற்பங்களும் இவளைப்போல் நடமிடவேண்டும்.”
திருஷ்டத்யும்னன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இத்தனை நகரக்கட்டுமானப்பேச்சுகளும் அந்தப்பெண்ணை கொண்டுவந்து காட்டிச்செல்லத்தானா? “ஆனால் நம் கருவூலம் முழுமையாகவே ஒழிந்துகொண்டிருக்கிறது. கட்டுமானம் இன்னமும் தொடங்கக்கூட இல்லை” என்றாள். “ஆகவேதான் உங்களை நாடினேன். நீங்கள் துவாரகைக்குச் சென்று இளைய யாதவரைப்பார்த்து அவர் வாக்களித்த செல்வத்தை பெற்றுவந்தாலொழிய நான் முன்னகர முடியாது.” திருஷ்டத்யும்னன் எளிதாகி “ஆம், செல்கிறேன்” என்றான். “அங்கேதான் இளையவரும் இருக்கிறார் என்று சொன்னார்கள்” என்றாள். “அவர்கள் இருவரும் இணைபிரியமுடியாதவர்கள்” என்று திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.
“இளைய யாதவரின் செல்வம் நாள்தோறும் வளர்கிறது என்றனர். ஆகவே நாம் கோருவதைக்கொடுப்பதொன்றும் அவருக்கு கடினமானதல்ல. மேலும் பாண்டவர்களின் கருவூலமும் படையும் அவருக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ளது.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவர் அதை அறிவார் என நினைக்கிறேன்” என்றான். திரௌபதி “இளைய யாதவரிடம் என் அன்பை தெரிவியுங்கள்” என்றாள். அவள் அர்ஜுனனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் வரைபடத்தை சுருட்டியபடி “தங்களுக்கான அரசமுறை திருமுகம் மூத்தவரின் பெயரால் அளிக்கப்படும். அஸ்தினபுரியின் தூதராகவே செல்லுங்கள்” என்றாள்.
“ஆணை” என்று சொல்லி அவன் எழுந்துகொண்டான். அவள் எழுந்தபடி “துவாரகை அழகிய நகர் என்கிறார்கள். நானே செல்லவேண்டுமென எண்ணினேன். நீங்கள் செல்வது என் விழிகளை அனுப்புவதுபோல” என்றாள். “திரும்பி வருகையில் அந்நகரம் உங்கள் விழிகளில் இருக்கட்டும். அந்த விழிகளால் இந்திரப்பிரஸ்தத்தை பாருங்கள்…” திருஷ்டத்யும்னன் மீண்டும் தலைவணங்கினான். அந்தச் சொற்கள் ஒவ்வொன்றையும் அவள் உண்மையான உணர்ச்சியுடன்தான் சொன்னாள். அப்படியென்றால் அவள் சொல்ல விழைவது அதைத்தான். அந்தப்பெண் வந்தது தற்செயல். இல்லை, தற்செயலே அல்ல. அவள் கோட்டைக்கு வெளியே மடக்கப்பட்டு அழைத்துவரப்பட்டிருக்கிறாள். திரௌபதியின் நிழலில் அன்றி அவள் இனிமேல் வாழமுடியாது.
அவன் தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தான். அவனுக்காக இடைநாழியில் சயனன் நின்றிருந்தான். அவன் நடக்கையில் பின்னால் நடந்தபடி அவன் “அவளையும் அவள் கூட்டத்தையும் கங்கைசெல்லும் வழியில் பிடித்துவிட்டார்கள்” என்றான். “நீ வழிசொன்ன வகை அது” என்று எரிச்சலுடன் திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் அவர்கள் வணிகர்களாக பொதிவண்டியில் நகர்நீங்க ஒருங்குசெய்திருந்தேன். எளிதில் அது நிகழ்ந்துமிருக்கும். ஆனால் அவர்கள் குழுவிலேயே ஒருவன் இளவரசியின் ஒற்றர்களுடன் தொடர்பிலிருந்தான். அவன் அவர்கள் செல்லும் வழியை தெரிவித்துவிட்டான்.”
திருஷ்டத்யும்னன் “அவள் கொல்லப்படவில்லை என்பதே நிறைவளிக்கிறது” என்றான். “இளவரசி எளியவர்கள் மேல் கருணை கொண்டவர்” என்ற சயனன் “அவள் அங்கு உவகையுடன் இருப்பதாகவே தெரிகிறது… நான் இடைநாழியில் நின்றிருக்கையில் அப்பால் என்னை கடந்துசென்றாள். திரும்பவில்லை. ஆனால் என்னைப்பார்த்துவிட்டாள் என அவள் நடையால் உணர்ந்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நின்று “நான் அவளை பார்க்க விழைகிறேன்” என்றான். “அவளையா?” என்றான் சயனன். “ஆம், இதில் சூழ்ச்சியென ஏதும் தேவையில்லை. நேரடியாகவே சென்று அவளுக்குமேலே உள்ள தலைமைச்சேடியிடம் நான் அவளைப்பார்க்க விழைவதாக சொல். ஏன் என்று கேட்டால் நேற்று நான் அவளுடன் இரவாடினேன் என்றே சொல்.”
சயனன் ஒன்றும் சொல்லாமல் வந்தான். “சூழ்ச்சிகளுக்கு இங்கே பொருளே இல்லை. பெருஞ்சிலந்தி கட்டிவைத்திருக்கும் வலையில்தான் நாமனைவருமே இருக்கிறோம். எந்தச்சரடைத் தொட்டாலும் அது அறியும்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் தயங்கி “அரண்மனையை விட்டு அவள் வெளிவரமுடியுமென நான் எண்ணவில்லை. இளவரசியின் ஆணை தெளிவாக இருக்குமென்று தோன்றுகிறது. இங்கேயே சிறுகூடத்தில் தாங்கள் காத்திருக்கமுடியுமென்றால் நான் அவளை அழைத்துவருகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். சயனன் “அவளிடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் இளவரசி கேட்கிறார்கள் என்றே கொள்ளவேண்டும்… அதன்மூலம் அவளுக்கு தீங்கு நிகழலாகாது” என்றான்.
அரண்மனைச் செயலகனின் அறையருகே அவனுடைய சிறுகூடமிருந்தது. சயனன் சென்று அவனிடம் சொன்னதும் அவன் எழுந்து வணங்கி வெளியேறினான். திருஷ்டத்யும்னன் அங்கே பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கோத்துக்கொண்டான். சயனன் திரும்பும்போது என்ன செய்கிறோம் என்ற துணுக்குறல் ஏற்பட்டது. பகலில் நடனமங்கையை இளவரசர்கள் சந்திப்பதில்லை. அரண்மனை என்பது பல்லாயிரம் கண்களும் காதுகளும் கொண்டது. கண்களைமூடிக்கொண்டு வெளியே எழுந்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஓர் அரண்மனை எத்தனை மனிதர்களால் ஆனது. எங்கெங்கோ ஏதேதோ குரல்கள். ஆணைகள், அழைப்புகள், உரையாடல்கள். காலடியோசை, படைக்கலங்களின் ஓசை, பொருட்களின் ஓசை. அரண்மனை என்பதே அங்கு வாழும் அலுவலர்களுக்குரியது. அரசகுடியினர் மிகச்சிலரே. ஆனால் அங்கே அரசகுடியினரன்றி எவருமில்லை என்றே உளமயக்கு ஏற்படுகிறது. அத்தனை அலுவலர்களும் இணைந்து அவற்றின் சுவர்களாக கதவுகளாக தரையாக ஆகிவிட்டிருப்பதுபோல. இந்தப்பெண்ணை இப்போது ஏன் வரச்சொல்கிறேன்? அவளிடம் என்ன கேட்கப்போகிறேன்? அவன் நெஞ்சு படபடத்து கைகள் நடுங்கத்தொடங்கின. அவள் என்ன சொல்வாள்? ஒரு பெண்ணிடம் அத்தனை பெரிய படைக்கலத்தை அளிக்கலாமா என்ன?
கதவு திறந்து சயனன் மெல்ல வந்து நின்றான். விழிதூக்கிய அவனிடம் “அவள் வரமறுத்துவிட்டாள் இளவரசே” என்றான். முதற்சில கணங்களுக்கு அச்சொற்கள் பொருள்படவில்லை. “என்ன?” என்றான். “நான் சேடியர்தலைவி காரீஷியிடம் தாங்கள் அவளை உடனே பார்க்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சொன்னேன். அவள் சற்று வியப்புடன் அவளை அரண்மனைக்கு வெளியே அனுப்பவேண்டாம் என ஆணையிருப்பதாக சொன்னாள். இங்கேயே நீங்கள் பார்க்கவிருப்பதாக சொன்னதும் அழைத்துவரும்படி ஒரு சேடியை அனுப்பினாள். அவள் வந்து சுஃப்ரை வரமறுப்பதாக சொன்னாள். திகைப்புடன் காரீஷி என்னிடம் அவ்வாறு ஆணையை மறுப்பது சேடியரின் இயல்பல்ல என்று சொல்லி நான் விரும்பினால் அவளை இழுத்துவர ஆணையிடுவதாக சொன்னாள். அவளிடம் நானே பேசுகிறேன் என்று கோரினேன்.”
அவன் சொல்வதை கண்களால் கேட்டுக்கொண்டிருந்தான். “அவள் நான் சென்றபோது எழுந்து தலைகுனிந்து சுவருடன் சாய்ந்து நின்றிருந்தாள். உன்னை இளவரசர் காணவிரும்புகிறார், உன்னிடம் ஏதோ வினவ எண்ணம் கொண்டிருக்கிறார் என்றேன். என் விழிகளை ஏறிட்டு நோக்கி அவள் தங்களை பாக்க விரும்பவில்லை என்றாள்” என்றான் சயனன். ”நான் மீண்டும் கேட்கமுயன்றேன். அவள் அதையே இன்னொருமுறை சொன்னாள்.”
திருஷ்டத்யும்னன் அவனை பொருள்திரளா நோக்குடன் சற்று நேரம் பார்த்துவிட்டு “அவள் அஞ்சுகிறாளா?” என்றான். சயனன் “அவ்வண்ணம்தான் இருக்குமென நினைக்கிறேன். அவளுக்கு ஆணைகள் இருக்கலாம்” என்றான். அவன் விழிகளை விலக்கி சிலகணங்கள் இருந்தபின் திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றான். “அவள் அஞ்சவில்லை என உனக்குத்தெரியும். அவள் உண்மையில் என்ன சொன்னாள்?” என்றான். “இளவரசே…” என்றான் சயனன். “நீ என்னிடம் மறைப்பது என்ன? அவள் என்ன சொன்னாள்?” சயனன் “ஏன் வரமறுக்கிறாய் என்று கேட்டேன்” என்றான். “உம்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மெல்லிய குரலில் “அவள் விழிதாழ்த்தி ஏன் வரமறுக்கிறாள் என நீங்கள் அறிவீர்கள் என்றாள்.” கடும் சினத்துடன் பற்களைக் கடித்தபடி “ம்?” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மேலே பேசவில்லை.
அவளை இழுத்துவந்து தன் காலடியில் போடவேண்டும் என திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவன் ஆணையிடப்போவதை எதிர்பார்ப்பதுபோல சயனன் விழிநிலைத்து நோக்கி நின்றான். அதைத்தான் எந்த ஆண்மகனும் செய்யவேண்டும். தன் உள்ளத்தின் முழு விசையாலும் அச்சொற்களை அவன் திரட்டிக்கொண்டான். அவளை ஆடையில்லாமல் இழுத்துவரும்படி ஆணையிட்டான். அடுத்தகணமே அவ்வெண்ணம் சொல்லாக மாறவில்லை என்று உணர்ந்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டு “அவள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாள்?” என்றான்.
அந்த வினாவின் பொருளின்மையை உணர்ந்து “இங்கு அவளுக்குரிய இடமென்ன?” என்றான். “இளவரசிக்கு அணுக்கச்சேடி. நான் சென்றபோது அணியகத்தில் நறுஞ்சுண்ணக்கூட்டு செய்துகொண்டிருந்தாள்.” மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் திருஷ்டத்யும்னன் ”நான் அறிவேன் என்றாளா?” என்றான். “ஆம், இளவரசே!” திருஷ்டத்யும்னன் கிட்டித்த பற்களுடன் “பரத்தை” என்றான். சயனன் “அதன்பின் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அழத்தொடங்கினாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “அழுதாளா?” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அழுதாளா?” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான். “ஆம் இளவரசே, நான் இறுதியாகப்பார்க்கையில் அவள் தோள்கள் உலுக்கி அதிர்வதைத்தான் கண்டேன்.”
தசைநார்கள் ஒவ்வொன்றாக முறுக்கிழக்க திருஷ்டத்யும்னன் பீடத்தில் உடல் தளர்ந்து பட்டுச்சால்வைபோல படிந்தான். வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டான். இளங்காற்று சாளரம் வழியாக வந்து அவன் வியர்த்த உடலை குளிரச்செய்தது. இரும்பை நாவால் தொட்டதுபோல ஓர் இனிமையை அவன் உடலெங்கும் உணர்ந்தான். கண்கள் சொக்கி துயில்வந்து மூடுவதுபோலிருந்தது. விரல்களை கைகளை நாவை சித்தத்தை அசைக்கமுடியாதென்று தோன்றியது. எத்தனை காலம் கடந்துசென்றதென்று அவன் அறியவில்லை. பின் நிமிர்ந்து சயனனை நோக்கி “நீ மீண்டும் சென்று அவளை பார்” என்றான். “ஆணை” என்றான் சயனன். தன் கையிலிருந்த முத்திரைமோதிரத்தை கழற்றி “இதை நான் அவளுக்காக அளித்தேன் என்று சொல்.”
சயனன் சற்று திகைத்து “இளவரசே” என்றான். “இது அவளுக்கு என் கொடை.” சயனன் “இளவரசே, ஒரு பரத்தைக்கு இதை அளிப்பது என்றால்…” என்றான். “அவளுக்குரியது அது” என்று அவன் எழுந்துகொண்டான். “அளித்துவிட்டு வா. நான் இன்றுமாலையே கிளம்புகிறேன். எனக்குரிய பயணப்பையை சித்தமாக்கு. அமைச்சரிடமிருந்து ஓலையையும் பெற்றுவா!” என்றான். படியிறங்கி அரண்மனையின் பெருமுற்றம் நோக்கி சென்றபோது தன் முகம் மலர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான்.