அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம். எப்படி இருக்கிறீர்கள் ? தாங்கள் எழுதிய விஷ்ணுபுரம் நாவல் எனக்கு பெரும் சவாலை விட்டுக் கொண்டிருந்தது. அதற்கு நண்பர்கள் அந்நாவல் சார்ந்து புரியாதது என சொன்னதே காரணம். அப்படி புரியாமல் போவதற்கு என்ன இருக்கிறது என்ற சின்னதான கர்வத்துடன் வாசிக்க ஆரம்பித்தேன். நாவலின் சாரம் என்னை சிறுமையாக்கி பிரபஞ்சத்தின் உட்பொருளாக்கியது. அந்நாவல் கொடுத்த அனுபவம் என்னுள்ளேயே அசைபோடப்பட்டுக் கொண்டிருக்கிறது. முழுதும் வெளிக்காட்ட இயலவில்லை. அதே நேரம் எழுதவும் ஆசைப்படுகிறேன். வாசிக்கும் நூல்கள் சார்ந்து எழுதுவதை பழக்கமாக கொண்டிருந்தாலும் இந்நாவல் நிறைய படிமங்களை கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விளக்கி சார்ந்தோ எதிர்த்தோ விமர்சனம் செய்ய வேண்டுமெனில் அதற்கு விஷ்ணுபுரத்தைக் காட்டிலும் மும்மடங்கு அளவிலான வார்த்தைகளும் அறிவும் ஞானமும் தேவைப்படுகிறது. என்வசம் அது இல்லை. நிலையற்ற நிலையிலேயே அவசரக்தியிலேயே காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனிடையே பெருத்த அமைதியை விஷ்ணுபுரத்தின் ஊடாக உணர்ந்தேன். பேரலைகளை எழுப்பும் நூல் எனக்கு அமைதியை அளித்தது மர்மமாக இருக்கிறது. அந்த மர்ம அனுபவத்தின் சிறு பகுதியை கட்டுரையாக்கி என்னுடைய இணையதளமான கிமு பக்கங்களில் எழுதியிருக்கிறேன். தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என் புரிதலில் பிழை இருப்பின் கூறுங்கள். நிச்சயம் திருத்திக் கொள்கிறேன். விஷ்ணுபுரம் மாபெரும் கடல். அங்கே என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியாது. பார்ப்பவற்றிலும் ஆழமாக உணர முடியாது. இரண்டும் என்வசம் சந்தேகத்தின் பிடியிலேயே இருக்கிறது. இத்துடன் கடிதத்தை முடித்து கட்டுரையை இணைக்கிறேன்.
நன்றி.
அன்புடன்,
கிருஷ்ணமூர்த்தி