மலம் – சிறுகதை

தபோவனம் என்று கூறிய உடனே குளிர்ந்த சோலை, அதன் நடுவே கீற்றுக் கொட்டகை என்றெல்லாம் கற்பனை வேண்டாம். இது மூன்று பெரிய கான்கிரிட் கட்டடங்கள் அடங்கியது. சுற்றிலும் மரங்கள் இல்லை. எனவே ஒரு கிலோமீட்டர் தள்ளி பொதுச்சாலையில் வரும்போதே பெயர்ப்பலகையும் மஞ்சள் நிற டிஸ்டெம்பர் பூசப்பட்ட சுற்றுச்சுவரும் கண்ணில் அடிக்கும் பெரிய பொட்டல். முள் மரங்கள் வளர விறகு வெட்டுபவர்கள் அனுமதிப்பதில்லை. நிலம் சரிந்து சென்று ஒரு பள்ளத்தை அடைந்து பின் மேலேறி கரிய உருளைப் பாறைகள் மண்டிய பெரிய குன்றுகளின் வரிசையைப்போய் தொடுகிறது. குன்றுகளிலும் முட்புதர்கள் மட்டும்தான். உச்சியில் மட்டும் இரண்டு மரங்கள் தன்னந்தனியாக வானத்தை வருடியபடி நிற்கும். உயரத்தில் மலை விளிம்பில் ஒட்டியபடி சில கரும்பாறைகள் சற்று உந்திவிட்டால் கடகடவென்று உருண்டு தபோவனத்தின் மீது விழுந்து நசுக்கிவிடும்போல தோன்றும். தபோவனத்தை நிறுவிய அபேதானந்த சரஸ்வதி சுவாமிகள் பதினாறு வயதுப் பையனாக மலைமீது வந்து, பத்துவருடம் அங்கேயே வாழ்ந்திருக்கிறார். ஆடு மேய்க்கிற பயல்கள் அவ்வப்போது போடுகிற பிச்சைதான் உணவு. பிறகு ஒரு பிரபலமான வடக்கத்திப் பத்திரிக்கையாளர் சுவாமிகளைக் கண்டு இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் கட்டுரை ஒன்று எழுதினார். ஒரே மாதத்தில் சுவாமிகளுக்கு ஏகப்பட்ட மார்வாடி சீடர்கள் உருவாகிவிட்டார்கள். அவர்கள் கட்டித் தந்ததுதான் இந்த தபோவனம். சுவாமிகளின் அணுக்கச் சீடராக நான் சேர்ந்தது இருபது வருடம் முன்பு. காஷாயம் கட்டி பதின்மூன்று வருடம் ஆகிறது. என்னைத் தவிர சுவாமிகளின் பிரதம சீடரான ஜோதிர்மயானந்தசாமி என்ற மௌனசாமியும் ஆசிரமத்தில் வசிக்கிறார். தோட்ட வேலைக்கும் சமையலுக்கும் ஆட்கள் வந்து போவார்கள். வாட்ச்மேன் கண்ணுசாமிக்கோனார் ஆசிரம முகப்பில் தன் கூண்டில் இரவு முழுக்க இருப்பார்.

ஆக, ஆசிரமத்தில் கனமான நிசப்தமே கவிழ்ந்திருந்தது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒன்று பொதுச்சாலை அல்லது குன்று வரிசை மட்டும்தான் தெரியும். பொதுச்சாலையில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. யாராவது எங்கள் குருநாதரைப் பார்க்க வந்தால்தான். அதற்கும் சீசன் உண்டு. பெரும்பாலும் மார்வாடிகள்தான் வருவார்கள். என்ன காரணமோ நவம்பர் முதல் ஜனவரி வரைதான் அவர்களுடைய கும்பல். மற்ற சமயங்களில் தபோவனத்துக் கொடியில் காயும் காவிக் கோமனம்போல சாலை செம்மண் வெந்து நீண்டு கிடக்கும். ஆடு மேய்க்கிற பையன்கள் தபோவனத்துப் பக்கமாக வருவதில்லை. இங்கே மனித மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்று கீழே சேரிப்பக்கமாக வதந்தி உண்டு என்று கோனார் சொல்லியிருக்கிறார். சாலையைவிடக் குன்று வரிசை சற்று வெறுமை குறைந்தது. மேக நிழல் ஒரு கறுப்பு சல்லாத் துணிபோல குன்றுகள் மீது நகர்ந்து போவது பார்க்க நன்றாகவே இருக்கும். பறவைக் கூட்டங்கள் சில சாயங்காலங்களில் புள்ளிகளாகத் தெரிந்து விரிந்தபடியே அணுகுவதும் எனக்குப் பிடிக்கும். ஆனால் தலைக்கு மேல் கருமையாக உருண்டு நிற்கும் பாறைகள்தான் இம்சை. கொஞ்ச நேரத்தில் அவை அசைவதுபோலவும் கடகடவென்று சத்தம் கேட்பதுபோலவும் தோன்றிவிடும். உடனே ஓடிவந்து இந்தப் பக்க ஜன்னல் வழியாக சாலையைப் பார்க்க ஆரம்பிப்பேன். ஒரு சாலையை வெகு நேரம் உற்றுப் பாருங்கள். எதுவோ அல்லது யாரோ வரப்போவதுபோலத் தோன்றிவிடும். அதற்கான முஸ்தீபுகள் சாலையில் நடந்து கொண்டிருப்பதுபோலத் தோன்றும். தூசி அடங்கி மௌனம் நிலவும். சருகுகள் மெல்ல அடங்கி ஒதுங்கும். அந்தச் சாலையே அவ்வருகைக்காகவே அமைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றும். சில சமயம் ஏதாவது வழிதவறிய எருமை தேமே என்று தொப்பை குலுங்க நடந்து வரும். அதைப் பார்க்கப் பார்க்க அதற்காகவே அந்தப் பொழுது ஏற்பட்டிருப்பதாகவும், அது அதற்கும் தெரியும் என்றும் தோன்றும். அக்குளம்புகள் நம் உடலில் அழுந்துவதுபோலப் புழுதியில் அழுந்தும். அதன் முன்கால்களுக்குக் கீழே சதைத் தொங்கல் அசைவதும் கொம்புகள் கழுத்தில் உரசாமல் அது தலை திருப்பும் லாகவமும் எருமைதான் எவ்வளவு அழகான பிராணி என்று எண்ணுவேன். அந்தப் பாதைகூட அதன் தகுதிக்கு ஏற்றதுதான். எத்தனை கம்பீரம். திடீரென்று ஓர் எண்ணம் வரும். அந்த எருமை வெறும் பிராணிதானா? அதன்மீது எவரோ, கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்திருக்கவில்லை? ஆமாம், அதன் முதுகு அழுந்தியிருப்பது போலிருக்கிறது. ஆம் அதுதான். படாரென்று கதவை மூடி விடுவேன். கடவுளே! கடவுள் இருக்கிறாரா? ஆனால் வேறு வழி இல்லை. நேராக ஆசிரமம் நோக்கி வருகிறது அது. குளம்படிச் சத்தம் யாருக்காக? குருமகாராஜ்தான் முதிர்ந்தவர். அவருக்காகத்தான். ஆனால் நான்தானே முதலில் பார்த்தேன். டக் டக் டக். குளம்படிச் சத்தம். இல்லை கதவைத் தட்டுகிறார்கள் யாரோ. திறக்கமாட்டேன். வேண்டாம். `சாமி! சாமி’ இது சுப்புணி குரலல்லவா? `நாந்தான் சாமி சுப்புணி. போஜன வேளை. பெரிய சாமிக்கு அமுது படைச்சாச்சு.’ ஓடிப்போய்த் திறந்தால் சுப்புணி வணங்குகிறான். `சாமி தியானத்தில் இருந்ததோ. ரொம்ப நேரமாகத் தட்டறேன்.’ மூச்சு வாங்குவதை அவன் கவனிக்கவில்லை.

அன்றாடச் செயல்களில் நம்மை மூழ்கடித்து அலுப்பை அகற்றுவதுகூட ஆசிரமத்தில் சாத்தியமில்லை. எல்லாமே அங்கு கன கச்சிதம். அறைகள் அளவெடுத்தாற்போல சமசதுரமானவை. மாசு மறுவற்ற வெண்ணிறச் சுவர்கள். மாதம் ஒருமுறை வெள்ளை பூசப்படும். தினம் மூன்றுமுறை கூட்டுவார்கள். இருமுறை கழுவி விடுவார்கள். தரையில் பாலாடைபோல மொசைக், பயங்கரமான நிசப்தம். மூன்றாம் கட்டில் சுப்புணி டபராவை வைத்தால் புற மண்டையில் சத்தம் முட்டும். அவனோ பூனை சாதிவ்.வருடத்துக்கு ஓ¡ரிருமுறைதான் ஏதாவது பாத்திரம் கை தவறி விழும். குருமகாராஜ் சுத்தத்தின்மீது தணியாத காதல் கொண்டவர். தினம் நகம் வெட்டுவார். சிறிய வெள்ளி நகம் வெட்டியால் மெதுவாக இருபது நகங்களையும் வெட்டி முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். மூன்று வகையான பிரஷ்களால் மிகக் கவனமாக பல் தேய்ப்பார். மலை மீது பேனும் உண்ணியும் அடர்ந்து சடைமுடிப் புதராக அவர் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது அவருடைய பூர்வ ஜென்மம் என்றுபடும். இப்போது அந்தப் பார்வைகூட இல்லை. கண்களில் ஒரு திரை விழுந்துவிட்டது. தொப்பை போட்டுவிட்டது. பளபளவென்று தினசரி இருவேளை தலையையும் முகத்தையும் மழித்துக்கொள்வார். ஏழெட்டு முறை விரிவாகக் குளிப்பார். காலையில் பயத்தமாவு அரைப்பும் மதியம் சந்தன சோப்பும் மாலையில் ஈஞ்சைப் பட்டையும் தேய்ப்பார். தினம் நான்குமுறை ஆடை மாற்றுவார். இகலோக மலம் அவர்மீது ஒட்டாமலிருக்க அவர் அப்படிச் செய்வதாகக் கூறிப் பரப்பியவன் நான்தான். அந்தப் பழக்கம் என்னையும் தொற்றி நானும் சுத்தத்தில் வெறி கொண்டவனானேன். ஆனால் குருமகாராஜின் நாள் முழுக்க இதிலேயே சுவாரசியமாகக் கழிந்துவிடும். எனக்கு எல்லாம் அன்றாட வழக்கமாக மாறி கவனத்தைவிட்டே உதிருந்துவிட்டன. ஜோதி சாமியும் சுத்தத்தின் எல்லைதான். ஆனால் அதற்கு வேறு ஓர் உலகம் உண்டு. சதா தியானத்தில் இருக்கும். தியானத்திற்கு அதற்கென்று தனிமுறை உண்டு. ஹெட்போன் ஒன்றைக் காதில் மாட்டி அதைக் கடிகாரத்துடன் இணைத்து கண்ணை மூடிக்கொள்ளும். டிக்டிக்டிக் என்று பெருகிவரும் அகண்ட காலப்பெரும் நதியில் கரைந்து சென்றுவிடும். அது இருப்பது ஒரு மேஜையின் இருப்புக்கு நிகர். தனிமை என் தலைமீது காரிய பாறாங்கல் மாதிரி உட்கார்ந்திருந்தது.

ஒருநாள் காலையில் குருமகாராஜ் பூஜைகூடச் செய்யாமல் பாய்ந்து வந்து என் அறைக் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த நான் வியர்த்துப் போய்விட்டேன். அந்தக் கோலத்தில் அவரை நான் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கவில்லை. கௌபீனம் கூட நெகிழ்ந்திருந்தது. விளக்கைப் போட்டேன். அவர் மூச்சிரைப்பது தெரிந்தது. உட்காரச் சொன்னேன். இல்லை `அபச்சாரம்’ நடந்துவிட்டது, மகாபாவம் நடந்துவிட்டது என்றார். என்ன என்றேன். அதை எப்படிச் சொல்வேன் என்றதும் அவர் உடல் குலுங்கியது. வாய் கோணல் ஆகியது. குமட்டல் வந்தது. என்ன சொல்லுங்கள் என்று வெகுநேரம் வற்புறுத்தினேன். மெதுவாகப் பேச ஆரம்பித்தார். அந்த ஆசிரமமே அசுத்தமாகிவிட்டது. பாபம் நடந்துவிட்டது என்றார். பதறித்தான் போய்விட்டேன். மெல்ல சமநிலைப்பட்டு என்ன என்று கேட்டேன். குருமகாராஜ் விடிகாலையில் ஒரு கனவு கண்டிருக்கிறார். பேசின் நிறைந்து மலம் கிடக்கும் ஒரு கக்கூஸ். ஆசிரமத்துக் கக்கூஸ்தான். நாற்றம் தாளாமல் அவர் கதவைத் திறக்கிறாராம். நீலமும் கறுப்பும் கலந்த பளபளப்புடன் மணிக்கட்டன் ஈக்கள் விம்ம் என்று எழுந்து பறந்து சுழல்கின்றன. நாள்பட்ட, காய்ந்த, அழுகிய, புதிய மலக்கலவை … குருமகாராஜ் `ஓவ்’ என்று உடம்பை உலுக்கிக்கொண்டார்.

`வாருங்கள் எதற்கும் பார்த்துவிடுவோம்’ என்று கூட்டிப் போனேன் என் அறையின் கக்கூஸ் முதலில். வாசலை அடைந்ததும், குரு மகாராஜ் முகம் வெளிற `நீயே பார்’ என்று பின்தங்கி விட்டார். எனக்கும் சற்று நடுக்கம்தான். மெதுவாகத் திறந்தேன். முட்டை ஓட்டின் உட்புறம்போல அப்படி மாசின்றி இருந்தது. திறந்து காண்பித்தேன். அவர் மெல்ல நெருங்கிப் பார்த்தார். பிறகு `ஒருவேளை என் அறையாக இருக்குமோ?’ என்றார். `வாருங்கள் அதையும் பார்த்துவிடுவோம்’ என்றேன். ஆசிரம வளைப்புக்குள் எல்லா கக்கூஸ் பீங்கான்களும் அப்போதுதான் கடையில் வாங்கி வந்தவை போலத்தான் இருந்தன. குருமகாராஜ் அப்படியே உட்கார்ந்துவிட்டார். பிறகு `டேய் எனக்கு மனசு கேட்கவில்லை. அச்சானியமாக இருக்கிறது. எதற்கும் எல்லாவற்றையும் கழுவிவிடலாம்’ என்றார். `அதற்கென்ன’ என்றேன். வேலையாட்கள் ஆசிட் கொட்டி தேய்த்துக் கழுவினார்கள். குருமகாராஜ் ஒவ்வொரு கட்டத்திலும் கூட நின்று கவனித்துக் கொண்டார். ஒருவழியாக பத்துமணிக்கு வேலை முடிந்து அதன் பிறகு குளித்து பூஜைகளை முடித்துக் கொண்டுதான் சாப்பிட்டார். ஆசிரமத்தில் அன்று காலை ஆகாரம் இல்லை. குருமகாராஜின் முகம் மலர்ந்திருந்தது. `டேய் இப்போதுதான் மனம் திருப்தியாக இருக்கிறது. மனிதனுக்கு நோய் எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறாய்? எல்லாம் கக்கூஸிலிருந்துதான். கக்கூஸ் சுத்தமாக இருந்தால் வீடே சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம்’ என்றார். நான் அதை ஒரு பொன்மொழியாகவே கருதிக் கொண்டேன்.

பிறகு நானும் குருமகராஜூம் கக்கூஸ் பராமாரிப்பில் நேரடியாக ஆர்வம் காடத் தலைப்பட்டோம். தினம் காலையில் அவர் எழுந்து என் அறைக்கு வருவார். இருவருமாக எழுந்து கக்கூஸ்களைப் பரிசோதிக்க ஆரம்பிப்போம். அதைப் பற்றி விவாதித்துத் திட்டங்கள் போடுவோம். ஊழியர்களுக்கு குருமகராஜ் ஆணைகள் தருவார். பிறகுதான் குளித்துச் சாப்பிடுவோம். எங்கள் அன்றாட வாழ்க்கை அதற்கேற்ப மாறியது. எனக்கு உற்சாகமாக இருந்தது. ஜன்னல்களை மறந்து நானும் பேசின்களைப் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். அவற்றின் சாவித்துளை வடிவம். சிலவற்றுக்கு அரசிலை வடிவம், சிலவற்றுக்கு கோபித்திலக வடிவம். அவற்றின் விளிம்பு மடிப்புகளில் அழுக்கை சுத்தம் செய்ய நான் விசேஷமான ஒரு கருவியை உருவாக்கினேன். பென்சன் அன்ட் பென்சன், கிளே இந்தியா முதலிய நிறுவனங்களுக்குக் கடிதங்கள் எழுதி அவற்றின் தயாரிப்புகளின் விசேஷங்களை அறிந்து கொண்டேன். குருமகராஜூடன் அவற்றை விவாதித்தேன். நானும் அவரும் விடிகாலையில் இரகசியமாக நாங்களே கக்கூஸ்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தோம். அது வேலையாட்களுக்குத் தெரிந்தபோது அவர்கள் குருநாதரை தவறாகப் புரிந்து கொள்ளாதிருக்கும் பொருட்டு எளிய வாழ்வின் அருமை, தன் செயல்களைத் தானே செய்தல், சுத்தம் செய்தல், சுத்தம் மிகு வாழ்வின் அவசியம் ஆகியவை பற்றி நான் வி¡ரிவுரைகள் நிகழ்த்த வேண்டியிருந்தது. ஆனால் பணியாட்கள் நாங்கள் எது செய்தாலும் வியப்படையாதவர்களாக இருந்தார்கள்.

கக்கூஸ் கழுவுதலின் நுட்பங்கள் எனக்கும் குருநாதருக்கும் படிந்து வந்தன. கலை நுட்பத்துடனும், லாகவமாகவும் நாங்கள் பணியாற்றுவோம். முதலில் சிறிது நீர் ஊற்றி ஊற வைப்போம். பிறகு சீராக ஆசிட் வீசி சிறு பிரஷ்ஷில் அதப் பூசி விடுவோம். போதிய நேரம் ஊறிய பிறகு இன்னொரு முறை ஆசிட். டிடர்ஜென்ட் பவுடரைத் தூவி பிரஷ்ஷால் நுரைக்க நுரைக்கத் தேய்த்து நீர்விட்டுக் கழுவி விடுவோம். பின்பு ·பினாயில். அதையும் கழுவிய பிறகு குருநாதர் விரலால் பேசினை வருடுவார். ரீக் ஒலி அவர் நரம்புகளை அதிர வைப்பது தெரியும். `மல்லிகைப்பூ போல இருக்கிறது இல்லையா?’ என்று மகிழ்வுடனும் கிளர்ச்சியுடனும் கேட்பார். நானும் வெண்பட்டு, கொக்கிறகு, உட்பாளை முதலிய உவமைகளைக் கூறி மகிழ்வேன். பிறகு யுடிகொலோன் ஸ்பிரே செய்வோம். கழுவிய பிறகு ஈரம் மினுங்கத் தெரியும் பேசின் உண்மையிலேயே மனத்தை குதூகலிக்கச் செய்வதுதான். அதைச் சதுரமாகவோ செவ்வகமாகவோ அமைக்காமல் இப்படிக் குழைவான வளைவுகளுடன் அமைத்தவந்தான் பூமியிலேயே பெரிய சிற்பி என்று நான் குருநாதாரிடம் கூறினேன். `பின்னே?’ என்று அவர் கூறி மகிழ்ந்தார். அந்த வெண்ணிறம் கண்களைக் குத்துவது போலிருப்பதாக ஒருமுறை குருநாதாரிடம் கூறினேன். ஒருவிதமான பதற்றம் அதைப் பார்த்தபோது ஏற்படுவதாகச் சொன்னேன். அவரும் அதை ஒப்புக்கொண்டார். நிரம்ப யோசித்து பிறகு வழி கண்டோம். வாசனைத் தைலம் தெளித்த பிறகு பேசின் ஓரமாக நான் கறுப்பு மையால் சிறிதாக ஒரு திருஷ்டிப் பொட்டு போடுவேன். குருநாதர் இந்த யோசனைக்காக என்னை முதுகில் அறைந்து பாராட்டினார். இதன்பிறகு பேசின்கள் எங்களுக்கு இன்னமும் நெருக்கமுள்ளவையாக மாறின.

எங்களுடைய ரகசிய சந்தோஷத்தை ஏதோ மூன்றாவது கண் கூர்ந்து கவனித்திருந்தது போலும். ஒருநாள் குருநாதர் அலறிப் புடைத்தபடி வந்து என்னை எழுப்பினார். அவருடைய அறையருகே உள்ள கக்கூஸில் எவரோ மலம் கழித்துவிட்டு நீர் விடாமல் போய்விட்டிருந்தார்கள். குருநாதர் வாந்தி எடுத்தார். நான் அவருடைய வியர்த்த உடம்பை அணைத்து சாந்தப்படுத்தினேன். இருவரும் நீரை அள்ளி வீசி அதைச் சுத்தம் செய்தோம். முடிப்பதற்கு மதியம் ஆகிவிட்டது. குருநாதர் என்னிடம் `யாரிடம் சொல்லாதே கவனித்து வா. இதைச் செய்பவன் யார் என்று கவனித்துப் பிடித்துவிட வேண்டும்’ என்றார்.  வேலையாட்கள் இரவு தங்குவதில்லை. கண்ணுசாமிக் கோனார் வாசல் தாண்டி வரமாட்டார். `அப்படியானால்?’ என்று குருமகாராஜ் புருவத்தைச் சுருக்கினார். நான் தலைகுனிந்தேன். `சேச்சே ஜோதி நல்லவன். இந்த மாதிரி குயுக்தியெல்லாம் அவனுக்கு வராது’ என்றார். `பார்ப்போம்’ என்று நான் சொன்னேன். அன்றிரவு நான் தூங்கவேயில்லை. அடிக்கடி எழுந்து உலவி வந்தேன். எவரும் நடமாடுவதாகத் தொரியவில்லை. நள்ளிரவிலும் ஜோதிர்மயானந்த சாமி காலத்துடன் கரைந்திருந்தது. விடியற்காலையில் குருமகராஜ் எழுந்து ரகசியமாக ஒவ்வொரு கக்கூஸாகப் பரிசோதனை செய்வதைப் பார்த்தேன். என் அறைக்கு அவர் வரும் முன் ஓடிப்போய் போர்த்திப் படுத்துக் கொண்டேன். படுக்கையில் நான் இல்லை என்பதை அவர் கண்டால் என்ன நினைப்பார்? குருமகாராஜ் என் மீது டார்ச் அடித்துப் பார்த்தார். என் கக்கூஸையும் நன்கு பரிசோதனை செய்தார். பின்பு போய்ப் படுத்துக் கொண்டார். உடனே நான் எழுந்துபோய்க் கக்கூஸ்களையெல்லாம் பாரிசோதனை செய்தேன்.

அன்று காலை ஏதுமில்லை. ஆனால் ஒரு வாரம் கழித்து ஜோதி சாமியின் கக்கூஸில் மலம் கிடந்தது. நானும் குருநாதரும் அதைப் பார்த்ததும் அதிர்ச்சியுடன் சற்று ஆறுதலும் அடைந்தோம். ஒரு வாரமாக சாரியாகத் தூங்காமல் நான் பித்து நிலையில் இருந்தேன். குருநாதாரின் கண்களும் குழிவிழுந்திருந்தன. காலையில் அதை குருநாதருக்கு நான் காட்டியதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சுவிட்டோம். பிறகு பரபரவென்று செயலில் இறங்கினோம். அன்று பிற்பகலில் நான் கட்டை போலத் தூங்கினேன். மாலை தேனீரின் போது குருமகாராஜ் என்னிடம் `நாம் ஜோதியை சந்தேகிக்க வேண்டியதுதான்’ என்றார். `அவனை ஏதோ மரை கழண்ட ஆசாமி என்று எண்ணாதே. அவ்வளவும் வேஷம். நான் கக்கூஸ் கழுவிக்கொண்டிருந்த போதுகூட அவன் வந்து இரண்டுமுறை பார்த்துவிட்டுப் போனான்’ என்று கூறி தலையை ஆட்டினார். `அவர்தான் இரவில் வெளியே வருவதே இல்லையே’ என்றேன். `நாம் ஐந்து நிமிடம் கண்ணயர்ந்தால் போதும், ஜோதி அவன் வேலையைக் காட்டி விடுவான்’ என்றார் குருநாதர். `அவரை என்னதான் செய்வது?’ என்றேன். `கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும். பிடித்து நம் ஆசிரமத்தில் உள்ள கக்கூஸ் பேசின்களை முத்தமிடச் சொல்ல வேண்டும்’ என்றார். அவருக்குச் சிரிப்பு பீறிட்டு வந்தது. முகம் சிவந்து விட்டது. `அப்படித்தான் செய்யவேண்டும். அந்த சோனிப்பயல் குனிந்து மண்டியிட்டு முத்தமிடும்போது `ஹெ ஹெ ஹெ’ நானும் உரக்கச் சிரித்தேன். இருவரும் பரம ஜாக்கிரதையாக இருப்பது என்று முடிவு செய்தோம்.

அடுத்து வந்த இரவுகளில் நானும் குருநாதரும் மாறி மாறிக் காவல் காத்தோம். குற்றவாளி பிடிபடவில்லை. குருநாதர் முற்றிலுமாகத்த் தூக்கத்தை இழந்துவிட்டார். அடுத்தபடியாக என் கக்க்கூஸிலும் விருந்தினர் கக்கூஸிலும் பிறகு மீண்டும் ஜோதிசாமியின் கக்கூஸிலும் மலம் காணப்பட்டது. குருநாதர் பகலிலும் ரோந்து சுற்ற ஆரம்பித்தார். அவர் உடம்பு மஞ்சள் நிறமாக மாற ஆரம்பித்தது. கண்களுக்குக் கீழே பைகள் தொங்க ஆரம்பித்தன. தனக்குத் தானே பேசினார். சிரித்துக் கொண்டார். ஏழெட்டு நாள் கழித்து ஒரு கக்கூஸில் தடுக்கி விழுந்து பின் மண்டையில் பலமான அடிபட்டுவிட்டது. விடிகாலையில் ரோந்துபோன நான் கோணலாக விழுந்து கிடந்த குருநாதரைத் தூக்கி உட்கார வைத்தேன். கண்கள் செருகிவிட்டிருந்தன. மூச்சுப் பேச்சில்லை. ஆளைக்கூட்டி தூக்கி வந்து படுக்க வைத்தேன். ஐந்து நாள் படுத்த படுக்கை. அரை நினைவில் அவர் மலம் மலம் என்று புலம்பியதை நான் மக்களுக்கு விளக்கினேன். `முற்றும் துறந்த ஞானிக்குக்கூட மலமாச்சாரியங்களை முழுக்க வேரறுத்து வாழ்வின் முக்தியை அடைவது சிரமம் எனும்போது சாமானியர்களான, நம் கதி என்ன? நமக்கு பரமன் திருவடியை சரணடைவது தவிர வேறு வழியே இல்லை.’ பக்த கோடிகள் குவிந்தனர். இந்தி நாமாவளி முழங்க குருமகாராஜ் முக்தி அடைந்தார். அவருடைய சமாதி ஆசிரம வளைப்புக்குள்ளேயே சிறப்புற அமைக்கப்பட்டது – மார்வாடி பாணியில்தான்.

இதெல்லாம் ஒரு வருடம் முன்பத்திய கதை. இப்போது இவ்வளவையும் வாரிசையாகக் கூறி வருவதற்குக் காரணம் இதன் பிறகு நடந்தவை என் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றிக் கூறுவதற்காகத்தான். குருமகராஜ் சமாதியான ஒரு வாரத்திற்குள் என் நடவடிக்கைகள் ஆசிரமத்தில் பெரி பிரச்சனைகளை உண்டு பண்ணின. முதலில் நான் இரவெல்லாம் எழுந்து நடமாடியதும் கக்கூஸ்களைப் பரிசோதிப்பதும் சிலவற்றில் இரகசியமாக மலம் கழித்துச் செல்வதும் கவனிக்கப்பட்டது. பிடிபட்ட பிறகு என் அறையைத் தாழிட்டுக் கொண்டு உள்ளே இருக்கும் கக்கூஸிலேயே மலம் கழித்தேன். அதைப் பிறரிடமிருந்து ஒளிக்க எப்போதும் கதவைத் தாழிட்டே வைத்தேன். நாலைந்து நாள் கழித்து நாற்றம் பரவியபோது அவர்கள் கதவை உடைத்து உள்ளே வந்தார்கள். நான் அவர்களை எதிர்த்தேன். காரணம் நான் அப்போது மலம் கழித்துக் கொண்டிருந்தேன். மிக அந்தரங்கமாகவும் ரசித்தும் அதைச் செய்து கொண்டிருந்தேன். அந்த அத்துமீறல் என்னைக் கொதிப்படைய வைத்தது. ஒருவனை அடித்து ரத்த காயம் செய்துவிட்டேன். அன்றுதான் என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். இது ஒரு மனநலவிடுதி என்று பின்பு அறிந்தேன். டாக்டர்கள் என்னை நோயாளியாகக் கருதவில்லை என்பது என்னை ஆறுதல்படுத்தியது. என்னை ஒரு ஞானமார்க்கியாக வணங்கினார்கள். எனவே நான் அவர்களிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.

முதல்நாள் மலம் கழித்தது என் குருநாதர்தான் என்ற என் ஊகத்தை டாக்டர்களும் ஒப்புக்கொண்டனர். டாக்டர் சாமிநாதன் இதுபற்றி சித்தாந்த ரீதியாக என்னிடம் மணிக்கணக்காக விவாதம் செய்தார். சுத்தப்படுத்தும் செயல் ஓர் எல்லையை அடைந்ததும் அதன் எதிர்மறைத் தன்மையை இழந்துவிடுகிறது. அதாவது இதை நீங்கள் சரியாகப் பு¡ரிந்துகொள்ள முடியுமோ என்னவோ சுத்தப்படுத்துவது என்பது அழுக்குக்கு எதிரான ஒரு எதிர்நிலை செயல்பாடாக இல்லாமல் அழுக்குக்கு இணையான ஒரு நேர்நிலை செயல்பாடாக ஆகிவிடுகிறது. காரணம் எதிர்நிலை செயல்பாடாக இருக்கும்போது அது தந்திருந்த வெறுப்பு மெல்ல மெல்லக் கரைந்து அச்செயல் இன்பம் தரும் ஒன்றாக ஆகிவிடுவதுதான். அச்செயல்மீது நமக்கு இச்சை பிறக்கிறது. அந்த இச்சை அதற்குரிய பொருட்கள்மீது – பிரஷ், ஆசிட், சோப்புத்தூள் – படிகிறது. பிறகு பேசின் மீதும் அதன் அடுத்தக் கட்டமாக மலத்தின் மீதும் பிரியம் ஏற்பட்டுவிடுகிறது. நானும் குருநாதரும் அடைந்தது இம்மன நிலையையே என்றார் டாக்டர் சுவாமிநாதன். சுத்தப்படுத்துவதில் உள்ள இன்பத்தை முடிவின்றி நுகரும் பொருட்டு குருநாதர் முதலில் மலம் கழித்தார். திட்டமிட்டு அல்ல. மனம் ஒரு இறுதி எல்லையில் இயல்பாகக் கண்டுபிடித்த வழிமுறை அது. மறுநாள் அவர் திடுக்கிட்டு பயந்து ஓடிவந்தது நடிப்பல்ல. அதுவும் நிஜம்தான். நான் அவரை என் உள்மனத்தால் பு¡ரிந்துகொண்டு அதைத் தொடர்ந்து செய்தேன். நாங்கள் மாறி மாறி மலம் கழித்தும் கழுவியும் ரோந்து சுற்றியும் உத்வேகமிக்க விளையாட்டொன்றை விளையாடினோம். இதில் எது மனம் உண்மையாகச் செய்தது, எது அதன் பாவனை என்று எந்த டாக்டரும் ஞானியும் கூறிவிட முடியாது என்றார் டாக்டர் சுவாமிநாதன்.

நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. மலம் கழிப்பது ஒரு கட்டத்தில் எனக்கு கக்கூஸ் கழுவுவதைவிட அதிக இன்பத்தைத் தந்தது. கழுவித் தூய்மை செய்யப்பட்ட கக்கூஸ் பேசினில் நள்ளிரவு பிடிபடும் அபாயம் காத்திருக்கையில் சாது¡ரியமாக மலம் கழிப்பதில் உள்ள கிளர்ச்சியூட்டும் இன்பம் சொல்லில் அடங்காதது. அதை அனுபவிக்க உங்களுக்கும் மனநிலை பிறழவேண்டும். அந்தத் தருணங்களில் மனம் படபடப்பதும் உடம்பு வியர்த்து நடுங்குவதும் தொண்டை உலர்ந்து வயிறு சில்லிடுவதும் எல்லாம் சேர்த்து அது ஓர் உச்சகட்ட உடல் இன்பமாக மாறிவிடுகிறது. அப்போது காலம் சில கணங்களுக்கு விலகிவிடுகிறது. நானும் மொழுமொழுவென்று அற்புதமாக மின்னும் பேசினும் மட்டும்தான் பிரபஞ்சத்திலேயே எஞ்சியிருப்போம். சில கணங்கள் தான். பாய்ந்து எழுந்து ரோந்து சுற்ற ஆரம்பிப்பேன். பிறகு கக்கூஸ் என்றாலே என் மனம் பரபரக்கும். அதன் வடிவமே நான் அமர்ந்து மலம் கழிக்கும் ஒரே உத்வேகத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாகப் படும். என்னில் இரவும் பகலும் வேறு எண்ணமே இல்லாமலாயிற்று. கனவுகளில்கூட கக்கூஸ் கிண்ணங்கள் வந்தன. மலம் கிடக்கும் கிண்ணம் ஞாபகம் வந்தால் உடம்பு ஜிவ்வென்று இறுகிவிடும். மலம் மெல்ல என்னைக் கவர ஆரம்பித்தது. மலத்துக்கு இன்ன நிறம் என்று இல்லை. தவிட்டு நிறம் முதல் மஞ்சள் வரை பல்வேறு நிறக்கலவைகள் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒரு வண்ணம். எப்பேர்ப்பட்ட கலவைகள். எங்கும் அவ்வண்ணங்களை என் கண்கள் தேட ஆரம்பித்தன. டிஸ்டெம்பர் சுவர்கள், பழுத்த இலைகள், மாலை நிற வானம் எல்லாமே அதே நிறங்கள் தான். அவற்றின் அழகு என்னைப் பரவசப்படுத்தியது. உலகமே அந்நிறங்களால் நிறைய நான் ஆசைப்பட்டேன்.

அதெல்லாம் மனப்பிறழ்வுதான். மறுக்கவில்லை. ஆனால் எப்பேர்ப்பட்ட போரின்பம்! இங்கே என்னைக் கூட்டு சிகிச்சை மூலம் தேய்த்துத் தேய்த்துச் சமப்படுத்திவிட்டார்கள். என்னை வெறுமையாக்கிவிட்டார்கள். ஜன்னல் வழியாக ரயிலுக்கு காத்து, வெயிலில் மின்னியபடி, கிடக்கும் பழைய மீட்டர் கேஜ் தண்டவாளத்தை நாளெல்லாம் பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். நான் பழையபடி ஆகிவிட்டேன் என்கிறார்கள். டிஸ்சார்ஜ் பண்ணப் போகிறார்கள். எங்கு போவது? தபோவனத்துக்குத்தான் போகவேண்டும். அங்கு ஜோதிசாமி தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறது. என்னை நிச்சயம் கைவிட்டுவிடாது. ஆனால் சிறு உறுத்தல் ஒன்று என் மனத்தில் உள்ளது. டாக்டர் சாமிநாதன் அறிவு பூர்வமான சொற்களால், திட்டவட்டமான குரலில், தன் தருக்கங்களை பேசியபடி போகும்போது இந்த உறுத்தலை நான் கூறவே முடிவதில்லை. குருநாதர் இறந்த மறுநாள் நான் ஒரு கக்கூஸில் மலம் கழித்துத் திரும்பும்போது என் கக்கூஸில் மலம் கிடந்தது. அது என் கண்ணுக்கு மிகவும் பழகிப் போனதாக இருந்தது.

– ‘மண்’ தொகுப்பு, 1993

முந்தைய கட்டுரைபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3
அடுத்த கட்டுரைஎம்.எஸ்- மீண்டும் அதே கடிதம்