வற்கீஸின் அம்மா

வற்கீஸ் என் அண்ணாவுடன் படித்து தோற்று ஏழாம் வகுப்பில் என்னுடன் படிக்க வந்தான். என்னுடன் படித்த அவனது தம்பி சேவியர் என் தங்கையுடன் படிப்பதற்காகச் சென்றான். வற்கீஸின் அப்பா ராணுவ வீரராக ஓய்வுபெற்று அப்போது அருமனையில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார். அக்காலத்தில் அருமனையில் நான்கே டாக்ஸிகள். ஆகவே டாக்ஸி ஓட்டுவதென்பது ஒரு உயர்தொழில்நுட்ப வேலை. டிரைவர் ராஜு அவரது தைரியம், நிதானம், யார் என்றில்லாமல் உதவும் தன்மை ஆகியவற்றுக்காக புகழ்பெற்றிருந்தார். அவர் இறந்து இப்போது முப்பத்தைந்து வருடங்களாகின்றன, இன்றும் அவரை நினைவுகூர்பவர்கள் உண்டு.

டிரைவர் ராஜூ என் அப்பாவின் நண்பர். அப்பா அப்போது அருமனை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலைபார்த்தார். ராஜூசாரும் வாயைத்திறந்து பேசும் பழக்கம் குறைவானவர். அப்பாவும் அப்படித்தான். இருவரும் சார்பதிவாளர் அலுவலகம் முன்னால் இருந்த டீக்கடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சும்மா இருந்து நட்பை வளர்த்தார்கள். சிலசமயம் ராஜூசார் எங்கள் வீட்டுக்கு வருவார். ஒருமுறை பேரீச்சம் பழம் கொண்டுவந்து தந்தார், பேரீச்சம் பழம் அக்காலத்தில் மிகமிக அபூர்வமாகவே கிடைக்கும். அனேகமாக எடத்துவா சர்ச்சுக்கு அல்லது சவேரியார் திருவிழாவுக்குப் போகிறவர்கள் திருவனந்தபுரம் பீமாப்பள்ளி உறூசு நேர்ச்சைக்குப் போகிறவர்கள் கொண்டு வருவார்கள்.

என்னுடன் வற்கீஸ் படிக்க வந்தபின்புதான் அவன் ராஜூசாரின் மகன் என்று தெரிந்துகொண்டேன். அதற்கு முந்திய வருடமே அவர் இறந்துவிட்டிருந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் இருந்து திடீரென்று இதயத்தாக்குதல் வந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவற்றுக்கெல்லாம் அப்போது எங்களூரில் மருத்துவம் ஏதும் கிடையாது.

வற்கீஸ் அவனது அப்பா இறந்த நாள் முதல் நோயாளியாக இருந்தான். பள்ளிக்கு வரும் நாட்கள் குறைவு. குழந்தைகளுக்கான காசநோய் இருந்தது. வயிற்றுக்கோளாறுகள் உண்டு. ஆகவே படிப்பு அனேகமாக கிடையாது. எப்போதுமே நோயாளியின் பாவனை.  மெல்லிய குரலில் பெரிய மனிதர்களுக்குரிய நிதானத்துடன் பேசுவான். விளையாட்டுகளுக்கு வருவதில்லை.

என்னை மிகவும் கவர்ந்தது அவன் எண்ணை தேய்த்து மினுமினுவென வைத்து வரும் குருவிக்கூடு கிராப். அதைவிட கவர்ந்தது, அவன் தன் தம்பியிடம் வைத்திருந்த பிரியம். எங்கள் ஊரில் அண்ணாக்கள் தம்பிகளை டேய் என்று அதட்டுவார்கள். ஆனால் வற்கீஸ் ‘தம்பி’ என்று மட்டும்தான் கூப்பிடுவான். அவர்களுக்குள் மாற்றுக்கருத்தோ பிணக்கோ வருவதில்லை. என் அண்ணாவும் என் மீது பெரும் பிரியம் கொண்டவர்தான். ஆனால் அது அப்பா மகன் உறவு போல. என்னை அவர் கைக்குழந்தைபோல நடத்துவார். பதினொரு மணி இடைவேளையில் என்னைப்பார்த்தால் என் தலைமுடியை சீவிவிடுவார்.

ஆகவே நானும் வற்கீஸ¤ம் நண்பர்கள் ஆனோம். அவன் வீடு பள்ளிக்குப் பின்பக்கம் இரண்டு தோப்புகளுக்கு அப்பால் இருந்தது. போகும் வழியெல்லாம் ரப்பர் தோட்டம். ஒரு ‘விளை’க்குள் மரநிழலில் நான்கு கல்லறைகள். அவை சிமிண்ட் மெழுகி பளபளவென்றிருக்கும். அவற்றின்மீது படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். மதியம் சாப்பிடுவதற்காக வற்கீஸ் அவன் வீட்டுக்குச் செல்லும்போது நானும் செல்வேன்.

வற்கீஸின் வீடு அக்காலத்து அளவுக்கு பெரியது. உயரமான திண்ணை. இருபக்கமும் சிறிய அறைகள். உள்ளே கூடம். அதை ஒட்டி சமையலறை. அவன் வீட்டில் அப்போது அவனுடைய மூத்த அண்ணா கோ-ஆபரேட்டிவ் வங்கியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சிறிய தொகை மட்டுமே வருமானம். அவன் அம்மா சிறிய அளவில் நாட்டு மருத்துவம் செய்வார். மிகக் கஷ்டமான ஒரு சூழல். குடும்பத்தலைவன் இல்லாமலாகும்போது அக்காலத்தில் குடும்பங்கள் அப்படியே குடைசாய்ந்துவிடுவது வழக்கம்.

வற்கீஸ¤க்கு உடன்பிறந்தோர் ஏழு. இரண்டு ஆண், ஐந்து பெண்.  மேலும் இரு அக்காக்கள் இருந்தார்கள். இரு தங்கைகள். மூச்சுத்திணறச்செய்யும் அத்தகைய ஒரு சூழலில் ஒவ்வொருவரும் பிறர் மீது வன்மம் கொண்டு பிராண்டி ரத்தம் கசியக் கசிய வாழ்வதே நம்மூரில் வழக்கம். வறுமையும் இயலாமையும் வன்முறையையே வடிகாலாலக் கொள்கின்றன.

மேலும் இப்போதை விட அக்காலகட்டத்தில் குடும்பங்களுக்குள் வன்முறை மிக அதிகம் என்று இன்று தோன்றுகிறது.  என் நினைவில் பெரும்பாலான வீடுகளில் அனேகமாக தினமும் பெரும் சண்டைகளும் அடிதடிகளும் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவன் உச்சகட்ட வன்மத்துடன் வெறுத்து மாறி மாறி வசைபாடுவதே பெரும்பாலான அரட்டைகள். மாமியார் மருமகள் சண்டை, கணவன் மனைவி சண்டை, வளர்ந்த மகன்களுக்கும் தந்தைகளுக்கும் சண்டை, கல்யாணமாகாத மகள்களுக்கும் தாய்க்கும் சண்டை, சகோதரச் சண்டைகள்…. அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை வகைதொகையில்லாமல் அடித்துத் துவைப்பார்கள். பெற்றோர் அடித்து ரத்தகாயங்கள் ஏற்படுவதும் ஊனங்கள் ஏற்படுவதும்கூட சாதாரணம்.

ஆனால் வற்கீஸின் வீட்டில் ஒருவருக்கொருவர் இருந்த அன்பும், மென்மையான பழகும்முறையும் எனக்குப் பேராச்சரியமாக இருந்தது. அவனது அக்காக்கள் மிக உற்சாகமானவர்கள். அக்காலத்தில் கல்யாணமாகாத பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் ராணி வாராந்தரி இருக்கும். ராணிமுத்து வெளிவர ஆரம்பித்த காலம். இலங்கை வானொலியின் திரைப்படப்பாடல்களும் ஒலிநாடகங்களும் பிரபலம். அவற்றைப்பற்றி அக்காக்களுடன் அரட்டை அடிப்பேன். நான் படித்தவற்றைப்பற்றிப் பேசுவதற்கு ஆள்தேடி அலைந்த காலம் அது.

வற்கீஸின் அம்மா கறுப்பாக களையாக இருப்பார்கள். பேச்சு குறைவு. பெரும்பாலும் சற்றே வெட்கம் கலந்த சிரிப்புதான். அவர்களிடம் எனக்குத் தனியான பிரியமும், நெருக்கமும் இருந்தது. முக்கியமான காரணம் என்னை மிகச்சிறிய குழந்தைபோல நடத்தியது. எப்போது போனாலும் ஏதாவது ஒன்று தின்னக்கொடுப்பார். மாங்காய், தேங்காய்த்துண்டு,கொய்யாக்காய். நான் அவர்களிடம் கத்தி கதைகளை நடித்துக் காட்டுவேன். சிரித்துக்கொண்டே இருப்பார்.

அத்துடன் அவர்கள் வீட்டில் இருந்த கிறித்தவச் சூழலும் எனக்கு பெரும் கவர்ச்சியைக் கொடுத்தது. கிறித்தவச்சூழல் என்றால் கன்யாகுமரி மாவட்டத்தில் சில நுட்பமான வேறுபாடுகள் அன்று உண்டு. வெள்ளையர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் வழியாக அனைத்துக்கிறித்தவர்களிடமும் பரவிய சில வழக்கங்கள். சன்னல்களுக்கும் வாசல்களுக்கும் திரை போடுவது, டைனிங் டேபிள் அல்லது குறைந்த பட்சம் டெஸ்க், மேஜைகளுக்கு விரிப்பு, நுழையும் இடத்தில் கால்துடைக்கும் மெத்தை, எம்பிராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டைகள், செயற்கைப் பூஜாடி போன்ற அலங்காரப்பொருட்கள், சுவர்களில் பைபிள் வாசகங்கள் மலர்கள் போன்றவை. எண்பதுகளுக்குப்பின்னர்தான் அவை இந்து வீடுகளில் வேறு வடிவில் வந்து சேர்ந்தன.

நான் செல்லும் ஒவ்வொருமுறையும் வற்கீஸின் வீட்டில் ஏதாவது ஒன்று புதிதாக இருக்கும். துணிப்பொம்மை , துணியில் பின்னப்பட்ட பைபிள் வாசகம் என. வற்கீஸ் நன்றாகவே படம் வரைவான். வீட்டை ஒரு அழகான இடமாக வைத்துக்கொள்வது என்ற கருத்தே அக்காலத்தில் எனக்கு புதிது. எங்கள் வீடு சுத்தமாக ஆனால் காலியாக இருக்கும். புத்தகங்கள் மட்டுமே அடுக்குகளில் இருக்கும். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிதாகக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதனால் சாமிப்படங்கள் இருக்காது. என் அண்ணா குப்புறப்படுத்துச் சிரிக்கும் ஒரு புகைப்படம் மட்டும்தான்.

ஞாயிறுகூட அருமனை வாசகசாலைக்குப் போய்விட்டு அவன் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். ஒருநாள் போகாமல் இருந்தால்கூட அவன் அம்மா ‘ஏன் வரேல்ல?’ எனறு ஆதுரத்துடன் கேட்பார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவன் மூத்த அக்கா திருமணமாகி சென்னைக்குச் சென்றார்கள். அப்போதுதான் நாங்கள் முழுக்கோட்டில் இருந்து சொந்தவீடுகட்டி திருவரம்புக்குக் குடிபெயர்ந்தோம்.

பதினொன்றாம் வகுப்பில் நான் வென்றேன். வற்கீஸ் தோல்வியடைந்தான். நான் மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்புக்கு சென்றேன். அவன் அருமனையிலேயே நாதன் ஸ்டுடியோ என்ற புகைப்படநிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்தான். நான் ஐந்து கிலோமீட்டர் நடந்து அருமனைக்கு வந்து அங்கிருந்து கல்லூரிக்குச் செல்லும் போது ஸ்டுடியோவில் உரிமையாளர் இல்லாவிட்டால் ஓரமாக ஒதுங்கி நின்று பேசிக்கொண்டிருப்போம். என்னுடைய ஆர்வங்கள் எதிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை. இலக்கியம், அரசியல், சினிமா எதுவுமே தெரியாது. ஆனாலும் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அவன் வீட்டுக்குப் போவது குறைந்தது.

அதன்பின் நான் நாகர்கோயில் கல்லூரிக்குச் சென்றேன். அருமனைக்கு போக வாய்ப்பே இல்லை. இலக்கியமும் அரசியல் ஈடுபாடுகளும் ஆன்மீகப்பித்தும் சுழற்றியடித்தன. ஊரைவிட்டு ஓடிப்போனேன்.  என் அப்பா அம்மா இருவரும் தற்கொலைசெய்துகொண்ட பின்பு ஊருடன் இருந்த உறவு முற்றிலும் அறுந்தது. அதன்பின் ஒருமுறை எங்கள் சொத்துக்களில் எஞ்சியதை விற்க அருமனை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். வற்கீஸ் சாலையில் என்னைப் பார்த்துக் கைகளைப் பிடித்துக்கொண்டான். கண்களில் கண்ணீர். ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சநேரம் கழித்து நான் கைகளை விடுவித்துக்கொண்டு தலைகுனிந்து விலகிச் சென்றேன்.

அடுத்த சந்திப்பு என்னுடைய இன்னொரு நண்பனும் வகுப்புத்தோழனுமான விஸ்வநாதனின் திருமணத்தில். நான் காஸர்கோட்டில் இருந்து வந்திருந்தேன். அப்போது வற்கீஸ் மேனகா ஸ்டுடியோ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கி விட்டிருந்தான். அதற்காக வங்கிக் கடனுக்கு அலைந்த அனுபவங்களைச் சொன்னான். சிறுவயதிலேயே இருந்த ஓவியத்திறன் கைகொடுத்தது.  அவனுடைய ஸ்டுடியோவுக்குச் சென்றேன். சேவியரும் அவனும் சேர்ந்து அந்த ஸ்டுடியோவை நடத்தினார்கள். அப்போதே அது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்திருந்தது. நாதன் ஸ்டுடியோவிலேயே வற்கீஸ் திறமையான புகைப்படக்காரனாகப் பெயர் வாங்கியிருந்தான்.

அன்றெல்லாம் கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள்தான் அதிகம். எடுத்த எதிர்பிரதி மீது தூரிகையால் அமிலத்தைத் தொட்டுத் தொட்டு வரைந்து படத்தை மேம்படுத்த வேண்டும். படம் எடுத்தபின்பு ”கன்னம் கொஞ்சம் கொழுகொழுண்ணுட்டு இருக்கணும் கேட்டுதா?” என்று கேட்டுக்கொள்வார்கள். புகைப்படம் அதற்குரியவரின் சாயலோடு இருப்பதைவிட அழகாக இருப்பதே முக்கியம். வற்கீஸ் தெளிவாக படத்தை வரைந்து கொடுப்பான். குறிப்பாக அவன் வரைந்த புகைப்படஓவியம் அழகு குறைந்த பெண்கள் திருமணமாக உதவியது. புகைப்படம் எடுப்பவர்களின் கிறுக்குகளைப்பற்றிச் சொன்னான். ஒரு ஆசாமி மீசைமீது இரு எலுமிச்சைப்பழங்களை நிறுத்தி வைத்து எடுக்க ஆசைப்பட்டார். நிற்கவேயில்லை. தூண்டிலுக்கு போடும் மெல்லிய பிளாஸ்டிக் நூலை வாங்கி அதை வைத்துக் கட்டி தலைமீது போட்டு தொங்கவிட்டு தந்திரக்காட்சியாகப் படம் எடுக்கப்பட்டது. பின்னர் நூல்  அமிலம் தொட்டு நீக்கப்பட்டது. அந்தக்கால கிரா·பிக்ஸ்!

அக்காலத்தில் வற்கீஸ் ஒரு ஆணழகனாக உருமாற ஆரம்பித்திருந்தான். இரவுபகலாக உடற்பயிற்சி. தோள்கள் கிண் என்று டி ஷர்ட்டுக்கு மேல் புடைத்து நின்றன. சட்டையைக் கழற்ற எந்நேரமும் ஆவல். வயிற்றில் அவன் உத்தேசித்த அளவு ‘கட்ஸ்’ வரவில்லை என்பதனால் அதிவேக பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறுவயதின் நோஞ்சான் வாழ்க்கைக்கு ஒரு பதில் போல இருந்தது அந்த வேகம். ஸ்டுடியோவில் அவன் முண்டா முறுக்கி நிற்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் இருந்தது.

மீண்டும் நான் வற்கீஸைச் சந்தித்தது ஐந்து வருடம் கழித்து என் திருமணத்தில். குமாரகோயிலில் அவன்தான் புகைப்படம் எடுத்தான். அப்போது அவனுடைய பொருளாதார நிலைமை பெரிதும் மேம்பட்டிருந்தது. அக்காக்களுக்குத் திருமணம்செய்து வைத்து தங்கைக்கும் பார்த்துக்கொண்டிருந்தான். குமரிமாவட்ட ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டிருந்தான். சாதாரணமாக கையைபிடித்தாலே நம்மை அப்படியே தூக்கி சுழற்ற வேண்டும் என்ற தினவு தோள்களில் இருந்தது. காளை போல வலிமையான தசைகள்.

அதன்பின் நான் தக்கலைக்கு வந்தபோதுதான் வற்கீஸ¤டன் உறவு உருவானது. அப்போது அவனுடைய ஸ்டுடியோ பெரிய நிறுவனமாக ஆகிவிட்டிருந்தது. மூன்று மாடிக்கட்டிடம் கட்டி அதில் ஸ்டுடியோவை வைத்திருந்தான். தங்கைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். ஒருமுறை என் பையனுடன் ஸ்டுடியோவுக்குச் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்பிவிட்டேன். அதன் பின் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தேன்.

அவன் அண்ணாவின் மகள் திருமணத்துக்குச் சென்றபோதுதான் அவன் அக்காக்களையெல்லாம் மீண்டும் கண்டேன். பெரும்பாலும் யாருக்குமே என்னை தெரியவில்லை. முப்பது வருடங்கள் பின்னால் தாண்டி நினைவுகளைச் சொன்னபோது ”ஆமா…ஜெயனாக்குமே” என்று எங்கிருந்தோ என் பழைய முகத்தைத் தேடி எடுத்தார்கள். அவர்களும் அம்மாக்களும் பாட்டிகளும் ஆகி எங்கோ நகர்ந்து விட்டிருந்தார்கள். வற்கீஸின் அண்ணாவுக்கு மட்டும்தான் பெரிய மாற்றங்கள் இல்லை.

வற்கீஸ் தங்கைகளுக்கு திருமணங்கள் முடித்து தாமதமாகத்தான் திருமணம் செய்துகொண்டான். மூன்று குழந்தைகள். மூத்தவள் ஸ்டெ·பி நான்காம் வகுப்பு. நடுவே ஒரு பையன். கடைசிக்குழந்தைக்கு ஒருவயது. அழகிய சிரிப்புடன் ஆட்களை அடையாளம் காண ஆரம்பித்திருந்தது. ”பேரு என்ன தெரியுமா, ஜெய ஷரோன்” என்றாள் வற்கீஸின் மனைவி. ”வித்தியாசமா இருக்கு ”என்றேன். ”கூட்டுக்காரனுக்க பேரு வரணும்னு இட்டதாக்கும்” என்று சிரித்தாள்.

வற்கீஸ் வெட்கத்துடன் ”மூத்த ரெண்டுக்கும் மத்தவங்க இஷ்டப்படியாக்கும் பேரிட்டது. நமக்கும் ஒரு ஜெயன் வேணுணாக்கும் இது..” என்றான். நான் குழந்தையைக் கையில் வைத்தபடி கல்யாணத்தில் நடந்தேன். விஸ்வநாதனின் முதல் குழந்தை பெயர் ஜெயராம்.”உன் பேரு வரணும்ணு போட்டதாக்கும்”என்று சொல்வான். என் பெயரை குழந்தைகளுக்குப் போட்டதாக சில வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது ஆச்சரியம்தான். இவர்கள் இருவருக்கும் இன்றைய என் ஆளுமையுடன் தொடர்பே இல்லை. நான் எழுதிய ஒரு வரியைக்கூட அவர்கள் படித்ததில்லை. ஏன், என் எழுத்தாளன் என்ற அடையாளமே அவர்கள் அறிந்ததல்ல.

சொந்தக்காரர்களின் பெரும்கூட்டம். வற்கீஸ் இப்போது ஒரு ஊர்ப்பெரிய மனிதன். நாற்பத்தைந்து லட்சருபாய் மதிப்பில் அருமனையில் வீடு கட்டுகிறான். அதைவிட எந்நிலையிலும் எவரிடமும் மாறாத உண்மையான பிரியம் கொண்ட பேச்சும் நிதானமும் கொண்ட அபூர்வமான ஆளுமை அவன். அவனைக் கண்டதுமே மக்கள் மனம் மலர்கிறார்கள். அவனுடன் சாலையில் நடந்தால் பத்தடிக்கு ஒருவர் அவனிடம் நலம் விசாரிப்பார்கள்.

வற்கீஸின் அம்மா உள்ளே இருப்பதாக வற்கீஸ் வந்து சொன்னான். உள்ளே எட்டிப்பார்த்தேன். நிறையப் பெண்கள். ”இரு கூட்டிக்கிட்டு வாறேன்” என்றான். போகும்போதே எச்சரிக்கயாக ”அம்மைக்கு ஒண்ணும் ஓர்மை இல்லை…”என்றான். அவர்களுக்கு எண்பது வயது தாண்டிவிட்டது. பலவித நோய்கள். இரு அறுவைசிகிழ்ச்சைகள். பேரக்குழந்தைகளையும் சொந்தக்காரர்களையும் கூட நினைவில் நிறுத்த முடியவில்லை.

அம்மாவை வற்கீஸ் வெளியே கூட்டிவந்தான். ”ஆளு தெரியுதா அம்மா?” அவன் அம்மா என்னை பார்த்துப் பல் இல்லாத வாயால் மலர்ந்து சிரித்து ”பின்ன, அருமனைக்காரருக்க மகனாக்குமே” என்றார். முதல் மகிழ்ச்சிக்குப் பின் எனக்கு மலைப்பு ஏற்பட்டது. முப்பது வருடங்கள் முன்பு என் முகம் எப்படி இருந்திருக்கும். அந்த ஜெயமோகன் அல்ல இப்போதுள்ள நான். அம்மா என்னில் இருந்து அந்தக் கூச்சம் நிறைந்த, விளையாட்டுப்பையனை எப்படிக் கண்டடைந்தார்கள்? என் கையை வருடியபடி ”நல்லாருக்கியா? பிள்ளைய எத்தனை?” என்றார்கள். அதே வெட்கச்சிரிப்பு.

விடைபெறும்போது நான் அவர்களின் கைகளைப்பிடித்தபடி ”போய்ட்டு வாறேன்”என்றேன். அவர்கள் என் கைகளில் மாறி மாறி முத்தமிட்டார்கள். அந்த முத்தங்களின் தொடு உணர்வு காரில் நாகர்கோயில் வந்து சேர்வது வரை இருந்தது. வீடுவரை அந்த ஆச்சரியம் என்னிடம் இருந்தது, எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள். பெற்ற தாயேகூட முப்பது வருடங்களில் முகம் மறந்துவிடுவாள் என்பார்கள்.

எழுத்தின் நடுவே என் மகனை ஏறிட்டுப் பார்த்த கணத்தில் ஒன்று தோன்றியது. நான் அவர்களைப் பிரிந்த அதே வயது. இவனைப்போல எதைப்பற்றியும் கவலை இல்லாதம், உற்சாகமே உருவான பையனாக இருந்திருப்பேன். வாழ்க்கையின் எந்த இருட்டையும் கண்டிராத கண்கள். எந்தத் தீமையின் நிழலும் படியாத மனம்.  அவர்களின் அன்றைய இக்கட்டான வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒளியுடன் வரும் ஒரு தேவதை போல் இருந்திருப்பேன்.

இப்போது வெகுதூரம் வந்துவிட்டேன். என் மனமும் ஆத்மாவும் சொற்களால் நிறைந்து கனத்துவிட்டிருக்கின்றன. ஆனாலும் என்னில் அந்த தேவதை கொஞ்சம் மிஞ்சியிருக்கக் கூடும். ஓர் அன்னை மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்குக் கொஞ்சம்.

நமது கைகளில்….

அன்னை

இணைவைத்தல்

தேர்வு

முந்தைய கட்டுரைமனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள்
அடுத்த கட்டுரைமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு