பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வீடு வந்து சேர்ந்த இரண்டு நாட்களாக ஊட்டி முகாம் ஊட்டிவிட்டனுப்பிய இலக்கியச் சுவையை (உணவுச் சுவையையும் கூட) மீண்டும் மீண்டும் மனதால் ருசித்தபடியே இருக்கிறேன். ஈடு இணையற்றது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை என்போன்ற இலக்கிய வட்டத்தின் வாசலில் நிற்பவர்க்கு. நட்பிற்குரிய சீனு இல்லாததில் மட்டும் ஒரு சிறு வருத்தம்.
புதுவை, சென்னை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் உங்களது வெவ்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் ஊட்டி முகாமனுபவம் முற்றிலும் தனித்த நிறம், மணம் மற்றும் குணமுடையது. பழகுதற்கினிய நண்பர்கள் கிடைத்ததில் இரட்டிப்பானந்தம்.
ஒவ்வொரு அமர்வும் என் வரையில் என்னுள் பேரொளிப் பாய்ச்சுவதாகவே அமைந்தது. அதிலும் உங்களின் நுண்ணுணர்வுமிக்க எடுத்துரைப்புகள் மற்றும் வழிகாட்டல்கள் சிகரம் தொடுபவை. முதல் நாள் ஜெயகாந்தன் அமர்வில் அவரின் நாவல்களைப்பற்றிப் பேசிய நண்பர் சுரேஷை மனதிற்கு மிக நெருக்கமாக உணரத்துவங்கி விட்டேன். அவருடன் நேரறிமுகமில்லாத போதும். ஆள் சிறந்த வாசகர் மட்டுமல்லாது தேர்ந்த திரையிசை ரசிகர் மற்றும் பாடகராகவுமிருப்பது பொறாமை கொள்ள வைக்கிறது என்றால் மிகையில்லை. இரண்டாம் நாள் கம்பராமாயண அமர்வு முடிந்து விடக்கூடதென்றே பதறினேன். சாட்சி நாகராஜன் சார். இத்தனைக்கும் அமர்வில் இடம்பெற்ற கிஷ்கிந்தை காண்டத்தில் நாடத்தன்மைமிக்க தருணங்கள் குறைவாம். கம்பன் மீது காதலை மட்டுமல்ல காப்பியத்தை ஆரம்பம் முதல் வாசிக்க வேண்டுமென்ற பேரார்வத்தையும் விதைத்தனுப்பியிருக்கிறார்
நாஞ்சில். மற்றும் அவர் பரிந்துரைத்த சதாவதானி செய்குதம்பிப் பாவலரின் “எட்டு கிரிமினல் கேஸ்” புத்தகத்தை கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்கிக்கொண்டுதான் வீடு வந்தேன். மூன்றாம் நாள் கவிதைகளிலுள்ள படிமங்கள், உருவகங்கள் மற்றும் குறியீடுகளை முன்வைத்து நீங்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டுமென இப்போது வருந்துகிறேன். எத்தனை கவிதானுட்பங்களை எடுத்தச் சொன்னீர்கள். மற்றும் அந்த அஷ்டாவதான நிகழ்ச்சி திகைக்க வைத்த அதிர்ச்சி.
மேலும் உங்களின் நகைச்சுவையும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களின் (குறிப்பாக அரங்கசாமி மற்றும் செல்வேந்திரனின்) நொடிப்பொழுதில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமிக்க கருத்துகளும் கூர் ரசனைமிக்க நகைச்சுவையுணர்வுள்ளவர்களுக்கே சாத்தியம்.
முகாமமர்வுகளுக்கு நிகரான அனுபவத்தை தந்தது உங்களுடனான நடை. சுவாரஸ்யம் குன்றாமல் பேசிக்கொண்டே அதுவும் ஓடும் வேகத்தில் குன்றேறும் உங்களை பின் தொடர சற்று கடினமாகத்தான் இருந்தது. உங்களுடன் பேச வேண்டுமென்ற எண்ணம் மறைந்து உங்கள் பேச்சருவியில் நனைந்து கொண்டேயிருக்கும் வரம் மட்டும் கிடைத்தால் போதுமானது என்று தோன்றுகிறது.
முகாம் ஏற்பாட்டாளன்பர்களனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
உங்களுடன் தனிப்பட்ட முறையில் நிறைய பேசவேண்டுமென்றெண்ணி துள்ளிக்குதித்து புறப்பட்டு வந்து உங்களின் அருகாமையைப் பெறமுடியாமல் மூன்று நாட்களும் புழுவாய் நெளிந்துவிட்டு ஊர் திரும்பும் நேரத்தில் உங்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்புகையில் நீங்கள் கட்டியணைத்தனுப்பியதில் ஒரு பட்டாம்பூச்சியாய் வீடு வந்து சேர்ந்தேன். அத்தருணம் என் வாழ்விலொரு பொற்கணம். கோடானுகோடி நன்றிகள்.
மிக்க அன்புடன்
மணிமாறன்
புதுச்சேரி.