மோஹித்தேவும் மருந்தும் மிதவையும்

1

அன்புள்ள ஜெ,

ஊட்டி முகாம் அளித்த ஆனந்தத்தை இன்னும் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன். வீட்டு ஞாபகமே இல்லாமல் நண்பர்களோடு பேசுவதும் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்ததுமான நாட்கள். மனைவியையும் குழந்தையையும் மச்சினன் வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். ஊட்டியிலிருந்த மூன்று நாட்களும் அவளுடன் பேசவில்லை. 4 மாத கர்ப்பமாக இருப்பவளிடமும் 4 வயது பெண்ணிடமும் பேசத்தோன்றாமலிருந்தது என்னவொரு மனநிலை என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு கால் நடக்க முடியாமல் போயிருந்தது. தினமும் ஆட்டோவில் போய் டாக்டரை பார்த்து வந்திருந்தார்கள். இவர்கள் யாருக்குமே என்மீது கோபமில்லை…  அவர்களுக்குத் தெரியும் நான் எவ்வளவு நாட்களாக இதைபற்றியே சொல்லிக்கொண்டிருந்தேன் என்று… சோதனையாக ஜெயகாந்தன் மறைந்தபோது விகடனில் அவர் கஞ்சா குடிப்பார்.. பட்டை சாராயம் அடிப்பார்.. கெட்டவார்ததைகளில் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) பேசுவார் என்றெல்லாம் போட்டு வைத்தது வீட்டினரை பயப்பட வைத்தது. அனால் அதற்கெல்லாம் உங்கள் விதிமுறைகளையும், நிகழ்ச்சி நிரல்களையும் காட்டியே பதில் சொல்லிவந்தேன். ஊட்டிமுகாமில் நான் இதுவரை பார்த்திராத நண்பர்களை சந்தித்ததை பற்றி குழுமத்தில் பதிவிட்டிருந்தேன்.

இந்த முகாமில் நடந்த நிகழ்ச்சிகளைவிட அரங்கிற்கு வெளியே பேசியவையே அதிகம் நெருக்கமானது.. குறிப்பாக நாஞ்சில் சாரிடம் பேசியது.. அவரின் மிதவை நாவலில் வரும் சண்முகம் நானே என நினைத்திருக்கிறேன்… அதைப்போன்ற முன்பின் தெரியாத ஊருக்கு கையில் ஆயிரம் ரூபாயோடு உறவினரோ நண்பரோ இல்லாமல், பாஷையும் தெரியாமல் சக மனிதர்களை மட்டுமே நம்பி வேலை தேடச் சென்ற (தமிழகத்தின்) கடைசி தலைமுறை என்னுடையதாக இருக்குமோ என நினைக்கிறேன். நான் உங்கள் அறம் வரிசை நாயகர்களை போன்ற‌வர்களை சந்தித்திருக்கிறேனோ தெரியாது.. அனால் மோஹித்தேவைப்போன்றவர்களை சந்தித்திருக்கிறேன். 2000‍-இல் ஹைதராபாத்திற்கு சென்றபோது அங்கே ஒருவரிடம் ஆபீஸுக்கு வழி கேட்டேன்..மொ ழி தெரியாத ஊருக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வந்திருந்த என்னைப் பார்த்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.. வழிகேட்டவனை வீட்டுற்கு கூட்டிச்சென்றார். அவர் வீட்டிலேயே குளித்து டிபனும் சாப்பிட்டு எட்டு மணிக்கு என்னை ஆபீஸ் வாசலில் பஜாஜ் ஸ்கூட்டரில் விட்டார். என்னிடம் பேசும்போது எனக்கு kid looking என்றார். அவர் வீட்டில் என்னைப்பற்றி அமாய்கடு என்று சொல்லிக்கொண்டிருந்தார்.. அதற்கு அப்பாவி என்று அர்த்தம் என எனக்கு அதன்பிறகு தெரிந்தது.

என் நண்பர்களின் மரணம் பற்றி சென்ற கடிதத்தில் சொல்லியிருந்தேன்.. அதில் சூலூர்பேட்டை நண்பனின் சடலத்தை அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது நானும் உடனிருந்தேன்..காட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முன் சடலத்தை சுற்றிவருவது அவர்கள் ஊர் வழக்கம். இறுதியாக நான் சுற்றிவரும்போது ரங்கநாத்தின் அம்மாவும் அக்காவும் என் கையை பிடித்துக்கொண்டு தெலுங்கில் சொன்னார்கள்.. “நீ இல்லாட்டி இவன் தெருவில் அனாதையாக கிடந்திருப்பான்.. உன்னாலதான் அவன் கிடைச்சான்.”  கிடச்சான் என்பதற்கு என்ன அர்த்தம் ஜெ…?

சென்னை நண்பர்களெல்லாம் என்னை சூலூர்பேட்டைக்கு போகவேண்டாம் என்று சொன்னார்கள்..உணர்ச்சிவசப்பட்டவர்கள், பைக்கில் கூட போனதற்காக என்னை அடிப்பார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால் துர்காம்மா என்னை அடுத்தநாள் வீட்டிற்கு வரச்சொன்னார்..  அவனின் நோக்கியா 1100-வையும் அவனுக்கு வாங்கிய அரைக்கை சட்டையையும் என்னிடம் கொடுத்தார்கள். அவன் ஸ்ப்லெண்டரையும் எடுத்துக்கொள்ள சொன்னார்.. ஆனால் எனது அம்மா வண்டி மட்டும் வேண்டாம் என்று பயந்தார்.. நான் வாங்கிகொள்ளவில்லை…

எட்டுவருடமாக உங்களை படித்து வருகிறேன். உங்களை நான் பிரமித்து அண்ணாந்து பார்க்கிறேனென்றால் நாஞ்சில் சாரை பார்த்தால், “டேய் ட்யுப்லைட் கனெக்சன் தெரியாம நீ என்ன எலெக்ட்ரிகல் படிக்கிற? இத பாரு மொதல்ல” என்று சொன்ன கமால்பாஷா சாரோ அல்லது “ஸ்கூலில் இவன் bright student சார்.. ஆக்சிடெண்ட் ஆனதால் மூணு மாசம் லீவு போட்டுட்டான்.. மத்தபடி நல்ல பையன்” என external-இடம் பேசி 68 மார்க் போட்டுக்கொடுத்த யாகராஜன் சார் ஞாபகமோ வரும்.. இல்லையென்றால் என் பாட்டி ஞாபகம் வரும்.. உங்களைவிட அவர்தான் எனக்கு அந்நியோன்னியமானவரோ என தோன்றும்.. நீங்கள் கொடுத்த பீடத்திலிருந்து நீங்களே நினைத்தாலும் இறக்கமுடியாத ஜெயகாந்தன் பேசுகிறேன் என்பதைவிட என் அருகிலிருந்து என்னைப்போலவே பேசும் நாஞ்சில் சாரை பிடித்து போகிறது.. அதனால்தான் குருபீடம் கதை பற்றி விவாதிக்கும் போது அதைவிட மருந்து நல்லகதையாக எனக்கு தோன்றுகிறது என்று சொன்னேன்.. இப்பொழுதும் அதையே சொல்கிறேன்..

தயக்கம் காரணமாக பேசாமலிருந்தாலும் இந்தமுறைதான் அவரிடம் பேசியது.. எதாயிருந்தாலும் பேசுங்க ஒண்னும் சொல்லமாட்டாரென்று சீனிவாசன் சார் பஸ்ஸில் வரும்போது சொன்னார்.. வாக்கிங் போகும்போது பேசினேன்… பர்சனலாக கொஞ்சம்…ஆந்திரா மோஹித்தே பற்றி சொன்னபோது ஆச்சரியமாக கேட்டார்.. இவங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதாலதான் என்று ஏதோ சொல்லவந்தார்..அனால் அவருக்கு ஒரு போன்வந்து எங்கள் உரையாடல் நின்று போனது…

அன்புடன்
ஆர்.காளிப்ரஸாத்

முந்தைய கட்டுரைதலைமறைவு
அடுத்த கட்டுரைநூல்கள் வாங்க