‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 3

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 3

கதவுக்கு அப்பால் மெல்லிய சிலம்பொலி கேட்டு திருஷ்டத்யும்னன் மஞ்சத்தில் இருந்து எழுந்து நின்றான். பின்னர் அப்படி எழுந்ததை நாணியவன் போல பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு இருண்ட சாளரத்துக்கு அப்பால் இருளென அசைந்த மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான். காற்று சிறிய சலசலப்புடன் கடந்துசென்றது. சாளரத்திரைச்சீலை ஓர் எண்ணம் வந்து மறைந்ததுபோல எழுந்து மீண்டும் படிந்தது. சுடர் சற்றே அசைந்து அமைந்தது. கதவு சிறிது திறந்து சயனன் எட்டிப்பார்த்து “வணங்குகிறேன் இளவரசே” என்றான். அவன் கண்களை நோக்கி தன் கருவிழிகளை மட்டும் அசைத்து அவன் ஆணையிட சயனன் பின்னகர்ந்து கதவை மேலும் திறந்தான். சுஃப்ரை உள்ளே வந்து கதவை ஓசையின்றி மூடிவிட்டு அவனை நோக்கி புன்னகைசெய்தாள்.

அவள் வெண்பட்டாடையை தோள்மேல் போர்த்தியிருந்தாள். போர்வை விலகிய இடைவெளியில் கழுத்தில் அணிந்திருந்த மணியாரத்தின் கற்கள் மின்னுவது தெரிந்தது. அவன் எழவிரும்பினாலும் அசைவிலாதவனாக அமர்ந்திருந்தான். அவள் மேலுதட்டை இழுத்து கீழுதட்டால் கவ்வியபடி கண்களில் ஆவலுடன் அவனை நோக்கியபடி நின்றாள். பின் அவள் கை சரிய பொன்வளைகள் குலுங்கின. மேகலைமணிகள் குலுங்கி அசைய அவனருகே வந்து இடுப்பில் கைவைத்து ஒசிந்து நின்றாள். அரண்மனைப்பெண்கள் எவரிடமும் அந்த நடன அசைவுகள் நடையில் கூடுவதில்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். சிற்றிளமையிலேயே கற்ற நடனம் இவர்களின் விழிகளை, சிரிப்பை, உடலசைவுகளை முழுமையாக வகுத்துவிடுகிறது போலும். அவள் எண்ணங்கள்கூட அவ்வாறு வகுக்கப்பட்டிருக்குமா என்ன? இப்புவியின் நிகழ்வுகளனைத்தும் அவளுக்கு ஒரு நடனமென்றே தெரியுமா?

”அமர்க!” என்றான். அவள் மஞ்சத்தில் அமர்ந்து ஆடையை தன் கால்கள் நடுவே ஒதுக்கிக்கொண்டு “பாஞ்சால இளவரசரைப்பற்றி அறிந்துள்ளேன். சற்றுமுன் சயனர் மேலும் கூறினார்” என்றாள். அவள் குரலும் தேய்த்து மெருகேற்றப்பட்டதாக இருந்தது. புருவங்களைச் சுளித்தபடி ”என்ன கேள்விப்பட்டாய்?” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். “தாங்கள் அடைந்த விழுப்புண்களைப்பற்றி” என்று அவள் புன்னகையுடன் சொன்னாள். “களத்தில் வில்லுடைந்து அம்புபட்டு விழுந்தவன், அதைத்தான் இப்படி சொல்கிறாய் இல்லையா? பரத்தைக்கலையை நன்கு கற்றிருக்கிறாய். ஆண்களை நன்றாகவே அறிவாய் போலும்” என்றான். அந்தக்கடுமை அவனை உள்ளூர புன்னகைக்கச் செய்தது. “பரத்தைக்கலை என்பது ஆண்களை அறிவதல்ல. பெண்களை அறிவது” என்றாள் அவள். பொருளில்லாமல் அவன் “ஓ” என்றான்.

“பெண் தன் உடலை, உள்ளத்தை, ஆற்றலை அறிகையில் பரத்தையாகிறாள்” என்று சொன்ன அவள் மெல்ல நகைத்து “மனைமகளும் மஞ்சத்தில் பரத்தை என்றுதானே சொல்கிறார்கள்?” என்றாள். “நீ எப்போதும் மஞ்சத்தில் இருக்கிறாயா?” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், ஆண்களை பெண்கள் மஞ்சத்திலன்றி வேறெங்கும் சந்திக்கமுடியாதென்று என் மூதன்னை சொல்வாள்.” அவன் அவள் கண்களையே நோக்கினான். அவற்றிலிருந்த ஆழம் அவனை அச்சுறுத்தியது. “நீ நூல் கற்றவளா?” என்றான். ”காவியம் பரத்தைக்கலையின் ஒரு பகுதி” என்றாள் அவள். “நான் காவியம் கற்றதில்லை” என்று அவன் சொன்னான். “நன்று” என்று அவள் சிரித்தாள். “காணும் ஒவ்வொன்றையும் நெஞ்சுக்கு உகந்த பொய்யாக ஆக்கிக்கொள்வதற்குப் பெயரே காவியம். பொய்களின் மேல் உங்கள் வில்லின் அம்புகள் படுவதில்லை.”

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எழுந்து அவளை தழுவவேண்டும், அந்தச்சிரிப்பின் மீதே முத்தமிடவேண்டும் என்று தோன்றியும் அவ்வெண்ணம் உடலை சென்றடையவில்லை. அவள் “என்ன பார்வை?” என்று சிணுங்கி தன் கழுத்தை மெல்ல கைகளால் வருடினாள். கழுத்தைப்போல இளமையை வெளிக்காட்டுவது பிறிதில்லை. மென்மை என்பதே தோலென ஆனதுபோல. மலர்வரிகள். சிறுபூமுட்கள். அசைவெல்லாம் நடனமாக ஆவது பெண்ணின் கழுத்தில். “என்ன?” என்றாள். “ஒன்றுமில்லை” என்றான். அவள் அவன் முழங்காலில் கைகளை வைத்து “ஒன்றுமில்லையா?” என்று ஆழ்ந்த செவிக்குரலில் கேட்டாள். “ம்” என்று அவன் மூச்சாக சொன்னான். “விஸ்வாமித்ரரா நீங்கள்? தவம் கலைக்கவேண்டுமா என்ன?” உடலின் மணம். இளவெம்மை ஒரு மணமாக மாறுமா என்ன? ”நான் உடல்நலமின்றி இருந்தேன்” என்றான். அதை ஏன் சொன்னேன் என்று வியந்தபடி “நெடுநாட்கள்” என்றான்.

“அறிவேன்” என அவள் அவனருகே வந்து பீடத்தின் கைப்பிடிமேல் அமர்ந்தாள். அவளுடைய இடமுலை அவன் தோளில் மெல்லப்பதிந்து புதைந்தது. இதயத்துடிப்பு வந்து தோளில் அதிர்ந்தது. “நெடுநாட்கள்…” என்றான். பெருமூச்சுடன் “நெடுநாட்கள் உடல்நலமின்றி இருந்தவன் பிறிதொருவனாக ஆகிவிடுகிறான். அவனறிந்த உலகம் முழுமையாக மாறிவிடுகிறது” என்றான். அவள் அவன் தலையை தன் கைகளால் வளைத்து நெஞ்சோடு சேர்த்து “ம்” என்றாள். “வலி என்பது ஒரு தவம். பிறிதிலாது உளம் குவியச்செய்யும் முதற்சொல் என்பது வலியின் அதிர்வே. உடல் உடல் உடல் என உணர்ந்தபடி படுத்திருப்பது. இவ்வுடலன்றி பிறிதில்லை நான் என உணர்வது… நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டேன்.”

அவள் அவன் குழலை கைகளால் அளைந்துகொண்டிருந்தாள். “இங்கு வந்ததும் துரோணரின் குருகுலத்திற்குத்தான் சென்றேன்” என்று அவன் சொன்னான். “அங்கே நான் பயின்ற களங்களில் இளையோர் நின்றனர். நான் வாழ்ந்த குடிலில் கலிங்கநாட்டு இளவரசன் ஒருவன் இருந்தான். நான் கையாண்ட படைக்கலங்கள் எங்குமிருக்கவில்லை. நின்ற நிலத்தில் எடைகொண்டு மூழ்கிமறைந்துவிட்டேன் என்று எண்ணினேன். அந்த எண்ணமே என்னை கால்பதறச்செய்தது. துரோணர் விழிகளும் ஒரு கணம் கழித்தே என்னை அறிந்தன. கற்பித்தலில் மகிழும் அத்தனை ஆசிரியர்களுக்கும் கண்முன் உள்ள மாணவர்களே இனியவர்கள். என்னிடம் தன் மாணவர்களைக் காட்டி புகழ்ந்துகொண்டிருந்தார். அவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்லி என்னிடம் வில்லைக்கொடுத்து இலக்கொன்றை வெல்லச்சொன்னார். அந்த வில்லை கையிலெடுத்ததுமே திகைத்துவிட்டேன். புத்தம்புதியதாக இருந்தது அது. நடுங்கும் கைகளுடன் அதை நாணேற்றினேன். நான் கற்ற கலையெல்லாம் நான் இழந்த உடலுக்குரியது. நோய்மீண்டு நானடைந்த இவ்வுடல் அம்பை அறியவில்லை. இலக்கை நோக்கியபோது என் கண்கள் இருண்டன.”

திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான். “இலக்கு தவறியபோது துரோணர் என்னை நோக்கி கனிந்து புன்னகைத்து உன் உடலின் கணக்குகள் மாறிவிட்டன மைந்தா என்றார். அந்தக்கனிவுதான் அவரை ஆசிரியராக்குகிறது. ஆனால் நான் அச்சொற்களால் அகம் புண்பட்டேன். கண்கலங்கி வில்லைத்தாழ்த்தி அவர் கால்களைத் தொட்டுவிட்டு திரும்பினேன். என்னை அவர் பின்னின்று அழைத்ததை நான் கேட்கவில்லை. இரக்கத்திற்குரியவனாகும் ஆண்மகன் போல் இழிந்தவன் எவன்? வெறும் உடல். புழுவுடல். மட்கி அழியும் தசையுடல். அதுமட்டுமே நான். மீளமீள அதைத்தான் என்னுள் சொல்லிக்கொண்டே இருந்தேன். சிறுத்து நைந்து ஒரு புழுவாக இவ்வறைக்குள் வந்துசேர்ந்தேன். இவ்வறைக்குள் நுழைந்தபின் நான்குநாட்களாக நான் வெளியே செல்லவேயில்லை.”

“இன்று உன் ஆடலைப்பார்த்தேன்” என்று அவன் சொன்னபோது அவள் “ம்” என்று சொல்லி மேலும் இறுக அணைத்தாள். “என் உடலை உணர்ந்தேன். ஆகவேதான் உன்னை பார்க்கவேண்டுமென விழைந்தேன். என் உளமறிந்தவன் சயனன்.” அவள் குனிந்து அவன் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டாள். நாநுனியால் நா தீண்டினாள். அவன் கன்னத்தில் அவள் இனிய ஊன்மணமுள்ள மூச்சு பரவியது. அவள் இதழ்கள் அழுத்தமான மலர்மொட்டுகள் போலிருந்தன. இதழ்களின் துடிப்புகளினூடாக உரையாடிக்கொள்வதுபோல. ஒருவரை ஒருவர் உண்டு பின்பு மூச்சு ஒலிக்க விலகி அவன் “நான் நெடுந்தனிமை கொண்டிருந்தேன்” என்றான். “அறிவேன்” என்றாள். “எப்படி?” என்றான். “இத்தனை அடுக்குகளாக கடுஞ்சொல் சுற்றி உங்களை ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு சிறுதொடுகையில் உடல்நடுங்குகிறீர்கள்.”

அவன் அவள் கைகளை விலக்கி சினத்துடன் “நடுங்கவில்லை” என்றான். “சரி, இல்லை” என்று சொல்லி அவள் வெண்பற்கள் ஒளிவிட நகைத்தாள். “உன்னை அஞ்சுகிறேன் என நினைத்தாயா?” அவள் “இல்லையே” என்று சொல்லி அவன் தோள்களை வளைத்துக்கொண்டாள். “கையை எடு” என்று அவன் மேலும் சினந்தான். “சரி எடுத்துவிடுகிறேன்” என்று விலக்கிக்கொண்டு அதேவிசையில் முலைகள் அவன் மார்பில் பொருந்த அவன்மேல் விழுந்தாள். அவன் அவளை பிடித்துத் தள்ளி “விளையாடுகிறாயா? உன்மேல் காதல்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறாயா?” என்றான். அவள் அவன் செவியில் “பரத்தைமேல் காதல்கொள்ளாத ஆண்மகன் உண்டா என்ன? பத்தினியரை அணுகும்போது அந்தக்காதலைத்தானே உணர்வீர்கள்” என்றாள்.

அவன் சினத்துடன் எழுந்துகொள்ள அவள் ஆடை கலைந்து பின்னால் சரிந்து விழுந்தாள். “செல்… இப்போதே சென்றுவிடு” என்று மூச்சிரைத்தபடி அவன் சாளரம் நோக்கி சென்றான். ஏன் செல்கிறோம் என்று எண்ணியதுமே திரும்பி “இங்கு நிற்காதே” என்று கூவினான். “சரி, சென்றுவிடுகிறேன்” என அவள் குனிந்து தன் மேலாடையின் நுனியை பீடத்திலிருந்து இழுக்க மறுபக்கம் சரிந்து மேலாடை அவள் தோளிலிருந்து நழுவியது. ‘உஸ்’ என்ற ஒலியுடன் அவள் அதை அள்ளி முலைகள் மேல் இட்டுக்கொண்டு இடக்கையால் நெற்றிக்கூந்தலை ஒதுக்கி திரும்புகையில் அவன் எட்டு எடுத்து வைத்து அவள் இடையை வளைத்துப்பற்றி தன் உடலுடன் சேர்த்துக்கொண்டான். மேலாடையை பிடுங்கி வீசி அவள் முலைகளை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு இதழை இதழால் பற்றினான். நாகம் என அவள் உடல் அவனை சுற்றிக்கொண்டது.

பின்பு அவன் அவளைத் தூக்கி மஞ்சத்தில் வீசிவிட்டு மூச்சிரைக்க முகம் நெளிய “நஞ்சு நஞ்சு” என்று கூவியபடி சென்று சிறுபீடத்திலிருந்த தன் உடைவாளை எடுத்து உலோக ஒலியுடன் உருவி ஓங்கி அவளை வெட்டினான். அக்கணம் இடையில் ஒரு நரம்பு சற்றே இழுத்துக்கொண்டதனால் அவ்வெட்டு சரிந்து இறகுச்சேக்கையில் அவளுக்கு மிக அருகே விழுந்து புதைந்தது. அவளுடைய வெற்றுடலில் நீரலை என ஓர் அசைவு மட்டும் கடந்துசென்றது. அவள் அச்சமோ விதிர்ப்போ இல்லாமல் அசைவற்று அப்படியே கிடந்தாள். மூச்சில் முலைகள் மெல்ல ஏறியிறங்கின. முலைக்கண்களின் கருவட்டத்தில் மயிர்ப்புள்ளிகள் சிலிர்த்திருந்தன. விலாவெலும்புகள் வெண்தோலுக்குள் பாலைநில மணல்அலைகள் போல தெரிந்தன. அவள் விழிகள் அவனை நோக்கி ஒருசொல்லும் இல்லாமல் வெறுமனே விரிந்திருந்தன. வாளை மீள எடுத்துக்கொண்டு அவளை அவன் நோக்கியபோது அவள் செவ்விதழ்கள் மிகமெல்ல பிரிந்தன. உள்ளே இருவெண்பற்களின் நுனி மின்னியது.

அவன் வாளை அறைமூலையை நோக்கி வீசிவிட்டு சென்று பீடத்தில் அமர்ந்து தலையை கைகளில் தாங்கிக்கொண்டான். காதுகளை ரீங்காரம் ஒன்று நிரப்பியது. ஆனால் அப்பால் படுத்திருக்கும் அவள் உடலுக்குள் குருதி ஓடும் ஓசையைக்கூட கேட்கமுடியுமென தோன்றியது. அவன் உடலுக்கும் உள்ளத்திற்குமான அனைத்துத்தொடர்புகளும் அற்றுவிட்டிருந்தன. அவள் ஒரு சொல் உரைத்தால்கூட மீண்டும் சினம் மூண்டு வாளை எடுத்து அவள் கழுத்தை வெட்டிவிடுவோம் என உணர்ந்தான். ஒரு சொல். ஒரு சொல். ஒரேஒரு சொல். சொல். இதோ அப்பால் அச்சொல் திரள்கிறது. துளிக்கிறது. ததும்புகிறது. ஒருசொல். சொல்லிவிட்டால் அவளை வெட்டி வீழ்த்திவிட்டு குருதி வழியும் வாளை மெல்ல உதறிச் சொட்டி திரும்பி சயனனை அழைத்து அச்சடலத்தை அகற்ற ஆணையிடலாம். குருதி மெத்தையெங்கும் ஊறி ததும்பி பீடத்திலிருந்து கொழுத்த துளிகளாக சொட்டும். அவன் உடல்பதறத் தொடங்கியது. நரம்புகள் இழுபட்டு இறுகி இறுகி உச்சகட்ட அதிர்வில் நின்றன. நகங்கள் கைவெள்ளையில் ஆழப்பதிந்தன. உதடுகளில் பற்கள் புதைந்தன. கழுத்துத்தசைகள் இறுகி தலை ஆடிக்கொண்டிருந்தது.

ஆனால் அவள் ஓசையின்றி எழுந்து தன் மேலாடையை எடுத்து தோளில் சுற்றிக்கொண்டு தரையைத் தொடாதவள்போல நடந்து கதவைத்திறந்து வெளியே சென்றாள். அவள் ஆடைகள் உலையும் ஒலியை, திரள்தொடைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் ஒலியை கதவு கீல் ஒலிக்கத் திறந்து மூடிய ஒலியை கேட்டான். கதவின் விளிம்பு பொருந்தும் ஒலியை கேட்டான். அத்தனை நரம்புகளும் அறுபட அவன் தளர்ந்து பீடத்தில் பின்னுக்கு சரிந்தான். வெந்நீராவி பட்டதுபோல உடல் வியர்த்து நடுங்கி பின் குளிரத்தொடங்கியது. தன் பற்கள் கிட்டித்திருப்பதை உணர்ந்து வாயைத்திறந்தான். தாடைகள் வலித்தன. பெருமூச்சுடன் எழுந்தபோது தொடையிலிருந்து ஒரு நரம்பு நெஞ்சை வலியுடன் இழுத்தது. மீண்டும் பீடத்தில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். உடலுக்குள் ஓடும் குருதியை உணர்ந்தபடி அமர்ந்திருந்தான்.

பின்னர் தன்னுணர்வு கொண்டு எழுந்தபோது உடல் அடங்கிவிட்டிருந்தது. சற்று தலைசுழல்வது போலிருந்தாலும் நடக்க முடிந்தது. கதவை அணுகி அதை மெல்ல இருமுறை தட்டினான். சயனன் திறந்து தலைவணங்கி நின்றான். “மது… யவன மது” என்றான். அவன் தலைவணங்கி சென்றபின்னர் அவன் கண்களை நினைத்துக்கொண்டான். அவற்றில் இருந்தது பணிவா, நகைப்பா? அதை ஒருபோதும் அறியமுடியாது. அரசர் அறியமுடியாத ஆழமென்பது அணுக்கனின் அகம்தான் போலும். அறைக்குள் திரும்ப அஞ்சியவன் போல வெளியே சென்று இடைநாழியில் நின்றான். நீண்ட மரப்பாதையில் மீன்நெய்விளக்குகளின் வெளிச்சம் சிந்திக்கிடந்தது. எவருக்காகவோ காத்திருந்தது. எவரோ சென்றபின் எஞ்சியிருந்தது. எவரும் தீண்டாமலிருந்தது. அப்பால் சயனனின் காலடிகள். அக்காலடிகளை ஏற்று நாகம்போல நெளிந்தது இடைநாழியின் நீள்தரை. நெளிந்து சுருண்டு பத்தி எழுப்பி சீறும் என்பதுபோல.

சயனன் அளித்த பொற்கோப்பையை வாங்கி ஒரே மூச்சில் அருந்தினான். “இன்னும்” என்றான். அவன் நீலப்பளிங்குக் குடுவையில் இருந்து மதுவை மீண்டும் ஊற்றினான். அதை வாங்கி உறிஞ்சிவிட்டு “அதைக்கொடு” என்றான். சயனன் அதை நீட்ட தயங்கியபோது கைநீட்டி பிடுங்கிக்கொண்டு அறைக்குள் சென்று கதவை தோளால் உந்தி மூடியபின் நின்றான். மீண்டும் மீண்டும் குடுவையிலிருந்தே மதுவை குடித்தான். கடுந்தேறல் இனிமையும் துவர்ப்புமாக திகட்டி வந்தது. ஆவி மூக்குத்துளைகள் வழியாக சீற உடல் உலுக்கிக்கொண்டது. குடுவையை பீடத்தில் வைத்தபின் அமர்ந்தான். கண்களை மூடி குடலுக்குள் செல்லும் கசப்புத்திரவத்தை நெஞ்சால் சிந்தையால் உணர்ந்தான். அங்கே அது அனலாகியது. தசைகளை எரித்து வழிந்தோடியது. உடலின் வேர்முனைகள் அந்தத் தழலோடையை தீண்டித்தீண்டி தவித்தன.

காதுமடல்கள் சூடாகியபடியே வர கண்களை திறந்தான். கண்களிலும் நீராவிபடிந்து பார்வை மறைத்தது. உதடுகள் தடித்துத் தொங்கின. எழப்போனவன் உடல் மிகுந்த எடைகொண்டிருப்பதை உணர்ந்தான். மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உள்ளே சுழன்ற செம்மஞ்சள் ஒளிப்புள்ளிகளை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் எண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் அதிர்ந்து அவை எழுந்து அமைந்தன. விழிதிறந்தபோது குறுபீடத்தின்மேல் ஒரு பெரும் இந்திரநீலக் கல்லைக் கண்டு திகைத்து கைகளை ஊன்றிக்கொண்டான். ஊன்றிய கைகளின் மூட்டுகள் அதிர்ந்தாடின. இந்திரநீலம். மண்ணில் சொட்டிய விண்மீனின் விந்து. வேட்கையின் மணிவடிவம். நச்சுக்குமிழி. அதை நோக்கி பொருளின்றி கைநீட்டியதும்தான் அது மதுக்குடுவை என்று தெரிந்தது. தலையை அசைத்தபடி திரும்பி படுக்கையை பார்த்தபோது திடுக்கிட்டான். வெண்சேக்கையில் ஒரு யோனி வாய் திறந்திருந்தது.

எரிவிண்மீன் என ஒருகணத்தில் ஒருகோடி யோசனைதூரம் பாய்ந்து அவன் சிந்தை தரையை அறைந்தது. பீடம் ஒலிக்க பாய்ந்து எழுந்து தன் உடைவாளை எடுத்து உருவி கழுத்தில் வைத்தபோது பின்பக்கம் ஓசையுடன் கதவைத்திறந்த சயனன் “இளவரசே” என்றான். அவன் மூச்சடக்கி நின்றான். “இளவரசே, காலையில் இளவரசி தங்களை முகமண்டபத்தில் சந்திக்க விழைவதாக சொன்னார்கள்” என்றான் சயனன். அவன் தோள்கள் தளர்ந்தன. உடைவாளை தாழ்த்தி சிலகணங்கள் நின்றபின் திரும்பி சயனனின் விழிகளை பார்த்தான். அவன் இமைசரித்து “இளவரசியின் ஆணையை முன்னரே சொல்லவேண்டுமென எண்ணினேன்…” என்றான். “எப்போது சொன்னாள்?” என அவன் தாழ்ந்த குரலில் கேட்டான். “ஆடல் முடிந்து நீங்கள் அவை நீங்கியபோது.”

அவனை நோக்காமல் “அப்படியென்றால் இவள் இங்கு வந்ததை அவள் அறிவாள்” என்றான். “இளவரசி அறியாமல் இங்கு ஏதும் நிகழவியலாது” என்றான் சயனன். திருஷ்டத்யும்னன் அசைவற்றவனாக நின்றபின் “இவ்வறைக்குள் என்னால் துயிலமுடியாது” என்றான். “வேறு அறையை சித்தமாக்குகிறேன். இந்த சேக்கையை இப்போதே அகற்றிவிடுகிறேன்.” திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றபின் “இந்த மது வலுவற்றது. வெறும் குமட்டலை மட்டுமே அளிக்கிறது” என்றான். “இளவரசே, இப்போதே தங்கள் கால்கள் தள்ளாடுகின்றன.” திருஷ்டத்யும்னன் இருண்ட சாளரம் வழியாக பார்த்தபடி “ஏன் காலையிலேயே வரச்சொன்னாள்?” என்றான். “அவர்கள் எண்ணுவதை நாம் அறியமுடியுமா?” என்றான் சயனன்.

பெருமூச்சுடன் ”நான் நாளையே பாஞ்சாலத்திற்கு திரும்புவதாக இருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “புதுநகருக்கான கால்கோள் நெருங்குகிறது. சூத்ராகிகளின் அவை நாளைமறுநாள் கூடுகிறது. சிற்பிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்…” திருஷ்டத்யும்னன் “ஆம், ஆனால் இது என் நகரம் அல்ல” என்றான். சயனன் ஒன்றும் சொல்லவில்லை. “ஏன் இந்நகரை இந்திரனுக்குரியது என்கிறாள்?” என அவன் தனக்கே என சொல்லிக்கொண்டான். சயனன் பேசாமல் நின்றான். “சொல், உனக்கு என்ன தோன்றுகிறது?” சயனன் “அது நாகர்களுக்கு இந்திரனால் அளிக்கப்பட்டது. காண்டவப்பிரஸ்தம் என்று அதை முன்பு சொன்னார்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் “நாகங்கள்… ஆம்” என்றான். “அவள் நாகங்களை அறிவாள்…”

சயனன் “இளவரசி மும்முறை அங்கே சென்றுவந்துவிட்டார்கள்” என்றான். அவன் பேச்சை மாற்ற விழைகிறான் என்று புரிந்தாலும் திருஷ்டத்யும்னன் ”இந்திரனை அறிவதென்பது…” என்றபின் பெருமூச்சுவிட்டு “எங்கே என் அறை?” என்றான். சயனனும் எளிதாகி “வருக இளவரசே, காட்டுகிறேன்” என்றான். உடைவாளை கச்சையில் கட்டிக்கொண்டு தள்ளாடும் கால்களுடன் திருஷ்டத்யும்னன் முன்னால் நடந்தான். மதுக்குடுவையுடன் சயனன் தொடர்ந்தான். “அர்ஜுனர் எங்கிருக்கிறார்?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை. இறுதியாக துவாரகையிலிருந்து செய்தி வந்தது.” திருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். சயனன் “இந்திரப்பிரஸ்தம் என்று பெயரிடுவது அவருக்காகவே என்று சொல்கிறார்கள் சூதர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவருக்காகவா?” என்றபின் தலைதிருப்பி “அவள்முன் அனைவரும் எளியவரே” என்றான். சயனன் “ஆம்” என்றான். அவன் தூணில் கையூன்றி நின்று “அவள் அனைவரையும் காய்களாக்கி விளையாடும் பெருநாகம்” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அவள் விதியுடன் நானும் கட்டப்பட்டிருக்கிறேன்… அவள் செல்லுமிடமெல்லாம் செல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சிறிய படுக்கையறைக்குள் முன்னரே சேக்கையில் வெண்பட்டு விரிக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்யும்னன் அதனுள் நுழைந்ததுமே ஓர் ஆறுதலை உணர்ந்தான். இருக்கையில் அமர்ந்தபடி “அந்தப்பெண்ணுக்கு உரிய பொருளை கொடுத்துவிடு” என்றான். “அவள்…” என அவன் சொல்லத் தொடங்க “அவள்மேல் பிழையில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் “ஆணை” என்றான். “மதுக்குடுவையை கொடு” என்று திருஷ்டத்யும்னன் கைநீட்டினான். “இப்போதே நீங்கள் நிறைய…” என்று சயனன் சொல்லத்தொடங்க “கொடு” என உரக்கச் சொல்லி கைநீட்டினான். அவன் அளித்த குடுவையில் எஞ்சியிருந்ததையும் குடித்ததும் உடல் உலுக்கிக்கொண்டது. அவன் குமட்டி உமிழ்வதற்குள் சயனன் அந்தக்குடுவையையே அருகே பிடித்துக்கொண்டான். மூக்குவழியாக வந்த மது மெல்லிய சவ்வை எரியச்செய்தது. முகமே தீப்பற்றிக்கொண்டதுபோலிருந்தது.

“படுத்துக்கொள்ளுங்கள் இளவரசே, நீங்கள் துயிலமுடியும்” என்றான் சயனன். “ஆம்” என்றபின் அவன் கை நீட்டினான். அவனைப் பற்றி எழுப்பி படுக்கையை நோக்கி கொண்டுசென்றான் சயனன். கால்களை நீட்டிக்கொண்டபோது சயனன் அவன் கச்சையை அவிழ்த்து உடைவாளை எடுத்து குறுபீடத்தில் வைத்தான். “பரத்தை. மயக்கும் கலையறிந்த பரத்தை…” என்றபின் வாயில் ஊறிய எச்சிலை காறி உமிழ்ந்து “கீழ்மகள்! அவளை கொன்றிருப்பேன். என் உடல் தன் நிகர்நிலையை இழந்துவிட்டதனால் வெட்டு தவறியது” என்றான். சயனன் “அவளுக்குத் தெரியும்…” என்றான். “ஆட்டர்கள் உடலெங்கும் கண்கொண்ட பூனையை போன்றவர்கள்.” திருஷ்டத்யும்னன் விழிதிறந்து “ஆனால் அவள் சற்றும் அசையவில்லை” என்றான். “நான் உறுதியாக அறிவேன். அவள் விலகவில்லை.”

சயனன் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் விழிகளில் தெரிந்தது. திருஷ்டத்யும்னன் மீண்டும் குமட்ட அவன் குடுவையை எடுத்து நீட்டினான். ஆனால் இம்முறை சற்று எச்சில்கோழையே வந்தது. கையூன்றி நிமிர்ந்து மல்லாந்து பெருமூச்சுவிட்டு “அப்படியென்றால் அவள் இறக்கவும் சித்தமாக இருந்திருக்கிறாள்!” என்றான். “ஆம்” என்றான் சயனன். “ஏன்?” என்றான் திருஷ்டத்யும்னன். “தெரியவில்லை இளவரசே. பெண்களை புரிந்துகொள்வது எளிதல்ல.” திருஷ்டத்யும்னன் சரிந்துவரும் இமைகளை தூக்கியபடி அவனை நோக்கினான். “அவள் பரத்தை. காமம் சூழும் கலை கற்று ஒழுகுபவள். அவள் ஏன் என் கையால் இறக்கவேண்டும்?” சயனன் “அவள் விரும்பியிருக்கலாம்” என்றான். “ஏன்?” “எவற்றுக்கோ கழுவாயாக” என்றான் சயனன்.

சிலகணங்கள் நோக்கிக்கிடந்தபின் கையூன்றி எழுந்தமர்ந்து “எவற்றுக்கு?” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் ”அறியேன் இளவரசே” என்றான். பின்பு “மேனகையிடம் இந்திரன் சொன்னான், உண்மையான காதல்கொள்ளும்படி. அக்காதலே விஸ்வாமித்ரரை மயக்கியது” என்றான். இமை கனத்துச்சரிய திருஷ்டத்யும்னன் “அப்படியா சொன்னான்?” என்றான். “விழிகளில் காதலுடன் செல்லச்சொன்னான். விழிகளுக்கு நடிப்பு தெரியாது” என்றான் சயனன். “விழிகளா?” என்று தனக்குத்தானே என திருஷ்டத்யும்னன் சொன்னான். சயனன் “நான் செல்லவேண்டும். நீங்கள் சற்றேனும் துயிலவேண்டும் அல்லவா?” என்றான். “சொல்… மூடா சொல்லிவிட்டுப் போ. எதன்பொருட்டு அவள் என் கையால் உயிர்விடவிருந்தாள்?” சயனன் “நான் சொல்லமுடியாது அதை” என்றான். “அவளை கூட்டி வா… அவளிடமே கேட்கிறேன்.” சயனன் பேசாமல் நிற்க “கூட்டிவா” என்றான். “அவளை உடனே நகர்நீங்கச் சொல்லிவிட்டேன். முகமிலியாக அஸ்தினபுரியின் எல்லைக்கு அப்பால் வாழ்வதுவரைதான் அவள் உயிர்வாழமுடியும். இப்போது கோட்டைவாயிலை கடந்திருப்பாள்.”

”ஏன்?” என்றதுமே திருஷ்டத்யும்னன் அதை புரிந்துகொண்டு பெருமூச்சு விட்டான். “ஆம், நீ செய்தது சரிதான். அவள் எங்கேனும் எளியசூதப்பெண்ணாக வாழட்டும்” என்றான். பின்னர் கண்களைமூடிக்கொண்டே “ஆனால் அவள் ஏன் விலகவில்லை? என் கையால் அங்கே வெட்டுண்டு கிடந்தாள் என்றால் அவள் அடைவதுதான் என்ன?” என்றான். “இளவரசே, அவள் விலகிச்செல்லும்போது அவள் விழிகளை நோக்கினீர்களா?” என்றான் சயனன். “இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “நோக்கியிருக்கவேண்டும்… அவ்விடையை அடைந்திருப்பீர்கள்” என்று சொன்னபின் சயனன் தலைவணங்கி வெளியே சென்றான். நீர்ப்பாவை போல சயனன் சென்று கதவைத்திறந்து மறைவதை விழுந்து கொண்டே இருப்பதுபோன்ற உணர்வுடன் திருஷ்டத்யும்னன் நோக்கிக்கொண்டிருந்தான். கதவு மீண்டும் திறந்து சுஃப்ரை வருவதை எதிர்பார்த்தன அவன் புலன்கள். அவ்வெதிர்பார்ப்பு அசையாமல் நெடுநேரம் அறைக்குள் நின்றுகொண்டே இருந்தது.

முந்தைய கட்டுரைமாபெரும் பயணம்
அடுத்த கட்டுரைஓர் அக்கினிப்பிரவேசம்