‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 2

பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 2

அகன்றுவிரி எழினி உவகைச் சொல்முளைத்த இதழ் என பிரிந்தகல உள்ளே ஏழடுக்கு நிலைவிளக்கு ஐம்பது நெய்த்திரிகளுடன் மலர்ச்செண்டு போல நின்றிருந்தது. இருபக்கமும் கரவெழினிக்கு அப்பால் அமர்ந்திருந்த இசைச்சூதரின் தண்ணுமையும் முழவும் மணியும் வர்கோலும் தாளத்துடன் முழங்கின. இருபக்கங்களிலிருந்தும் ஆணும் பெண்ணுமென இருஆட்டர் சமன்நடையிட்டு வந்து நிலைவிளக்கின் வெளிச்சத்தில் நின்று கைகூப்பி இடை வளைத்து அரங்கை நடனமுறைப்படி வணங்கினர்.

ஆட்டன் மான்தோல் ஆடை அணிந்து சடைமுடிக்கற்றைகள் சூடி நீண்டதாடியுடன் முனிவர்கோலத்தில் இருந்தான். ஆட்டள் நீலமுகில்நிறப் பட்டாடை சுற்றி நீள்முடிக்கற்றையுடன் மலர்தார் சேர்த்தணிந்து ஒளிவிடும் மணியாரம் முலைமேல் துவள குண்டலமும் தோள்வளையும் கைவளையும் குலுங்க இடைமேகலை நலுங்க சதங்கைகள் சிணுங்க விண்மகள் கோலத்திலிருந்தாள். செவ்விதழும் சிரிப்பூறிய நீள்விழிகளும் செப்பெனத் திரண்ட பணைமுலைகளும் சிறுத்த இடையும் கொண்டிருந்தாள். ஆட்டன் இடைவளைத்து ஏகபங்க நிலையில் நிற்க அவள் திரிபங்க நிலையில் தழலென நெளிந்து நின்றாள்.

அவையை மும்முறை வணங்கி ஆட்டன் சொன்னான் “வெண்கலை மலர்மகளுக்கு வணக்கம். அவள் சொல்குறித்த சிறுகோட்டு பேரியானைக்கு வணக்கம். அவன் தந்தைக்கும் அருகமர்ந்த அன்னைக்கும் வணக்கம். அவர்களுக்கு இணைநின்ற விண்ணளந்தவனை அவன் நெஞ்சமர்ந்தவளை உந்தியெழுந்தவனை வணங்குக எமது சிரம்.” பேரியாழுடன் குழல் கலப்பதுபோல ஆட்டள் குரல் எழுந்தது. “இங்கு அவையமர்ந்த அஸ்தினபுரியின் பேரரசருக்கு வணக்கம். அவர்மேல் கவிந்த வெண்குடைக்கு அவர் கையமைந்த செங்கோலுக்கு அவர் நிறைக்கும் அரியணைக்கு அவ்வரியணை சூடிய குலப்பேராவலிக்கு வணக்கம். அவர்கள் இடம் அமர்ந்து அறம்புரிந்த மூதன்னையருக்கு அம்மூதன்னையர் விழிகளுடன் இங்கமர்ந்த அரசியருக்கு அவர் மணிவயிறு எழுந்து இக்கொடிவழியின் மலர்களான இளவரசர்களுக்கு அவர்களின் நெஞ்சமர்ந்த காதலியருக்கு வணக்கம். இனிதாகுக இப்பொழுது.”

”சிருங்க குலத்துச் சூதனாகிய என்பெயர் சியாமன். என்னுடன் நடமிடும் இவள் சுஃப்ரை. சொல்லும் பொருளுமென நாதமும் தாளமும் என எங்கள் உடல்கள் இங்கு இணைவதாக. அம்மையும் அப்பனும் ஆடிய நடனம் எங்கள் அசைவுகளிலும் எழுவதாக! யாழ்தேரும் இடமெல்லாம் நுண்ணுருவாக எழுந்தருளும் எங்கள் குலமூதாதையரும் மூதன்னையரும் இங்கும் வந்து சூழட்டும். அவர்கள் வாழ்த்துக்களால் எங்கள் சொற்களில் நன்று சூழட்டும்!” சுஃப்ரை “இனிதாகுக இச்சொற்கள்! இங்கே முளைத்தெழுக! பெருங்கலங்களை சுமந்துசெல்லும் கங்கைபோல மானுடத்தை அள்ளிச்செல்லும் கனவுகள் ஒளிபெறுக!” என்றாள். இருவரும் கைகூப்பி நிற்க “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றனர் அவையோர்.

அவர்கள் விலகி இருமருங்கும் மறைய நிலமுக எழினி விலகி அங்கே வெண்தலைப்பாகையும் குண்டலங்களும் கையில் தலைக்கோலுமாக சூத்ரதாரன் தோன்றினான். விரைந்த நடனக்காலடிகளுடன் வந்து விளக்கொளியில் நின்று “அதாவது அவர்கள் இருவரும் இங்கே ஒரு நடனத்தை ஆடவிருக்கிறார்கள். சிறந்த பரிசில்களை அஸ்தினபுரியின் அரசரிடமிருந்தும் அரசியரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்கள்” என்றான். மேலும் குரல்தாழ்த்தி கண்சிமிட்டி “மகதமன்னர் ஜராசந்தர் அளித்த வைரஆரத்தைப்பற்றி பெருமைகொண்டிருக்கிறார்கள். இன்றோடு அப்பெருமை அழியப்போகிறது என அறிந்திராதவர்கள். சரி நமக்கென்ன? சொல்லித்தெரிவதா மாமன்னர் பெருமை?” என்றான்.

பின்னர்தன் கோலைச்சுழற்றி “நான் வரும்போதே கேட்டேன், என்ன ஆட்டம் என்று. மூடச்சூதனே, உன்னிடம் சொல்லக்கூடியதல்ல அது. கல்வியும் கலையும் செறிந்த அஸ்தினபுரியின் அவைநிகழ்வை முன்னர் அறியும் தகுதிகொண்டவனா நீ? என்றனர். அறியும் தகுதி கொண்டிருப்பதனால்தானே அடியேன் இங்கு நின்றிருக்கிறேன். ஒட்டுக்கேட்பவனுக்கு மறைத்துவைக்கப்படும் எல்லாம் தெரிந்திருக்கும், முச்சந்தி மெய்யறிவு மட்டும் வசப்படாது என்பார்கள். சியாமனின் ஆடையணியை நோக்கினேன். நீ விஸ்வாமித்திரன் அல்லவா என்றேன். அவன் எப்படித்தெரியும் என்றான். உடலில் ஷத்ரியனுக்குரிய நிமிர்வு உள்ளது. விழிகள் வைரம்போல் மின்னுகின்றன. ஆனால் அணிந்திருப்பதோ கடுநெறித் தவசீலரின் தோலாடை. தாடி இறங்கி மார்பைத் தொடுகிறது. தோளில் விரிந்துள்ளன சடைக்கற்றைகள். வேறு எவர் இப்புவியில் இக்கோலத்தில் இருக்கமுடியும்?” என்றேன்.

கோலைச்சுழற்றிச் சிரித்து நின்று “அப்படியென்றால் இது மேனகை. அருநிலைபடிவரின் ஆழ்தவம் முடக்க விண்ணிறங்கி வந்தவள். சரிதான். அந்தக்கதையா? அதையா இத்தனை மந்தணமாக வைத்துள்ளீர்கள்? அட, இப்பாரதவர்ஷத்தில் வாய்திறந்து பாலருந்தி அன்னையை அறியும் குழந்தை அனைத்தும் அறிந்த கதை அல்லவா? ஏன் சோனகரும் யவனரும் காப்பிரியும் பீதரும் கூட அறிந்த வரலாறு அல்லவா என்றேன்” என்ற சூத்ரதாரன் குரலை மாற்றி ”அதற்கு இந்த இளஞ்சூதன் சொல்கிறான், அவர்கள் ஆடப்போவது வழக்கமான மேனகாவிஸ்வாமித்ரம் அல்ல என்று. என்ன என்ன என்ன என்றேன். நகைத்துக்கொண்டு விலகிச்சென்றுவிட்டனர். சரி, அப்படி என்னதான் ஆடப்போகிறார்கள் என்று பார்ப்போம்” என்றான்.

நடுவே வந்து நின்று கோலை ஊன்றி “சரி, நான் சொல்லக் கடமைப்பட்டவன். என் பணியை செய்துவிடுகிறேன். பிரம்மன், அத்ரி, சந்திரன், புதன், புரூரவஸ், விஜயன், ஹோத்ரகன், ஜஹ்னு, பூரு, பலாகன், அஜகன் என்னும் பெரும்புகழ்கொடிவழியில் வந்த மாமன்னர் குஜர். அவர் மைந்தர் குஜநாபர் கன்யாகுப்ஜ நாட்டை கோல்வளையாது நூல்திறம்பாது ஆண்டார். நூறு அஸ்வமேதமும் நூறு ராஜசூயமும் இயற்றிய குஜநாபர் தன் மனைவி ஹ்ருதாசியின் குருதியில் அவற்றின் பயனை பயிரிட்டுப் பெற்ற மைந்தர் மாமன்னர் காதி. அவர் புகழ் வாழ்க! அவையீரே, மாமானுடரை மைந்தராகப்பெற்றவர் இறப்பதில்லை” என்ற சூத்ரதாரன் “மேலும் சொல்கிறேன். இது சொல்வதற்குரிய தருணம்” என்று தொடர்ந்தான்.

”முனிவருக்கு அன்பராகிய காதி இம்மண்ணை முழுது வெல்லும் மைந்தனுக்காக விழைந்தார். அவைவைதிகரைக் கூட்டி வேள்விகளுக்கெல்லாம் வேள்வி எது என்றார். அஸ்வமேதமும் ராஜசூயமும் அல்ல. அவ்வேள்விகளை தன் இடமும் வலமும் எனக்கொண்ட முழுமுதல் வேள்வி. அவர்கள் விஸ்வமேதமே நிகரற்ற வேள்வி என நூல்கள் சொல்கின்றன, ஆனால் அது விண்ணவர் ஆற்றும் வேள்வி, மண்ணில் எவரும் அதை நிகழ்த்தியதில்லை என்றனர். என் குடியும் குலமும் கொடியும் முடியும் அவியாகட்டும், அவ்வேள்வியே நிகழட்டும் என்றார் காதி. ஆயிரம் வைதிகர் இரவும் பகலுமென பன்னிரண்டாண்டுகாலம் இடைமுறியாது அவியிட்டு தழலிறங்காது எரியெழுப்பிச் செய்த விஸ்வமேதம் முழுமைகொண்ட அன்று அவியுணவை தன் அறத்துணைவி மோதவதிக்கு அளித்தார்.”

“அன்னை வயிற்றில் எழுந்த அனலென கருவுற்று வந்த மைந்தருக்கு விஸ்வாமித்ரன் என்று பெயரிட்டார். தொடர்ந்து வந்த மங்கை சத்யவதி. என்று அழைக்கப்பட்டாள். சத்யவதியை ருசீக முனிவர் மணந்தார். கௌசிக குலத்து விஸ்வாமித்திரர் கன்யாகுப்ஜத்தின் மணிமுடியை சூடியபோது விழியிழந்த அவைச்சூதர் ஒருவர் மலைமுடிகள் சூடவேண்டியது அணிமுகில்களை மட்டுமே என்றார். பன்னிரண்டாண்டுகாலம் கன்யாகுப்ஜத்தின் மீது அறநெறிவழுவா அரசன் ஆளும் நகர்மேல் அணிசெய்யும் ஹிரண்யத்வஜம் என்னும் பொன்னிற முகில்கீற்று அசையாமல் அமர்ந்திருந்தது என்றனர் கவிஞர். புவி இருக்கும் வரை புகழிருக்கும் படிவரை வணங்குக! மண்ணிலிழிந்த ஒவ்வொரு உயிருக்கும் விண்ணேறும் வாய்ப்பும் வல்லமையும் உள்ளது என்பது நூல்நிலை. ஆயினும் வெண்முகில்களை படிக்கட்டாக்கியவர் சிலரே. விண்ணவனாகி நின்ற மண்மைந்தனை வணங்குக! அவன் மானுடத்தின் மணிமுடி என்க!”

சூத்ரதாரன் மும்முறை வணங்கியபின் தன் உடலசைவுகளை முழுமையாக மாற்றி தலைப்பாகையை கழற்றி உதறி இடையில் கட்டிவிட்டு மெல்ல மேடையில் சுற்றி நடந்தான். நெற்றியில் கைவைத்து கூர்ந்து நோக்கினான். ஓசைக்காக செவிகளில் கைவைத்தான். மறுபக்கம் கானக எழினிக்கு அப்பாலிருந்து நிமிர்ந்த தலையுடன் கையில் கமண்டலமும் தண்டமும் ஏந்தி விஸ்வாமித்திரர் நடந்து வந்தார். சூத்ரதாரன் அவரை வணங்கி “வணங்குகிறேன் தவசீலரே, உத்கலத்தைச் சேர்ந்த வணிகனாகிய என்பெயர் சபரன். எவரால் நான் பேரருள் பெறப்போகிறேன் என நான் அறியலாமா?” என்றான். சியாமன் கைதூக்கி அவனை வாழ்த்தி “நான் விஸ்வாமித்ரன். அறம் வளர்த்த மன்னனாக இருந்தேன். இன்று தவம் வளர்க்கும் முனிவனாக திகழ்கிறேன். நீயும் உன்குடியும் வாழ்க!” என்றான்.

“ஆ, தாங்களா!” என்று சபரன் கைகூப்பினான். “வசிட்டருடன் காமதேனுவுக்காக போரிட்டவர். திரிசங்குவிற்காக பொன்னுலகை உருவாக்கி விண்நிறுத்தியவர். குளிர்நீர் சரஸ்வதியில் குருதிப்பெருக்கை எழுப்பியவர். ராகவராமனுக்கு வில்லும் சொல்லும் கற்பித்தவர். நான் காண்பதென்ன கனவா? இல்லை நான் இறந்து விண்ணுலகு எய்திவிட்டேனா?” விஸ்வாமித்ரர் கைநீட்டி புன்னகையுடன் அவனை வாழ்த்தி “நீ என்னைக் காணும் பேறுபெற்றாய். நீ அளித்த கொடைகளும் உன் தந்தை விட்டுச்சென்ற பயன்களும் உனக்கு கனிந்தன. நீ வாழ்வாய்” என்றார். சபரன் “ஐயனே, இந்த அடர்வனத்தில் அடிகள் என்ன நோக்குடன் அணைந்தீர் என அறியலாமா?” என்றான். விஸ்வாமித்ரர் “இனி இப்புவியில் நான் அடைய ஏதுமில்லை வணிகனே. விண்ணவனின் அரியணையில் அமர விழைகிறேன். மாகேந்திரம் என்னும் கடுநோன்பு தவமியற்ற இங்கு வந்தேன். அதோ அந்த மலையுச்சியில் இருக்கும் இந்திரமேகம் என்னும் இடத்திற்குச் செல்கிறேன்” என்றபின் அவனைக் கடந்து சென்றார்.

சபரன் குனிந்து அவரது பாதங்கள் பட்ட இடத்தைத் தொட்டு தன் தலையில் சூடிக்கொண்டிருந்தான். அவனுக்குப்பின்னால் எவரோ வரும் காலடியோசை கேட்டது. திகைத்துத் திரும்பி செவிகூர்ந்தபின் தத்தளித்து அங்குமிங்கும் ஓடி தன் இடையில் இருந்த கச்சையை அவிழ்த்து மரம்போல நீட்டி நிறுத்தி அதன் பின் பதுங்கிக்கொண்டு எட்டிப்பார்த்தான். நீலப்பட்டாடை அணிந்து அணிகள் ஒளிவிட கார்குழல் காற்றில் பறக்க மேனகை ஒசிந்து உலைந்து கையலைய இடைநெளிய நடந்துவந்தாள். அவளைக் கண்டு சபரன் திகைத்து மூச்சடக்கி வாய்திறந்தான். அவள்மேல் ஆடியால் ஒளியை எதிரொளித்து சுழற்றினான் கரவெழினிக்குள் நின்ற சூதன். பெருமுரசம் இடியோசையாகியது.

வஜ்ராயுதம் மின்ன இடியோசையென எழுந்த இந்திரனைக் கண்டு மேனகை நெஞ்சைப்பற்றி நிமிர்ந்து நோக்கினாள். அவளைச்சூழ்ந்து நெளிந்த மின்னல்கள் அவிந்தன. இடியோசையுடன் கலந்தெழுந்தது இந்திரனின் குரல். “இளையவளே, நீ என் பணிக்காக இன்று மண்ணிலிறங்கினாய். உன்னால் இந்திரவுலகு காக்கப்படட்டும்.” மேனகை “தேவர்க்கரசே, நான் தங்கள் பணிப்பெண்” என்றாள். பேரிடியொன்று மின்னுடன் எழுந்து அங்கே நின்றிருந்த திரையாலான மரம் தீப்பற்றி எரிய அதன்பின் நின்றிருந்த சபரன் பாய்ந்தோடி ஒரு பாறைக்குப்பின் பதுங்கிக்கொண்டான். எரியெழுந்து தழலாடியது. மின்னல்கள் மேடையெங்கும் துள்ளித்துடித்துச் சுழன்றன.

“இந்திரனை வணங்குக! விண்ணுக்குரியவனை, முகில்களின் அரசனை, மின்னுடைவாள் கொண்டவனை, தெய்வங்களுக்குரியவனை வாழ்த்துக!” என சூதர்கள் சேர்ந்து பாடினர். தண்ணுமையும் முழவும் குழலும் யாழும் சேர்ந்திசை எழுப்பி சூழ்ந்தன. வெண்ணிறத்துணிக்குள் இருவர் புகுந்துகொண்டு சமைத்த வெள்ளையானை துதியாட்டி செவியாட்டி அரங்குக்கு வந்தது. அதன் மேல் வைரக்கதிர் முடியும் விரியொளிக் குண்டலங்களும் செம்மலர் ஆரமும் வெண்பட்டாடையும் அணிந்த இந்திரன் வீற்றிருந்தான். அவன் வலக் கையிலிருந்து மின்னிச்சிதறியது வஜ்ராயுதம். இடக்கையில் இருந்தது வெண்சுடர் எழுந்த பாரிஜாதம். மேனகை அவனருகே சென்று தலைவணங்கி நின்றாள்.

அவளை வாழ்த்தி இந்திரன் “அழகியே கேள். அங்கே மலையுச்சியில் அமைந்த இந்திரமேகத்தில் மாகேந்திரம் என்னும் கடுந்தவம் இயற்றும் முனிவரை உன் அகவிழியால் பார். அவரை உன் அழகால் வெல்க! இனியவளே, ஐம்மலர் அம்புகளைத் தொடுக்க அனங்கன் உன்னை வில்லாக்கட்டும்” என்றான். “நான் அஞ்சுகிறேன் இறைவா. நான் எளியவள். பெருஞ்சினமுனிவரின் கடுஞ்சொல்லை எண்ணி என் மெய் விதிர்ப்பு கொள்கிறது” என்றாள் மேனகை. “ஆம், அவர் அனலுருவானவர். ஆனால் அனலை அணைக்க புனலை அமைத்த பெருவல்லமை உனக்கு அருள்செய்க!” என்றான் இந்திரன்.

“என் சொற்குவை ஒழிகிறது. என் சித்தம் எரிகிறது. என்னில் எஞ்சுவதென ஏதுமில்லை அரசே” என்றாள் மேனகை. இந்திரன் நகைத்து “உன் கருவறைக்குள் குடிகொள்ளும் அன்னைப்பெருந்தெய்வங்களை வணங்குக! அவர்கள் அறியா சொல் இல்லை. அவர்கள் காணாத வழியும் இல்லை. அவர்கள் பிறப்பித்த உயிர்க்குலங்களின் அனைத்து நலன்களாலும் வாழ்த்தப்பட்டிருக்கிறது அவர்கள் கொண்ட பெருங்காமம்” என்றான். “அறிக இளையோளே, இப்புடவியை ஆக்கிய முதற்பேரன்னை. காமத்தை மட்டுமே அவள் தன் நெஞ்சிலிருந்து எடுத்தாள். காமரூபிணியின் கோடிகோடி பாவனைகளால் அழகுற்றிருக்கிறது விசும்பு. கண் சுடர்ந்து இதழ் கனன்று முலைமுனைகொண்டு இடையொசிந்து மதம் சொட்டி காமம் கொள்ளும் பெண்ணில் எழுகிறாள் காலக்கனல் கொண்டு இப்புடவி சமைத்த குலமகள்.”

மேனகை கைகூப்பி “எந்தையே, முன்பு குபேரநிலை அடைய இம்மாமுனிவர் கௌபேரம் என்னும் பெருந்தவமியற்றியபோது வித்யுல்பிரபை என்னும் அப்சரநங்கை குபேரனால் அனுப்பப்பட்டாள். மின்னொளிப்பேரழகு கொண்ட அவள் அவரது தவச்சாலைக்குச் சென்று தன்னழகைக் காட்டி அவரை வெல்லமுனைந்தாள். அவர் அவளை தீச்சொல்லிட்டு அரக்கியென்றாக்கினார்” என்றாள். இந்திரன் “ஆம், அவள் அவரை வெல்லமுடியாதானபோது தன் சினத்தால் அவ்வுருவை அடைந்தாள். தோற்கத்தோற்க கனிபவளே காமக்கலையறிந்த பெண் என உணர்க!” என்றான்.

“ஒரு யுகம் அவள் அக்கோரவடிவில் அலைந்தாள். விஸ்வாமித்ரரின் தவச்சுடர் மாளவநாட்டில் யக்ஞசேனன் என்னும் வைதிகரின் துணைவியின் வயிற்றில் காலநேமி என்னும் தவச்செல்வனாகப்பிறந்தது. அவன் ஊழ்கம் பயில கானேகியபோது சினம் கொண்டு அவள் வழிமறித்தாள். அவள் கூந்தலைப்பற்றி அவன் சுழற்றி நிறுத்தியபோது அவளுக்குள் எரிந்ததெல்லாம் அணைந்தது. அவள் கால்நகம் இனித்தது. நெற்றிப்ப்பொட்டு இனித்தது. கார்குழல் வழியாக இளங்காற்று கடந்துசென்றது. அவள் அழகிய இளம்பெண்ணானாள். சிறியவளே, காதலை அறிந்த பெண்களுக்காக மட்டும் அமைந்த பிரேமாவதி என்னும் விண்ணுலகை அடைந்தாள். அவள் உடல் பொன்னொளி கொண்டது. உள்ளமெங்கும் அமுதம் நிறைந்தது” என்றான் இந்திரன்.

”தேவதேவா, தாங்கள் அனுப்பிய ரம்பைக்கும் அந்நிலையல்லவா அமைந்தது? விஸ்வாமித்ரரின் தவம் கலைக்க அவள் அணிகளைனைத்தும் பூண்டு தவச்சோலைக்கு சென்றாள். அவள்செல்லுமிடமெங்கும் வசந்தம் விரிவதற்காக நீங்கள் இளங்குயிலாக மாறி முன்னால் சென்றீர்கள். உங்கள் குரல்கேட்டு காடுபூத்தது. ஓடைகள் சிலிர்த்தன. வான் கனிந்து இளமழை எழுந்தது. விலங்குகள் காமம் கொண்டு குரலெழுப்பின. இன்னிசைப் பறவைகள் மரக்கிளைகளில் அமர்ந்து பாடின. பொன்னொளிர்ப் பூச்சிகள் யாழொலித்துச் சுழன்றன. அவள் அவர்முன் சென்று செழித்த மலர்ச்செடி என நின்றபோது மண்ணும் விண்ணும் காமவடிவாக இருந்தன. அவரோ விழி தூக்கி அவளை நோக்கியதுமே நீ கற்பாறையெனச் சமைக என்று தீச்சொல்லிட்டார்” என்றாள் மேனகை.

“காமினியே கேள். ரம்பை என் ஆணையேற்று அக்கடமைக்கென சென்றாள். எப்படியெனினும் வென்றாகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டிருந்தாள். வசந்தம் விரிந்த அக்கானகவெளியில் அவள் விழிகளில் மட்டுமே காமம் இருக்கவில்லை. முனிவர் அவற்றை நோக்கியதுமே சினந்தது இயல்பே” என்றான் இந்திரன். “அவள் அக்கானகத்தில் கல்லெனக்குளிர்ந்து கிடந்தாள். நெடுநாட்களுக்குப்பின் தவம்செய்வதற்கென காட்டுக்குவந்து தன்னுள் உறைந்த காதல்சுனையின் முதல் ஊற்றைத் தொட்டுத் திறந்த ஃபூரிதேஜஸ் என்னும் வைதிகன் எரிமூண்டு எழுந்த உடல்கொண்டு தவித்து வந்து அப்பாறைமேல் அமர்ந்தான். இளந்தொடைகளாக மாறி அவள் அவனை தன்மேல் அமர்த்திக்கொண்டாள். மென்முலையாக அவனைத் தழுவி இதழ்கவ்வி மூச்சுகலந்தாள்.”

இந்திரன் சொன்னான் “அறிக பெண்ணே, பெண்ணில் ஆணை கவர்வது அவள்கொள்ளும் காமமே. அவள் வயிற்றிலுறங்கும் வருங்காலம் விழிகளில் இதழ்களில் முலைகளில் உந்தியில் அல்குலில் திகழ்கையில் அவள் சுடராகிறாள். ஆண்கள் விட்டில்களாகிறார்கள்.” மேனகை அவனை வணங்கி “அவ்வண்ணமே” என்றாள். இடியெழுந்து மின்னல்கள் சூழ இந்திரனின் யானை இரு தேவர்களாக எழுந்து இருபக்கமும் நின்றது. அவன் ஒரு சிறு செம்மலரை அவளிடம் நீட்டி “இம்மலருடன் செல்க! இதன் இதழ்கள் தழலாக ஆகுமென்றால் நீ அவரை வென்றாய். பின் கனியாக ஆகுமென்றால் உன்னை வென்றாய்” என்றான். அவள் அதை பெற்றுக்கொண்டாள். இரு பக்கமிருந்தும் கரந்துவரல் எழினி வந்து அவையை மூடிக்கொண்டது.

அவையெங்கும் பரவிய அசைவை உணர்ந்தபின்னரே திருஷ்டத்யும்னன் தன் உடலை உணர்ந்தான். கால்களை மெல்ல நீட்டி கைகளை விரித்து இடையின் இறுக்கத்தை சீரமைத்துக்கொண்டான். ஏவலர்கள் மரத்தாலங்களில் மூங்கில்குவளைகளில் இன்னீரும் மதுவும் சிற்றுணவுகளுமாக நிழல்களென ஓசையின்றி குனிந்து இருக்கைநிரைகளுக்கிடையே பரவினர். திருதராஷ்டிரர் பெரிய சுரைக்குடுவை நிறைந்த மதுவை வாங்கி ஓசையுடன் அருந்திவிட்டு திருப்பிக்கொடுத்து ஏப்பத்துடன் கால்களை நீட்டிக்கொண்டார். அவர் அருகே அமர்ந்திருந்த விதுரர் அப்பால் இருந்த கனகரை நோக்கி ஏதோ கைகாட்ட கனகர் திரைவிலக்கி வெளியே ஓடினார். திருஷ்டத்யும்னன் ஒரு சிறுகுவளை மதுவை கையில் எடுத்துக்கொண்டான்.

அரங்கில்பரவியிருந்த மெல்லிய ஒளியில் பீடங்களில் அமர்ந்திருந்த யுதிஷ்டிரனும் பாண்டவர்களும் துரியோதனனும் கௌரவர்களும் கோட்டோவியங்கள் போல தெரிந்தனர். கண்கள் மட்டும் அகல்சுடரை ஏற்று மின்னிக்கொண்டிருந்தன. துரியோதனன் கைகளை மார்பில் கட்டியபடி நிமிர்ந்த தலையுடன் அமர்ந்திருக்க யுதிஷ்டிரன் சற்று அமைதியிழந்தவனாக தலைகுனிந்து கால்களை அசைத்துக்கொண்டிருந்தான். வலப்பக்கம் மெல்லிய வெண்ணிறத்திரைக்கு அப்பால் அரசியரின் பீடநிரைகள். அங்கே சேடியர் புழங்கும் ஓசை கேட்டது.

மீண்டும் தண்ணுமையும் முழவும் எழுந்தன. எழினி விலகிக்கொள்ள சுடர்கள் தூண்டப்பட்ட ஏழடுக்கு நிலைவிளக்கு மேடையில் அசைவற்ற சுடர்களுடன் நின்றது. யாழும் குழலும் இசைகொண்டு தாளத்தில் ஏறிக்கொண்டன. அவற்றை மூழ்கடித்தபடி ஓங்கார நாதம் எழுந்தது. “அரசரில் முனிவரை முனிவரில் அரசரை விண்ணவர் வெருளும் மண்ணவர்க்கு அருளும் அறத்தானை மூன்றுதெய்வங்களுக்கும் இனியானை வணங்குக!” என்று சூதர் பாடினர். உள்ளரங்கு எழினி விலக அங்கே ஒரு மண்புற்றின்மேல் விஸ்வாமித்ரர் கண்மூடி தவத்திலமர்ந்திருப்பது தெரிந்தது. அவர்மேல் சருகுகள் இசையுடன் ஒவ்வொன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன.

சலங்கை ஒலி எழுந்ததும் திருஷ்டத்யும்னன் தன் நெஞ்சம் படபடப்பதை உணர்ந்தான். இடதுகால் துடிக்கத் தொடங்கியது. மலர்மரச்செறிவு தீட்டப்பட்ட எழினிக்கு அப்பாலிருந்து மேனகை நடனநடையில் மெல்ல வந்தாள். ஒரு பெண்ணுடலில் புகைச்சுருளின் மெல்லசைவு நிகழமுடியும் என்று விழிமுன் கண்டான். அவள் தன் நீள்குழல்கற்றை ஒன்றை முலைமுகிழ்களின் நடுவே இட்டு கைகளால் முடைந்தபடி வந்து அங்கிருக்கும் அவரை முற்றிலும் பாராதவளாக அச்சோலை மலர்களை கொய்தாள். நீரள்ளி முகம் நோக்கினாள். தனக்குள் பாடியபடி விழியலைத்து மலர்க்கிளைகளை நோக்கினாள். சிரித்துத் துள்ளி அங்கே அமர்ந்த பறவைகளை  கைவீசி துரத்தினாள். இளங்குயில் குரலை தான் நடித்து அதை ஏமாற்றி சிரித்தாள். முனிவர் உடலில் மெல்லசைவு எழுந்தது. அவர் விழிகள் அதிர்ந்து பின் குருதிமலர்கள் என திறந்தன.

அவள் அவர் பார்ப்பதை அறியாமல் கீழே விழுந்த கனியொன்றை எடுத்து கடித்தாள். நீர்த்துளிசெறிந்த மரக்கிளையை அசைத்து குளிர்த்துளிகளுக்கு உடல்சிலிர்க்க முகம் திருப்பி சிரித்து விலகினாள். அவர் எழுந்ததையும் சினம்கொண்ட முகத்துடன் அருகே வந்ததையும் அவள் காணவில்லை. அவர் “யார் நீ?” என்று கேட்டதும் திகைப்புடன் திரும்பி தழல் விலகுவதுபோல ஒருகணம் அசைந்து தன் முலைகள்மேல் ஆடையை அள்ளி அழுத்தியபடி “நான் ஓர் தேவகன்னி. இச்சோலை எழில்கண்டு மலராட வந்தேன்” என்றாள். “இது என் தவச்சாலை. இக்கணமே இங்கிருந்து விலகு” என்றார் விஸ்வாமித்ரர். துடுக்குடன் தலைசரித்து ஏளனப்புன்னகையுடன் இதழ் கோட்டி மேனகை “ஏன், இதை இந்திரன் உங்களுக்கு அளித்திருக்கிறானோ?” என்றாள்.

அந்த அச்சமின்மையால் திகைத்த விஸ்வாமித்ரர் “நான் யாரென்று அறிவாயா?” என்றார். “யாராக இருந்தாலென்ன? நான் கேட்பது எளிய வினாவல்லவா?” என்றாள். ஆணவத்துடன் தலைதூக்கி அவரை நோக்கி “உடைமையற்று காடுபுகுந்த முனிவர் ஒரு சோலையை மட்டும் தனதாக்கிக்கொண்டாரா என்ன?” என்றாள். “பெண்ணே, நான் விஸ்வாமித்ரன். தீச்சொல்லிட்டு உன்னை தீராப்பெருந்துயருக்கு அனுப்ப என்னால் முடியும்” என்றார். “ஆம், கேள்விப்பட்டிருக்கிறேன். பெருஞ்சினத்தவர் என்று சொன்னார்கள்” என்றவள் சிரித்து “சினம்கொண்ட ஆண்களைப்போல் பெண்களை ஈர்ப்பவர் இல்லை” என்றாள். அவர் நோக்கு தொடும் இடத்தை அவள் கை சென்று தொட்டது. வலக்கை தன் கன்னத்தை வருடியது. இறங்கி கழுத்துமென்மையை தொட்டு முலைநடுவே அமைந்தது. “விலகு… இல்லையேல் அழிவாய்” என்றார் விஸ்வாமித்ரர். “அழிந்தால் என்ன? நான் உங்களுள் எஞ்சுவேன் அல்லவா?”

கையில் கமண்டல நீரை அள்ளி ஓங்கி ”இக்கணமே நீ” என்று அவர் சினக்க “உங்கள் நெஞ்சுக்குள் என்மேல் ஒருதுளியேனும் காமம் இல்லையேல் தீச்சொல்லிடுங்கள்” என்றாள் மேனகை. “சீ, என்ன நினைத்தாய் என்னை?” என்றார் விஸ்வாமித்ரர். “ஆண்மகன் என்று” என அவள் மெல்ல நகைத்தாள். “முனிவரென்றும் அறிவரென்றும் அறிபவர் ஆயிரம்பேர் இருக்கலாம். ஆணென்று அறிபவளும் ஒருத்தி இருக்கட்டுமே.” அவள் உடல் அனலென ஆடிக்கொண்டே இருந்தது. கழுத்தில் ஒரு மென் சொடுக்கல் நிகழ்ந்தது. இடை சற்று வளைந்து தொடை முன்னெழுந்தது. விஸ்வாமித்ரர் தன் கைநீரை அவள் மேல் வீசி “பதியிலாதவளே, இக்கணமே நீ ஒரு பறவையாக மாறு” என்றார். அவள் சிரித்து வாய்பொத்தியபோது மேலாடை சரிந்து வனமுலைகளின் கரியகூர்விழிகள் எழுந்து நோக்கின. “அப்போதும் அழகற்ற ஓர் உயிராக என்னை ஆக்க உங்கள் உளம் ஒப்பவில்லை” என்றாள்.

மீண்டும் நீரை அள்ளி அவர் கையில் எடுக்க “உங்கள் ஒரு சொல்லும் என் மேல் அமையாது முனிவரே. நான் உடையா கவசம் அணிந்திருக்கிறேன்” என்று அவள் கைகளை விரித்தாள். இடைவரை சரிந்த ஆடையில் செப்புமுலை எழுந்து அசைய மென்வயிற்றில் உந்தி சுழித்து அலையிளக வெண்பாளைத் தோள்களும் மூங்கில்புயங்களும் விரிய “உங்கள் காதலென்னும் கவசம்” என்றாள். “விருப்பிலா ஆண்மகன் முன் உடல்காட்டி நிற்கும் பரத்தை நீ” என்று அவர் சீறி மூச்சிரைக்க “பரத்தைமையும் பெண்மையின் ஒரு நிலையே. எங்கோ எவர்முன்னோ பரத்தையென உணரா பெண் எவள்?” என்றாள்.

“இன்று உன்னை நான் அடையலாம். என்றோ உன்னை வெறுப்பேன். என் முன் நீ இழிந்து நிற்பாய்” என்று அவர் விழிதிருப்பி சொன்னார். “உடல்கொண்டு ஆணை வெல்பவள் பெண்ணில் வாழும் காதலி. வென்ற ஆணை கருப்பைவெதுப்பில் வைத்திருப்பவள் அவளில் கனியும் அன்னை” என்று அவள் சொன்னாள். “காதலியும் அன்னையும் ஆனவள் நாணிலாதவள். தன்னிலை அழிந்தவள். எதனாலும் எரிக்கப்படாத குளிர்பாறை என்றானவள்.” அவள் இடையிலிருந்து நீலப்பட்டாடை முழுமையாக நழுவிச்சரிய வெண்பளிங்குயானையின் மத்தக முழையென விரிந்த இடையும் மலர்தார் தொடைகள் நடுவே மான்குளம்பென அல்குலுமாக அவள் நின்றாள். மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதுபோல நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள். கைகளால் முகம்பொத்தித் திரும்பி நின்று அவர் உடலதிர்ந்துகொண்டிருக்க “இனி சொல்லென ஏதும் எஞ்சுவதில்லை ஆண்மகனே. இங்கிருப்பது பெண்ணென்று ஆனவை அனைத்தும்” என்றாள்.

சூதர்களின் இசைப்பாடல் தண்ணுமையும் யாழும் குழலும் முழவும் கலந்து துணைவர எழுந்து மேடையை சூழ்ந்தது. அதில் அவள் காற்று அலைக்கும் மெல்லிறகென அசைந்து நடனமிட்டாள்.

”இனிய மது. இனிய மது
இனிய மது நிறைந்த இக்கிண்ணம்
திறந்திருக்கிறது தேவர்களே!
தேவர்களே தெய்வங்களே!
திறந்திருக்கிறது மதுக்கிண்ணம்
மலைகள் நதிகள் சமவெளிகள் காடுகள்
ஆர்த்தலைக்கும் பெருங்கடல்
இனிய மதுக்கிண்ணம்
தேவர்களே தெய்வங்களே!
இப்புவி ஒரு இனிய மதுக்கிண்ணம்!
தேவர்களே தெய்வங்களே!
விடாய்கொண்டவர்களே,
இனிய மதுக்கிண்ணம்
இதோ ஓர் இனிய மதுக்கிண்ணம்!”

மேடையில் முழந்தாள் மடிந்து அமர்ந்து பின் மண் படிந்து விழுந்த விஸ்வாமித்ரரின் தலையில் அவள் கால் படிந்தது. அவர் அதை தன் இருகைகளாலும் பற்றி நெஞ்சில் வைத்தார். நெருப்புத்தழல்கள் வரையப்பட்ட செவ்வெழினி மெல்ல வந்து அவர்களை மூடிக்கொண்டு மறைந்தது.

சூத்ரதாரன் வலப்பக்கத்திலிருந்து ஓடிவந்து மேடைமுன் நின்று “பனிமலை உருகாது நதிகளில்லை!” என்று உரக்கச்சொல்லி பின் குரல் தணிந்து “சரி சரி, இதை நான் சொல்லவில்லை. கவிஞர் சொல்கிறார்கள். அப்போது நான் அருகே நின்றுகொண்டிருந்தேன்” என்றான். “மாமுனிவனின் தவம் மங்கையில் மகளெனப் பிறந்தது. மூதன்னை சகுந்தலை வாழ்க! அவள் மணிவயிற்றில் உதித்த பரதனை வாழ்த்துவோம். பரதனின் குருதிவழி எழுந்த மாமன்னர்நிரையை வாழ்த்துவோம். மகாசக்திவடிவான பாரதவர்ஷத்தை எண்ணுடல் மண்பட வணங்குவோம். அறிஞரே அரசரே அவையீரே, தவமும் காதலும் இரண்டறக்கலந்த மண் இது. இங்கு எழுக தவச்சாலைகள். அருகே ஒளிர்க மதுச்சாலைகள். விண்ணை மண்ணுக்கு இறக்கும் முனிவர் வாழ்க! மண்ணை விண்ணாக்கும் காதலர் வாழ்க!”

மும்முறை தொழுது சூத்ரதாரன் பின்னகர்ந்ததும் முகப்பெழினி இருபக்கத்திலும் இருந்து வந்து மூடிக்கொண்டது. திருஷ்டத்யும்னன் தன் உறைந்த கால்களை நீட்டி உடலை நெளித்தான். கால்கள் முழுக்க சிறிய ஊசிகள் குத்தும் வலி எழுந்தது.

முந்தைய கட்டுரைபுனைவின் ஆடி- விஷ்ணுபுரம்
அடுத்த கட்டுரைகித்தாரில்…