‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’

E015WC

காண்டவத்தை நிறுத்தியதும் வீட்டில் இருக்காதது நன்றாகப்போயிற்று. ஊட்டி கருத்தரங்குக்கு 22 அன்றுசென்று சேர்ந்தேன். மனதுக்கு உகந்த தோழர்கள் வந்திருந்தனர். [கடலூர் சீனு, ராஜகோபாலன், பிரசாத் மட்டும் வரவில்லை] ஒவ்வொருவரையாக தழுவிக்கொண்டே இருந்தேன். அவர்களின் தொடுகையே முதன்மையாகத் தேவைப்பட்டது.

திரும்பவரும்போதே எழுதவேண்டுமென தோன்றியது. கணிப்பொறி கொண்டுசெல்லவில்லை. ஆகவே இரவெல்லாம் இந்த நாவலின் முதல் அத்தியாயத்தை எண்ணியபடி துயிலாதிருந்தேன். 25 அன்று காலை பேருந்திலிருந்து இறங்கும்போது முதல் வரி வந்துவிட்டது. வந்ததுமே எழுதத்தொடங்கிவிட்டேன்.

இந்திரநீலம் என்பது நவமணிகளில் ஒன்றாகிய நீலத்தில் மென்மையான வான்நீலமும் உள்ளே அடர்நீல நீரோட்டமும் கொண்ட கல்லுக்குரிய பெயர். இங்கே இந்திரனையும் நீலனையும் ஒரே சொல்லாக்கியிருக்கிறேன். அவர்கள் கொள்ளும் காதல்களின் கதை இது.

கொந்தளிப்பான இந்நாட்களில் துணைநின்ற நண்பர்கள் தோழியர் அனைவருக்கும் நன்றி. அருகமர்ந்தவனாக எப்போதுமிருந்த அரங்கனை தழுவிக்கொள்கிறேன்.

வரும் ஒன்றாம்தேதிமுதல் தொடங்கலாமென நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைநமக்குள் இருக்கும் பேய்
அடுத்த கட்டுரைஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது