அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு ,
வணக்கம் .
தங்களின் ‘காடு’ நாவல் வாசித்தேன்.
ஓராண்டுக்கு முன்னர் காடு நாவலை வாசிக்கத் தொடங்கினேன் . ஏனோ அச்சமயத்தில் சில காரணங்களினால் வாசிப்பு தடைப்பட்டு விட்டது .
பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது . அலுவலகத்தில் ஈரமேறிய தோட்டத்தின் ஊடே நடக்கையில் சட்டென காடு நாவல் பற்றிய எண்ணம் வந்தது . வீடு திரும்பியவுடன் காடு நாவலை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். வெளியே மழை சட சடக்கும் ஒலியை கேட்டவாறே நாவலை வாசித்து முடித்தேன். (மழையின் சட சடப்பை கேட்டுகொண்டே தான் இக்கடிதத்தையும் எழுதிக் கொண்டு இருக்கிறேன் .)
நாவலின் சிறப்பம்சங்களுள் ஒன்று , கதை மாந்தர்கள் பேசும் வட்டாரமொழி. நான் நாகர்கோவிலைச் சார்ந்தவன். நாவலில் வரும் அப்பேச்சு வழக்கில் உரையாடும் மக்களோடு பழகிய காரணத்தினால் அவ்வட்டார மொழி எனக்கு கொஞ்சம் பரிச்சயம் . இதனால் வாசிப்பு எனக்கு மேலும் சுவையானதாக இருந்தது.
மலையடிவார வனத்தின் வனப்பை விளக்கும் விவரணைகள் , காடு குறித்தும் , காட்டு விலங்குகள் பறவைகள் குறித்தும் வரும் தகவல்கள் அந்த காட்டின் ஊடே பயணித்த அனுபவத்தை அளித்தன . தங்கள் மனதில் இருந்த காடு குறித்த அனுபவங்கள் சொற்களாக உருப்பெற்றிருகின்றன . சொற்களின் காடாக நாவல் உள்ளதெனவும் சொல்லத்தோன்றுகிறது .
சிறுவயதில் என் வீட்டிற்கு வெளியூரிலிருந்து யாரேனும் உறவினர்கள் வந்தால் அவர்களை அழைத்துக் கொண்டு இந் நாவலில் வரும் இடங்களுக்கு சென்றதுண்டு. காலையில் கிளம்பி முதலில் பத்மநாதபுரம் அரண்மனை . அதன் பின் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் . அதன் பின் மதிய வேளையில் திற்பரப்பு அருவிக்குளியல். பின்னர் மாத்தூர் தொட்டி பாலம் ,பேச்சிப்பாறை . மறுநாள் கன்னியாகுமரி சுசீந்தரம் . பல ஆண்டுகளாயினும் இந்த நிகழ்ச்சி நிரல் மாறியதில்லை. ஆனால் எப்போதும் அப்பகுதிகளில் உள்ள மலையடிவாரக் காடுகளில் பயணித்த அனுபவம் எனக்கு இருந்தது இல்லை. ஒரு முறை பள்ளி சுற்றுலா செல்லுகையில் , அங்குள்ள ரப்பர் மரங்களடர்ந்த தோப்பில் வெகு நேரம் நடந்தோம் . இந்த நாவல் வாசிப்பு ஒரு அடர் வனத்தில் அலைந்து திரிந்த அனுபவத்தை அளித்து விட்டது.
சாலைகள் ஒருவித தந்திரம் . கட்டின் ஊடே முதலில் பாதையாக நுழைந்து மெல்ல காட்டையே விழுங்குகிறது என்று நாவலில் ஓர் இடம் வருகிறது. அக்கணத்தில் ரெசாலம் ஆசையோடு வளர்த்து வரும் தேவாங்கை சிறுத்தை கவ்விக் கொண்டு ஓடுகிறது. காட்டில் தன் கூட்டத்தில் இருந்து தப்பி அலைந்து கொண்டிருக்கும் கீறக்காதன் வன அதிகாரியின் துப்பாக்கிக்கு பலியாகிறது. அழியப்போகும் காட்டின் சின்னங்களாகவே இவை மனதில் நிற்கின்றன.
ஒரு மலைவாழ் பெண்ணின் மீது கிரிதரனுக்கு ஏற்படும் ஆழமான பிடிப்பே (obsession ) நாவலின் மையக்கரு . கடுமழையில் அவள் கையைப் பற்றிக்கொண்டு குறிஞ்சிப்பூவைத் தேடி அடர் காடுகளின் ஊடே ஓடுகிறான். கபிலரின் கவித்துவம் ததும்பும் வரிகள் குறிஞ்சி மலர் குறித்து ஒரு மிகு கற்பனையை அவனுள் வளர்த்து இருக்கின்றன . அந்தக் கற்பனை எண்ணங்களும் ,குறிஞ்சி பூவைக் கண்டு விட வேண்டுமென்ற மன உந்துதலும் அவனைக் கடினமான காட்டு பாதைகளினூடே பித்தேறி ஓடச் செய்கின்றன .அவ்வளவு தூர கடும் பயணத்திற்கு பின் குறிஞ்சிப் பூக்களைக் மிகுந்த ஆர்வத்துடன் காண ஆயத்தமாகிறான் . ஆனால் அவற்றைக் காணும் போது மனதில் எவ்வித உற்சாகமும் கிரிதரனுக்கு எழவில்லை .மாறாக ஒரு அபத்த உணர்ச்சியே மனதை நிறைக்கிறது . குறிஞ்சியைக் கபிலர் சற்று மிகைப்படுத்தி விட்டாரோ என்று கூட அவனுக்குத் தோன்றுகிறது . நீலி குறித்து கிரியின் மனதில் உள்ள obsession இந்த குறிஞ்சியை போன்றே அபத்தமானதோ என்ற கேள்வி எழுகிறது . நாவலின் மிக அற்புதமான இடம் இது .
நன்றிகள் .காடு நாவலின் மூலம் கொடுத்த அற்புத வாசிப்பனுபவத்தை அளித்தமைக்கு . காடு மனதிற்கு மிக நெருக்கமான நாவலாக அமைந்து விட்டது.
மிக்க அன்புடன்,
மணியன்.