இப்போதுகூட ஏதாவது வாசித்துக்கொண்டிருக்கும்போது அருண்மொழியின் காலடி ஓசை கேட்டால் மெல்லிதாக ஓர் எதிர்பார்ப்பு ஓடிச்செல்லும் – அவள் ஏதோ சாப்பிடக்கொண்டுவருகிறாள் என்று. உண்மையில் அப்படி எதுவும் அவள் கொண்டு வருவதில்லை. நானேதான் அடிக்கடி போய் கறுப்புத் தேநீர் போட்டுக்கொள்வேன். ஏதாவது தின்பதற்கு எடுத்துக்கொண்டு வைத்திருந்தாலும்கூட ‘என்ன சும்மா சும்மா கொறிச்சுகிட்டு? உக்காந்து எழுதி எழுதி குண்டடிக்கிறதுக்கா?’ என்று திருப்பி எடுத்துக்கொண்டு போய்விடுவாள். கல்லூரியில் அவளுக்கு உணவும் ஊட்டமும் சம்பந்தமான பாடங்கள் இருந்தன. இந்த கலோரி என்ற கெட்டவார்த்தையை என் மண்டைக்குள் ஏற்றியதே அவள்தான்.
அது உண்மையில் நினைவில் தங்கிவிட்ட அம்மாவின் காலடி ஓசை. சின்னவயதில் நான் வாசித்துக்கொண்டிருக்கும்போது அம்மா மெல்லிய காலடிகளுடன் வருவாள். என்னருகே எதையாவது தின்பதற்காக வைத்துக்கொண்டு ஓசையில்லாமல் திரும்பிப் போவாள். அப்போதெல்லாம் எதையுமே கடையில் வாங்கி சாப்பிடும் வழக்கம் இல்லை – திருவரம்பில் கடையும் இல்லை. கிராமத்தில் தின்பதற்கு ஏதாவது கிடைத்துக்கொண்டே இருக்கும். கொய்யாப்பழம், அயனிப்பழம், அன்னாசிப்பழம், வாழைப்பழம், மாம்பழம், அத்திப்பழம் என பழங்கள் ஏராளம். அம்மா அவற்றை மென்மையாக தோல்சீவி ,எடுத்துச் சாப்பிட வசதியாக நறுக்கி, என் வலது கையருகே கொண்டுவந்து வைப்பாள். நான் பெரும்பாலும் ஏறிட்டுக்கூட பார்ப்பதில்லை. புன்னகையைக்கூட திருப்பி அளிப்பதில்லை. அனிச்சையாக என் கை நீண்டு அதை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்
அம்மா எந்நேரமும் என்னை நினைத்துக்கொண்டிருப்பாள் என இப்போது தோன்றுகிறது. அதிகபட்சம் அரைமணிநேர இடைவெளியில் ஏதேனும் ஒன்று வரும். தின்பதற்கும் குடிப்பதற்கும். டீ இரண்டுவேளை மட்டுமே. மிதமாக உப்பு போட்டு தேங்காய் துருவல் சேர்த்த சூடான கஞ்சித்தண்ணீர் மழைக்காலத்தில் அருமையான பானம். மோரில் கறிவேப்பிலை போடமாட்டாள், கவனக்குறைவாக குடிக்கும் என் தொண்டையில் சிக்கும் என. காலை என்றால் பதநீர். அதில்கூட பலவகையான பதங்கள். கொஞ்சம் கொதிக்க வைத்தால் பதநீர் ஒருவகையான சாக்லேட் பானமாக ஆகிவிடும். அதில் நாலைந்து பச்சைப்புளியங்காய்களைப் போட்டு லேசாகக் கொதிக்கவிட்டால் இன்னும் பெயரிடப்படாத ஒரு அமுதம்.
நனகிழங்கு, முக்கிழங்கு, காய்ச்சில்கிழங்கு, செறுகிழங்கு, சீனிக்கிழங்கு என அக்காலத்தில் எங்களூரில் கிழங்குகள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. சீனிக்கிழங்கு என்னும் சக்கரைவள்ளி கிழங்கு இனிப்பானது. நனகிழங்கு, முக்கிழங்கு இரண்டும் சுட்டால் மேலும் சுவையாக இருக்கும். செறுகிழங்கை ஆவியில் அவிக்க வேண்டும். சீனிக்கிழங்கு, செறுகிழங்கு இரண்டுக்கும் மெல்லிய இனிப்பு உண்டு, ஆகவே உப்பு சேர்க்கக்கூடாது. வேகவைத்த கிழங்கை தோல் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி அம்மா கொண்டுவந்து வைப்பாள்.
சீனிக்கிழங்கு, செறுகிழங்கு போன்றவற்ற வேகவைத்து நீரில் போட்டு கொதிக்கச் செய்து கலக்கி கஞ்சித்தண்ணீர் போல ஆக்கி கொஞ்சம் தேங்காய் துருவிப்போட்டால் அபாரமான மணமுள்ள சூடான பானம். எங்களூரில் கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கும் அரைக்கீரை தண்டுக்கீரை சிவப்புக்கீரை போன்றவற்றை வேகவைத்து குழைத்து அதன் மேலே ஊறும் சிவப்புச் சாறை தாளித்து கொண்டுவருவாள். காய்த்து கேட்பாரில்லாமல் கிடக்கும் பூசணிக்காயைக்கூட அப்படிச் செய்யமுடியும். அவை ஓரு வகை சூப்புகள் எனலாம். தேனில் பாதிக்குப் பாதி நீர் சேர்த்து குடிக்க கொண்டுவருவாள். மச்சு அறைகளில் புளி உருட்டி வைத்திருக்கும் பெரும்பானைகளில் ஓரிரு வருடம் பழைமைகொண்ட புளியின்மீது இனிப்பான தேன் போல ஊறி நிற்கும் விழுதுடன் நீரும் கருப்புகட்டியும் சேர்த்து ஒரு ஜிர்ர்ரென்ற பானம்.
அம்மாவின் மனம் எனக்கு ஏதாவது புதிதாக தரவேண்டுமென்ற கற்பனையுடன் சுற்றும் பார்த்துக்கொண்டே இருக்கும் போலும். வாழைக்காயை வேகவைத்து லேசாக வறுத்து தாளித்து கொடுப்பாள். ஒருமுறை அப்போதுதான் பால்விட்ட பச்சை நெற்கதிர்களை மெல்ல அரைத்து வெண்சாறாகப் பிழிந்து கொஞ்சம் இனிப்புசேர்த்துக் கொடுத்தாள். அன்னாசி போன்ற புதர்ச்செடிகளின் இலைகளின் அடிக்குருத்துக்கள் தின்பதற்குச் சுவையானவை. தவிட்டைப்பழம் போன்ற புதர்ப்பழங்களைக்கூட விடுவதில்லை. ஆற்றுக்கு வரும் வழியில் தேடிப்பறித்து மடியில் கட்டி கொண்டுவந்து வைப்பாள்.
அம்மா புதிதாகத் தின்பண்டங்கள் செய்துகொண்டே இருந்தாள். புளியின் ஓட்டுக்குள் முறுகிய பதநீரை நல்லமிளகாய் ஏலக்காய் சேர்த்து விட்டு உறையச்செய்த சாக்லேட். முறுகிய பதநீர் விழுதுடன் மணமான பச்சரிசித் தவிடை கலந்து பரப்பி செய்த கேக். வறுத்த பயறுடன் கருப்பட்டி விழுதை கலந்து உருட்டிய பொரிவிளங்காய். விதவிதமான சுண்டல்கள். கிராமத்தில் உள்ள எந்த பயறும் சுண்டலாகும். உளுந்துச் சுண்டல். ஏன், கோதுமையை வேகவைத்துக்கூட சுண்டல் செய்ய முடியும். பலவிதமான கொட்டைகள். பலா, அயனிக் கொட்டைகளை சுட்டு, வறுத்து கொண்டு வருவாள். அவற்றை வேகவைத்து தாளித்தும் கொண்டுவருவாள்.
கண்ணால் பார்த்து இந்த பூமியை அறிந்து முடிக்கமுடியாது. அதேபோலத்தான் நாவும். நாக்கின் தேடலுக்கு எல்லையே இல்லை. ருசிகளின் பெருவெளி இந்த பூமி. ஒருமுறை உண்ட உணவை மீண்டும் உண்ணாமல் உண்டால்கூட வாழ்நாளில் இதன் சுவைகளில் சில துளிகளையே உண்ண முடியும். பெருங்கருணை ஒன்று நாம் வாழும் வெளிக்கு அப்பால் கனிந்த கண்களுடன் நின்று நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. மெல்லிய மர்மப்புன்னகையுடன் காலடியோசை கேட்காமல் வந்து நம் கையருகே முற்றிலும் புதிய சுவை ஒன்றை வைத்துவிட்டுச் செல்கிறது.
எந்தக்குழந்தையை எப்போது பார்த்தாலும் சாப்பிட ஏதாவது கொடுப்பாள் . அம்மாவின் உடைகளுக்குள் அவள் சந்திக்கும் அடுத்த குழந்தைக்காக ஒரு தின்பண்டம் இனித்து இனித்துக் காத்திருக்கும். முலைகள் வற்றியபின் மொத்த உடலே ஒரு நிறைந்த முலையாக ஆனதுபோல. அம்மாவைப்பார்த்ததுமே தெரிந்த குழந்தை ‘த்தா’ என்றுதான் பேசும். ’தருபவள்’- அதுதான் அவள். வீட்டுக்கு வந்த எந்த அன்னியனுக்கும் அவன் வயிறு நிறைய உணவிடாமல் அனுப்பியதில்லை. கிராமத்தில் அது சாதாரணம். கூடைக்காரர்கள், குறவர்கள் முதல் யாரோ வழிப்போக்கர்கள் வரை வந்து சாதாரணமாக ‘கஞ்சி குடுங்க தாயி’ என்று கேட்டு சாப்பிடலாம். அவர்கள் கேட்கும்படி வைக்காமல் மேலும் மேலும் போடவேண்டும் என அருகே நின்று பரிமாறுவாள். உணவை அள்ளி வைக்கும் கரத்தில் தெரியும் பிரியம் கண்டு கண்கலங்கி கன்னங்களில் வழிய சாப்பிடுபவர்களை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
ஆனால் அம்மாவுக்கு சாப்பிடுவதில் ஆர்வமே இருந்ததில்லை. மிக மெலிந்த வலுவான உடல் கொண்டவள். பகலில் எந்நேரமும் வேலை. மாடுகள் ,கோழிகள், மனிதர்கள்… இரவில் நெடுநேரம் வரை வாசித்துக்கொண்டிருப்பாள். தமிழில், ஆங்கிலத்தில், மலையாளத்தில். அம்மா உலக இலக்கிய அசைவை நுட்பமாக பின்தொடர்ந்துகொண்டிருந்த மகத்தான வாசகி. அவள் ருசி அதில்தான் இருந்தது.
காலை எழுந்ததும் ஒரு ’கட்டன் டீ’ சாப்பிட்டால் அடுத்த உணவு மதியம்தான். அதுவும் அனைவரும் சாப்பிட்டபின்னர் தன் தோழியும் வேலைக்காரியுமான தங்கம்மாவுடன் பேசியபடி புழக்கடை உரல்புரையில் அமர்ந்து சாப்பிடுவாள். மிகவேகமாக ஏதோ கடமையை முடிப்பதுபோலத்தோன்றும். இரவு வெகுநேரம் கழித்து எது இருக்கிறதோ அதை அள்ளிப்போட்டுக்கொள்வாள். ஒன்றும் மிஞ்சாமல் போகும், அப்பாவுக்கு திடீர் விருந்தினர்கள் வந்தால். கவலைப்படாமல் ஒரு பெரிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து தணலில் சுட்டு உடைத்துக் கொறித்துக்கொண்டு கடும்சாயா குடித்து முடித்துவிடுவாள். எங்கும் எப்போதும் அம்மா ஆர அமர சாப்பிடுவதைக் கண்டதில்லை. உணவைப்பற்றி பேசியதே இல்லை. அம்மாவின் சுவை நரம்புகள் நெடுநாட்கள் முன்னரே மங்கிவிட்டிருந்தன என்று படுகிறது. சுவை பார்க்கக்கூட எதையும் நாவில் விடுவதில்லை. சமையலின் பக்குவம் அவள் கைகளில்தான் இருந்தது.
வீட்டில் யார் நன்றாகச் சாப்பிடவில்லை என்றாலும் அம்மாவுக்கு தெரியும். அனைவருடைய மனத்தையும் அம்மா வயிறுவழியாக அளந்து அறிந்துகொண்டிருந்தாள்: ஆனால் அம்மா சாப்பிட்டாளா இல்லையா என எவருமே கவனித்ததில்லை. நிலத்தின் மீது நிற்கும் எவரும் நிலத்தை கவனிப்பதில்லை என்பதுபோல. எனக்கென சமைக்கும் எதிலும் ஒரு துண்டேனும் அவள் வாயில் போட்டுக்கொண்டதைப் பார்த்ததில்லை. அம்மாவுக்கென நான் எதையும் எப்போதும் கொடுத்ததில்லை.
நேற்று ஒருநண்பர் வாங்கிவந்து கொடுத்துப்போன ஆப்பிள்களில் கடைசி ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக வெட்டி தட்டில் பரப்பி படித்துக்கொண்டிருக்கும் சைதன்யாவின் அருகே மெல்ல வைத்துவிட்டு வந்தபோது நினைத்துக்கொண்டேன் , அவற்றில் ஒரு துண்டைக்கூட நான் அதுவரை வாயில் போடவில்லை. சைதன்யாவோ அஜிதனோ சாப்பிடும் தின்பண்டங்கள் என்னுடைய அகநாக்கு ஒன்றில் பலமடங்கு தித்திக்கின்றன. ஒரு தின்பண்டத்துடன் அவர்கள் அருகே செல்லும்போது நடைகூட கனிந்து மென்மையாக ஆகிவிடுகிறது.
பிரபஞ்சத்தை அறிவதில் பத்து நிலைகள் உண்டு. தசதர்சனங்கள் என அவற்றை அத்வைதம் வகுக்கிறது. [அத்யாரோபம், அபவாதம், அசத்யம்,மாயை, ஃபானம், கர்மம், விக்ஞானம், பக்தி,யோகம், முக்தி] அவற்றில் எட்டாவது தரிசனமாகிய பக்திக்கு விஷ்ணுபுரம் நாவலில் மகாநாமபிட்சு எழுதிய சிறுநூலில் அளிக்கும் விளக்கக் கவிதை இது
’கேள் பிட்சுவே, தாயைப் பின் தொடர்கிறது குழந்தையின் ஆத்மா, ஒருபோதும் பிரியாத பிரியத்துடன். ஏனெனில் தாயின் முலைப்பாலின் சுவை அதற்கு அழைப்பாகிறது
கேள் பிட்சுவே, தாய் ஒருபோதும் குழந்தையின் பின்னிருந்து விலகுவதில்லை. ஏனெனில் முலையருந்தும் குழந்தை ஊட்டுகிறது தன் அன்னைக்கு – ஆயிரம் மடங்கு இனிய அமுததை’
====================================================================
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jul 28, 2010 @ 0:00
8 comments
1 ping
Skip to comment form ↓
baski
July 28, 2010 at 1:38 am (UTC 5.5) Link to this comment
“அம்மா சாப்பிட்டாளா இல்லையா என எவருமே கவனித்ததில்லை. நிலத்தின் மீது நிற்கும் எவரும் நிலத்தை கவனிப்பதில்லை என்பதுபோல எனக்கென சமைக்கும் எதிலும் ஒரு துண்டேனும் அவள் வாயில் போட்டுக்கொண்டதைப் பார்த்ததில்லை.”
—- இந்த வரிகளை எழுத ஒருவருக்கு எந்த வயதில் தோன்றும், அல்லது என்னவிதமான தரிசனம் தேவைப்பட்டிருக்கும்?
sureshkannan
July 28, 2010 at 7:33 am (UTC 5.5) Link to this comment
நெகிழ்ச்சியடைய வைத்த கட்டுரை. பொதுவாக பல பேர் திருமணமானவுடன் இழப்பது அம்மாவின் உணவுதான் என்று தோன்றுகிறது. மனைவி என்ன சுவையாக செய்ய முயன்றாலும் அதற்கு ஈடாகதது போலிருக்கிறது. அதே போல் குழந்தைகளுக்கும் பாட்டியின் சமையலை விட அம்மாவின் சமையலே பிடித்துள்ளன. எத்தனை வகையான கறிகாய், கிழங்கு வகை உணவுகளை நாகரித்தின் பெயரில் இழந்துள்ளோம் என்பதும் வருத்தத்தையூட்டுகிறது.
suka
July 28, 2010 at 1:33 pm (UTC 5.5) Link to this comment
’ருசிகளின் பெருவெளி இந்த பூமி’. உண்மைதான். . . . . . . ம்ம்ம். . . .தாயொடு அறுசுவை போம்.
va.srinivasan
July 28, 2010 at 5:20 pm (UTC 5.5) Link to this comment
ஜெயமோகன் கட்டுரையில் கொஞ்சம் நாஞ்சில் நாடன் (சமையல்) குறிப்பு சொல்கிறார். “தாயொடு அறுசுவை போம்; தந்தயொடு கல்வி போம்…..”.என்று எழுத இருந்தேன். சுகா எழுதி விட்டார். ‘பழைய நெனப்புடா”? ஆனால் இப்போதைய புதிய பொழப்பாவும் இருக்கிறது.
//மெல்லிதாக ஓர் எதிர்பார்ப்பு ஓடிச்செல்லும் – அவள் ஏதோ சாப்பிடக்கொண்டுவருகிறாள் என்று.// அனுபவ உண்மை. உங்களைத் தனியாகக் காட்டும் யத்தனமில்லாத நுட்பம்.
kthillairaj
July 28, 2010 at 9:51 pm (UTC 5.5) Link to this comment
நான் என் அம்மாவின் சமையலே மிகுந்த ருசியானது என்று சொல்லிகொண்டிருன்தேன், என் மகன் பேச ஆரம்பித்த பின்பு என் மனைவியின் சமையலே மிகுந்த ருசி என்றான்.
osaravilai thangam
July 28, 2010 at 10:50 pm (UTC 5.5) Link to this comment
”பெருங்கருணை ஒன்று நாம் வாழும் வெளிக்கு அப்பால் கனிந்த கண்களுடன் நின்று நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மெல்லிய மர்மப்புன்னகையுடன் காலடியோசை கேட்காமல் வந்து நம் கையருகே முற்றிலும் புதிய சுவை ஒன்றை வைத்துவிட்டுச் செல்கிறது”…..ன்னு எளுதிட்டு கூடயே
”இப்போதுகூட ஏதாவது வாசித்துக் கொண்டிருக்கும்போது அருண்மொழியின் காலடி ஓசை கேட்டால் மெல்லிதாக ஓர் எதிர்பார்ப்பு ஓடிச்செல்லும் – அவள் ஏதோ சாப்பிடக்கொண்டுவருகிறாள் என்று. உண்மையில் அப்படி எதுவும் அவள் கொண்டு வருவதில்லை”- ன்னு எளுதுனா….
வே! ஆசான! உமக்கு குடிக்க பச்ச வெள்ளம் கூட கிட்டாது கேட்டுக்கரும்…
brinjal
July 31, 2010 at 5:46 pm (UTC 5.5) Link to this comment
சில அம்மா கோண்டுகள் கல்யாணமான பின்பும் மனைவியிடம் நீ சமைப்பது என் அம்மா சமையல் போல இல்லை என்று சொல்லிவிட்டு அவஸ்தை படுவதை பார்த்திருக்கீங்களா?
Dondu1946
August 1, 2010 at 10:20 am (UTC 5.5) Link to this comment
உங்கள் இப்பதிவின் தாக்கத்தால் நான் இட்ட இப்பதிவு இதோ,
http://dondu.blogspot.com/2010/08/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Tweets that mention jeyamohan.in » Blog Archive » சுவையாகி வருவது… -- Topsy.com
July 28, 2010 at 10:05 am (UTC 5.5) Link to this comment
[…] This post was mentioned on Twitter by ஆயில்யன், THENNARASU. THENNARASU said: உணவு விசயத்தில் அம்மா ,அம்மணி ஒரு ஒப்பீடு :ஜெமோ–நெகிழ்ச்சி http://bit.ly/aknEuj […]