நிறம்- கடிதம் 2

சார்,

நிறம் பதிவு வாசித்தேன்.

யுவன் தொடர்பாக வாசித்தபோது நெகிழ்ந்தேன். அப்படியே என் அப்பாவை உணர்ந்தேன். அப்பா, எம்.ஜி.ஆர் நிறம் இருப்பார். அம்மா, ரஜினி நிறம். ஆனால் அவர்களது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான இல்லறவாழ்வு நானறிந்து மிக மகிழ்ச்சியாகவே அமைந்தது. தான் சாகும் வரை, அம்மாவை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து ஊரெல்லாம் பெருமையாக ரவுண்டு அடிப்பார் அப்பா. அவருடைய சைக்கிளை ‘காதல் வாகனம்’ (எம்ஜிஆர் பட டைட்டில்) என்று அக்கம் பக்கத்தில் கிண்டல் செய்வார்கள்.

சிறுவயதில் அம்மா கருப்பாக இருக்கிறாரே என்று தாழ்வு மனப்பான்மை (அம்மாவுக்கு இருந்ததோ இல்லையோ எனக்கு) இருந்தது. அப்பா அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் கலர்தான். அதனால் பள்ளியில் பெற்றோரை அழைத்தால் அப்பாவை மட்டுமே அழைத்துச் சென்றுக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பேசும்போது அம்மாவுக்கு லேசாக திக்கும். அந்தப் பிரச்சினை கால ஓட்டத்தில் சரியாகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

சென்னையில் நான் வசிக்கும் மடிப்பாக்கத்தை ‘குட்டி மாம்பலம்’ என்பார்கள். அப்படியிருக்க இங்கே நிறம் எத்தகைய அதிகாரத்தையும், அந்தஸ்தையும் பெற்றிருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்பாவழி உறவினர்கள் பொதுவாக சிகப்பாக இருப்பார்கள். அம்மாவழி உறவினர்களோ அம்மாவை மாதிரிதான். இதனால் நானும் தங்கையும் சிறுவயதில் அம்மாவழி உறவினர்களை கொஞ்சம் இரண்டாம் தரமாகதான் பார்ப்போம்.

இந்த நிறவெறி(!)யில் இருந்து நான் எப்போது வெளிவந்தேன் என்று தெரியவில்லை. ஒரே மகன் என்பதால் அம்மா என் மீது கணக்கு வழக்கு இல்லாமல் கொட்டித் தீர்த்த பாசத்தின் காரணமாக இயல்பாக ஏற்பட்டிருக்கலாம். பூஞ்சையான பயலான எனக்கு ஜூரம் கீரம் வந்தால் என்னை இடுப்பில் தூக்கிவைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுவார். பதினைந்து வயது பையனை ஓர் அம்மா இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு ரோட்டில் நடக்கும் காட்சியை யோசித்துப் பாருங்கள். பதினாறு, பதினேழு வயது வரை இரவில் அவர் மீது கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவேன். அவ்வளவு செல்லம்.

இதனாலோ என்னவோ கருப்பு மீது ஈர்ப்பு வந்தது. இளம் வயதில் (இப்போதும் இளைஞன்தான்) நான் சைட் அடித்த பெண்கள் பெரும்பாலும் கருப்பிகள். திருமணம் குறித்த கனவுகளில் கருப்புதான் ஆகப்பெரிய லட்சியமாக இருந்தது. துரதிருஷ்டவசமாக நடக்கவில்லை.

இதற்கெல்லாம் நிவாரணமாக என் இரண்டாவது மகள் கொஞ்சம் கருப்பாக பிறந்ததுமே அவ்வளவு சந்தோஷம். ‘கருப்பாயி’ என்றுதான் வீட்டில் செல்லமாக அழைக்கிறோம். அம்மா அளவுக்கு நிறமில்லாவிட்டாலும், தோற்றம் நடவடிக்கை எல்லாம் அப்படியே அவரையே உரித்து வைத்திருக்கிறார். சிறுவயதில் நான் அம்மாவோடுதான் தூங்குவேன் இல்லையா? அதுபோல கருப்பாயி என் மார் மீதுதான் படுத்துக்கொண்டு தூங்குகிறார்.

நிறம் பற்றி பேசும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை கிழக்கு பத்ரியோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த காலத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையில், “அங்கெல்லாம் என்னை மாதிரி கருப்பனுங்களை” என்று ஒரு வார்த்தை விட்டார். பத்ரியின் கலர் நமக்கு தெரியும்தானே? கடுமையான அதிர்ச்சி அடைந்துவிட்டேன். “என்ன சார் சொல்றீங்க, நீங்க கருப்பா?” என்று கேட்டதும் சொன்னார்.

”அமெரிக்காவில் ரெண்டே ரெண்டு கலர்தான். கருப்பு, வெள்ளை. அவனுங்க கண்ணுக்கு நானும், கருப்பினத்தவரும் ஒரே மாதிரிதான் தெரிவோம். நம்மூரு மாதிரி மாநிறம், மஞ்சள் நிறமெல்லாம் அங்கே கிடையாது”

ஆச்சரியமாக இருந்தது.

அன்புடன்
யுவகிருஷ்ணா

அன்புள்ள யுவகிருஷ்ணா

இந்தியா முழுக்கவே உள்ள பிரச்சினை இது. இந்தியா என்றைக்குமே ஒரே இனமோ இனக்குழுவோ உள்ள நாடாக இருந்ததில்லை. வரலாற்றுக்காலம் முன்னரே இங்கே பலவகையான இனக்குழுக்கள் குடியேறிவிட்டனர். பல இனமும் நிறமும் கொண்டவர்கள். ரிக்வேதத்திலேயே கறுப்பர், மாநிறமானவர், சிவந்த நிறமுடையவர் என்று. மகாபாரதம் முழுக்க பலநிறமுடையவர்கள் வருகிறார்கள். மையக்கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கறுப்பு. கரியவர்களையே வியாசர் அழகர்கள் என்கிறார்

அதை ஆப்ரிக்கா சென்றபோதுதான் புரிந்துகொண்டேன். அங்கே ஏராளமான வெள்ளையர்கள் இனக்கலப்பால் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை பொதுவாக அங்கே உயர்வாக எண்ணுவதில்லை. நான் பேசிய டேவிட் கெம்பித்தா ஒரு வெள்ளைநிறப்பெண்ணை மணக்கவிருந்தார், நான் அவளை வெள்ளைக்காரி என்ற நினைத்தேன். அவள் கூச்சத்துடன் தான் கலப்பினம் என்று சொல்லி தங்கள் சமூக அந்தஸ்து ஒருபடி கீழேதான் என்றாள்.

வரலாறு முழுக்க ஹூணர்கள் போன்ற வெள்ளையர்கள் மங்கோலியர் போன்ற மஞ்சளினத்தவர் இங்கே வந்தபடியே இருந்திருக்கிறார்கள். காலன் காலனாக விந்து. ஆகவே இந்தியா ஒரு மாபெரும் இனக்கலப்பின் நாடு. சில பழங்குடிகள் தவிர  இனத்தூய்மை கொண்ட எவரும் இம்மண்ணில் இல்லை.இங்கே ஒரே குடும்பத்தில் கறுப்பும் சிவப்பும் மஞ்சளும் இருக்கும்

சென்ற காலங்களில் இன்றைக்கிருப்பதுபோல பெரிய அளவிலான நிறப்பிரச்சினை இருந்ததாகத் தெரியவில்லை. குலங்களுக்குள் திருமணம் நிகழ்ந்தபோது நிறம் பார்ப்பதற்கு பெரிய இடமில்லை. ஆனால் நவீன ஊடகங்கள் மெல்லமெல்ல அந்த மனநிலையை வேரூன்றச்செய்துவிட்டன. அதற்கு எதிராக பெரிய அளவிலான கருத்துத்தள மாற்றம் நிகழ்ந்தாகவேண்டும்

உங்களுக்குத்தெரியுமென நினைக்கிறேன்.தமிழில் கரியநிறமான கதாநாயகிகள் பெரும்பாலும் இல்லை. அவர்களையும் சிவப்படித்தே காட்டமுடியும். சரிதாவும் நதியாவும் மலையாளப்படங்களில் கருப்பாகவும் தமிழில் பெயிண்டாகவும் தெரிவார்கள்

நான் முன்பு ஒரு மகாபாரத தொலைக்காட்சித் தொடருக்கு எழுதினேன். விலகிக்கொண்டேன். அதில் திரௌபதியாக ஒரு கரிய அழகியை வைக்கலாம், மகாபாரதப்படி அவள் கரியவள் என்றேன். மொத்த யூனிட்டே பதறிவிட்டது. கரியபெண்ணுக்கு ரசிகர்களின் வரவேற்பு இருக்காது என்றனர்

இங்கேதான் பிரச்சினை. நம் பாலியல் மனநிலை மாற்றப்பட்டுவிட்டது. அதுதான் பெண்களைப் பாதிக்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்
அடுத்த கட்டுரைகண்ணுக்குத்தெரிபவர்களும், தெரியாதவர்களும்