என் நண்பர்கள்

22

நண்பர் பாலா ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ’நியாஸின் கடிதத்தில் இருக்கும் அன்புமுத்தங்களில் ஒன்றை நீங்கள் திருப்பியனுப்பியிருக்கவேண்டும், உணர்ச்சியற்று எழுதப்பட்டதாக இருந்தது உங்கள் பதில்’ என்று. உண்மைதான் என்று பதில் அனுப்பினேன். ஆனால் மிகக்கவனமாக எழுதப்பட்ட பதில் அது

நியாஸின் வலைப்பக்கத்தின் நகலை பார்த்தேன். அதில் எதிர்வினைகளில் பல இஸ்லாமிய அமைப்புசார்ந்தவர்கள் அவரை அக்கடிதத்துக்காக கூடிநின்று கும்மியிருப்பதை வாசித்தேன். நியாஸ் ஏதோ என்னிடம் எதிர்பார்த்து நெருங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். சற்றேனும் பிரியத்தைக் காட்டி எழுதியிருந்தால் நியாஸ் எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும். ஒரு சௌகரியமான இடைவெளி விட்டு என்னை மிகமிகக் கடுமையாகத் தாக்கி அவர்களைச் சமநிலைப்படுத்தவேண்டியிருக்கும்

இது என்னுடைய பெரும்பாலான வாசகர்களின் பிரச்சினை. நான் வாசகர்களின் மின்னஞ்சல் முகவரிகளை வெளியிடுவதில்லை. வெளியிட்டால் மறுநாளே அவர்களுக்கு வசைக்கடிதங்கள் குவிந்துவிடும். சமயங்களில் ஒருவரின் பெயரைக்கொண்டே தேடிப்பிடித்து வசைமழை பொழிவார்கள். அந்தப்பேருள்ள நாலைந்துபேர் பாய்ந்துவந்து ‘சார் அது நானிலலை, அதை உங்க தளத்திலே போட்டு என்னைக் காப்பாத்துங்க’ என்று கெஞ்சுவார்கள். சிலசமயம் பொய்யாகக்கூட அப்படிச் செய்திவெளீயிட்டு அவர்களைக் காப்பாற்றவேண்டியிருக்கும்.

பெண்கள் என்றால் பெயரை வெளியிட்டாலே பிரச்சினை. ஆகவே பெரும்பாலும் முதலெழுத்தே வெளியாகும். அப்படி இருந்தும் ஆளைக்கண்டுபிடித்து பின் தொடர்கிறார்கள்.[ ஒரு வாசகியின் அத்தனை கடிதங்களையும் தேடி அனைத்தையும் கூகிளில் தேடி அதில் ஒரு கடிதம் அவரது வலைப்பூவில் இருக்கக் கண்டு அவரைக் கண்டுபிடித்து கடிதங்கள்!]

இஸ்லாமியருக்கு நெருக்கடிகள் மிக அதிகம். என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒருமணி நேரத்தில் விலக்கிக்கொண்ட நண்பர்கள் உண்டு. விஷ்ணுபுரம் விழாக்களுக்கோ நிகழ்ச்சிகளுக்கோ வந்தால் பெயரைச் சொல்லவேண்டாம் என்று என்னிடம் கேட்டுக்கொள்ளும் இஸ்லாமிய நண்பர்கள் பலர் உண்டு. சமீபகாலமாக பிராமணர்களுக்கும் அந்த நெருக்கடி உள்ளது.

வசைகளை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் வாசகர்களுக்குப் புரிவதில்லை. நான்குவருடம் முன்பு ஒரு வாசகருக்கு ‘டேய் சொட்டை நீ என்ன அவனுக்கு அல்லக்கையா?’ என ஒரு மின்னஞ்சல் வந்தது. அவர் நாலைந்துநாட்களுக்கு முன்னால்கூட புலம்புக்கொண்டிருந்தார்.

இணையவெளியிலேயே கூட என் வாசகர்களைப்போல வசைபாடப்படும், அவமதிக்கப்படும் ஒரு சமூகம் வேறில்லை. அடிமைகள், அல்லக்கைகள், முட்டாள்கள் என எல்லா வகை வசைகளும் நாளும் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும். இதனாலேயே ஃபேஸ்புக்கை விட்டு ஓடிப்போனவர்களே அதிகம். பெரும்பாலானவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமலே இருக்கவேண்டியிருக்கிறது

ஆனால் இணையவெளியில் தென்படும் எவரைவிடவும் கூர்ந்த விரிவான உலக இலக்கிய வாசிப்பும், நவீனசிந்தனையும். முதன்மையான அறிவுத்துறைச் சாதனைகளும் கொண்டவர்கள் என் பெரும்பாலான வாசகர்கள். இன்று எந்த ஒரு எழுத்தாளருக்காகவது எந்த ஒரு ஊரிலாவது அவர்களின் படைப்புகளை உண்மையிலேயே வாசித்த நல்ல வாசகர்கள் வேண்டுமென்றால் அது என் வாசகர்களாகவே இருப்பார்கள். அது சாருநிவேதிதாவாக இருந்தாலும் எஸ்.ராமகிருஷ்ணனாக இருந்தாலும் அவர்களை செல்லுமிடங்களில் சென்று சந்தித்து கௌரவிப்பவர்கள் அவர்களே. அவர்கள் அதை அறிவார்கள்

ஆனாலும் இந்த வசைகளை எதிர்கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருக்கிறது. காரணம் அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உயர் ஆய்வு போன்ற ஏற்கனவே அறிவுச்சுமை மிக்க துறைகளில் இருப்பவர்கள். இதன்மூலம் பெறும் மனச்சோர்வு அவர்களுக்கு பெரிய இடர். இந்தச் சில்லறைச்சண்டைகள் பெரும்பாலும் தண்ணியடித்துச் சலம்பும் சிறுபத்திரிகைக்கூட்டத்துக்கும் சில்லறை ஃபேஸ்புக்காளர்களுக்கும்தான் சரிவரும்

இத்தனை வசைகளையும் கடந்து அவர்கள் என்னுடன் இருப்பது சமமான ரசனையும் அறிவார்ந்த ஈடுபாடும் கொண்ட நண்பர்வட்டத்திற்காகவே. அவர்களுக்கு வேறு நண்பர்கள் அவர்களின் தரத்தில் அமைவது கடினம். ஆகவேதான் அமெரிக்காவில் இருப்பவர் காரைக்குடியில் இருக்கும் நண்பரிடம் தினமும் பேசுகிறார். சிங்கப்பூரில் இருந்து டோக்கியோவுக்கு கூப்பிடுகிறார். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வெளியே தலைகாட்டாமல் இருக்கவேண்டியிருக்கிறது. விலகிச்சென்றால் அந்தத் தனிமை தாளாமல் திரும்பி வரவேண்டியிருக்கிறது

சமகால படைப்பாளிகளைக் கௌரவிப்பது, நிதியுதவிகள் செய்வது, [என் படைப்புகள் அல்லாத பிற படைப்புகளைப்பற்றிய] இலக்கியவிவாதம் ஆகியவை மட்டுமே இந்த நண்பர்குழுவின் செயல்பாடுகளாக உள்ளன. இவர்கள் வசைபாடப்படுவது இவர்கள் கறாரான இலக்கியவாசகர்கள், உண்மையிலேயே தமிழிலக்கியப்பரப்பையும் உலக இலக்கியங்களையும் அறிந்தவர்கள் என்பதனாலேயே. இத்தனை வசைபாடப்படும் இவர்கள்மேல் எனக்கு எப்போதுமே ஒரு அனுதாபம்தான். முகம்தெரியாமலிருக்க விழையும் இவர்களைப்புரிந்துகொள்கிறேன்.

என் நட்பு என்பது இன்றைய சூழலில் பெரிய சவால். சிலுவை. அதை ஒருவர் அவரே விரும்பி வந்து ஏற்றுக்கொண்டால் ஒழிய அவர்மேல் ஏற்ற விரும்பமாட்டேன். ஏதாவது சொல்லிவிட்டால் அலறிப்புடைத்துக்கொண்டு நட்பெல்லாம் இல்லை என மறுப்பவர்களைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொருமுறை என் பெயரைச் சொல்லும்போதும் ‘கடுமையான முரண்பாடுகள் இருந்தாலும்கூட’ என்று சொன்ன பின்னரே மேலே பேசவேண்டியிருப்பவர்களை புரிந்துகொள்கிறேன். ஆகவேதான் அந்த கவனமான சொற்கள்.

அத்துடன் ஒன்று. நியாஸ் வாழும் அந்த அறிவார்ந்த அலையும்வாழ்க்கையைத்தான் என் மகனும் வாழ்கிறான். அவனிடம் ‘கலக்குடா’ என்கிறேன். ஆனால் அதை இன்னொருவரின் மகனிடம் சொல்லத் தயக்கமாக இருக்கிறது. பிறரிடம் ‘பொருளாதாரத்தைக் கவனித்துக்கொள். ஒழுங்காக இரு. பிறரைப்போல உலகியல் வெற்றியை இலக்ககாக் கொள்’ என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

விஷ்ணுபுரம் அமைப்பு- இனியவை

முந்தைய கட்டுரைதொடக்கம்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழல்