அன்புள்ள ஜெ –
சரவணகார்த்திகேயன் எழுதியிருப்பது தொடர்பாக ஒரு சிறு ‘வரலாற்றுக்’ குறிப்பு:
இணையச் சமநிலை என்ற பெயரில் இன்று நிகழ்ந்துவரும் சர்ச்சை நமக்கு புதிதல்ல.தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் பரவலானபோதே இதன் முதல் போர் பற்றிக்கொண்டது. இணையம் மூலம் செயல்படும் தொலைபேசி தொழில்நுட்பம் (VOIP) இதன் கருப்பொருளாக இருந்தது. கணினியில் VOIP செயலி மூலம் இந்தியா உலகம் எங்கும் இலவசமாக பேசிவிடலாம், மாதந்திர போன் கட்டணம் வெகுவாக குறையும் என்ற நிலை வந்தது.
VOIP பெரிதாக வந்தால் தங்கள் அடிப்படை வருமானமே பதிக்கப்படும் என்று (நீங்களும் என் அம்மாவும் அப்பாவும் வேலைபார்த்த) அரசு தொலைபேசி துறை-பீ.எஸ்.என்.எல் சரியாக புரிந்துகொண்டது. கேபிள் தாங்கள் போட்டது, அதில் என்ன செல்லலாம் செல்லக்கூடாது என்று ரேஷன் போடும் உரிமை தங்களுக்கே உண்டு என்று வாதிட்டு VOIP செயலிக்களை ஒடுக்கியது. பீ.எஸ்.என்.எல் ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பயந்து வார இதழ்களில் இதை விளக்கி கட்டுரைகள் எழுதி மக்களிடம் ஆதரவு தேடினார்கள். இணையம் வரலாம், ஆனால் VOIP வந்தால் PCO STD ISD எல்லாமே படுத்துவிடும் என்று பயமுறுத்தினார்கள். அரிசி பாமாயில் போல இணையச் சேவையும் ரேஷன் செய்யப்பட வேண்டும் என்று எழுதினார்கள்.
ஐ.டி-பீ.பி.ஓ நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டுக்கு VOIP-ஐ நம்பியே இருந்ததனால் இது ஓரளவுக்கு அடிபட்டுப்போனது. பெருநிறுவனங்கள் ஹோல்சேல் ரேட்டிலும் சிறு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாகவும் தங்கள் இணையதொலைபேசி கோட்டாவை கொள்முதல் செய்துகொண்டார்கள். பொதுமக்களுக்கு இதெல்லாம் முடியாததால் சில வருடங்கள் கட்டுண்டு கிடந்தார்கள்.
ஆனால் கூடவே நிகழ்ந்த தனியார்நிறுவனங்களின் வரவு, செல்பேசி-கேபிள் கட்டுமான பரவலாக்கம், இணைய பரவலாக்கம் போன்றவற்றால் இந்த முதல் சர்ச்சையின் பொருளியல் அடிப்படைகள் மிகவும் நீர்த்துப்போய்விட்டன. பயனர்களான பொதுமக்களுக்கு எந்த சட்ட உதவியும் கிடைக்காமலே இந்த பிரச்சினை தானாக வீரியம் குறைந்தது. (இதையே சரவணகார்த்திகேயன் ‘கொஞ்ச காலம் முன் வரை இந்தியாவில் இதில் ஏதும் சிக்கல் இல்லை’ என்று சொல்லி கடந்துவிடுகிறார்)
இன்று சர்ச்சை வேறுவிதமாக உருக்கொண்டிருக்கிறது. அதை சரவணகார்த்திகேயன் நன்றாகவே விளக்கியிருக்கிறார். அவர் தொடாமல் விட்ட ஒரே பகுதி என்று நான் நம்புவதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
இன்று அமெரிக்காவில் தகவல்தொடர்பு பெருநிறுவனங்கள் சார்பில் ஒரு முக்கியமான தரப்பு சொல்லப்படுகிறது – அதாவது தொலைதொடர்பு கேபிள்களிலும் கற்றலைவரிசைகளிலும் எழுபது சதவீதம் வீடியோ பார்ப்பதற்கே செலவாகிறது என்கிறார்கள். Netflix என்ற ஒற்றை நிறுவனம் பரப்பும் சினிமாவை பார்ப்பதால் இணையத்தின் நாற்பது சதம் அடைபடுகிறது. இன்னும் ஒரு பெரிய பங்கை யூடியூப் எடுத்துக்கொள்கிறது.
இதை வைத்து நடக்கும் சண்டையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தழைந்து போய் தன் வியாபாரம் ஒழுங்காக நடப்பதற்காக பெருநிறுவனங்களிடம் காசு குடுத்து peering agreement என்று கப்பம் கட்டுகிறார்கள். (கூகிள் தளம் என் அவ்வளவு வேகமாக இருக்கிறது, உங்கள் தளம் சற்று மெதுவாக இருக்கிறது, ஒரு இலவச வோர்ட்பிரஸ் தளம் இன்னும் மிக மெதுவாக இருக்கிறது ? இவர்கள் எல்லாம் கட்டும் கப்பங்களின் அளவு வேறு அவ்வளவே).
இதற்கு காரணம் இன்று அமெரிக்காவில் ஏழெட்டு பெருநிறுவனங்கள் தங்கள் கைகளில் மொத்த கேபிள்-கற்றலைவரிசை கட்டுமானத்தை வைத்துள்ளன. அவர்கள் சொல்லும் கப்பத்தை தளங்களும் வாடிக்கையாளர்களும் தந்தாகவேண்டும்.
இதற்கு எதிராகவே இன்று இணையச்சமநிலை என்பதன் கூடவே Open Network போன்ற கருத்தாக்கங்களும் வலுப்பெற்றுள்ளன. தகவல்தொடர்பில் பெருநிறுவனங்களுக்கு ஈடாக சிறுநிறுவனங்களும் பங்கு பெறமுடிந்தால்தான் உண்மையான சமநிலை வரும் என்ற குரல் வலுத்துவருகிறது.
இந்தியாவில் பெருநிறுவனங்கள் இதுவே பெரும் கவலை. அவை இந்த வருங்கால போருக்கு எதிரான ஆயத்தங்களை தொடங்கிவிட்டன. அவர்கள் இன்று செய்வதெல்லாம் அந்த ஆயத்தங்களை மறைக்கும் புகைத்திரையை வளர்ப்பதுதான்