கரடி-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் .தங்களது புனைவும் ,புனைவல்லாத எழுத்துக்களும் என்னை ஊடுருவுகின்ற ஒவ்வொரு முறையும் உங்களை தொடர்புகொள்ள (தொந்தரவு செய்ய ) நினைத்திருக்கிறேன் .இன்று நான் படித்த” கரடி ” சிறுகதை என்னை மிகவும் உள் இழுத்ததால் இந்த கடிதம் .

நீண்ட நாள்களுக்கு பிறகு நீங்கள் எழுதிய சிறுகதைகள் என்பதால் ஒரு கணத்திற்கு அப்பால் , பெரியம்மாவின் சொற்கள் ஆகியவற்றை ஆர்வமுடன் வாசித்தேன் .சற்று மாறுபட்ட கதையாக இருந்தாலும் பல அடுக்குகளை கொண்டு பாலியல் சார்ந்த உளவியல் பற்றி பேசியது “ஒரு கணத்திற்கு அப்பால்” .எனக்கு பிடித்திருந்தது ..உங்கள் வாசகர்களில் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் ..ஆனால் இந்த கடிதம் எழுத என்னை உந்தியது “கரடி” சிறுகதை.உங்களது தனி சிறப்புகளான கூர்மையான வர்ணனைகளும் (கரடி கோழிக்காலை பரிசில் பெறும்பொது திருவிதாங்கூர் மகாராஜாவிடம் பட்டும் வளையும் வாங்கும் நாயர்வீரன் போல சிரம் தாழ்த்து இரு கைகளால் வாங்குவது ,சவரம் செய்யப்பட்ட கரடியின் உடல் அறுவடைக்கு பின்பு தீ வைத்து கருக்கப்பட்ட நிலம் போல தோன்றியது போன்றவை),கதை நடக்கின்ற காலத்திற்கு பொருத்தமான உரையாடல்களும் (பண்டிஜிக்கு (நேரு)அப்புறம் யாரு?) , நேர்த்தியான கதைக்கள வடிவமைப்பும் (அந்தரத்தில் நடனமாடும் பெண்ணிலிருந்து , கோமாளி வரை எல்லோரும் கதை ஓட்டத்திற்கு பாதிப்பில்லாமல் வருகிறார்கள் ) சேர்ந்து இந்த கதையை மனக்காட்சிகளாக விரிய செய்கின்றன.

இத்தகைய புற அவதானிப்புகளை மீறி நான் மனத்திறப்பை அடைந்த இடம் ,அந்த இன்ஸ்பெக்டர் ” A beast is a beast ” என்று சொல்லும்போது .உண்மையில் அந்த கரடி கத்தியை கையாள கற்று கொண்டது மனிதர்களிடமிருந்து தானே .அது கற்று கொண்ட எல்லாமே மனித செய்கைகள் தானே ?..எவ்வளவு எளிதாக அதன் மிருகத்தன்மையை காரணம் காட்டி அதை கொல்கிறார்கள் ..அது மிருகமானால், பாலனை கடித்துக் குதறி இருக்குமே ? மேலும் அந்தக் கத்தியை பாலன் கூட எடுத்து வந்திருக்கலாமே அதைக் கொல்ல ..ஆனால் எதையும் ஆராயாமல் மனிதன் அதை கொல்கிறான் . உண்மையில் ஆறாவது அறிவு பயன்படுவது சுய நலத்திற்காக மட்டுமா ..”ஒற்றை குண்டு போதும் “என்ற வார்த்தை மனச்சுவர்களில் மோதிக்கொண்டே இருக்கிறது .. ஜாம்பவனின் சிலிர்த்த உடம்பும் ,சிதறிய மூளையும் , இளம் நடன பெண்களோடு ஜீப்பில் செல்கின்ற இன்ஸ்பெக்டரும் மனதில் பிம்பங்களாக உறைந்து நிற்கிறது ..மனிதன் இவ்வளவு தானா? இந்த கேள்வி திரும்ப திரும்ப அலைகளாக எழுகிறது மனதில்.

மகேஷ்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 7
அடுத்த கட்டுரைரதம் – சிறுகதை