நியாஸின் பதில்

ஜெ

இது திரு நியாஸின் பதிவு. உங்களுக்கான எதிர்வினையாக.

தங்கமணி
ஆசிரியர்

===================================================================================================================
1


நியாஸின் பதிவு

திரு ஜெயமோகன் அவர்கள் தமிழ் இந்துவில் பிரசுரமாகியுள்ள என் கட்டுரை குறித்து அவருடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறார்.

அதில், உங்களை (ஜெயமோகனை) எனக்கு பிடிக்காது என்று நான் எழுதி உள்ளது அவரை தொந்தரவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு எழுதியதற்கு நான் அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்த வரிகளை எழுதிய பின் அவ்வாறு எழுதியதற்கு மிகவும் வருத்தப்பட்டேன். அன்பை தாண்டிய சிறந்த மதமோ, மொழியோ இல்லை என ஆழமாக நம்புபவன் நான். அந்த வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருக்குமானால் என்னை மன்னியுங்கள் ஜெ.மோ.

ஆனால், நான் இஸ்லாமியன் என்பதற்காக தான் உங்களை வெறுகிறேன் என்பது போல் உங்கள் பதிவில் எழுதி உள்ளீர்கள். நிச்சயம் அது போல் இல்லை ஜெயமோகன். என்னுடன் நெருங்கி பழகும் அனைத்து நண்பர்களுக்கும் நன்கு தெரியும், தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாததிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவன் என்பதும், எதிர்த்து தொடர்ந்து பணி செய்பவன் என்பதும்.

மத அடிப்படை வாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகிறேன் ஜெயமோகன். (மத அடிப்படை வாதத்திற்கு எதிரான என் கட்டுரையை படிக்க.தயவு செய்து என்னை ஒரு இஸ்லாமியனாக குறுக்காதீர்கள்.

முகநூலில் உள்ள என் கட்டுரையில் உங்கள் ஏழாம் உலகம் நாவலை பாதி படித்தவன் என்றே குறிப்பிட்டுள்ளேன். (//….. நவீன புதினங்கள் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நவீன புதினங்கள் ஏதும் என்னில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. ஆனால், ஏழாம் உலகம் நாவல் படிக்காமல் நீ எப்படி ஊடகத்துறையில் ஜெயிக்க முடியும் என்று ஊடக நண்பர்கள் என்னில் பெரிய குற்ற உணர்வை ஏற்படுத்தியதால், ஏழாம் உலகம் நாவலை படிக்க முயற்சித்தேன் ஆனால் சில பக்கங்களை கூட தாண்ட முடியவில்லை, என் வாழ்கை பயணத்தில் எந்த புள்ளியிலும் நான் சந்திக்காத குரூர புத்திக் கொண்ட மனிதர்களை நான் ஏன் உங்கள் நாவலின் வழி சந்திக்க வேண்டும்…? நான் அந்த புத்தகத்தை முழுவதுமாக படிக்கவில்லை.//). உங்கள் நாவலை பிடிக்காததற்கு காரணம் அதன் உள்ளடக்கம் தானே தவிர, நீங்கள் அல்ல ஜெ.மோ.

ஆனால், நீங்கள் நான் இஸ்லாமியன் என்பதற்காக தான் உங்கள் எழுத்துகளை வெறுக்கிறேன் என்பது போல் பதிவு செய்துள்ளீர்கள்.

அனைவருக்கும் பொதுவான மதம் என்று ஒன்று இருக்கவே முடியாது என்பதை ஆழமாக நம்புகிறேன். ( மதம் குறித்த என் கட்டுரை : // நானும் மதங்களும்…!

எனக்கும் மததுக்குமான தொடர்பு வெள்ளிகிழமை தோறும் நடக்கும் விவிலிய வகுப்பில் தொடங்கியது… மூன்றாம் வகுப்பில் என் மதமாக நினைத்தது கிறிஸ்துவத்தை தான்… அதற்கு நான் படித்த ஒரு கிறிஸ்துவ கல்வி நிறுவனமும் காரணம்… Santa Christ, விவிலிய பாடல்கள், பைப்பிள் வகுப்பு, என என் வாழ்க்கை அழகாக இருந்த நாட்கள் அவை… கருணை ததும்பும் ஏசுவின் முகம் என்னை ஆதிக்கம் செலுத்திய பொழுதுகள் மிகவும் ரம்மியமானது…. பிறகு என் மேல்நிலை வகுப்புகள், ஒரு இந்து பள்ளியில்… அம்மன் ஸ்தோதிரங்கள் என இந்து கடவுள்கள் பரிச்சியமானது அப்போது தான்… நான் வசித்த பகுதியான அஹ்ரஹாரமும் இந்து கடவுள்கள் மீது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திடுயது… பிறகு பத்தாவது படிக்கும் போது நபிகள் குறித்த கட்டுரைகள்… தமிழில் குரான்… என சில நிர்பந்தங்களால் படிக்க துவங்கினேன்… பிறகு… நபிகள் என் வாழ்வை ஆக்கிரமித்தார்… அவர் சொல்லிய சில நெறிமுறைகள் எனக்கு பிடித்தது….!!!

பிறகு… கல்லூரியில் visual communication சேர்ந்த பொழுது தொடர்ந்து நிறைய உலக படங்கள் பார்க்க துவங்கினேன்… அப்போது அறிமுகமாகிய Mel Gibson னின் “Passion of Christ” திரைப்படம் என் வாழ்கையில் மிக பெரிய மாற்றத்தை உண்டாக்கியது… அதன் பிறகு கிறிஸ்துவத்தை தேடி தேடி படிக்க துவங்கினேன்… பிறகு ஆபிரகாமிய மதங்கள் ஆன யூதம், கிறிஸ்தவம், முகமதியம் என அனைத்தையும் படிக்க துவங்கினேன்… கிறிஸ்து, மோசஸ், நபிகள் என் வாழ்கைக்கு மிகவும் நெருக்கமானார்கள்…!!!

பிறகு விகடனில் வேலை பார்த்த போது சக்தி விகடனுக்காக பல கோவில்களுக்கு சென்றேன்… சில இந்துகளுக்கே கிடைக்காத பேறு எனக்கு கிடைத்தது…, நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் கருவறை வரை சென்றுள்ளேன்… அப்போது சிவன் எனக்கு மிகவும் நெருக்கமானார்… சிவனியம் எனக்கு மிகவும் பிடிக்க தொடங்கியது… சிவன் குறித்த தேடல் அதிகமானது… (அவர் குறித்தான தேடல் இன்னும் சில நாட்களில் இமயத்தில் கொண்டு நிறுத்த போகிறது… நானும் என் நெருங்கிய நண்பனும் இமயம் செல்ல திட்டமிட்டுள்ளோம்…)

நமக்கும் ஏன் இவ்வளவு மதங்கள் மீது ஈடுபாடு… ஏன் உலகில் இவ்வளவு மதங்கள் என்று எனக்கும் கேள்வி எழுந்த போது தான்… ஓஷோவின் “மதங்களையும் மனிதர்களையும்” குறித்த விளக்கத்தை படிக்க நேர்ந்தது…

கேள்வி:

எதற்கு உலகில் இத்தனை மதங்கள்?

பதில்:

“இத்தனை மதங்கள் இருப்பது இயல்பானது தான்… பார்க்க போனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மதம் இருக்க வேண்டும்… ஒவ்வொரு மனிதனும் தனிபட்டவன்… பிறரிடமிருந்து வேறானவன்… எனவே ஓவ்வொருவருக்கும் ஒரு மதம் ஒருக்க வேண்டும்… ஒவ்வொருவரும் கடவுளை சென்றடைய தனிப்பட்ட மார்க்கம் இருக்க வேண்டும்… ஒரே மதத்தை ஸ்தாபிக்க முடியாது… ஒரே மதம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை எல்லோர் மீதும் திணிக்கலாம்… ஆனால் அவர்களுடைய ஆத்மா அழிந்து போகும்…”
(முழு பதிலையும் படிக்க ஓஷோவிம் தம்மபதம் (1))

ஆம்.. என்னை பொருத்த வரை அன்பே மதம்… அன்பின் வழியாகவே இறைவனை அடைய முடியும்… நிச்சயம் நான் atheist அல்ல… எனக்கு மேல் ஒரு சுப்ரீம் பவர் இருப்பதை நான் நம்புகிறேன்… அதை நான் diagnose செய்ய விரும்பவில்லை… அதை அன்பின் வழியாகவே அடைய விரும்புகிறேன்… அதன் மூலமாக அடைய முடியும் என நம்புகிறேன்…!!! நிச்சயம் நான் ஒரு மதத்தை நிறுவி உங்கள் மீது திணிக்க மாட்டேன்… உங்கள் மதத்தை நீங்களே உண்டாக்குங்கள்… உலகில் முன்னுற்று சொச்சம் மதங்களே இருக்கிறது ஆனால் முன்னூறு கோடிக்கு மேலான மனிதர்கள் இருக்கிறார்கள்…!!! பேராற்றலை சென்றடைய உங்கள் பாதையை நீங்களே உண்டாக்குங்கள்…!!!//)

அனைவருக்கும் பொதுவான மதம் ஒன்று இல்லை எனும் போது நான் மட்டும் எப்படி இஸ்லாமியானாக இருக்க முடியும்?

இஸ்லாமிய அடிப்படைவாதமோ, இந்துத்வ அடிப்படைவாதமோ அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டும் ஜெ.மோ. அதில் மாற்று கருத்து உங்களை போல் எனக்கும் இல்லை. என் வரிகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னியுங்கள்.

ஆயிரம் அன்பு முத்தங்களுடன்,
மு. நியாஸ் அகமது.

பின் குறிப்பு:
நண்பர் தங்கமணி (@Thangamani Elasiappan) பரிசளித்த நீங்கள் எழுதிய யானை டாக்டர் தான் இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன் ஜெ.மோ.

==================================================================================================

அன்புள்ள நியாஸ்,

என் பதிவு உங்களை எவ்வகையிலேலும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புகோருகிறேன். அது தனிப்பட்டமுறையில் சொல்லப்பட்டதல்ல. உங்களை தனிப்பட்ட முறையில் எனக்குத்தெரியாது. உங்கள் தந்தை ஓர் இடதுசாரி என அறிவேன். உங்கள் மனநிலையை இன்று நிலவும் ஒரு சூழலின் விளைவாக புரிந்துகொண்டேன். நீங்கள் அவ்வாறில்லை என்றால் அது மகிழ்ச்சியே.

என்னுடைய பதிவுக்கான பின்புலம் இதுதான். ஒவ்வொருமுறையும் இஸ்லாமிய வாசகர்கள் அறிமுகமாகும்போதும் ‘உங்களைப்படிக்கக் கூடாதுன்னே உறுதியா இருந்தேன்’ என்று சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மிதவாத நோக்குள்ள முஸ்லீம்களே என் வாசகர்கள் என்னும்போது இம்மனநிலை மேலும் ஆச்சரியமளிக்கிறது.

என் தனிப்பட்ட தொடர்பில் உள்ள இஸ்லாமிய வாசகர்களே முந்நூறுக்கும் மேல். அவர்களில் இரண்டேபேர்தான் அறிமுகமாகும்போது அப்படிச் சொல்லாதவர்கள். என் குறிப்பைப் படித்ததும் அவசரமாக போனில் அழைத்தவர்களும் அவர்களே.

ஓர் எழுத்தைப் படிக்கமுடியாமல் இருப்பது,படித்தும் பிடிக்காமலிருப்பது, படித்து கடுமையாக மாறுபடுவது என இலக்கியப்படைப்புகள் மேலும் இலக்கியவாதிகள் மேலும் எதிர்வினைகள் பல வகைகளில் இருக்கலாம். இலக்கியம் என்பது எப்போதும் ஒரு rupture ஐத்தான் உருவாக்குகிறது. ஆகவே அதற்கு எதிராக ஒரு மனவிலகலோ முரண்படுதலோ உருவாவதும் இயல்புதான்.

ஆனால் ஒரு வரிகூட படித்துப்பார்ப்பதற்கு முன்னரே படிக்கக்கூடாது என ஒரு முடிவான மனநிலைக்குச் செல்லுவதன் அபாயம் பற்றியே குறிப்பிட்டேன். உங்கள் சொற்கள் நான் நன்கறிந்த அம்மனநிலையை பிரதிபலிக்கின்றன என்று தோன்றியது. மேலும் அது புகழ்பெற்ற ஓர் ஊடகத்தில் வெளிவருவதென்பது அம்மனநிலையை மேலும் பிரபலமாக்குகிறது

வலுவான முன்முடிவுகளுடன் என்னை அணுகக்கூடியவர்களே அதிகம். ஏனென்றால் இணையவெளியில், அச்சிதழ்களில் தேடினால் என் மீதான வசைகள், அவதூறுகள், காழ்ப்புகளையே அதிகம் காணமுடியும். கணிசமானவர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பவையே அவைதான்.

அறிவார்ந்த தேடல் கொண்டவர்களுக்கு இந்த எதிர்மறைக்குறிப்புகள் ஒரு வகை அறைகூவலையே விடுக்கின்றன. என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்றுதான் அவர்களின் உள்ளம் எழுகிறது.அவர்களே என் வாசகர்கள், அவர்களுடனேயே நான் உரையாடுகிறேன். மற்றவர்களின் வெறுப்பும் வசையும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

திட்டவட்டமான எதிர்மனநிலையைத் தக்கவைத்துக்கொள்பவர்கள் இரு சாரார். பெரியாரியப் பின்னணி கொண்டவர்கள் முதன்மையாக. இடதுசாரிகள் அடுத்தபடியாக. இருசாராருமே வாசித்துப்பார்ப்பார்கள். வலுவான எதிர்கருத்துக்களைச் சொல்வார்கள்.

இலக்கியப்படைப்புகளைப் பொறுத்தவரை அவை பன்முகத்தன்மை கொண்டவை. வாழ்க்கையை மிக அணுக்கமாக பார்ப்பவை. ஆகவே அவற்றை எளிதில் விமர்சித்து நிராகரிக்கமுடியாது. ஆகவே என் புனைவல்லாத எழுத்துக்களையே அவர்கள் எடுத்துப்பேசுவார்கள். அவற்றை சில எளிய ஒற்றைக்கருத்துக்களாக சுருக்கி அவற்றின்மேல் எதிர்வினைகளை முன்வைப்பார்கள்.

என் புனைவல்லாத எழுத்துக்கள் என் சிந்தனையையே காட்டுகின்றன. அவற்றை நான் பெரும்பாலும் தனிப்பட்ட மனப்பதிவுகள், நுண்ணுணர்வு சார்ந்தே உருவாக்குகிறேன். புனைவெழுத்தாளனின் வழி அது. ஆய்வு அவன் வழி அல்ல. அவற்றை தர்க்கபூர்வமாக அடுக்கிச் சொல்ல முயல்கிறேன். சிலசமயம் தர்க்கம் சீராக இருக்கும், சிலசமயம் இருக்காது. அவை பொதுவாக நம் பண்பாட்டை, சூழலைப்பற்றிய விவாதங்களில் விடப்படும் சில இடங்களைத் தொட்டுக்காட்டமுடியும் என்பதனாலேயே முக்கியமானவை.

புனைவுகள் என் கனவு. அவை நான் சிந்திப்பவை அல்ல. அவை நானே அல்ல. எழுதியபின் நானே புரிந்துகொள்ளும் உலகம் அது. என் புனைவற்ற எழுத்துக்களைக்கொண்டு புனைவுகளை வகுக்க முடியாது, புரிந்துகொள்ளமுடியாது.

புனைவுகளுக்கு ஓர் இயல்புண்டு. அவை எப்போதுமே குறைந்தபட்ச நேர்நிலை நோக்கை, உடன்பாட்டுமனநிலையை எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் ஒரு புனைவு பெரும்பகுதி வாசகனின் கற்பனையில்தான் நிகழ்கிறது. முற்றிலும் எதிர்மனநிலையுடன் வாசிக்கும் ஒருவர் கற்பனைசெய்ய மறுத்துவிடுகிறார். அதன்பின் அவருக்குக் கிடைப்பது ஒரு சொற்கூட்டம் மட்டுமே. எந்தப்பேரிலக்கியமும் நீங்கள் மறுத்துக்கொண்டே வாசித்தால் ஒன்றுமே அளிக்காமல் ஆகிவிடும்.

பெரியாரியப் பின்னணி கொண்டவர்களில் இலக்கியத்தையோ ஏதாவது அறிவியக்கத்தையோ புரிந்துகொள்ளும் திராணிகொண்டவர்கள் பெரும்பாலும் கிடையாது. அதற்குக்காரணம் அவர்களிடமிருப்பது அனைத்தையும் ஒற்றைவரியாகச் சுருக்கும் ஒரு சிந்தனைப்போக்கு. எப்போதும் எதிலும் ஆக எளிமையான ஒரு சொற்றொடரை நோக்கி அவர்கள் செல்வதைக் காணலாம். அதை நக்கலாக, கிண்டலாக , வெற்றுக்கோபமாக, காழ்ப்பாக வெளிப்படுத்தி அதை ஒரு சிந்தனை என நினைத்துக்கொள்வார்கள்

அதற்குக்காரணம் பெரியாரியம் ஒரு பரப்பியல் [populism] இயக்கம் என்பதே. பரப்ப்பியலின் வழி குறுக்கலும் எளிமையாக்கலும்தான். சிந்தனை என்பது விரித்தும் நுட்பமாக்கியும் செல்லும் போக்கு கொண்டது. ஆகவே பெரியாரியத்திற்கும் எந்தச் சிந்தனைக்கும் சந்திப்புப்புள்ளியே இல்லை என்பதே என் எண்ணம்.ஆகவே அவர்களுடன் எனக்கு பொதுவாக ஏதுமில்லை.

இடதுசாரிகள் என் வாசகர்கள். எப்போதும் அவர்களுடன் உரையாட முயன்றுகொண்டே இருக்கிறேன். என் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்புசாராத இடதுசாரி மனநிலைகொண்டவர்களே. அவர்களின் மனசாட்சியை நம்புகிறவன் நான். இடதுசாரிகளே இந்த தேசத்தின் நவீன நீதியுணர்வின் அடித்தளம் என்பதே என் உறுதியான எண்ணம். அவர்களின் அழகியல் மதிப்பீடுகள் மேல் மட்டுமே எனக்கு விமர்சனம் உள்ளது. என் புனைவுகள் அந்த முன்முடிவை உடைத்து உட்புகவேண்டும் என விழைகிறேன்.

ஆனால் வாசிக்க மறுப்பவர்களிடம் என்ன சொல்ல முடியும்? அதனால் இழப்பு எனக்கு அல்ல. நான் எவரையும் வென்றெடுத்து கட்சி உருவாக்க நினைக்கவில்லை. உரையாடலுக்கான திறப்பு மட்டுமே இது. இந்த உரையாடல் மூலம் உரையாடுபவர்களே பயன்பெறுகிறார்கள்.

நான் இந்து பண்பாட்டுமரபை எழுதுகிறேன் என்கிறார்கள். உண்மை. அந்த நீட்சியில் சமகாலம் என்னபொருள்படுகிறது என்று பார்ப்பதே என் இலக்கு. அதில் ஒன்றும் ரகசியம் இல்லை. ஒரு தருணத்திலும் ஒரு மதம், இனம், குலம் மீதான எதிர்மனநிலையை உருவாக்கிக்கொள்ளலாகாது என்பதே என் நிலைபாடு. பெரியாரியர்கள் மீதான என் கசப்பே அவர்கள் உருவாக்கும் இனக்காழ்ப்பினால்தான்.

என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் என்னை நிராகரிக்க ஏராளமான இடங்கள் உண்டு. உண்மையிலேயே பிழையாகப்போய்விட்ட பலநிலைபாடுகள் இருக்கலாம். ஏனென்றால் இவை ஆய்ந்து எடுக்கப்பட்ட நிலைபாடுகள் அல்ல, உள்ளுணர்வால் அந்தரங்க அனுபவத்தால் அறிந்தவை. அவற்றில் பிழைகள் நிகழலாம். ஆனால் எழுத்தாளன் என்னும் நல்லெண்ணத்தை கொடுத்தே அவற்றை விவாதிக்கவேண்டும். உலகமெங்கும் எழுத்தாளர்களின் வழி அதுதான். ஆனால் என் எழுத்துக்களில் ஒரு வாசகன் ஒருபோதும் ஒரு மானுடக்குழுமேலும் காழ்ப்பை, வெறுப்பைக் காணமுடியாது.

நான் இந்தியதேசியத்தை நம்புகிறவன். அது காந்தியும் நேருவும் அம்பேத்கரும் சொன்ன தேசியம். அது இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ பிற மதத்தவரோ அவர்களின் முழுமையான பண்பாட்டு இயல்புடன் வாழ்வதாகவே இருக்கும். அந்தத்தேசியத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதெல்லாம் அழிவுத்தன்மை கொண்டவை, வெறுப்பில் அமைந்தவை. இந்தியத் தேசியமே பலவகை மக்கள் கலந்து வாழும் இந்தத்தேசத்துக்கு உகந்தது

இந்துப்பண்பாடு, இந்தியதேசியம் இரண்டையும் பேசுவதனால்தான் மீண்டும் மீண்டும் ஒரு சிறுகுழுவால் மதவாத முத்திரை குத்தப்படுகிறேன். அதை என் எழுத்துக்களை உண்மையிலேயே வாசிக்கும் வாசகர் அறிவார்கள்.

இந்துப்பண்பாட்டின்மேல் ஈடுபாடு கொண்ட எழுத்து என்னுடையது. ஜடவாதம், நாத்திகவாதம் உட்பட இந்துச்சிந்தனைமரபின் சாராம்சமான பகுதியை இன்றைய வாழ்க்கையுடன் இணைக்க முயல்கிறது.இந்து அல்லாதவர்கள் அதை ஏன் வாசிக்கக்கூடாது? ஏன் அதை ஆரம்பத்திலேயே முழுக்க நிராகரித்தாகவேண்டும்? இந்ததேசத்தின் நீண்ட பாரம்பரியத்துடன் ஒரு உரையாடல் தொடங்குகிறது அல்லவா? எளியமுன்முடிவுகளையும் கசப்புகளையும் கடக்க அது உதவுகிறது அல்லவா?

அது நிகழக்கூடாதென நினைப்பவர்களே முன்முடிவுகளை உருவாக்கி நிலைநிறுத்துகிறார்கள். வெறுப்புகளை அமைப்பு ரீதியாக திரட்டுகிறார்கள் அதில் சமூகங்களை சிறையிடுகிறார்கள். இலக்கியம் அச்சிறைகளை கடந்துவருபவர்களுக்குரியது மட்டுமே.

இஸ்லாமிய சமூகம் இன்று ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை ஒரு உறுதியான ஒற்றைத்தரப்பாக ஆக்கி தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்த விழைபவர்கள் அதைச் செய்கிறார்கள். ஐயமும் அவநம்பிக்கையும் கசப்பும் கொண்டவர்களாக அவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே மேலும் மேலும் அடிப்படைவாதம் நோக்கிச் செல்கிறார்கள்.

இஸ்லாமியருடன் நல்லெண்ணம் மற்றும் உரையாடலுக்கான எல்லா வாய்ப்புகளையும் அழிப்பவர்கள் இஸ்லாமிய அரசியல்சார்ந்து செயல்படுபவர்கள், மற்றும் அவர்களுடன் இணைந்துசெயல்படும் இலக்கிய அரசியல்வாதிகள். கவனியுங்கள், இஸ்லாம் பற்றி மிக எளிய விமர்சனத்தை முன்வைப்பவர்களை, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி விமர்சிப்பவர்களை, ஏன் ஐஎஸ்ஐஎஸ் பற்றி ஒரு சிறிய அச்சத்தை தெரிவிப்பவர்களைக்கூட இஸ்லாமிய எதிரிகளாகக் கட்டமைக்கிறார்கள் இவர்கள். உலகளாவிய இஸ்லாமிய எதிர்ப்பின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கிறார்கள். தங்கள் சொந்த எதிரிகளைக்கூட இஸ்லாமிய எதிரிகள் என்று காட்டுகிறார்கள்

அவர்களிடம் இஸ்லாமிய எதிரிகளை நாங்கள் கண்டுபிடிக்கிறோம், நீங்கள் உங்கள் வேலையைப்பாருங்கள் என்று என்றைக்குச் சொல்ல ஆரம்பிக்கிறதோ அன்றைக்குத்தான் இஸ்லாம் தன்னை உணரத்தொடங்குகிறது. ஓர் இஸ்லாமிய நண்பரிடம் நான் கேட்டேன். உங்களுக்கு அறிமுகமான ஒரு இந்து நண்பரைச் சொல்லுங்கள் என்று. அவர் இரு அரசியல் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னார்.

நான் சொன்னேன் , அந்த இருவருமே இந்துமதமே உலகின் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம் என்று பிரச்சாரம் செய்பவர்கள். அந்த கோஷத்தை எழுப்புவதனாலேயே இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மேடைகளில் இடம்பெறுபவர்கள். உண்மையிலேயே இந்துநம்பிக்கை கொண்ட ஒருவரிடம் நீங்கள் ஒருமுறையாவது ஏன் பேசிப்பார்க்கக் கூடாது? அவரை கொஞ்சமேனும் புரிந்துகொள்ள ஏன் முயலக்கூடாது? ஏன் உங்கள் மேடையில் அவர்களில் சிலர் வரக்கூடாது? அவருக்குப் பதில் இல்லை.

இன்று இப்படி உள்ளேயும் வெளியேயும் தாழிட்டுக்கொள்வது வழியாக இஸ்லாமிய சமூகம் பேரிழப்பை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தின்மேல் ஐயங்களை உருவாக்குவதில் இந்து அடிப்படைவாதம் வெற்றி பெற்றுவருகிறது என்றால் அதற்கு முதற்காரணம் இஸ்லாமியர் இப்படி தங்களை ஒதுக்கிக்கொள்வதும் அப்பட்டமான இந்துவெறுப்பாளர்களைச் சார்ந்து இயங்குவதும்தான்.

நான் பலமுறை எழுதியது இது. ஒரு ‘சனாதன’ இந்து ஒருபோதும் ‘இந்து அரசியல்’ சார்ந்தவன் அல்ல. அவன் ஒருநிலையிலும் இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எதிரி அல்ல. அவனுடைய மனநிலையே வேறு. அவன் மாற்றங்களுக்குத் தயாராகாதவனாக, பழைமைவாதியாக இருக்கலாம். ஆனால் ஒருநிலையிலும் அடிப்படைவாதி அல்ல. அவனுடைய மதம் அவனுக்கு அனைத்துவழிகளும் மெய்மை நோக்கி என்றே சொல்லிக்கொடுக்கிறது.

சாதாரணமாகவே அவன் அப்படித்தான் இருக்கிறான். இந்தத்தேசத்தின் மதச்சார்பற்றதன்மை அவன்மேல்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்து அடிப்படைவாதி என்பவர் எப்போதுமே பழமையிலிருந்து விலகி நவீனத்துவம் நோக்கி வந்தவன், அரசியல்படுத்தப்பட்டவன்.

இந்துப் பண்பாட்டின் எதிர்கால வடிவை முன்வைக்கும் என்னைப்போன்ற ஒருவருக்கு இந்து சனாதனி எல்லாவகையிலும் மதிப்பிற்குரியவனே. வெறுப்பை சகிப்பினாலும் ஒடுக்குமுறையை உறுதியாலும் வெல்லத்தெரிந்தவன் அவன். அவனுடைய அனைத்துக்குறைகளுடனும் அவன் ஒரு பண்பாட்டுச் சக்திதான்

இந்துக்களுடன் ஆக்கபூர்வமான உறவுக்கு முயலாதவரை இஸ்லாமிய சமூகம் மேலும் மேலும் இறுகிக் கசந்து தன்னை அழித்துக்கொள்ளும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அதை நோக்கி இஸ்லாமைக் கொண்டு செல்லும் வெறுப்புசக்திகளைக்குறித்து அது எச்சரிக்கையாக இருந்தாகவேண்டும். நான் மீளமீளச் சொல்லவருவது இதைத்தான்

அதேபோல நவீன சிந்தனைகள், புத்திலக்கியங்கள் அனைத்துடனும் இஸ்லாமிய சமூகம் உரையாடியாகவேண்டும். இன்று அது வெறுப்பின் குரலில் கசப்பின் குரலில் பேசுபவர்களை மட்டுமே செவிகொண்டபடி இருக்கிறது. நம்பிக்கையின் எதிர்பார்ப்பின் குரலில் பேசுபவர்கள் அதற்குத்தேவை.

ஆகவேதான் ‘காரணமற்ற விலகல்’ என்பதை ஒரு முக்கியமான பேசுபொருளாக ஆக்க விழைந்தேன். நான் சுட்டிக்காட்டியது அதைமட்டுமே.

*

மதங்கள் மேல் விமர்சனங்கள் என்றுமிருக்கவேண்டும். இல்லாத நிலையில் எந்த மதமும் பழைமைவாதமாக, மூடநம்பிக்கையாக, வெற்று ஆசாரமாகவே மாறும். ஏனென்றால் மதம் இருப்பதே பழைமையின் பெருந்தொகுப்பாகத்தான்.

ஆனால் மதம் இல்லாத நிலையில் சென்றகாலத்துடனான எல்லா உறவுகளும் அறுந்துபோகும். முதன்மையான இழப்பு என்பது ஆழ்படிமங்கள்தான். அவை நம் பழங்குடிவாழ்க்கையில் இருந்து உருவாகி இன்றுவரை தொடர்ந்து வருபவை. நம் ஆழ்மனம் அவற்றால் ஆனது. நம் சிந்தனைகளை தீர்மானிப்பவை அவை. அவை இழக்கப்பட்டால் அழகியல் இல்லை. இலக்கியம் இல்லை. கற்பனை என்ற அறிதல்முறையே இல்லை.

விழுமியங்களும், வரலாறும் எல்லாம் மதத்தில்தான் உறைந்துள்ளன. அவற்றை முழுமையாக உதறமுடியாதென்றே நினைக்கிகிறேன். ஓஷோ கூட அனைத்து விவாதங்களையும் மதநூல்களைக்கொண்டே உருவாக்கினார்

*

புனைவுகளை வாசிக்காமல் இருக்கும் சுதந்திரம் அறிவியக்கத்தில் அறிவியலாளர்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் வாசித்தாகவேண்டும். ஏனென்றால் புனைவிலக்கியமே மொழியை உருவாக்குகிறது. மேலும் மேலும் நுட்பமாகத் தொடர்புறுத்துவதே மொழியின் பரிணாமம். அச்சவாலை புனைவிலக்கியமே சந்திக்கிறது

புனைவிலக்கியம் வாசிக்காதவர்களின் மொழி மெல்லமெல்ல ‘தரப்படுத்த’பட்ட ஒன்றாக ஆகும். அதில் புதிய பாய்ச்சல்கள் நிகழாது. நுட்பங்கள் அமையாது. மெல்லமெல்ல அது தேய்வழக்குகளாக மாறும்

மாற்றுக்கருத்துக்களையும் எதிர்க்கருத்துக்களையும். அடுக்கிக்கொண்டு செல்ல உதவுவது ஒரு மொழி என்றால் அடுக்கைக் கலைத்துமேலேற உதவும் மொழி இன்னொன்று.ஆகவே புனைவுகளையும் வாசியுங்கள். புனைவுமொழியின் நுட்பங்கள் உங்கள் மொழியில் ஏறுமென்றால் எதை எழுதினாலும் அது சுவாரசியமாக ஆகும். வாழ்த்துக்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்
அடுத்த கட்டுரைதொடக்கம்