அழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்

அழியும் பாரம்பரியம், மார்க்ஸியம்

இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே சொன்ன மாதிரி, கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக பிற மதங்களாலும், வேறு தத்துவங்களாலும் அழிக்க முடியாத ஒரு கட்டுமான அமைப்புள்ள இந்த மதத்தை மார்க்ஸியம் போன்ற சக்திகள் ஒன்றும் செய்துவிட முடியாது, என்றார்,

”இது பகவத் சங்கல்பத்துல உருவான மதம் அல்லவா, அத எப்படி இவாளாலே அழிச்சுட முடியும்”, என்றார்,
அவர் நம்பிக்கையில், மேற்கொண்டு நான் வாதம் செய்ய விரும்பவில்லை,
இன்னொரு தடவை படிச்சு பாருங்க, புரியும் என்று சொல்லி போனை துண்டித்தேன்.

இந்துமத தத்துவ சிந்தனையை குறைத்துக்கொண்டு, நம்பிக்கை மட்டுமே சார்ந்த பக்தி மரபில் உள்ள நம்மை சுற்றிய மிகபெரிய கூட்டம் கூட மற்றுமொரு மார்க்சியம் போல் தான் எனக்கு தோன்றுகிறது..

அன்புடன்
சௌந்தர்

அன்புள்ள ஜெ,

நேற்று உங்கள் சொற்பொழிவிற்கு வந்திருந்தேன். நிறைவாக இருந்தது. பயனுள்ள இரண்டு மணி நேரங்கள்.

இந்து மதம், பண்பாடு பற்றிய உங்கள் சோர்வுவாதத்தை ஏற்க விரும்பவில்லை, உங்கள் கண்ணோட்டம் உண்மையாக இருந்தாலும் கூட.

சமீபத்தில், குஜராத் பயணத்தில், சாரிசாரியாக மக்கள், குல தெய்வத்தின் கோவில்களுக்கு, நடந்து செல்வதைப் பார்த்தேன். கொற்றவை வழிபாடு, எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானதாகத் தெரிகிறது. மேற்கத்திய மதங்களில் இல்லாத ஒரு அம்சம் பெண் தெய்வ வழிபாடு. இந்த வேறுபாடும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பழங்குடி தெய்வங்களும், இந்து மதத்தையும், பண்பாட்டையும் காக்கும் என்று நம்ப விரும்புகிறேன்.

கடந்த முப்பது-நாற்பது வருடங்களில் மேல் மருவத்தூர் போன்ற கோவில்களின் எழுச்சி நம்பிக்கை தருவதாகவே உள்ளது. மேல் மருவத்தூர், பெரும்பாலும் இடைநிலை சாதிகளின் கோவிலாக இருந்தாலும் எல்லா சாதியினருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. எங்கள் குல தெய்வம் கோவிலான சிறுவாச்சூரிலும் (அங்கும் கண்ணகிதான் மதுர காளியாக இருக்கிறாள்) சமயபுரத்திலும் கூட்டம் குறைவதில்லை.

ஆனால், ஆந்திர கடலோர மாவட்டங்களில், மத மாற்றம் வெகு வேகமாக நடைபெறுவதையும் கேள்விப்படுகிறோம். ஆந்திராவின் பழங்குடி தெய்வங்களுக்கு என்ன ஆயிற்று? பெரும் தெய்வமாகிய பாலாஜி வழிபாடு, சிறு தெய்வங்களை ஓரம் கட்டிவிட்டதா?

அன்புடன்
ஸ்ரீதர்

முந்தைய கட்டுரைசாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்