உலகத்தொழிலாளர்களே- ஒரு கடிதம்

வணக்கம்.

மே தினத்தன்று தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளும் வெகு அருமை.

ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நவீனத்துவ எழுத்தாளரிடம் கேட்டேன் .

சார் இன்றைக்கு உருவாகி இருக்கும் நவீன நிறுவனமயப்படுத்தப்பட்ட தொழில்
நுட்ப வளர்ச்சி இலக்கியத்தை இல்லாமலேயே செய்து விடக் கூடிய அபாயம் கொண்டதாக நீங்கள் நினைக்கவில்லையா? அவரால் உடனடியாக அந்த கேள்வியை உள்வாங்க முடியவில்லை.

நான் சொன்னேன் ஹாங்காங் சீனா மாதிரியான நாடுகள் கிட்டத்தட்ட எந்த ஒரு இலக்கிய ஜனநாயக வெளி இல்லாமல் மிகவும் இயந்திர மயமாக மாறி வருவதையும் கிட்டத்தட்ட நாமும் மெல்ல மெல்ல அந்த இடத்தை நோக்கி நகரக் கூடிய அபாயம் இருப்பதையும் சொன்னேன்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார் நீங்கள் இந்திய கிராமங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை அங்கே ஒரு டோர்ச் லைட்டை இயக்கும் தொழில் நுட்பம் கூட தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

நான் யோசித்தேன் அவர் சொல்வது உண்மை தான்
ஆனால் நான் கேட்பது அதை விட பெரிய உண்மையை. நான் இரண்டு ஆண்டுகளாக பூதாகாரமாக உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கும் கேள்விகளை என்
சார்பாக நீங்கள் விரித்து எழுதியது போல் இருந்தது.

நீங்கள் சொன்னதை தாண்டி எதையும் நான் சொல்ல போவதில்லை அனால் சில மேலதிக தகவல்களை தரலாம் என நினைக்கிறேன்.

இன்றைய வியாபார முறைகள் என்னென்ன? என்னுடைய நிறுவனத்தின் உயர் அதிகாரி சொன்னது இது.

எந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையை செலவினங்களோடு ஒப்பிட்டு பார்த்தாலும் 20-34 விழுக்காடு சம்பளம் மற்றும் ஊக்க தொகை செலவு.

அடுத்ததாக போக்குவரத்து மற்றும் அலுவலக வாடகை இரண்டும் சேர்த்து கிட்டத்தட்ட 50 விழுக்காட்டை நெருங்கக்கூடிய ஒரு செலவினம்.

எனவே இவர்கள் தங்களின் வியாபார முறையை இப்படி வகுக்கிறார்கள். ஹை கோஸ்ட் சென்ட்டர் மற்றும் லோ கோஸ்ட் சென்ட்டர்.

இந்த அடிப்படையில் தான் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கு வேலைகள் வருகின்றன இதில் சில ஆசிய நாடுகளும் அடக்கம்.

இதற்க்கு பெயர் ரீ-இன்ஜினியரிங்.

இருநூறு ஆண்டுகளாக தங்களின் வேலையை ஒரே தடத்தில் செய்த இவர்கள் ஒரே ஆண்டுக்குள் கேட்கிற முதல் கேள்வி இந்த வேலையில் செய்த முன்னேற்றங்கள் என்ன?

ஐந்து நபர்கள் வேலை செய்கிற இடத்தில 20-சதம் ஆண்டுக்கு ஆண்டு கழிவு கேட்கிறார்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு வேலை செய்த அனைவரின் நிலை என்ன?

அதற்குள் இந்தியாவின் அடுத்தக்கட்ட நகரங்களுக்கு மும்பையிலிருந்து சென்னைக்கோ கும்பகோணத்துக்கு வேலைகளை மாற்றிய நிறுவனத்தை கூட அறிவேன்.

இதற்கு முன் நான் வேலை செய்த நிறுவனம் மும்பையில் தன்னுடைய ஊழியர்களை பௌன்சர்களை வைத்து வெளியேற்றியது.

இது விளைவிக்கிற இருத்தலியல் உளவியல் சிக்கல்கள் எண்ணற்றவை.

தங்கள் ஊழியர்களிடம் இவர்கள் பேசுகிற தொனியே நீ தகுதியற்றவன் என்பதே.இவர்களிடம் உள்ள சில நவீன சித்திரைவதை கருவிகளால் தற்கொலை வரை சென்று மீண்ட மிக திறமைசாலியான நண்பர்களை நான் அறிவேன்.

இந்தியாவின் எந்த தொழில் நிறுவன சட்டமும் இங்கே செல்லாது.

என்னுடைய முந்தைய நிறுவனத்தில் ஒரு அட்டை தொங்கும்.நாங்கள் இங்கே காலை 9 மணி முதல் ஐந்து மணி வரை மட்டுமே வேலை பார்க்கிறோம் என்று ஒரு அப்பட்டமான பொய்யை அச்சிட்டு மாட்டி வைத்திருப்பார்கள்.

சில நேரங்களில் அதை பார்க்கும் போது என்னுடைய இயலாமை மீது காறி உமிழ்ந்தார் போலிருக்கும்.

இன்றைய மருத்துவ ஆய்வுகள் சொல்வது இந்தியாவின் மிகப்பெரும் சிக்கலாக இந்த மன அழுத்தம் உருவெடுக்க போகிறது என்பதே.

நிறுவனத்தில் வேலை செய்வதற்க்கான மனநிலைகளை உருவாக்குவதற்கே பல்கலைகழகங்கள் முயல்கின்றன.

மிக உயர்ந்த கல்வி கற்ற நண்பர்கள் முதலில் கற்பதே இந்த மனநிலையை தான் தகவல்களை தொழில்நுட்பத்தின் மூலம் லாபகரமாக மாற்றுவது இந்த கல்வியின் சாரம்.பிறகு உயர் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு அடிமை வேலை.

இந்த மனநிலை தான் நம்முடைய அத்தனை காரணமாக இருக்கிறது. சாமானியனின் அறியாமையை விட இந்த சூழலில் அறிவுஜீவி வர்கத்தின் கள்ள மௌனம் தான் திகைக்க வைகிறது.

சில நாட்கள் முன்பு ஒரு கள போராளி ஒரு நேர்காணலில் சொல்லிக் கொண்டிருந்தார் வேலை எனபது வெறும் பௌதீகமான செயல் அல்ல. அது ஒரு பண்பாட்டு தொடர்ச்சி.

இங்கே ஆயிரம் பேருக்கு வேலை தருகிறோம் என்று சொல்லி இந்த பண்பாட்டை அழித்து இங்கே இதற்க்கு முன் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்து கொண்டிருந்த பத்தாயிரம் பேரை துரத்து வது தான் நடக்கிறது என தரவுகளோடு சொல்லி கொண்டிருந்தார்.

உண்மை உங்கள் நூறு நாற்காலிகள் சிறுகதையில் சொல்வது போல் நமக்கு மேலும் நூறு வர்கீஸ் குரியன்கள் தேவை.

அமுல் போல பல நூறு நிறுவனகள் தேவை அதை தான் கற்றவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் வளர்ச்சி என்பதை உண்மையாக அறிந்தவர்கள் செய்ய வேண்டும்.

அனால் இந்த நாடு வரத்தை விட சாபத்தை அதிகமாக பெற்றிருக்கிறது என்றே இந்த சூழ்நிலையில் சொல்ல தோன்றுகிறது.

அன்புடன்
சந்தோஷ்

முந்தைய கட்டுரைதனிவரிசை
அடுத்த கட்டுரைசாலியமங்கலம் பாகவத நிகழ்ச்சி