அழியும் சித்திரங்கள்

1

அன்புள்ள அண்ணா,

தஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம்? அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல்படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் மீட்கப்படாமல் தான் இருக்கிறது . இந்த பண்பாட்டு தளங்களை அழியாமல் பாதுகாக்க எதாவது செய்யுங்கள்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1244539
நன்றி

ராஜமாணிக்கம்

அன்புள்ள ராஜமாணிக்கம்,

பொதுவாக இந்து ஆலயங்களனைத்துமே அழிந்துகொண்டிருக்கின்றன. அதற்குக்காரணம் இந்துக்களின் ஒரு குறிப்பிட்டமனநிலை. மதம் குறித்த முழுமையான அறியாமை. மதத்தின் ஆன்மீகம், தத்துவம், அழகியல் எதையும் அவர்கள் எவ்வகையிலும் கற்றுக்கொள்ள இன்றைய கல்வி- குடும்பச்சூழலில் வழியில்லை. ஆர்வமும் இல்லை. மதத்தின் பயனுறுதளம் மட்டுமே சோதிடம் மூலம் அறிமுகமாகிறது. கோயில்களை பொதுக்கழிப்பிடம்போல ‘பயன்படுத்துவது’தான் நம்மவர் மனநிலை. காசுபோட்டு தங்கள் அவசங்களைக் கொட்டிவிட்டு நிம்மதியாக மீள்வது

அத்தனை ஆலயங்களும் அழிந்துகொண்டிருக்கின்றன. மணல்வீச்சுமூலம் சிற்பங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. திருபப்ணி என்றபேரில் பெயிண்ட் அடித்து அழிக்கப்படுகின்றன. உடைக்கப்படுகின்றன. கான்கிரீட் கட்டிடங்களைச் சேர்த்துக்கட்டி கோயில்கட்டுமானங்களை வலுவிழக்கச்செய்கிறார்கள்

இதற்கு எதிராக மக்கள் மனநிலையைத் திரட்டுவது இன்றையசூழலில் எளிதல்ல. மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் ’சாமிகும்பிட்டா கோயில் இடியத்தானே செய்யும், அதுக்கென்ன இப்ப, வேர கட்டிக்கிட்டாப்போச்சு’ என்பதே இந்துக்களின் மனநிலை. சட்டத்தைக்கொண்டுதான் முயலவேண்டும். அதற்கு இறங்கிவேலைசெய்ய சிறிய ஆர்வலர் குழுக்கள்தேவை. அவை உருவாகிவரவில்லை என்பதே நம் சிக்கல்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்
அடுத்த கட்டுரைசாருவும் மேனகாவும்