உன்னதமானவையும் அவசியமானவையும்

ஆசிரியருக்கு ,

நீங்கள் கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகள் பின்னல் சென்ற வேகம், ஆயிரம் கால் மண்டபம் தொகுப்பை படித்த அந்த 7,8 ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலையில் இதை எழுதுகிறேன். மிகச் செறிவான சிறுகதை.

காமம் நிறைவதல்ல ஒன்றில் இருந்து அடுத்ததற்கு என தொடர்வது, உயிராற்றலின் இயல்பு அது என்பதே கதையின் மையம். இறுதியில் அப்பெண் நேரில் வந்திருந்தால் அடுத்த பெண்ணைக் கேட்டிருப்பார். இக்கதையைப் படித்து விட்டு sublimation என்பதன் எதிர்ப்பதம் என்ன எனத் தேடினேன் , இணையத்தில் திருப்திகரமாக ஒன்றும் கிடைக்கவில்லை. நீலப்படத்தில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு செலுத்தல் sublimation, கிருஷ்ணாபுர சிற்பத்தில் இருந்து நீலப்படத்திற்கு செல்லுதல் de-sublimation, கிருஷ்ணாபுர சிற்பங்கள் விசேஷ தளத்தில் போலியானவை ஆனாலும் நிறைவளிப்பவை. நீலப்படங்கள் அசலானவை ஆனாலும் நிறைவளிக்காதவை , அடுத்தது அடுத்தது என விரட்டச் செய்பவை. ஆனாலும் இந்த அசல் உடலிலும் ஜெல் பொருத்துவதால் அந்த போலியான கலை உயர்வை நெருங்க முயல்கிறது , நிறைவை நெருங்க முடியுமா எனப் பார்க்கிறது, பார்த்துத் தோற்கிறது.

அதற்கு அடுத்த கணம் மேலும் ஒரு கணம்.

போலச் செய்தாலும் அதன் உயர்வுகளை செறிவாக்கி செய்த சிற்பங்கள் உயர்ந்தவை, ஒரு அழகியல்/ஆன்ம உயர்வைத் தருபவை . தசைகள் பொருத்தப்பட்டாலும் அது அசல், ஆதி இச்சைகளை வசீகரிப்பவை மனித குலத்தின் உயிராற்றலுக்கு மிக இன்றியமையாதவை. இந்த இரண்டுக்கும் இடையே ஊஞ்சல் போல ஆடுகிறது இக்கதை. இவ்விரண்டையும் தக்கவைப்பதே நமது கலை இலக்கியம் சிந்தனை எல்லாம்.

கதையைப் பற்றிக் கூறப் போனால் , லீலா அவனுடைய விவாகரத்துப் பெற்ற முன்னால் மனைவி என ஊகிக்கிறேன். முதலிலேயே கணினித் திரையில் சிறியதாக உள்ளது சுட்டி தொட்டதும் பெரிதாவது , பிற அனைத்து அன்றாட சின்னங்கள் அங்கு உள்ளது என ஒரு கணினித் திரை icon களை வைத்து நமது அன்றாட வாழ்வை உருவகப் படுத்திப் படித்தேன். அதிலும் குறிப்பாக அந்த நீலப் படம் எப்படி அழித்தாலும் அழியாதது, நிரந்தரமாக சிறிதாகவேனும் ஒரு மூலையில் காத்துக் கிடப்பது , நீர்பட்டதும் சட்டென வளர்ந்து பரவுவது அபாரம். தந்தையின் ஞாபக மறதியும் கூட ஒரு வகையில் பெரிதாக ஒன்றைச் சுட்டுகிறது. மின் தூக்கியின் வழி தனது உலகிற்கும் 7வது மாடியில் தந்தையின் உலகிற்கும் என சென்று சென்று மீள்கிறான், எதிர்காலத் தகப்பன்.

அவசியமானவையில் உன்னதமானது உறைந்துள்ளது , உன்னதமானவற்றில் அவசியமானவை உறைந்துள்ளது.

கிருஷ்ணன் .

முந்தைய கட்டுரைஎம்.எஸ். எதிர்வினைகள், பதில்
அடுத்த கட்டுரைசவரக்கத்தியும் துப்பாக்கியும்