பாவம் என்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

இது என்னுடைய இரண்டாவது கடிதம்..

காலையில் என்னுடைய நண்பர் போன் செய்து ‘ஜெயமோகன் பிளாக்கில் ஒரு சிறுகதை போட்டிருக்கிறார் டைமிருந்தா படி’என்றார். கையில் பெரியதிரை செல்போனிருந்தாலும் அதில் படிக்க சிரமமாக தெரிந்ததால். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த பின் தான் படிக்க முடிந்தது. சமீபத்தில் பல சிற்றிதழ்களில் சிறுகதைகள் படித்து சோர்ந்து போயிருந்த நேரத்தில் சிறு அதிர்வும், துடிதுடிப்பும் ஏற்படுத்தியருக்கிறது ஒரு கணத்திற்கு அப்பால்.

1.சொல்லப்படாத கதை..

2..இன்றைய உலகியல் கொண்ட கதைக்களம்.

சிறிது பிசகினாலும் வேறுமாதிரி போககூடிய கதை (உங்களுக்கு அந்த போக்கெல்லாம் அழகாக திருப்பி கொண்டுவர தெரியும்).

முதலில் கதை படிக்க படிக்க முலை,யோனி,ஆண்குறி என்று போனாலும் கதை படித்து முடித்ததும் நினைவில் நிற்பது அந்த அப்பாவும், மகனும் மட்டுமே. அப்பாவின் புத்துணர்ச்சியும், தெளிவும் அவருக்குள்ளிருந்து எழுந்து வெளியே வந்து விடுகிறது. அந்த பாலியல் தளம், அதன் விவரணைகள் அத்தனையும் அமிழ்ந்து போய்விடுகிறது.
சார், உங்களுக்கென்று ஒரு ஒழுங்கை கட்டமைத்து இருக்கிறீர்கள். அந்த ஒழுங்கு உங்களின் கதைகளில் நான் கண்டடைந்தது. அந்த கட்டமைப்புக்குள்ளே மிக அழகாக கதையை கொண்டு செல்கிறீர்கள். செக்ஸ்சுவல் விசயத்தை தொடுகிறீர்கள் அதன் எல்லை மீறாது மெல்லிய காற்றாக அது வாசகனை வருடி மட்டுமே செல்லக் கூடியதாக இருக்கும். கதைக்கு தேவையான இடத்தில் அது இறங்கி தொடும்.

இளைமைக்கு என்றே ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. இளமையாக இருப்பதனால் இளமையை உணர்வதனால் மட்டுமே வரக்கூடிய மகிழ்ச்சி.இந்த வரிகள் அவன் ‘அப்பாவினுள் ஏற்படுவதை ‘ படிக்கும்போது உணர்ந்தேன். அவர் பாலியல் தளத்தை அவ்வளவு வெறியாக விடாமல் பார்த்தாலும் அவர் ஞாபகப்படுத்துவது அவருடைய இளமைக்காலத்தை தான் . மாறாக அந்த பாலியல் தளத்தை பற்றி அவர் யோசிக்கவில்லை. இந்த இடம் தான் எனக்கு மிக பிடித்திருந்தது. அந்த தளம் ஒரு குறியீடாக காட்டப்பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர் தளத்திற்குள் செல்லும்போதும் மகனிடம் ‘எல்விஸ் பிரஸ்லியிலிருந்து ஆரம்பித்து ராஜேஸ்கண்ணா, டிம்பிள் கபாடியா, ரிஷிகபூர் என தன் பால்ய கால வாழ்க்கையை நினைவில் கொண்டுவருகிறார். அந்த தளம் அவரை அவர் இ ளமையை மீட்டெடுக்கவும், இளமையில் ரசித்த துள்ளல்களையுமே அவருடைய அக உலகத்திலிருந்து எடுத்துக்கொண்டுவருகிறது…அந்த தளத்தில் நடக்கின்ற காம சேட்டைகளை பற்றிய பதைப்பும், கொந்தளிப்பும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

நண்பரிடம் இதோ ‘இந்த கடிதத்தை டைப் செய்வதற்கு’ முன் கேட்டேன்.எப்படியிருந்தது என்று ‘என்னங்க இப்பிடீ எழுதிருக்காரு’ என்றார். அவர்சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தது. காமமும்,
அதன் விவரணையும் கிணற்றில் சுவரோரத்தில் படிந்திருக்கும்பாசியாக மிளிர்கிறது. ஆனால் அந்த அப்பாவை பற்றியஉணர்வுகள் கூழாங்கற்களாக அடியில் கிடக்கிறது குளுமையாக.நான் டீன்ஏஜில் இருப்பதற்காக சொல்லவில்லை..என்னுடைய நண்பரின் கம்யூட்டர் சென்டரில் சரியாக 7 , 7.30க்கெல்லாம் ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர் அலுவலகம் முடிந்த கையோடு வந்து அமர்வார். பாக்கெட்டிலிருந்து துண்டு சீட்டில் சில குறிப்புகளை பார்த்தபடியே தட்டச்சு செய்து உள் நுழைவார். சென்டர் மூடும் வரை மூழ்கிருப்பார். நண்பர் சொன்னார் ‘மனுசன் என்னாமா பாக்குறான்…எல்லா எளவெயும் விரல் நுனில வெச்சுருக்கான்..சரியா ஸடவுன் செய்யாம போயிருப்பான் வா காட்டுறேன்’ என்றான் அதற்கு நான் ‘ அது அவருடைய அறை, பர்ஸ்னல் அதற்குள் நாம மூக்கு நுழைக்க வேணாம்” என்றேன். ஆனால் அவர் வெளியெ செல்லும் போது ஒரு வித புத்துணர்ச்சியிலிருப்பதை கண்டிருக்கிறேன். அது அவருக்கு மட்டுமே தெரிந்து புத்துணர்ச்சி அல்லது கொட்டிவிட்ட சந்தோசம். நடையில் ஒரு துள்ளல். அது ஒரு வித சிகிச்சைதான். இளமை மாற்று சிகிச்சை. ஒழுங்கை கடைபிடிப்பவர்களுக்கு குழந்தையை போன்று அதன் எல்லை மீறாத உணர்வை எடுத்து பார்த்து விட்டு எடுத்த இடத்திலே வைத்துவிடுகின்ற விளையாட்டுத்தனம்..

நன்றி
மு. தூயன்
புதுக்கோட்டை.

அன்புள்ள தூயன்,

பாவம் என்பது வாழ்க்கையை வெறுப்பதுதான். அரதிதான். ரதி என்றுமே அழகானவள்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16
அடுத்த கட்டுரைவாசகனும் நட்பும்