அன்புள்ள ஜெ,
பெரும்பான்மையானவர்களால் தொடப்படாத ஒரு களம். இணையத்தில் உலாவும் எவரும் நிறைய நேரத்தைச் செலவிடும் இடமாக இருப்பவை இத்தகைய பாலியல் தளங்கள். சமூக வலைத்தளங்கள் பெரும்பான்மை நேரத்தை எடுத்துக்கொள்ளும் வரையில் இணையத்தில் பார்ப்பதில் 80 சதவீதம் இத்தகைய தளங்களாகவே இருந்திருக்கின்றன. இன்றும் பெரும்பாலானவர்களின் வடிகாலாகவும் இத்தளங்கள் செயல்படுகின்றன. உண்மையில் இது பெரும்பணம் புழங்கும் ஓர் தொழில்.
ஆனால் இக்கதை பாலியல் கிளர்ச்சி கதை அல்ல. உண்மையில் கதையின் தலைப்போடு சேர்த்துப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடிகிற ஓர் கதை. இது உங்களின் பெரும்பாலான சிறுகதைகளுக்குப் பொருந்துவது தான். இங்கே இக்கதை சுட்டுவது பாலியல் காட்சிகள் தரும் கிளர்ச்சிகள் நிகழ்ந்து முடிந்த அக்கணத்துக்கு அப்பால் நடப்பவற்றைப் பற்றி.
இங்கே அக்காட்சிகளை இருவர் பார்க்கிறார்கள். ஒருவர் மகன், விவாகரத்தானவர், முன் நாற்பதுகளில் இருப்பவர். தற்போதும் விவாகரத்தான மனைவியிடம் நட்பார்ந்த உரையாடலில் இருப்பவர். மற்றொருவர் தந்தை. அல்சைமர்ஸ் (நினைவாற்றல் இழப்பு) நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர். மிக முதியவர். இவரது நோய்க்கூறு கூட ஒரு வகையில் மகனின் விவாகரத்திற்கு காரணமாயிருக்கலாம். ஆனால் மகனுடன் ஆத்மார்த்தமான ஓர் நட்புடன் இருந்திருக்கிறார்.
இருவரும் இரு எல்லைகளில் உள்ளனர். ஒருவர் இகத்தில், தன்னுணர்வில், அது தரும் மனச்சோர்வில் இருப்பவர். மற்றொருவர் காலம், இடம் மறந்த பரத்தில், அவ்வப்போது தன்னுணர்வுக்கு வந்து சென்று கொண்டிருப்பவர். தன்னுணர்வு தோன்றும் போதெல்லாம் வரும் தாங்க முடியாத குற்ற உணர்வு அவரை மேலும் மேலும் பேசாதவராக, மூர்க்கமானவராக, முதியவராக ஆக்கி இருக்கிறது. இந்த மறதியும் மூர்க்கமும் அவருக்கு எதுவுமே பொருட்டாகத் தோன்றாததாக ஆக்கி வைத்துள்ளன. அவர் உண்பதற்கு அடம் பிடிக்கிறார். அது அவரின் ஆழ்மனம் நடத்தும் நாடகம். இந்த நரகத்தில் இருந்து எளிதாக வெளியேறும் வழியாக, மரணத்தை எளிதாக அடைய அது கண்டெடுத்த பாதை. இவர்கள் இருவருக்கும் இக்காட்சிகள் நல்குபவை என்ன என்பதே இக்கதை.
உலகெங்கும் தொன்மையான பண்பாடுகள் காமத்தை வெறுக்கவில்லை என்பதையே இன்று பல அகழ்வாய்வுகளும் நமக்குச் சொல்கின்றன. இங்கே இவர்கள் செல்லும் தளம் முழுக்க முழுக்க காமத்தின் கொண்டாட்டமாக இருக்கிறது. அது ஓர் எளிய பாலியல் தளம் அல்ல. அதன் அழைப்பு மிக நவீனமான, ஓர் அப்பட்டமான ஓர் பெண் படம் மூலம் நிகழ்ந்தாலும், அத்தளத்தின் முகப்பில் வருபவன் முதல் அனைவருமே பழைய கிரேக்க பாணி உடல்களையும், அசைவுகளையும், புணர்வுகளையும் படைக்கிறார்கள். மிக இயல்பாக மகன் மனம் நமது கோவில் சிற்பங்களைக் கற்பனை செய்கிறது. அதை அவனுக்கு உணர்த்தவும் தந்தையின் கிருஷ்ணாபுரத்தின் சிற்ப ஒப்புமை தான் தூண்டல்.
மகனைப் பொருத்தவரை இத்தளம் என்பது ஓர் வடிகால். அதற்கு செலவெல்லாம் செய்வது வீண் வேலை. ஆனால் அவனது தந்தைக்கு அப்பெண்ணின் படமே அவரின் விழிப்போடு இருக்கும் ஆழ்மனதோடு ஓர் உரையாடலைத் துவக்கி விடுகிறது. மெதுவாக அந்த ஆழ்மனம் தன்னுள் தேங்கிய நினைவுகளை வெளியில் தள்ளிக் கொண்டே இருக்கிறது. தந்தை பேசத் துவங்குகிறார். மீண்டும் மீண்டும் எல்விஸ், ராஜேஷ் கண்ணா என்று பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் சாப்மன் பற்றி சொல்லும் இடம் நுட்பமானது. எல்விஸுக்கும் ஒரு சாப்மன் வந்திருக்கலாம் என்கிறார். ராஜேஷ் கண்ணாவும் சரி, எல்விஸும் சரி இள வயதிலேயே இறந்திருந்தால் இன்னும் புகழோடு இருந்திருப்பார்கள் என்கிறார். உண்மையில் அவர் தன்னைத் தான் சொல்கிறார். இவ்வியாதி வரும் முன்பே இறந்திருக்க வேண்டும் என விரும்புகிறார். மெல்ல மெல்ல காம உணர்வுகளை அவரைத் தூண்டுகிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகமாக ஆகிறார். தன் உணவைத் தானே உண்கிறார், காஃபி போடுகிறார். செய்தித்தாளை படிக்கிறார். மகனிடம் மீண்டும் நட்புடன் உரையாடுகிறார். அவரே கழிப்பறை செல்கிறார்.
காமம் என்பது ஒரு தீ. தீ எரியும் உடலால் சோம்பியிருக்க முடியாது. வாழ்வில் பிடிப்பே இல்லாத ஓர் நண்பருக்கு பாலியல் எழுத்துக்களைப் பரிந்துரைத்த உங்கள் கட்டுரை ஒன்று நினைவுக்கு வந்தது. சுருக்கமாக மகன் கணத்துக்கு இப்பால் இருப்பவர். தந்தை அக்கணத்துக்கு அப்பால் இருப்பவர்.அப்பால் இருப்பவர் காமத்தால் மீண்டு வருகிறார்.
முன்பு கோவில்கள் மற்றும் மக்கள் புழங்கும் பொது இடங்களில் இருந்தவை தான் இத்தகைய சிற்பங்கள், கோட்டோவியங்கள் போன்றவை. தினசரி புழங்கும் மட்பாண்டங்கள், எண்ணெய் விளக்குகள் என அனைத்திலும் காம குறியீடுகள் வரையப் பட்டுள்ளன. இது இந்தியா மட்டுமல்ல, கிரேக்கம், சீனம், ரோம் போன்ற அனைத்து தொல் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. காமம் என்பது வெறுத்து ஒதுக்கப்படும் ஒன்றாக, மறைத்து செய்ய வேண்டிய ஒன்றாக இச்சமூகங்கள் கருதவில்லை என்றே நாம் நினைக்க வேண்டியிருக்கிறது. இன்று இந்த சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் இடத்தை இணையத்தின் இத்தகைய தளங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. இத்தளத்தில் இருக்கும் கச்சிதமான உடல்களைப் பற்றி மகன் யோசிக்கும் இடம் நம்மையும் சிந்திக்க வைப்பது. நம் வெண்முரசு சொல்லும் அணிப்பரத்தையர் இவ்வாறு தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார்களோ? ஒரு வகையில் நாம் இழந்துவிட்ட இந்த காமம் தொடர்பான விடுதலையுணர்வை அடையத் தான் நாம் மீண்டும் முயல்கிறோமா? இன்று பாலியல் தளங்கள் அனைத்திலும் இறைந்து கிடக்கும் நிஜ உறவுக்காட்சிகள், இயல்பான கூட்டுக் கலவிகள் அதற்கான படிகளா?
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்