பெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3

தாமரைஇலை ஏந்திய நீர்த்துளி,

சொல் ஏந்தும் பொருள்.. [மகாபாரதம்]

 

இனிய ஜெயம்

பெரியம்மாவின் சொற்கள் வாசித்தேன்

ரமண மாலை தொகுப்பில் ஒரு குழந்தை இறைவனடி இளையராஜாவசம் ரமணர் யார் என கேட்கும். ராஜா ”ரமணர் நம் எல்லோருக்கும் தந்தை” என்பார். குழந்தைகளால் மட்டுமே கேட்க முடிந்த எளிய கேள்வி. மௌனத்தை அறிந்தவரால் மட்டுமே சொல்ல முடிந்த பதில். தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை . மௌனமான தந்தை.

ரமணரின் தனிமையையும் மௌனத்தையும் ஜெக்கேவின் சுய தரிசனம் கதையைக் கொண்டே அணுகிப் பார்க்கலாம். சுய தரிசனம் கதையின் நாயகன் கணபதி ஐயர். பிற கிளிக் கூட்டத்துடன் இணைய இயலாத [ஒத்து சேர்ந்து மந்த்ரங்களை கூட சொல்ல இயலாத, குறைந்த பக்சம் அப்படி வாய் அசைக்க கூட தெரியாத ] தத்தி பிராமணர். ஆகவே அக் கூட்டத்தாரிலிருந்து அந்நியன் ஆகிறார். விலக்கி வைக்கப்பட்டதாலோ ‘விலகி நின்றதாலோ’ கணபதி ஐயர், மந்திரத்தின், சொல்லின் சாரம் அறிகிறார். அறிந்ததினால் இந்த ‘மானுடம்’ எனும் சாரத்தில் கரைந்து காணாமல் போகிறார்.

சொல்லின் சாரம் அறிந்த கணபதி ஐயர் பிறகு என்ன ஆகி இருப்பார்? தனிமை கொண்டு, மௌனம் பூண்டு ரமணர் ஆகி இருப்பார். சொல்லின் பொருள் கையாள்பவர் கிரி வளத்தில். சொல்லின் சாரம் அறிந்தவன் தனித்து ,மௌனம் கொண்டு அருணையின் சிகரத்தில். ஆத்மீகத்தின் நிறைவு எய்திய தந்தை. மெய் நிகர் வாழ்வில் ரமணர் ஏகாந்தம் கொண்டு தனித்து நிற்கிறார். புனைவில் கணபதி ஐயர் , மானுடர்கள் இடையே இயந்து,கலந்து காணாமல் போகிறார்.

சொல்லிய பின்னும் சொல்ல இயலாமல் எஞ்சி நிற்கிறது, ‘சுய தரிசனம்’ ‘பெரியம்மாவின் சொற்கள்’ இரண்டு கதைகளுக்கும் இடையிலான வெளித் தெரியாத சரஸ்வதி நதியின் பிரவாகம் போன்றதோர் தொடர்பு.

பெரியம்மா சொற்கள் வழியே, புறத்தை அறிவதைக் காட்டிலும் ‘தன்னை அறிவதே’ முதன்மையாக இருக்கிறது. சொல்ல ஏதுமின்றி அனைத்துமே கதையில் சொல்லப்பட்டு விடுகிறது. பெரியம்மா இங்கிருந்து ‘அங்கு’ செல்லவில்லை. அவளுக்கு இங்கு என்பதைத் தவிர பிறிதில்லை. ஹெலனை திரௌபதியாக காணத் தெரிந்தவள் அப்படித்தானே இருப்பாள்?

பெரியம்மா சொற்கள் வழியே திட்டவட்டப் படுத்திக் கொண்ட” ஸெல்ப் ”. இயற்க்கை இந்த மானுடத்துக்கு அன்னை வடிவில் கனிந்து வந்தூட்டிய கருணையன்றி வேறென்ன?

கணபதி ஐயரும் , இந்த பெரியம்மாவும் தமிழ் இலக்கியம் மட்டுமல்ல மானுடத்தின் சாரமும் கூடத்தான்.

பெரியம்மாவின் பேசும் ஆங்கிலம் புரிந்தவன் பாக்கியவான்.

கடலூர் சீனு

அன்பு ஜெயமோகன்,

பெரியம்மாவின் சொற்கள் கதையின் வடிவம் வழக்கமானதுதான். முதலிலேயே அதைச் சொல்லிவிட வேண்டும் என் நினைத்ததால் சொல்லிவிட்டேன். அக்கதையின் விவரிப்புதான் என்னை அதிகம் ஈர்த்தது. சொற்களுக்கும், கருத்துகளுக்கும் இடையேயான மோதலாக அக்கதையின் விவரணை அமைந்திருந்தது. உடல்நலன் நன்றாக இருக்கும்போது தன் பேத்தி வீட்டிற்குச் செல்ல விரும்பாதவள், எட்டு மாதங்கள் படுக்கையிலிருக்கும் சூழலில் பேத்தியின் அண்மையில் இருக்க வேண்டும் என விரும்புகிறார். நெருங்கிய ரத்த உறவுகளின் அண்மையை முதுமையில் வரும் நோய்மை வேண்டுவதைப் போன்ற காட்சியாகவே அது தெரிந்தது. அதன்பொருட்டு எவ்விதப் புதுமுயற்சிகளுக்கும் முதுமை தயாராகி விடுகிறதோ என்றும் தோன்றியது. தமிழில் கூட எழுதப்படித்திராத ஒரு முதிய பெண் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள முனையும்போது எதிர்கொள்ளும் சவால்கள் அங்கிருப்பதாகப் படவில்லை. மாறாக, ஆங்கிலத்தைப் பேசுவதில் அல்லாமல் அம்மொழிக்கான சொற்களை விளங்கிக்கொள்ளவே பெரியம்மா மெனக்கெட்டிருக்கிறார் என்பதாகவே தோன்றியது. எப்போதும் அவளுக்கு மொழி முக்கியமாயில்லை; அதனூடாகக் கண்டுகொள்ளும் அர்த்தமே(கருத்தே) முக்கியமாக இருக்கிறது. விமானநிலையத்தில் ”You is Bond” என்று அவர் சொல்லும்போது அது உறுதியும் ஆனது. அர்த்தங்களைப் பொதுமைப்படுத்தி, பொதுமைப்படுத்தி ஒரு மொழியின் வார்த்தைகள் சிதைந்து கிடக்கும் அவலத்தையும் அக்கதைக்குள் நான் கண்டேன்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12
அடுத்த கட்டுரைமலம் – சிறுகதை