ஒரு கணத்திற்கு அப்பால்-கடிதம் 3

அன்புள்ள ஜெ

ஒருகணத்திற்கு அப்பால் வாசித்தேன்.

ஜப்பானிய படம் ‘இகிறு’ வை நினைவு படுத்தியது. மேலோட்டமாக காணின் வயதான கிழவர் ஒருவர், வாழ்வின் இன்பங்களை அனுபவிக்க துடிப்பவர் போல் தோன்றும். உண்மை அதுவல்ல. இளமையின் அருகாமை மட்டுமே ஒரு புத்துணர்ச்சி தரவல்லது. வாழ்வின் புதிய கிளைகளை உருவாக்கவல்லது. அந்த திரைப்படத்தில் யாரும் செய்ய இயலாத ஒரு பொதுப்பணி ஒன்றை அவர் செய்வார். ஒரு பூங்காவை ஏற்படுத்துவது என. யயாதியில் இந்த ஒரு புள்ளி உண்டோ என ஐயுற்றிருக்கிறேன்.

வாழ்வின் பிடிப்பு – நினைவுகளிலிருந்து எதோ ஒரு புள்ளியில் எழுகிறது.

அந்த புள்ளி எது வேணுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த புள்ளி முக்கியம் – அதன் விவரங்களும் முக்கியம்.

இந்த கதை பாலியல் எழுத்து போல் இருந்தாலும் பாலியல் எழுத்து அல்ல எனவே தோன்றுகிறது.

நண்பர் சந்திரசேகரின் கடிதம் கண்ட பின் இதனை எழுதுகிறேன்

அதனுடனேயே சொற்கள் பற்றியும் கரடி பற்றியும் சொல்லியாகவே வேண்டும். வேறு இரண்டு திசைகள்.
கரடி – மனம் நெகிழ்ந்தது. நிறைய புன்னகைக்கும் நகைச்சுவை சர்க்கஸ் என்பதால் என நினைக்கிறேன். நல்ல சிறுவர் கதை என்றும் தோன்றுகிறது.

சொற்கள் – இன்னொரு நாவலின் கரு என நிகைக்கிறேன் (நினைக்கிறேன் என்பதனையும் திகைக்கிறேன் என்பதனையும் சேர்த்து) – மொழி பற்றியும் உரையாடல் பற்றியும் அதிகமாக சிந்திக்க தூண்டுகிறது.

வாழ்த்துக்கள்

முரளி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11
அடுத்த கட்டுரைஇலக்கியமும் பாலுணர்வும்