சவரக்கத்தியும் துப்பாக்கியும்

ஆசிரியருக்கு ,

“கரடி” மிகக் கனமான கதை, அதற்குள் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் உள்ளன. இக்கடிதத்தில் ஒன்றை மட்டும் உருவி எடுக்கிறேன். அது கரடி மனிதனாக வளர்ந்து தன்னை ஆக்கிய சவரக் கத்தியை கைக் கொள்வது வரை .

மயிர் அடர்ந்த மிருகங்களான சிங்கம், கரடி முதலியவை கொன்றுண்ணிகள் மற்றும் இரு உண்ணிகள் என்பதும், மயிர் குறைந்த உயிரினங்களான யானை , காண்டாமிருகம் , நீர்யானை போன்றவை சாக பட்சிணிகள் என்பது கவனிக்கத் தக்கது. கூடவே நாம் மயிரை இழந்து இழந்து தான் நியாண்டர்தாலில் இருந்து ஹோமோ சாபியன் வரை வந்துள்ளோம் என்பதையும். மயிர் அடர்வது மிருகம், குறைவது மனிதம்.

இங்கு மயிர் மழிக்கப் பட்டே கரடி மனிதனாகிறது, அடர்ந்ததால் பாலன் கரடியாகிறான்.

கத்தி, கூரிய கல்லில் (hand axe) இருந்து பரிணமித்தது, முதலில் கத்தி தாக்குவதற்கும் கொல்வதற்கும் மட்டுமே பயன் பட்டிருக்க வேண்டும், அதன் பின்னரே அது மேம்படுத்தப்பட்டு சவரம் செய்வது உள்ளிட்ட வேறு வீட்டு பயன்பாடுகளை அடைந்தது. இந்த இரு பயன்பாடுகளில் மற்ற ஒன்றை மேலும் மேம்படுத்தி மேலும் திறன் மிக்க கொலைக்கருவிகளை மனிதன் கண்டுபிடிக்கிறான். எப்படி நியாண்டர்தாலில் இருந்து ஹோமோ சாபியன் ஆனோமோ, அவ்வாறே கற்கோடரி துப்பாக்கி ஆனது.

இக்கதையில் கரடி சிறிது சிறிதாக மனிதனை நோக்கி பரிணமிக்கிறது. அது தனது பற்களை புறந்தள்ளி ஒரு சவரக் கத்தியை கொண்டு கொன்றபின் ஒரு மனிதனாக முழுமை அடைந்தது. ஆயுதம் ஏந்துவது மனித இயல்பு.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஉன்னதமானவையும் அவசியமானவையும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 6