விஷ்ணுபுரம் வாசிப்பு -கடிதம்

index

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

இரண்டு வருடங்களுக்கு முன் தங்கள் தளத்தினை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து விஷ்ணுபுரம் பற்றி பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும் விஷ்ணுபுரம் வாசிக்கும் வாய்ப்பு இப்பொழுதுதான் கூடி வந்தது. பத்துநாட்களுக்குள் முதலிரண்டு பகுதிகள் முடித்துவிட்டேன். நேரடியாக நாவலுக்குள் நுழைந்துவிடுவோம் என்றுதான் விஷ்ணுபுரம் பற்றிய பதிவுகளை வாசிக்காமல் தவிர்த்து வந்தேன். விஷ்ணுபுரத்தைப் படிக்கத் தொடங்குவது எப்படி என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்குத் தாங்கள் பதிலளித்துப் போட்ட பதிவினை மட்டும் படித்துவிட்டு நேரடியாக நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன். எந்தத் தடையும் இல்லை. அப்படியே எனக்குள் நுழைந்து தன்னை நிறுவிக்கொள்ள ஆரம்பித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மனம் முழுக்கு நாவல்தான் இருக்கிறது. கணிப்பொறியில் பதிவுசெய்து வைக்கப்படும் தகவல்கள் தேவைப்படும்போது உடனே திரும்ப எடுத்து பயன்படுத்திக்கொள்ளப்படுவது போல இனி அதில் உள்ளவற்றைப் பற்றி விவாதிக்க ஆவலாக இருக்கிறேன். சமகால சிக்கல்களைக் கடந்துபோக எனக்கு அது நிச்சயாமாக உதவும்.

நன்றியுடன்,

தா.விஜயரெங்கன்.

photo
அன்புள்ள விஜயரங்கன்

பொதுவாக ‘வாசிக்கச் சரளமாக இருக்கிறது’ போன்ற மனப்பிம்பங்கள் நம் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை. நமக்குப்பழக்கப்படுத்தப்பட்டவை

ஒரு வாசகன் தன் கற்பனையையும் அறிவுத்திறனையும் படைப்பின் முன் நிறுத்தி வாசிப்பான் என்றால் அவனுக்கு நமது ‘பரபர’ நூல்கள் பெரும் சலிப்பை அளிக்கும். என் மகள் மட்டும் அல்ல இலக்கியம் வாசிக்கும் அவளுடைய தோழிகளுக்குக்கூட டான் பிரவுனின் நாவல்கள் சலிப்பூட்டின.

ஆனால் அதே வாசகர்களுக்கு மிகத்தீவிரமான செறிவான நூல்கள் ஆழ்ந்த வாசிப்பனுபவத்தை அளிக்கும். அதாவது வாசிக்கையில் அவர்களும் உடன் பணியாற்றுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் செய்வதற்கில்லாத ஒன்றை அவர்களால் வாசிக்கமுடியவில்லை

ஒருபடைப்பில் நாமும் உழைத்து , கற்பனை விரித்து பங்கேற்கவேண்டும் என நினைத்தாலே போதும் பெரும்பாலான இலக்கியங்கள் பெரும் சுவாரசியம் கொண்டவையாக ஆகிவிடும். வணிக- கேளிக்கை எழுத்துக்கள், எளிய எழுத்துக்கள் சுவாரசியமானவையாகத் தோன்றுவது மூளையும் கற்பனையும் செயல்படாமல் அவற்றைப்படிக்க நாம் பழகிவிட்டிருப்பதனால்தான்

நீங்கள் உடைத்திருப்பது அந்தத்தடையைத்தான். விஷ்ணுபுரம் உங்களுக்கு சவாலை அளிக்கும் அச்சவால் உங்களை தீவிரமான வாசிப்புக்குக் கொண்டுசெல்லும். அப்படி பல்லாயிரம்பேரின் வாசிப்பு முறையை மாற்றிய நாவல் அது

ஜெ

விஷ்ணுபுரம் அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைஇணையச்சமநிலை- சரவணக் கார்த்திகேயன்
அடுத்த கட்டுரைநியாஸின் பதில்