நிறம் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நிறம் கடிதத்தையும் உங்கள் பதிலையும் படித்தபொழுது மீண்டும் வருத்தமே உண்டானது. நானும் சில அதிர்ச்சி அனுபவங்களை தாண்டி வந்துள்ளேன். கருப்பாய் இருக்கும் நான் வெள்ளையாய் வந்த பிடிக்காத மாப்பிள்ளையை மறுப்பது ஏதோ தெய்வ குற்றம் போல் கருதப்பட்டது. வேறு வழியின்றி கல்யாணம் முடிக்க அவரை உலகம் எனக்கு வாழ்வளித்தவராகவே பார்த்தது. நான் படித்த படிப்புகளும் கை நிறைய சம்பாதித்த வேலையும் எனக்கு அளிக்காத வாழ்வை அவர் அளித்ததை நினைத்து இன்னும் எனக்கு ஆச்சர்யம்தான். அதிலும் என் கணவரின் அம்மா நல்ல கருப்பே. ஆனாலும் அவருக்கு அவர் மகனின் நிறத்தின் மீதுஇருக்கும் பெருமை மோடியின் அம்மாவுக்கு கூட வந்திருக்காது.

என் அக்கா அண்ணன்களின் பிள்ளைகள் 3 , 4 வயதில் கருப்பு அசிங்கம் என்றும் வெள்ளை அழகு என்றும் பேசுவதையும் அதை பெரியவர்கள் ரசித்து கேட்டு சிரிப்பதையும் பார்க்க கொஞ்சம் அதிரிசியாகத்தான் உள்ளது. டிவியில் வரும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளரே கருப்பையும் பார்க்க அழகாய் இல்லாமல் இருப்பதையும் ஜோக் ஆக நினைத்து சொல்வதும் அதை கூட்டம் கை கொட்டி சிரிப்பதும் எவ்வளவு பெரிய அழுததமான தவறான எண்ணங்களை குழந்தைகள் மனதில் விதைக்கும் என்று யோசிக்காமலே செய்வது கவலை தரும் விஷயம் தான். நாம் நினைப்பதை விட வெகு தூரம் நிற வேறுபாடு ஊன்றி விட்டது. இனி எப்போது எங்கே போவது நாராயண குருவிற்கும் காந்திக்கும் அம்பேத்கருக்கும்.

அம்பை சக்தி

அன்புள்ள அம்பை சக்தி,

சென்ற ஆயிரமாண்டுகளாகவே இந்த உளப்பிரிவினை நம்முடைய சமூகத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இது இன்றைப்போல பெரிய பிரச்சினையாக என்றும் இருந்ததில்லை. நேற்றுவரை குலம் குடி குடும்பம் போன்றவையே உறவுகளைத் தீர்மானித்தன. அழகு, தோற்றம் என்பவை முக்கியமானவையாக இருந்ததில்லை. திடீரென தனிநபரிடம் அந்த உரிமை அளிக்கப்பட்டபோது அழகு முதன்மையானதாக ஆகியது. கூடவே இங்கே பொங்கி எழுந்த அழகுப்பொருள் வணிகம் அழகு என்றால் என்ன என்பதை தீர்மானிக்கும்பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டது. ஒல்லியாக இருப்பது அழகு, வெள்ளையாக இருப்பது அழகு என அது வகுத்தது. மொத்தச்சமூகத்தையும் அதைநோக்கி ’பத்தி’ கொண்டு செல்கிறது. ஊடகங்களில் ‘மின்னும் சிவப்பழகு’ பற்றிய ஓயாத பேச்சுக்கள் . ஒரு கரிய பெண் டிவி பார்த்தால் ஆறுமாதங்களில் ஆழமான தாழ்வுணர்ச்சியை அடைந்துவிடுவாள்

நம்முடைய காலகட்டத்தின் முதற்பெரும் சக்தி என்பது வணிக. அதன் பகுதியான விளம்பரம்தான் கருத்தியல்தளத்தின் பெரும் சக்தி. சினிமா டிவி சீரியல் பிற நிகழ்ச்சிகள் எல்லாமே உண்மையில் விளம்பரம் என்ற மாபெரும் அமைப்பின் ஒரு பகுதிதான். எவற்றுக்கும் வணிகநோக்கத்துக்கு அப்பால் தனித்தன்மை இல்லை. ஆகவே இன்று விளம்பரங்கள் உருவாக்கும் இந்த வகையான மனநிலைகளை எதிர்த்துப்போராடுவது எளிதல்ல. செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான்

ஜெ

முந்தைய கட்டுரைபாலியல் எழுத்தா?
அடுத்த கட்டுரைவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்