பாலியல் எழுத்தா?

ஜெ,

நீங்கள் எழுதிய ஒருகணத்திற்கு அப்பால் என்ற கதையை வாசித்தேன். பல அடுக்குகள் கொண்ட ஆழமான கதை என்று தெரிந்தாலும் நீங்கள் எதிர்பாராதபடி ஒரு போர்ன் கதை எழுதியது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றாலும் நான் சொல்லவேண்டும் என்பதனால் இதை எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் எழுதத்தான் வேண்டுமா? இதைப்போலத்தான் பலரும் இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிறார்களே?

சந்திரசேகர்

அன்புள்ள சந்திரசேகர் ,

ஒன்று ஒருகணத்திற்கு அப்பால் பாலியல்கதை அல்ல. பாலியல்சித்தரிப்பு, பாலியல் உணர்ச்சிவிவரணை, பாலியல் சார்ந்த உலகுக்குள் வாசகனைக் கொண்டுசெல்லுதல் ஆகிய அம்சங்கள் கொண்டதுதான் பாலியல்கதை. அதன் நோக்கம் பாலியல் கிளர்ச்சியை உருவாக்குவது மட்டுமே.

ஒரு கணத்திற்கு அப்பால் பாலியல்கேளிக்கை உலகைப்பற்றிய கதை. அவ்வுலகை குறியீடாக்கி அதற்குமேல் பேசிச்செல்லும் கதை. அதில் பாலியல் சித்தரிப்போ, உணர்ச்சிவிவரணையோ இல்லை. அதுபேசும் உலகமே வேறு

இப்படி ‘பல அடுக்குகள் கொண்ட ஆழமான’ கதைகளைத்தான் பிறர் எழுதுகிறார்களா? அவர்கள் எழுதும் எளிய பாலியல் சித்தரிப்புகளுக்கும் இதற்குமான வேறுபாடு தெரிந்த வாசகர்களுக்கு மட்டுமே நான் எழுதுகிறேன்.

இதைப் புதியதாக எழுத ஆரம்பிக்கவும் இல்லை. என் எழுத்துலகில் ஆரம்பகாலம் முதலே இத்தகைய கதைகள் உள்ளன. பாலுணர்வு, அருவருப்பு, வன்முறை எதுவானாலும் என்னுடைய கற்பனையின் தேடல் எங்கு கொண்டுசெல்கிறதோ அங்கு தடையின்றி நுழைவதே என் பாணி

மிகத்தொடக்ககாலத்திலேயே பலகதைகளை இதே தளத்தைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ பிரபல போர்ன் நடிகையான லோலோ ஃபெராரியைப்பற்றியது. ஒருகணத்துக்கு அப்பால் என்ற இந்தக்கதையே முடிவின்மையின் விளிம்பில் என்ற பழைய கதையின் தரிசனதளத்தின் நீட்சிதான்

ஜெ

பாலியல் எழுத்தும் தமிழும்

முந்தைய கட்டுரைகரடி [சிறுகதை]
அடுத்த கட்டுரைநிறம் -கடிதம்