கூகிள் மின்னஞ்சல் என்பது ஒரு இணைமூளை என்று தோன்றுகிறது. அதற்கும் பிரம்மாண்டமான நனவிலி உருவாகியிருக்கிறது. அன்றாடம் புழங்கும் அடுக்குகளுக்கு அப்பால் அச்சமூட்டும் ஓர் ஆழம்.
நேற்று மாலை சந்திரசேகர் என்று தேடினேன். 2006ல் அவர் அனுப்பிய முதல் மின்னஞ்சலில் இருந்து தேடிக்கொண்டுவந்து போட்டுவிட்டது. சிங்கப்பூர் சிறுகதைப் பயிலரங்குக்கு வந்து என்னை பார்த்துவிட்டு சந்திக்காமலேயே சென்றதை எழுதியிருந்தார்
ஒவ்வொரு மின்னஞ்சலாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பதிப்பகம் ஆரம்பிப்பதைப் பற்றி அவர் ஆசையாக எழுத அதை கடுமையாகக் கண்டித்து எழுதியிருந்தேன். மீண்டும் மீண்டும் ஆங்கோர்வாட் திட்டங்கள். காண்டவம் ஓர் அத்தியாயம் எழுதியதும் அவரது இறப்புச்செய்தி வந்தது. ஏதோ குலைந்து போய்விட்டது. இன்னமும் அது தொடரவில்லை.
வெண்முரசின் தீவிர வாசகர். அனேகமாக தினமும் என கடலூர் சீனுவுக்கும் பிறருக்கும் வெண்முரசு குறித்துக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். எனக்கு அவற்றில் ஒன்றுகூட அனுப்பப்படவில்லை. வெண்முரசு பற்றி சீனுவுக்கு அனுப்பப்பட்ட அவரது இறுதிக்கடிதம் என்னை பதறச்செய்தது.
நேற்றுதான் சென்னையில் இருந்து நாகர்கோயில் வந்தேன். பகல் முழுக்க களைப்பு. மாலையில் தூங்கி எழுந்ததும் சந்திரசேகரின் நினைவு. கடலூர் சீனு, கிருஷ்ணன், விஜய்சூரியன், அஜிதன், செல்வேந்திரன் என அகப்பட்ட அனைவரையும் ஃபோனில் கூப்பிட்டு பேசிக்கொண்டே இருந்தேன். அச்சொற்களால் ஆறுதலடையச் செய்வதாக இல்லை அகம்
மின்னஞ்சல் இதேபோல இளமையிலேயே இறந்துபோன அணுக்கவாசகர் மகிழவனையும் இழுத்துக்கொண்டு வந்தது. அவரது கடிதங்களையும் வாசித்தேன். ஓர் எழுத்தாளனாக நான் ஒருபோதும் தனியன் அல்ல. இளையோர் சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். சிலசமயம் நூற்றுக்கணக்கான மைந்தர்கள் கொண்ட தந்தைபோல அவர்களின் அத்தனை துயர்களையும் நானும் அடைபவனாக.
இவர்கள் நுண்ணிய வாசகர்கள். ஆகவே அலைக்கழிப்பும் கொந்தளிப்பும் கொண்டவர்கள். அறவுணர்ச்சி மிக்கவர்கள். ஆகவே நிம்மதியற்றவர்கள். அவர்களுடன் சேர்ந்து நான் வாழ்க்கையை மீண்டும் மீண்டும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
இரவு முழுக்க துயிலாமல் இருந்தேன். வெவ்வேறு மலையாள நாவல்களை ஆங்காங்கே ஓரிரு அத்தியாயங்கள் வீதம் வாசித்துக் கொண்டிருந்தேன். ஐந்துமணிவரைக்கும். அதன்பின் சென்று தூங்கத் தொடங்கியபோது செல்வேந்திரன் வந்துவிட்டார். ஆறரை மணிக்கு நானும் செல்வேந்திரனும் வாடகைக்காரில் சந்திரசேகரின் கிராமத்திற்குச் சென்றோம்.
ராஜாவூர் அருகே ஒரு சிறிய ஊர். குறுகலான சந்துகள். ஆனால் எல்லா வீடுகளும் வசதியானவை. சந்திரசேகர் புதியதாகக் கட்டிய வீட்டுக்குப் பின்னால் தென்னந்தோப்பில் அவர் அடக்கம் செய்யப்படவிருந்தார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக அவரது உடல் காலையில்தான் வந்துசேர்ந்திருந்தது. நண்பர் முத்துராமன் உடன் வந்தார்.
சொந்தக்காரர்கள் அனைவருமே அதே ஊர்தான். ஆகவே உடனே அடக்கம் செய்யக் கொண்டுசென்றுவிட்டார்கள். நாங்கள் செல்லும்போது பெட்டியில் உறைந்த சடலம் கிடந்தது. அய்யாவழி மரபுப்படி வெண்சுண்ணத்தால் நாமம் தொட்டு வைக்கச் சொன்னார்கள். அவரது இறுகிய நெற்றியைத் தொட்டபோது கடைசியாக தழுவிக்கொண்டதை நினைத்தேன். மலர்மாலைகளை அவர் மேல் வைத்தோம்.
அவரது பெட்டிக்குள் உறைபிரிக்கப்படாத பிரயாகை செம்பதிப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்றுத்தான் அது அவரது வீட்டுக்கு தபாலில் வந்திருந்தது. என்னுடைய எல்லா நூல்களையும் வாங்கி சிறியநூலகமாக வைத்திருந்தார் சந்திரசேகர். பிரயாகை செம்பதிப்பு வாங்கிய அந்த முந்நூறுபேரில் ஒருவர்.
உடல் குழிக்குள் சென்றது. ஒருபிடி மண் அள்ளிப்போட்டேன். என்னுடைய நூல் ஒன்றும் அவருடன் மண்ணுக்குள் செல்வதை நோக்கிக்கொண்டிருந்தேன். அது என்னுடைய ஒரு பகுதிதான். நானேதான்.
***