சுஜாதாவை கைவிட்டது எது?

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெ.

இந்த கேள்வி திரு.சுஜாதா அவர்களைப்பற்றி !

மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவர்கள் ஸ்ட்ரோக் என்றதாகவும், கை வரவில்லை என்றதும் “I’m dropped” என்று சொன்னதாகவும் அவர் மனைவியின் விகடன் பேட்டியை பதிவர் நண்பர் மூக்கு சுந்தருடைய பதிவில் படித்தேன். அன்றிலிருந்து எண்ணும்போதெல்லாம் மனதில் உறுத்தல்.

இலக்கியம் மனிதனை எங்கும் இட்டுப்போகாது (அல்லது இலக்கியத்தின் எல்லையை சுட்டும் அதுபோன்ற ஒரு வாக்கியம்) என்று குரு.நித்யாவை கண்டடைந்தபோது நீங்கள் உணர்ந்ததை எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும் இந்த ஐயம்.

தீவிர வைஷ்ணவராக இருந்தும், (வைஷ்ணவ அடிப்படைக்கோட்பாடு சரணாகதித் தத்துவம் என்று படித்த நினைவு, இதுபற்றியும் அறிந்துகொள்ள ஆவல்) அவரால் பணிந்து வணங்க இயலவில்லையா அல்லது தகுந்த பாதங்கள் கிடைக்க வில்லையா ? (“எழுத்தாளன் தன் அகங்காரத்தைக் கழற்றிவைத்து வணங்கக் கூடிய காலடி ஒன்று இருக்கவேண்டும்”) அல்லது எது குறித்துமான அவரது அறிவியல்பூர்வமான பார்வை இதுபோன்ற உணர்ச்சிகளிலிருந்து அவரை பிரித்து வைத்துவிட்டதா ?

கோர்க்கி பற்றி நித்யாவின் நூல் குறித்த உங்களது கட்டுரையை இணைவைத்து யோசிக்கையில் தேர்ந்த வாசிப்பும் உயர்ந்த ரசனையும் இருந்தும் சுஜாதாவை அவரது அறிவுக்கூர்மையே ஒருவேளை கூன்போட வைத்துவிட்டதோ என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

ஏன் தான் கைவிடப்பட்டதாக தோன்றியது அவருக்கு அந்த இறுதி நாட்களில் ? அல்லது, கை செயலற்றுப்போனதை குறியீட்டுரீதியாக எழுத்தை இழந்துபோனதாக நினைத்த ஒரு எழுத்தாளனின் மனச்சோர்வா அது ?

இது குறித்து கொஞ்சம் விளக்க முடியுமா ?

அன்புடன்

முத்துக்குமார்.

அன்புள்ள முத்துக்குமார்,

ஆயுர்வேதத்தில் எல்லா மருந்துக்களிலும் இரு கூறுகள் உண்டு. ஒன்று, வாகனம். பிறபச்சிலைகளின் மருந்துச்சத்துக்களை தன்னில் கரைத்துக்கொண்டு உடலுக்கு கொண்டு செல்வது அது. நெல்லிக்காய் முதலியவை. இரண்டாவது தாரணம். மருந்து கெடாமல் பாதுகாக்கும் நெய் போன்ற பொருட்கள்.

இலக்கியம் என்பது வாகனம் போலத்தான். அது மருந்து இல்லை. அதற்கென தரிசனம் இல்லை. அது பிற தரிசனங்களை தன்னில் கரைத்துக்கொண்டு எடுத்துச் செல்கிறது. ஆகவே இலக்கியம் தன்னளவில் நமக்கு எதையும் அளிப்பதில்லை. தரிசனத்தை அறிவாக அளிக்காமல் அனுபவமாக ஆக்கித்தருகிறது இலக்கியம், அவ்வளவுதான். சடங்குகளும் அமைப்புகளும் தாரணம் போல, தரிசனத்தைப் பாதுகாத்து நிலைக்கச் செய்கின்றன.

இலக்கியம் மட்டும் மனிதர்களை மேம்படுத்துவதில்லை, விடுதலை செய்வதில்லை என்பதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். இது கலைகள் அனைத்துக்குமே பொருந்தும். சொல்லப்போனால் தூயகலை ஒருவனின் நுண்ணுணர்ச்சியை பெருக்கி அவனை பிற அனைத்திலும் பொறுமையற்றவனாக ஆக்கக்கூடும். நல்ல இசை ரசிகர்கள் பிற எல்லா சத்தங்களுக்கும் எதிராக, சிடுசிடுப்பானவர்களாக ஆவதைக் கண்டிருக்கிறேன்

கலையும் இலக்கியமும் எதை ஏற்றிக் கொண்டு வருகின்றன என்பதே முக்கியமானது. நேர்மையான கலை எப்போதும் ஆழமான தரிசனங்களை கொண்டுள்ளது. அந்ததரிசனங்களின் உட்சிக்கல்களையும் நடைமுறைப்பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகிறது. அதன் உச்சியில் வாசகனை நிறுத்துகிறது. அந்த தரிசனத்தை எழுத்தாளன் தன் வாசிப்பு மூலமும், அனுபவம் மூலமும், உள்ளுணர்வின் மூலமும் அடைகிறான். அவற்றுக்கிடையேயான முரணியக்கம் வழியாக அவற்றை அவன் கண்டடைகிறான்.

சுஜாதாவின் எழுத்து அப்படிப்பட்டதா என்ன? இல்லை, அது கொஞ்சம் தர்க்கஅறிவும் கொஞ்சம் அழகுணர்வும் கலந்த ஒரு விளையாட்டு மட்டுமே. குறைவான ஆக்கங்களிலேயே சுஜாதா இலக்கியத்தின் நேர்மையான தீவிரத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார். அவருக்கு இலக்கியம் என்றால் என்ன என்று தெரியும். ஆனால் அந்த சவாலை அவர் சந்தித்ததே இல்லை. அவரது எழுத்துமனநிலையை ’தவிர்த்துச்செல்லும் தன்மை கொண்டது’ என்றே நான் சொல்வேன் [Evasive ]அது அவரது ஆளுமையின் ஆதார இயல்பு. அவரது இலக்கிய இடம் என்பது அவரது ஆர்வமூட்டும் மொழியாட்சிகளுக்காகவும் சில ஆக்கங்களில் வெளிப்பட்ட நடுத்தரவற்க உளவியல்சித்தரிப்புக்காகவும் மட்டுமே

சுஜாதா சொன்ன இறுதி வார்த்தைகளை இந்தப்புலத்தில் வைத்துப் பார்க்கையில் அந்த வார்த்தைகள் வழியாக அவர் எதை உத்தேசித்தார் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. இந்த வகையான தருணங்களை எளிமையாக வகைப்படுத்தி ஆராய்வதும் சரியாக இருக்காது. ஆகவே சுஜாதாவின் படைப்புகள், கருத்துக்கள், ஆளுமையை வைத்து இதைப்பற்றி யோசிக்கலாம். அதாவது சுஜாதா என்ற எழுத்தாளனை மீண்டும் விவாதிப்பதற்கு இதை பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான்.

மேலும் இவ்வகையான அடிப்படை வினாக்களுக்கு நேரடியான எளிய பதில்களை கண்டுபிடிப்பது சாத்தியமல்ல. அந்த பதில் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் சாரமான பதில் அல்லவா? அதை ஒருவர் தன் சிந்தனையும், அனுபவமும், நுண்ணுணர்வும் சந்திக்கும் ஒரு புள்ளியில் உண்ர்ந்துகொள்ளத்தான் முடியும். இலக்கியம் எழுதப்படுவது அப்படி உணரவைப்பதற்காகவே.

சாதாரண மனிதர்களின் அகம் செயல்படும் விதமே மிகச்சிக்கலான ஒன்று என்னும்போது இலக்கியவாதியின் மனம் பற்றி சொல்லவேண்டியதில்லை. இலக்கியவாதியின் மனம் படிமங்கள், சொற்கோவைகள் வழியாக தனக்கான தனித்த தர்க்கம் ஒன்றில் செயல்படக்கூடியது. அந்த தர்க்கம் இலக்கிய ஆக்கத்துக்கு பயனுள்ளதாக இருக்கும்போதே இலக்கியத்திற்கு வெளியே பொதுத்தளத்தில் அபத்தமாகவும் இருக்கக் கூடும். இத்தனை நிபந்தனைகள் மற்றும் முன்ன்ச்சரிக்கைகளுடன் பேசவேண்டிய ஒன்று இது

எந்த ஒரு நல்ல எழுத்தாளனையும்போலவே சுஜாதாவும் ஒன்றுக்கு மேற்பட்ட அக இருப்புகளின் கலவை. அவற்றுக்கு இடையேயான போராட்டமே அவரது எழுத்தின் செயல்விசை. ஒருமுறை சுஜாதாவிடம் ‘வசந்த் விலாசம் குடுங்க சார்’ என்று ஒரு பெண் கேட்டபோது ’என் விலாசம்தான்’ என்று சொன்னார் என்று கேள்விப்பட்டேன். கணேஷின் விலாசமும் அவரதுதான்.

சுஜாதாவை நேரில் பழகியவர்களுக்கு தெரியும், அவர் எழுத்தில் எப்போதுமிருக்கும் துள்ளலும் அலட்சியமும் கொண்ட நகைச்சுவை அவரது ஆளுமை அல்ல என்று. அவர் பெரும்பாலான நேரங்களில் நடைமுறைவாதியான, கொஞ்சம் சிடுசிடுப்பான, உள்வாங்கிய மனிதராகவே காணப்படுவார். சொல்லப்போனால் தமிழ் எழுத்தாளர்களில் அவருடன் உற்சாகமாக, அவரை கிண்டல்செய்தெல்லாம் பேசிக்கொண்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கே அப்படித்தான் தோன்றியிருக்கிறது. பிறரது அனுபவங்கள் இன்னும் மோசம்.

பழகக் கிடைக்கும் சுஜாதா இரண்டு மனிதர். மிக அபூர்வமான தருணங்களில் பேசிக்கொண்டே இருப்பார். பேச்சு தாவித்தாவிச் செல்லும். நிறைய தகவல்கள், நிறைய இடதுகை புறக்கணிப்புகள். மற்ற சமயங்களில் மனிதர்களிடம் பேசவே அவருக்கு பிடிக்காதென்று தோன்றும். இரு தருணங்களிலும் அவரிடம் உரையாடலில் நகைச்சுவை அரிதாகவே வெளிப்படும்.

ஆனால் எழுத ஆரம்பிக்கும்போது அவருக்கு நகைச்சுவை தன்னிச்சையாகவே வெளிப்படுகிறது. நகைச்சுவையை அவர் உருவாக்கவில்லை அது வந்தது. ‘சீரியஸா எழுத என்னால முடியலை. உன்னை மாதிரி ஒரு கட்டுரை எழுதிரணும்னு ஆசை. முடியாது’ என்றார். ‘அன்றாட லௌகீக வாழ்க்கையிலே நான் ரொம்ப நெர்வஸான ஆளு. உள்ளுக்குள்ள பதறிட்டே இருப்பேன். எங்கோ எதுவோ தப்பா ஆயிடப்போகுதுன்னு தோணும். எல்லாமே சீரியஸ்தான். என் ரூமுக்குள்ள கதவ சாத்திட்டாத்தான் நான் சேஃபா, கம்ஃபர்டபிளா இருக்கேன். ஆனா எழுத ஆரம்பிச்சதுமே மொத்த லைஃபே ஒருவேடிக்கைன்னு தோணிடுது. இந்த அபத்த உணர்ச்சி இல்லாமல் என்னால எதையுமே பாக்க முடியறதில்லை’ சுஜாதாவின் ஆளுமையின் ஒரு முரணியக்கம் இது.

நான் அவரிடம் ‘நீங்க எவ்ளோ பெரிய ஆபீசர். லௌகீகமா வீக்னா எப்டி அந்த வேலைய செய்யமுடியும்?’ என்றேன் ‘ நீ ஒண்ணு. அது ஒண்ணும் வேலையே இல்ல. தப்பு செஞ்சா வேற யாரும் கண்டு புடிச்சு அதட்டமாட்டாங்கள்ல. ஈஸி’ என்றார். சுஜாதாவின் தனி ஆளுமையின் மெல்லிய கடிகளை வாங்கியவர்கள் அவருக்கு அவரது உள்வட்டத்தை சாராதவர்களை உள்ளூரப் பிடிக்காது என்பார்கள். உண்மையில் அவருக்கு எல்லாரையும் பிடிக்கும், வேடிக்கைபார்க்கும் அளவுக்கு அவர் விலகி இருந்தால்.

இந்த வகையான ஒரு முரணியக்கம் அவரது தத்துவநிலைபாட்டிலும் உண்டு. ஒரு சுஜாதா இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்ப அறிவியலின் உருவாக்கம். நிரூபணவாதமே அவரது தத்துவம். நிரூபணவாதத்துக்கு அப்பால் செல்லும் அறிவியல் மேல் தனிப்பேச்சில் அவர் முன்வைக்கும் விமரிசனம் சில சமயம் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். ‘மொத்த சைக்காலஜியே ஒரு ஃபேக் சயன்ஸ்… அதுக்கு மெதடாலஜியே கெடையாது’ என்பார். ‘சோஷியாலஜி, எகனாமிக்ஸ்லாம் ஒரு சயன்ஸ்னா அத்வைதம்லாம் சூப்பர் டெக்னாலஜி’ என்பார்.

அதேசமயம் அவரது ஆழத்தில் அவர் ஒரு வைணவர். நான் அவரை முதன் முதலில் சந்தித்த 1992ல் அவர் என்னிடம் அதிகமாகப்பேசியது தன் வைணவ ஈடுபாட்டைத்தான். ‘பேய் மேலே நம்பிக்கை இல்லை, ஆனா பயமா இருக்குன்னு புதுமைப்பித்தன் சொன்னான். அதுமாதிரித்தான் எனக்கு பெருமாள் மேலே நம்பிக்கை இல்லை ஆனா பக்தி இருக்கு’ வேடிக்கையாகச் சொன்னாலும் மிக நுட்மபான ஒர் உண்மை இது. அவரது நிரூபணவாதம் சராசரி வைணவ நம்பிக்கைகளை மோதி உடைத்தது. அவரது ஆழ்மனத்தில் வைணவத்தின் தொல்படிமங்கள் இருந்துகொண்டு அவரை இயக்கின. அவை இரண்டுக்கும் நடுவே ஒரு முரணியக்கம் நிகழ்ந்துகொண்டிருந்தது

சுஜாதாவுக்கு ஃப்ரிஜோ காப்ரா முக்கியமானவர். அவர் வழியாக தன் ஆழ்மன வைணவத்தை தன் கொள்கையான நிரூபண வாதத்துடன் இணைக்க முடியும் என அவர் கண்டுகொண்டார். அவருக்கு நான் காரி சுகோவின் [Gary Zukav ] ’நடமிடும் வு லி ஞானியர்’ [The Dancing Wu Li Masters ] நூலை பரிந்துரைத்து நித்ய சைதன்ய யதியின் நூலகத்தில் இருந்து அனுப்பினேன். அவர் நித்யாவை சந்தித்து பேச விருப்பம் என்று ஒருமுறை சொன்னார் .பின்பு ‘இந்த விஷயத்தை ரொம்ப போட்டு இழுக்கவேண்டாம். ஐ ஃபீல் ஓல்ட்’ என்றார்.

மதம்-அறிவியல் சார்ந்து சுஜாதா எழுதியவற்றை [ ‘கடவுள்’ என்ற தலைப்பில் அவற்றை உயிர்மை வெளியிட்டிருக்கிறது] வாசிக்கும்போது சுஜாதா அந்த முரணியக்கத்தை மிகமிக மேலோட்டமாகவே புரிந்துகொண்டார் என்று படுகிறது. ஓர் எல்லைக்கு மேல் அது போய்விடுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் போய் பெருமாளை சேவிப்பதற்கு நிரூபணவாத அறிவியல் அனுமதிச்சீட்டு கொடுத்தால்போதும் என்ற அளவில் நின்றுகொண்டிருந்தார். இதுவே அவரது மனநிலை; தப்பித்தல், தவிர்த்தல்.

கடைசியாக நான் சுஜாதாவைப் பார்த்தபோது ’எப்டி போகுது டைம்?’ என்றேன். ‘சிவாஜி’ என்றார். ‘சினிமாவுக்கு வந்திட்ட. இங்க டீடோட்டலருக்கெல்லாம் பாதிக்குப்பாதிதான் முதலாகும். தண்ணியாத்தான் மிச்சத்த வசூல் பண்ணமுடியும்’ ‘வீட்ல என்ன பண்றீங்க?’ என்றேன். ‘சும்மா கம்ப்யூட்டர்ல எதையாவது நோண்டிக்கிட்டிருக்கிறது. சின்னப்பசங்க பாக்கிற மேட்டர்ஸ்தான்..’

சுஜாதா முதுமையையும் எதிர்கொள்ளவில்லை. அதை ஒத்திப்போடவும் தவிர்க்கவும் முயன்றார். மிகச்சிறந்த உடைகள், தலைச்சாயம். முதுமை தெரியாத புகைப்படங்கள். இளமையான மொழிநடை. அபூர்வமாக அவரை வீட்டில் பார்த்தால் திடுக்கிடுவோம். ஒருமுறை நான் சென்றபோது வீட்டில் அவர் மட்டும் இருந்தார். அதிர்ச்சியூட்டும்படி அவர் ஒரு நொய்ந்த கிழவராக தெரிந்தார்.


ஆக, குளிப்பதற்கு இழுத்துச் கொண்டுசெல்லப்படும் குழந்தை மாதிரித்தான் சுஜாதா மரணம் நோக்கிச் சென்றிருப்பார். அவரது நிரூபணவாதம் ‘அவ்ளவுதான். இந்த புரோட்டீன் -டி.என்.ஏ கட்டுமானம் அழியப்போகிறது’ என்று சொல்லியிருக்கும். அவரது ஆழ்மனம் பெருமாளின் அலகிலா விளையாட்டை உணர்ந்திருக்கும். இரண்டையும் ஓரமாக ஒத்திப்போட்டுவிட்டு அவர் மேலோட்டமாக எதையாவது செய்துகொண்டிருந்திருப்பார்.

கீதையின் சரம சுலோகம் பற்றி நான் அவரிடம் ஒருமுறை சொன்னேன் ‘அனைத்து தர்மங்களையும் கைவிடுக, என்னையே சரணடைக’ என்ற கீதையின் வரி வைணவர்கள் மரணப்படுக்கையில் சொல்லிக்கொள்ள வேண்டிய மரணவாக்கியம். ஆனால் அது கீதையின் ஆரம்பத்தில் வருகிறது. அதன் மேல் ஐயம் கேட்ட பார்த்தனுக்குத்தான் கர்மயோகமும் ஞானயோகமும் எல்லாம் உபதேசம் செய்யப்பட்டன.

அதாவது சரணாகதி அடைய முடிந்தால் மிச்சமேதும் தேவை இல்லை. அதேசமயம் அந்தச் சரணாகதி எளிமையாக சாத்தியமாகாது. ஞானத்தேடலின் ஒரு விதை உள்ளுக்குள் இருந்தால் கூட அது சரணாகதியை விட்டு, சாங்கிய யோகத்தை விட்டு, வெளியே இழுத்துவிடும். அதன் பின் போகவேண்டிய தொலைவு அதிகம். அந்தச் சவாலை சுஜாதா ஏற்கவில்லை, தவிர்த்தார். உரைநடையில், கணிப்பொறியில், சினிமாவில் விளையாடிக்கொண்டிருந்தார்.

சுஜாதாவால் ஒரு நல்ல வைணவரின் பரிபூரண சரணாகதியை நிகழ்த்திக்கொள்ள இயலாது. அவருள் உள்ள நிரூபணவாதி குறுக்கே நிற்பான். ஞானத்தின் விதை உள்ளே இருப்பவன் எங்கும் எதிலும் மிச்சமில்லாமல் பணிய முடியாது. அந்த ஞானம் முற்றிக்கனிந்து யோகமாக ஆனதென்றால் அது நம்மை விடுதலை செய்யக்கூடியதுதான். அது சுஜாதாவில் நிகழ்ந்ததா? ஆம் என சொல்ல அவரது ஆக்கங்கள் இடம் அளிக்கவில்லை.

’கைவிட்டது’ அவர் தனக்கென உருவாக்கிக் கொண்டிருந்த பிம்பங்களாக இருக்கலாம். எழுத்தின்மூலமே அவர் அவற்றை உருவாக்கினார். அல்லது கைவிட்டது அவர் தப்பிப்பதற்காகப் பற்றிக்கொண்டிருந்த எளிய உலகியல் செயல்களாககளாக இருக்கலாம். பெருமாள் கைவிட்டாரா? அதை சுஜாதா ஒருவேளை தன் கனவில் உணர்ந்திருக்கலாம். மரணத்துக்கு முந்தைய சுஷுப்தியில் உணர்ந்திருக்கலாம். அது இலக்கியத்துக்கு அப்பால் உள்ள ஒரு தளம்

ஜெ

நம்மாழ்வார்-ஒரு கடிதம் http://www.jeyamohan.in/?p=304
சுஜாதாவுக்காக ஓர் இரவு http://www.jeyamohan.in/?p=288
சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்


சுஜாதா: மறைந்த முன்னோடி http://www.jeyamohan.in/?p=286
விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்] http://www.jeyamohan.in/?p=3288

முந்தைய கட்டுரைபூக்கள் பூக்கும் தருணம்
அடுத்த கட்டுரைஹனீஃபாக்கா