காடு வாசிப்பனுபவம்

index
அன்புள்ள ஜெயமோகன் சார்,

காடு கடந்த 15 நாட்களில் வாசித்து முடித்தேன், என் இதனை வருட வாசிப்பு அனுபவத்தில், முதன் முறையாக ஒரு நாவல் வாசித்த பிரமிப்பை இன்று தான் அடைந்தேன், மனதின் வார்த்தைகள் விரலில் வர மறுப்பதால் இந்த கடிதத்தையும் 2-3 நாட்களுக்கு, சிறிது சிறிதாய் எழுதவேண்டும், என்று இருக்கிறேன், முதலில் நாவலின் முடிவுரை பற்றி எழுதிவிடுகிறேன், வேன்முரசு விழாவில் கமல் சொன்னதுபோல் கொற்றவையின் முதல் 10 பக்கங்கள், அவருக்கு உணர்ச்சி கொந்தள்ளிப்பை, தந்தது போல், எனக்கு காட்டின் கடைசி 10 பக்கங்கள் மிகபெரிய கொந்தளிப்பை தந்தது. அந்த எஞ்சினியர் மனைவியை, கிரிதரன் கூடுவதும், கதவின் பின்னால் நின்று நீலி ”தம்புரானே” என்று கதறுவதும், நாவலின் உச்சம்.

அடுத்தது நாவலின் கதா நாயகர்கள்,

இந்த நாவலில் 3 கதாநாயகர்கள், ஒரு நாயகி

முதல் நாயகன், அதன் மொழி, செறிவான மலைசூழல் சார்ந்த எதார்த்தமான, பேச்சின்மூலம் அறியப்படும் காட்டின் மொழி, எனக்கு அதனை சொற்களும் பரிச்சயம் எனினும்,, நகரத்து சூழலில் வளர்ந்த எவருக்கும் புரிந்தும் , எளிதில் மனதோடு ஒட்டி நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும், அழகான மொழி. ” மலை”யாள மொழியிலேயே எழுதப்பட்ட மிகச்சிறந்த தமிழ் நாவல் என்று இதை தொகுத்துக்கொள்ளலாம்.

இரண்டாவதாக , குட்டப்பன்,

நாவல் நெடுகிலும் வரும் குட்டப்பன் போன்று சகலகலா வல்லவனாக இருக்க விரும்பாத ஆண் இங்கு எவருமில்லை. குட்டப்பனின் கருபட்டி பாயசயமும், காட்டின் அத்தனை விலங்குகள் பற்றிய அவன் அறிவும், பெண்களை கவரும் லாவகமும், வாழ்கை பற்றிய தத்துவ விளக்கமும், காட்டு வாழ்க்கை வாழ தேவையான நுணுக்கங்களும் என பெரிய பட்டியல் அவனுடைய திறமைகள்.

நாவல் முழுவதும் இவனின் கேலியும் கிண்டலுமான பேச்சு வெகு லாவகமாக உரையாடல் மூலம் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

”ரெஜினாலே, பாயசவெல்லாம் , உனக்கா சுட்டிதானடி காச்சின்னேன் ” என்று கிண்டலாய் வலை விரிப்பதும், பைபிளும் கையுமாக திருயும் குரிசுவிடம் , ” நீரு தொடபிடாது , நான் வச்சதுமே, எங்க சாத்தா சாமிக்கி நேந்தாச்சு, ….சாத்தா பிரசாதம் வேய் ….சாத்தானக்கும்….’ என்று கலாய்ப்பதும், ரெஜினாலை குறித்து , ” இவளாக்கும் ஏமான் பஸ்டு சரக்கு ” என்பதும். சினகம்மையை குறித்து ” இவ வெறும் கினுகினுப்பு தான் ஏமான், வண்டிக்காளைக்க மணியும் அவளுக்க நாக்கும் சமம்.” ” என்று பெண்களை பகுத்து அணுகுவதும், கதை முழுவதும் அத்தனை பாத்திரத்திற்கும், பிடித்தமானவனாகவும் , அனைவருக்கும் தோள் கொடுக்கும் நண்பனாகவும். குட்டப்பன் வாசகனின் மனதில் வாழ்நாள் முழுவதும் தங்கிவிட போகும் ஒரு நண்பன்.


அடுத்து கிரிதரன்,

வயசான கிரிதரனின் , இளமைகால நினைவுகள் தான் இந்த நாவலே, மிளா, எனும் காட்டு மானின் கால் தடமும், கிரிதரன் புண்ணியம் என்கிற தன்னுடைய பெயரும், கல்வெட்டில் பார்க்கும் அந்த தருணம், நினைவுகள் விரிந்து, விரிந்து, தனது வாழ்வின் அத்தனை, உணர்சிகரமான நேரங்களும் கண்முன்னே தெரிகிறது. சதாசிவ மாமாவிடம், கல்வெர்ட்டு வேலைக்கு சேரும் இள வயது கிரிதரன் முதன் முதலில் காட்டிற்கு வருவதும், ரெசாலம்,சினேகம்மை, ரெஜினா , குட்டப்பன், குரிசு, என்று ஒரு நட்பான சுழல் அமைவதும், அயனிமரத்தடியில், அனைவரும் அமர்த்தும், பேசியும் நாட்களை நகர்த்துவதும், அய்யரின் அறிமுகம் மூலம், தத்துவம், சிந்தனை, இசை, கபிலன், காதல் என்று ரம்மியமான தருணத்தில், மலை வாழ் பெண் நீலி யை முதலில் சந்திப்பதும், காதலா, வெறும் காமமா, என்று தடுமாற்றத்தில் நோய் காண்பதும், நீலியின் காட்டு மர குடிலின் முன் காத்துகிடப்பதும், உருகித் தவிப்பதும், எண்ணிலடங்கா வார்த்தைகள் பேச எண்ணி, ஓரிரு வார்த்தைகள் மட்டுமே அவளிடம் சொல்ல முடிவதுமான , மிகபெரிய உணர்ச்சி கொந்தளிப்பு நிலையில் இருக்கும் கிரிதரன் எந்த காலத்திற்குமான ஒரு இளைஞனின் பிரதிபலிப்பே

தனிமையில் காட்டில் மாட்டிகொண்டு பயந்து விடுவதும்,, மீண்டும் உணர்ச்சி மேலீட்டால் காடு நோக்கி இருளில் செல்வதும். இளைஞனின் ரெண்டும்கெட்டான் நிலை. மத்திய வயதில் கடும் வாழ்க்கை சுழலில் கூட, இருண்ட ஒரு அறையில் தங்கிய படி, சாளரங்கள் வழியாக, பேச்சி பாறையை பார்த்துக்கொண்டே, ” நீர் திகழ சிலம்பு ‘ என்ற குறுந்தொகை பாடல் எழ, கபிலனா, பானம்பாரனாரா” என்ற சந்தேகத்தோடு, திணை குறிஞ்சி தான், என்று அவன் சற்று சுழலும், இறுக்கமும், தளர்ந்து, நீலியை யும், அவள் குளிர்ந்த காதலையும் எண்ணிக்கொள்வது, மனிதனின், இக்கட்டுகளில், கலையும்,இலக்கியமும்,அழகியலும் ஆற்றுபடுதுவது போல் பிறிதில்லை என்றே என்ன வைக்கிறது.


அடுத்தது நாயகி ” நீலி”

”தம்புரானே அது மலையன் மகள் தொட்டா சுடும்”- இப்படிதான் அறிமுகப்படுத்தப்படும், நீலி வெகுளியான , எளிய காட்டு தேவதை போன்ற பெண்,

”எந்து நோக்கனு”

”நோக்கான் பாடில்ல”

”மலையத்தியானு” என்று அவள் பேசும் அத்தனை பேச்சும் குழந்தையின் மழலையும்,

”அய்யோ ….ஞங்ங போணும், அச்சன் வரும்”. என்று அவள் கெஞ்சுகையில், இன்னும் சற்று நேரம் இருந்து விட்டு போயேன் என்று தான் நமக்கும் சொல்ல தோன்றும்.

இப்படி ஒரு எளிய, வெகுளியான பெண்ணை மனதளைவிலே நிகழ்த்தி வாழ்ந்து பார்க்காத ஆணே அரிது எனலாம்.

கிரிதரனின் அத்தனை கவித்துவமும், ரசனையும், காமமும், சிந்தனையும், இப்படி ஒரு எளிய தேவதையிடம் மட்டுமே முழுமை பெற முடியும்.

நாவல் முடிந்த வெகு நாட்களுக்கு பிறகும் ”தம்புரானே”, தம்புரானே” என்கிற நீலியின் ஒற்றை சொல் வெளியெங்கும் ஒலித்துகொண்டிருப்பதை, எவரும் உணரலாம்.

பிற கதை மாந்தர்களான, ரெசாலம், சினேகம்மை, குரிசு, மாமா, மாமி, வேணி, அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ரெசாலத்தின் தேவாங்கு, நண்பனாய், குருவாய்,கலைரசிகனாய், கபிலனாய், பன்முக தன்மை கொண்ட அய்யர். இப்படியாக நீளும் ஒரு வரிசை. அத்தனை பேரும் முக்கியமான பங்கு கொள்ளும் ஒரு களம் தான் காடு..

ஐஸ்கிரீம் சாப்பிடும் போது ஒரு உணர்வு உண்டு, கரைந்தும், விடக்கூடாது, சுவைக்காமலும்,, இருக்கக்கூடாது, என்பது போல, கதை படித்துக்கொண்டே செல்லுகையில், ஐயோ, முடிந்துவிடுமோ என்கிற எண்ணமும், முடியக்கூடாதே, என்கிற பரிதவிப்பும்.
காடு நம்மை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்கிறது.

நிச்சயமாக மறுவாசிப்பிற்கான மிகசிறந்த நாவல்

சௌந்தர்ராஜன்


காடு அனைத்துவிமர்சனங்களும்

முந்தைய கட்டுரைஅந்த முந்நூறு பேர்
அடுத்த கட்டுரைதமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்