அன்புள்ள ஜெயமொகன்,
தங்களது திரு வி க பதிவினை[ஓர் அமரகாதல் ] படித்து நெகிழ்ந்தேன். திரு வி க வாழ்க்கை குறிப்புகள் என்னை மிகவும் பாதித்த ஒன்று. நீங்கள் அதை படித்திருப்பீர்களா, அதை பற்றிய உங்கள் சிந்தனைகள் என்னவாக இருக்கும் என்று பலமுறை என்னியதுன்டு. எதையும் கோர்வையாக எழுத வரவில்லை.இணையத்தில் தமிழில் எழுத இதுவே எனது முதல் முயற்சி. பிழை இருந்தால் மன்னிகவும்.
அன்புடன்
கெ
அன்புள்ள குமாரகுரு அவர்களுக்கு
தமிழின் மிகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்று திருவிகவுடையது. சுயசரிதை எழுத இரு தகுதிகள் தேவை. பயன் மிக்க ஒரு வாழ்க்கை. அதை நேர்மையாக பதிவுசெய்யும் தீரம். இரண்டுமே இருந்த சான்றோர் அவர்
திருவிகவின் சுயசரிதையில் இரு விஷயங்கள் மிக முக்கியமானவை. ஒன்று ஆரம்பகால தொழிற்சங்க இயக்கத்தின் சித்திரங்கள். இரண்டு சைவ மதத்தை சடங்குகளில் இருந்து விடுவித்து ஒரு தத்துவ மதமாக ஆக நிகழ்ந்த முயற்சிகளின் வரைபடம். இரண்டுமே அக்காலகட்டத்தின் பின்னணியில் விரிவாக ஆராயத்தக்கவை
ஜெ
***
அன்புள்ள ஐயா
உண்மையான காதல் என்றால் என்ன என்பதைப்பற்றிய மிகச்சிறத சித்தரிப்பு. எல்லா ஆணிலும் ஒரு பெண்மை அம்சம் உண்டு, பெண்ணிலும் ஆண்மையம்சம் உண்டு. காதலாகி கண்ணீர் மல்குதலே உயர்ந்த நிலை. மனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும்
சங்கரநாராயணன்
அன்புள்ள சங்கரநாராயணன் அவர்களுக்கு
பிரேம்சந்த் ஒரு நாவலில் சொல்கிறார் பெண் தன் பெண்மையை ஆணுக்கு அளித்து ஆண்மையைப் பெற்றுக் கொள்வதும் ஆண் தன் ஆண்மையை அளித்து பெண்மையை பெற்றுக்கொள்வதும்தான் உண்மையான காதல் என்று
திருவிக அதைத்தான் சொல்கிறார். ஆண்மை என்பது உயர்பண்பாகவும் பெண்மை என்பது கீழ்நிலைப்பண்பாகவும் கருதப்பட்ட அக்காலத்தில் அதைச் சொன்னது ஒரு புரட்சியே
ஜெ
அன்புள்ள ஜெ
திருவிகவைப்பற்றிய உங்கள் அருமையான கட்டுரையைப் படித்தேன். அவரைப்பற்றி எனக்கு அதிகமாக ஒன்றும் தெரியாது. சில உயர்நிலைப்பள்ளி கட்டுரைகளைப் படித்தது தவிர.
திருவிகவுக்கு ஆர்.கெ.நாராயணனுடன் சில ஒற்றுமைகளை நான் காண்கிறேன். இருவருமே சிறுவயதிலேயே மனைவியை இழந்துவிட்டார்கள். திருவிகவைப்போலவெ ஆர்.கெ.நாராயணனும் மீண்டும் மணம்செய்துகொள்ளவில்லை. அவர் சிலகாலம் மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருந்தார். அந்த அனுபவத்தை இங்க்லீஷ் டீச்சர் என்ற படைப்பில் எழுதியிருகிறார். அவருக்கு அவரது ஒரே மகள் மீது இருந்த பிரியம் மிகவும் புகழ்பெற்றது. அவருக்கு குழந்தைகள் மிகமிக பிடிக்கும் என்று தோன்றுகிறது. சிறுகுழந்தைகளுடன் அவர் கிரிக்கெட் ஆடும் ஒரு புகழ்பெற்ற புகைப்படம் உண்டு.
ஒரு வேறுபாடு என்னவென்றால் ஆர்.கெ.நாராயணன் திருவிகவைப்போல ஒரு இலட்சியவாதி அல்ல. அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டிருந்தால் என்ன பேசிக்கொன்டிருப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருகிறது
முரளி மீனாட்சி சுந்தரம்
அன்புள்ள முரளி,
உங்கள் கடிதம்.நான் ஆர்.கெ.நாராயணனைப் பொருட்படுத்தி படித்தது இல்லை. அது வெள்ளைக்காரர்களுக்காக உருவாக்கபப்ட்ட ஓர் இலக்கிய உலகம் என்ற எண்ணமே காரணம். ஆகவே உங்கள் கடிதம் எனக்கு புதிதாக இருந்தது.
காதலின் உரைகல் மரணமே என்று ஒரு கஸல் வரி உண்டு. அதை நினைவூட்டும் வாழ்க்கை திரு.வி.கவுடையது
***
ஓர் அமரகாதல் – கண்ணில் கண்ணீர் வழிய வைக்கிறது. நன்றி.
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அரவிந்தன்,
நாம் பாடங்களில் திருவிகவிப்பற்றி படிக்கிறோமே ஏன் இதையெல்லாம் கற்பிப்பதில்லை என்று கேட்டாஅள் அருண்மொழி…எப்படி கற்பிக்க முடியும் இல்லையா?
அன்புள்ள ஜெயமோகன்
மன்னித்துக்கொள்ளுங்கள். இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் வந்தது. நீங்கள் சொல்வது உண்மைதான். எத்தனை அழகிய வாழ்க்கை. உண்மையில் பாடபுத்தகங்கள் மூலமாக இல்லாமல் உங்களைப் போன்றவர்கள் மூலம் திருவிகவின் இந்த பரிமாணங்களை தெரிந்து கொள்வதே நல்லது. ‘திருவிக ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்பதை Part-B இல் ஐந்து மதிப்பெண்களுக்கும் திருவிகவின் அண்ணன் மகள்களின் பெயர்கள் என்ன என்பதனை Part-A இல் இரண்டு மதிப்பெண்களுக்கும் நம் கல்வி முறை விற்றுவிடும். நம் கல்வியாளர்களின் கண்கள் இத்தகைய கட்டுரைகளை உள்ளிழுக்காமல் இருப்பதே நல்லது. ஆனால் திருவிகவின் வாழ்க்கையை படிக்கும் ஒரு மாணவன் -குறிப்பாக ஒரு சென்ஸ்டிவ் மாணவன்- கட்டாயம் இந்தக் கட்டுரையை படிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி ஆசிரிய-ஆசிரியைகளின் தனிப்பட்ட படித்தல் ஆழமாவது மட்டுமே . ஒரு நல்ல ஆசிரியர் அல்லது ஆசிரியை உங்கள் இணைய தளத்தை படித்த பின்னர் திருவிக குறித்து தன் மாணவர்களிடம் பேசும் போது அதனைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால் எத்தனை இடைநிலை பள்ளி/மேல் நிலைப்பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உங்கள் தளத்தை படிக்கின்றனர்? இவர்களுக்கு வைக்கும் refresher course காரர்கள் இந்த விஷயங்களில் sensitive ஆக இருந்தால் – எத்தனையோ நல்ல விஷயங்களுக்கு நம் மாணவர்களை விழிப்படைய செய்ய முடியும். மதிப்பெண்களை வாங்க பாடங்களை படித்து விற்கும் ஒரு வியாபாரமாக கல்வி அமைப்பு மாறியுள்ள நிலையில் நல்ல விஷயங்கள் மாணவர்களிடம் செல்ல தனிமனிதர்கள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டியுள்ளது.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்
அன்புள்ள அரவிந்தன்,
என்னுடைய வாசகர்களில் பலவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். சிறை வார்ட்ர்கள் கைதிகள் உண்டு. ஏன் பாலியல்தொழில் செய்யும் இரு வாசகிகள்கூட எழுதியிருகிறார்கள். மிகமிகமிக அரிதாகவே ஆசிரியர்கள் எனக்கு வாசகர்களாக இருகிறார்கள். எனக்குத்தெரிந்து 10 பேர் கூட தேறமாட்டார்கள். என்ன செய்ய?
ஜெ