நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்படுவதை வரவேற்கிறீர்களா? எழுத்தாளர்கள்தாம் தமிழ்த்திரைப்படத்தை வேறு நல்ல புதிய தளத்திற்குப் பெயர்க்கக்கூடியவர்கள் என்கிற கருத்துச் சொல்லப்படுகிறது. இதை ஏற்கிறீர்களா?
— ஹரன்பிரசன்னா.
திரைப்படம் என்பது இலக்கியமல்ல. அது ஓவியம், புகைப்படம், நாடகம், இசை ஆகிய கலைகளின் கலவையாலான நவீன கலை. அதில் உள்ள நாடக அம்சத்தில் ஒருபகுதியாக இலக்கியம் உள்ளது. ஒரு திரைப்படத்தில் கதைக்கட்டு [Plot], வசனம் என்ற இரு தளங்களில் மட்டுமே இலக்கியம் பங்களிக்கமுடியும். அது எடுத்தாள்கை இலக்கியம் மட்டுமே. அதாவது இலக்கியத்தின் சில கூறுகளை கவனமாக எடுத்துக் கலக்கலாம், அவ்வளவுதான்.
எழுத்தாளர்கள் இவ்வாறு இலக்கியத்தை எடுத்தாள்வதற்கு திரைப்படக்காரர்களுக்கு உதவலாம். அவ்வகையில் அவர்கள் ஒரு முக்கியப் பங்களிப்பாற்றலாம். ஆனால் அவர்கள் ஒருபோதும் திரைப்படத்தின் ஆசிரியர் ஆக முடியாது, திரைப்படத்தின் ஆசிரியர் என்று ஒருவர் இருந்தால் அவர் அதன் இயக்குநரே. அவருக்கு இலக்கியம் எந்த அளவுக்கு தெரியவேண்டுமோ அந்த அளவுக்கு நாடகமும் ஓவியமும் தெரிந்திருக்கவேண்டும். நல்ல எழுத்தாளர்களை நல்ல திரைப்படக்காரர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்ல விளைவுகள் வரலாம். மற்றபடி எந்த இலக்கியமேதையும் திரைப்படத்தில் பெரிதாக எதுவும் செய்துவிட இயலாது.
இன்று திரைப்படத்தில் செயல்படுபவர்களில் பலர் மிகத்திறன்வாய்ந்தவர்கள். சாதாரணமாக அவர்களால் சிறந்த படங்களை எடுத்துவிட முடியும். அவர்களில் பலர் மிகச்சிறந்த இலக்கிய வாசகர்கள். பிரச்சினை, அப்படிப் படத்தை எடுக்க யார் பணம் போடுவார்கள், எந்த அரங்கில் அதை வெளியிடமுடியும், யார் அதைப் பார்ப்பார்கள் என்பதெல்லாம்தான். படத்தின் பொருளாதார வெற்றி குறித்து திரையுலகில் இருக்கும் அச்சம் வியப்பூட்டுவது. கோடிகள் சூதாட்டமேடையில் வைக்கப்படுகின்றன. யாருக்குமே நிம்மதி இல்லை. எதைச்செய்தால் உறுதி கிடைக்கும் என்பதே எல்லாருக்கும் கவலை. கலைப்படைப்பை உருவாக்கும் வேகம் இருந்தாலும் சமரசங்கள் மூலம் இறங்கி இறங்கி எல்லாரும் நடக்கும் நெடுஞ்சாலைக்கு வந்து விடுவார்கள். இதெல்லாம்தான் சிக்கல், எழுத்தாளர்கள் இல்லாமலிருப்பதல்ல.
தமிழில் நாவல்கள் அதிகமாக திரைப்படமாக ஆக்கப்படுவது இல்லை. தமிழ் திரைப்படத்துக்குத்தேவை 50 காட்சிகள். அந்த 50 காட்சிகளாக சுருக்கப்பட்டாலும் சீரான ஓட்டமும் முடிவும் கொண்ட நாவல்களும் இங்கே குறைவே. உன்னைப்போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், [ஜெயகாந்தன்], சொல்லமறந்த கதை [தலைகீழ் விகிதங்கள்- நாஞ்சில்நாடன்] போல சில நாவல்களே திரைப்படமாக நினைவில் வருபவை. ‘மோகமுள்’ போன்ற கொடுமைகளும்.
மலையாளத்திலும் வங்காளத்திலும்தான் நாவல்கள் அதிகமாகப் படமாகியுள்ளன. எழுபதுகள் வரை மலையாளத்தில் எல்லா நல்ல நாவல்களும் படமாகியுள்ளன. அதன் பிறகு படங்களின் அமைப்பு மாறியது. பல கிளைகளும் சிக்கல்களும் கொண்ட கதை மக்களுக்குப் பிடிக்காமலாயிற்று. ஆகவே குறுநாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக ஆரம்பித்தன. எம்.டி.வாசுதேவன்நாயரின் பெரும்பாலான படங்கள் சிறுகதைகளே.
இன்றைய திரைப்படத்துக்குத்தேவையான வலிமையான கதைக்கட்டு இன்றைய நாவல்களில் இல்லை. அவை நாவலுக்கு மொழிபு [Narration] மட்டுமே போதும் என்று எண்ணுபவை. அவற்றைத் திரைப்படங்களாக ஆக்க இயலாது. குறுநாவலே திரைப்படத்துக்கு ஏற்ற வடிவம். சிறுகதையை விரிவாக்கிப் பயன்படுத்தலாம்.
வாடிவாசல், [சி.சு.செல்லப்பா], நித்ய கன்னி [எம்.வி.வெங்கட்ராம்], பதினெட்டாவது அட்சக் கோடு [அசோகமித்திரன்], விழுதுகள் [ஜெயகாந்தன்], வெக்கை [பூமணி] ஆகியவை திரைப்படமாக்கச் சிறந்த குறுநாவல்கள்.