வணிகக்கலையில் ஈடுபடுவது பற்றி…

வணக்கம் ஜெ,

சினிமாக் கலை வடிவத்தை தொழில்முறை என்ற பார்வையில் பார்ப்பதும், இலக்கியத்தை மட்டும் மென்மையாக பார்ப்பதும் என்ன விதமான பார்வையாக இருக்கு முடியும், முதலில் சினிமா கலை வடிவம் உங்கள் பார்வையில் என்னவாக இருக்கிறது.

-விக்னேஷ் சேரல்

அன்புள்ள விக்னேஷ்

எந்த ஒரு கலைக்கும் இரண்டுதளம் உண்டு. அறிதலும் பகிர்தலுமாக மெய்மை சார்ந்த ஒரு தளம். கேளிக்கையின் ஒருதளம். அனைத்துக்கலைகளிலும் இவ்விரண்டு கூறுகளும் கலந்தே இருக்கும். மகாபாரதத்தை வாசிக்கையிலேயே பீமன் வரும்பகுதிகள் கேளிக்கைத்தன்மை மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது .கதகளி போன்ற தூய செவ்வியல்கலையிலேயே கேளிக்கை அம்சம் உண்டு

அந்தக்கேளிக்கையம்சம் மேலோங்கி அக்கலையின் முதன்மைநோக்கமே அதுவாக அமையும்போதுதான் அதை கேளிக்கைக்கலை என்று சொல்கிறோம். அதிலும் அறிதலும்- பகிர்தலும் நிகழும் ஒரு தளம் இருக்கும். ஆனால் மிகக்குறைவாக இருக்கும். ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதைத் திரும்பச் சொல்வதாக இருக்கும்.

பழைய நிலவுடைமைச்சமூகத்தில் கலையின் கேளிக்கைவடிவமும் அரசர்களாலும் ஆலயங்களாலும் பேணப்பட்டது. மக்களால் ரசிக்கப்பட்டது. பதினெட்டாம்நூற்றாண்டில் தொழில்நுட்ப வளர்ச்சி அச்சு, போக்குவரத்து, சினிமா முதலியவற்றில் உருவாக்கிய பாய்ச்சல் காரணமாக கேளிக்கைக் கலைகள் பெரிய வணிகமாக உருவாயின. வணிகக்கலை, வணிகஎழுத்து என்று நாம் சொல்லும் இன்றைய வடிவங்கள் தோன்றின

பட்டி விக்ரமார்க்கன் கதை, வீராச்சாமிச் செட்டியாரின் வினோதரசமஞ்சரி முதலிய நூல்கள் பழங்காலத்துக் கேளிக்கைநூல்கள்தான். வணிக எழுத்து உருவானபோது அவற்றையும் ஆங்கில வணிக எழுத்தையும் முன்னுதாரணமாகக் கொண்டு இங்கே ஒரு வணிக எழுத்துமுறை உருவானது.

தெருக்கூத்து இங்கே ஒரு கேளிக்கைக்கலை. அதிலிருந்து பார்ஸிநாடகச் சாயலுடன் வணிக நாடகமரபு உருவானது. அதிலிருந்து ஹாலிவுட் சினிமாக்களின் கலப்புடன் தமிழ் வணிகசினிமா உருவாகியது. இவை பெருந்தொழில்களாக மாறின. நம் ஊடகங்களை நிறைத்தன. வணிகக் கேளிக்கைக் கலை என்பது நாம் வாழும் முதலாளித்துவச் சமூக அமைப்பின் பல்வேறு தொழில்களில் ஒன்று. இன்றைய வாழ்க்கையின் அவசியத்தேவை அது.

கேளிக்கை என்பது பிழையோ பாவமோ ஒன்றும் அல்ல என்பதே என் எண்ணம். அது என்றும் தேவையான ஒன்றாகவே இருந்தது. நவீன வணிக உலகில் அது வணிகக்கலையாக உள்ளது.

கேளிக்கையை கீழ்மை என்று எண்ணக்கூடிய, இலக்கியத்தை தூய ஞானச்செயல்பாடு மட்டுமே என மதிக்கக்கூடிய மனப்பதிவு என்பது தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலின் மிகச்சிறிய வட்டத்தில் விரிவான வரலாற்றுப்புரிதல் இல்லாமல் ஓர் எதிர்வீம்பாக உருவானது மட்டுமே.

நான் என் உருவாக்கக் காலத்திலேயே மலையாளச் சூழலுடன் சம்பந்தப்பட்டவன். அங்கே முதன்மையான இலக்கியநாயகர்கள் அனைவரும் வணிகக் கலைத்தளத்தில் பணியாற்றியவர்களே. வைக்கம் முகமது பஷீர், தகழி சிவசங்கரப்பிள்ளை, பி கேசவதேவ், உறூப் , எம்.டி வாசுதேவன் நாயர் உட்பட. அது அவர்களுக்குப் பொருளியல் விடுதலையையும் அதன் விளைவான தன்னம்பிக்கையையும் அளித்தது. தமிழின் தீவிர எழுத்தாளர்களுக்கு என்றுமிருந்த தாழ்வுணர்ச்சியை, ஒடுங்கிக்கொள்ளும் இயல்பை அவர்கள் அடையவில்லை.

ஆனால் வணிகக்கேளிக்கைக் கலையையும் கலையையும் பிரித்தறியும் நோக்கு எப்போதும் இருந்தாகவேண்டும். ஒரு கலையின் வணிகவடிவை அதன் புகழ் காரணமாக கலையின் மைய ஓட்டமாகவும் உச்சமாகவும் காண்பது பெரும்பிழை. அதன்மூலம் கலையின் மதிப்பீடுகள் இல்லாமலாகின்றன. அது அக்கலையை அழிக்கும். உண்மையில் வணிகக்கலைக்கே கூட அது நல்லது அல்ல.

பேரிலக்கியவாதிகள் வணிகக்கலையுடன் தொடர்புகொண்டிருந்த கேரளத்தில் எப்போதும் இந்தப் பாகுபாடு இருந்தது. உறூப் எழுதியதனால் நாயரு பிடிச்ச புலிவாலு போன்ற சினிமாக்கள் கலையெனக் கருதப்பட்டதில்லை. வைக்கம் முகமது பஷீர் எழுதியதனாலேயே பார்க்கவிநிலையம் உயர்கலையாகக் கருதப்பட்டதில்லை. அவற்றுக்கு அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எடுக்கும்படங்களுக்கும் இடையேயான வேறுபாடு எப்போதும் துல்லியமாகவே இருந்தது

எந்த ஒரு இலக்கியவாதியைவிடவும் சமகாலத்து வணிக எழுத்தாளர்களே புகழுடன் இருப்பார்கள். அதைக்கொண்டு அவர்களை இலக்கியநாயகர்களாகவும் கலாச்சாரமையங்களாகவும் எண்ணக்கூடாது. அது இலக்கியத்திற்கும் கலாச்சாரத்திற்கும் எதிரானது. இந்த வேறுபாட்டைச் சுட்டிக்காட்டுவது என்பது வணிகக்கலையை அல்லது வணிக எழுத்தை இகழ்வது அல்ல. அதன் எல்லையை, அதன் இடத்தைச் சுட்டிக்காட்டுவது மட்டுமே. வணிகக்கலையை மட்டுமே அறிந்தவர்களுக்கு அந்த வேறுபாடு புரியாது.

ஆனால் அந்தவேறுபாடு மழுங்கும்போதெல்லாம் எப்போதுமே சுட்டிக்காட்டப்படவேண்டும். எப்போதும் சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்படவேண்டும். கல்கி புகழின் உச்சியில் இருந்தபோது, தமிழிலக்கியத்தின் தலைமகன் அவர் என்று கொண்டாடப்பட்ட காலத்தில் , க.நா.சு மீளமீள இந்தவேறுபாட்டைச் சுட்டிக்காட்டினார். சுஜாதா கொண்டாடப்பட்டபோது சுந்தர ராமசாமி சுட்டிக்காட்டினார். எப்போதும் இது நிகழும்.நிகழ்ந்தாகவேண்டும்.

இன்னொரு வேறுபாடும் கவனிக்கப்படவேண்டியது. பார்க்கவி நிலையம் போன்ற படங்களை எழுதியதனால் பஷீர் வணிகசினிமாக்காரர் ஆக கருதப்படவில்லை. அவர் பங்கேற்ற தொழில் அது. அவர் எழுதியபடைப்புகளாலேயே அவர் இலக்கியவாதியாகக் கொண்டாடப்பட்டார். அப்படி வணிகக்கலையில் பங்கெடுக்காத நவீனப்படைப்பாளிகள் மிகக்குறைவு.

என்வரையில் இந்த வேறுபாட்டை எப்போதும் அவதானித்து தொடர்ந்து முன்வைக்கக்கூடியவனாக இருக்கிறேன். எந்நிலையிலும் மொண்ணையாகவே யோசிப்போம் என நெறிகொண்டிருப்பவர்களிடம் எத்தனை பேசினாலும் என்னால் புரியவைக்க முடியவில்லை. ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியது என் பணி என நினைக்கிறேன்.

வணிகக் கேளிக்கை எழுத்தின் தேவையை, பங்களிப்பை எப்போதும் சுட்டிக்காட்டுபவனாகவே இருந்திருக்கிறேன். கல்கி, சாண்டில்யன், பிவிஆர், சுஜாதா ,பாலகுமாரன் உள்ளிட்ட வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களைப்பற்றி விரிவாகப் பேசத் தொடங்கிய முதல்இலக்கியவிமர்சகன் நான். ஆனால் அவர்களின் இடத்தையும் தெளிவாகவே வரையறைசெய்தேன். அவர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரவில்லை. அவர்களின் வணிகக்கேளிக்கை எழுத்தின் சமூகப்பங்களிப்பையும் அவர்களின் எழுத்துக்களுக்குள் உள்ள இலக்கியமுக்கியத்துவம் கொண்ட பகுதிகளையும் சுட்டிக்காட்டுவதே என் முறை.

வணிகக்கேளிக்கை எழுத்தை ஓர் உற்சாகத்துக்காக எழுதுவதிலும் எனக்கு தயக்கம் இல்லை. நான் எழுதிய உலோகம், கன்னிநிலம் போன்றவை வணிகக்கேளிக்கை எழுத்தின்பாற்பட்டவையே. அவற்றை எழுத இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தொடர்கதைகள் இல்லாமலானபோது அத்தகைய எளியவாசிப்பு இல்லாமலாகியதோ என்ற எண்ணம். அது வாசிப்பை ஓர் இயக்கமாக நிலைநிறுத்த அவசியமானது. இன்னொன்று, எனக்கே ஒரு உற்சாகத்துக்காக அதை எழுதத்தோன்றியது. அப்போதிருந்த சோர்வுநிலைக்கு. இன்னும்கூட நான் எழுதலாம்

அதேதான் சினிமாவுக்கும். சினிமாவிலேயெ அதன் கலைவடிவம் ஒன்று உள்ளது. சமீபத்தில் எலிப்பத்தாயம் வரை நான் அந்தசினிமாவையே முதன்மைப்படுத்தி எழுதியிருக்கிறேன். சினிமாவின் வணிகக்கேளிக்கை வடிவம் மிகப்பிரபலமானது. அதில் ஒரு தொழில் என்றவகையில் ஈடுபடுகிறேன். கலைப்படங்களுக்கு எழுதமுடியும் என்றால் அதைச்செய்வது எனக்கு முக்கியமானது. ஆனால் தமிழில் அப்படி ஓர் இயக்கம் இன்று இல்லை.

ஓர் எழுத்தாளன் எழுத்தைநம்பி வாழ்வதே உயர்ந்தது. அவனுடைய கலைமனநிலையை தக்கவைத்துக்கொள்ள அது உதவும். தான் விரும்பும் எழுத்தை எழுதி அதை மட்டும் கொண்டே வாழமுடியும் என்றால் அதைப்போல சிறந்த ஏதுமில்லை.அந்த வாய்ப்பு தமிழில் இல்லை. வணிகரீதியாக எழுதலாம். இதழியலில் ஈடுபடலாம். இரண்டிலும் உள்ள அபாயம் என்னவென்றால் மொழியைக் கையாள்வதையே அன்றாடத் தொழிலாகவும் கொள்வதனால் காலப்போக்கில் ஒரு சலிப்பு அதன்மேல் உருவாகிறது.

வேறுதொழில்கள் அனைத்துமே எழுத்தாளனின் இயல்புக்கு எதிரானவையே. வணிகம், அலுவலகவேலை அனைத்துமே வலுக்கட்டாயமாக அவனுடைய கற்பனைசார்ந்த மனதைத் திருப்பி கொண்டுசென்று செய்யவேண்டியவை. அவற்றில் முழுமையாக ஈடுபடுவதென்பது கலைசார்ந்த மனநிலையை அழிப்பதுதான்.

மிகக்குறைவான நேரத்தைச் செலவிட்டு செய்யப்படும் தொழிலே உயர்ந்தது. சென்றகாலங்களில் அது அரசுப்பணி. ஆனால் தொண்ணூறுகளுக்குப்பின் அரசுப்பணி என்பது முழுநேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. பத்துமணிநேரம் அலுவலகத்தில் உழைத்துவிட்டு வீடுதிரும்பி எவரும் கலையை உருவாக்கிவிடமுடியாது. முக்கியமான படைப்புகளை எழுதக்கூடும் என நான் நம்பும் பலரும் இன்று இந்த அரக்கனின் பிடியில் சிக்கியிருப்பதைக் காண்கிறேன் . ஞானக்கூத்தனின் வேலை என்னும் பூதம் கவிதை நினைவுக்கு வருகிறது

ஆகவே நான் ஒரு தொழிலாகச் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். அது எனக்கு மிக உகந்ததாக, மிகச்சிறந்த வருமானத்தை அளிப்பதாக உள்ளது. என் இயல்புக்கு ஏற்ப அதில் பணியாற்றமுடிகிறது. ஓர் எழுத்தாளனாக நானறிந்த சிலவற்றை மட்டும் அதற்கு நான் பங்களித்தால் போதுமானது. வணிக சினிமா அளிக்கும் வாய்ப்புகளினாலேயே நான் பயணம் செய்யமுடிகிறது. இத்தனை எழுதவும் முடிகிறது.ஆகவே இதை மிகச்சிறந்ததாகவே எண்ணுகிறேன்

ஆனால் அதற்காக வணிகக்கேளிக்கை சினிமாவை உயர்கலை என்று சொல்வதில்லை. அதை எவ்வகையிலும் வலியுறுத்துவதில்லை. அதன் இடம் எதுவோ அங்கேதான் வைத்திருக்கிறேன். அதைப்பற்றி நான் பெரும்பாலும் ஏதும் பேசுவதுமில்லை. கேளிக்கைக்காக ஒரு சினிமாவைப்பார்ப்பேன். அதோடு சரி. உண்மையில் வணிகக்கலையின் ஒருபகுதியாக இன்று செயல்படும்போதும் பெரும்பாலானவர்களைப்போல எப்போதும் அதை எண்ணிக்கொண்டிருப்பதில்லை. என் இடம் இலக்கியமே. வணிகசினிமா என் தொழில் மட்டுமே.

எழுத்தாளனுக்குச் சற்றும் உகந்தது அல்ல என நான் நினைப்பவை பல உள்ளன. வணிகம் அதில் ஒன்று. ஊழல் மிக்க அரசியல் இன்னொன்று. அதைவிடக்கீழானது அன்னியநிதியோ பிறநிதிகளோ பெற்று அதற்கேற்ப தன் கருத்துக்களை அமைத்துக்கொண்டு பிரச்சாரபீரங்கியாக ஆவது.இதெல்லாம்தான் இங்கே கணிசமானவர்களால் செய்யப்படுகின்றன. எழுத்தாளனின் ஆன்மாவை கறைபடியச்செய்பவை, அவன் மொழியை நேர்மையற்றதாக ஆக்குபவை இவை. வணிக சினிமா அவற்றை எல்லாம் எளிதில் கடந்துசெல்ல உதவுகிறது என்பதனால் நான் அதற்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதமிழ் மின்னிதழ்2
அடுத்த கட்டுரைபெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]