அஞ்சலி: சந்திரசேகர்

unnamed

சிங்கப்பூரில் பணியாற்றியிருந்த இருநண்பர்கள் நான்கு வருடம் முன்பு என்னைப்பார்க்க வந்தனர். அவர்கள் குமரிமாவட்டத்தில் நாகர்கோயில் கொட்டாரம் அருகே உள்ள ஒரு சிறுகிராமத்தினர். தங்கள் ஊரில் ஒரு நூலகம் அமைக்கவேண்டும் என்று விரும்பினார்கள். அதைப்பற்றி ஊக்கமாகப் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் அவர்களைச் சோர்வுறுத்த விரும்பவில்லை. அப்படித்தான் சந்திரசேகரை அறிமுகம் செய்துகொண்டேன்

நூலகத்திட்டம் எதிர்பார்த்ததுபோலவே வெறுமையை அளித்தது. ஊரில் ஒருவர் கூட ஒருமுறைகூட புத்ததங்களை எடுத்துப்படிக்கவில்லை. பையன்களுக்கு டியூஷன் வெறி. பெண்களுக்கு சீரியல்பித்து. ஆண்களுக்கு டாஸ்மாக். தமிழ்ப்பண்பாட்டின் தன்னிறைவுநிலை.

சந்திரசேகர் தொடர்ந்து நட்புக்குழுவுக்குள் இருந்தார். இனிய நாணம்கொண்ட அவரது சிரிப்பு எனக்கு எப்போதுமே பிரியமானதாக இருந்தது. நண்பர் முத்துராமனுடன் இணைந்து இலங்கை அகதிக்குழந்தைகளுக்கு படிப்புக்கான உதவிசெய்வதில் மிகத்தீவிரமானார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அதற்கே செலவாகியது. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அவரது திட்டத்துடன் ஆங்கோர்வாட் செல்ல முடிவெடுத்தோம். சில நண்பர்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் என்பதனால் அது பூட்டான் பயணமாக முடிந்தது. அதன்பின்னர் மீண்டும் ஒரு திட்டம். அதுவும் நடக்கவில்லை. ஆங்கோர்வாட்டுக்கு என்னுடன் பயணம்செய்யவேண்டும், தனியாகப்போகப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

சிலமாதங்களுக்கு முன் அவரும் முத்துராமனும் காசி ஹரித்வார் சென்றனர். திரும்பும்போதுதான் நான் சென்னையில் வளசரவாக்கத்தில் நண்பர்களைச் சந்தித்தேன். அன்று வந்திருந்து இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். அதுதான் கடைசிச் சந்திப்பு

இன்றுகாலை படுக்கையில் சந்திரசேகர் இறந்து கிடந்தார். மாரடைப்பு. ஒன்றுமே புரியவில்லை. மரணம் எப்போதுமே ஆழ்ந்த அபத்த உணர்வை அளிக்கிறது. கசப்பை இனம்புரியாத கோபத்தை. மரணம் போல கையாலாத புழுவாக நம்மை உணரச்செய்யும் பிறிதில்லை.

நண்பருக்கு அஞ்சலி.

முந்தைய கட்டுரைபோகிற போக்கில்…
அடுத்த கட்டுரைபண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்