போகிற போக்கில்…

1

நேற்று இயக்குநர் கேபிள் சங்கரும் அவரது நண்பர்களும் என்னைப்பார்க்க வந்திருந்தனர். உண்மையாகவே தமிழ் வணிகசினிமாவின் பொதுவான போக்குகள், ரசனைமுறைகள் பற்றி இவ்வளவு தெரிந்த மிகச்சிலரையே சினிமாவுக்குள் பார்த்திருக்கிறேன். உற்சாகமான மனிதர். பேச ஆரம்பித்து சிரித்துக்கொண்டே இருந்தோம். சினிமா ஒரு கலை வணிகமாக அகும் உருமாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும் இடம். ஆகவே சமூகவியலை கூட்டு உளவியலை மிக அணுக்கமாகப்புரிந்துகொள்ள இதற்கிணையான இன்னொரு தளமே இல்லை. அதைப்பற்றி கொஞ்சம் விலகிநின்று சிரிப்புடன் பேசத்தெரிந்திருக்கவேண்டும்.

கேபிள் சங்கர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நீடிப்பார், வெற்றிகரமான சில சினிமாக்களை எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. அவருக்கும் நண்பர்களுக்கும் சினிமா மீது இருக்கும் பெரும் பித்து பிரமிக்கச்செய்கிறது. கிட்டத்தட்ட முழுமையாகவே சினிமாவுக்கு அர்ப்பணமான ஆத்மாக்கள். தினம் ஓரிரு சினிமாக்களைப் பார்க்கிறார்கள். விமர்சனங்களை தொகுத்துக்கொள்கிறார்கள். ஓர் ஆரம்பநிலையில் அந்த விரைவு இருக்கும். இத்தனைகாலம் நீடிப்பது ஆச்சரியம்தான்

அவரது இடம் எளிய உற்சாகமான நகைச்சுவைப்படங்கள். இது அவர் பேசும் முறையில் இருந்து நான் ஊகித்தது. அதில் அவரது பாணி ஒன்றை அமைத்துக்கொண்டாரென்றால் வெற்றிபெறமுடியும். வாழ்த்துக்கள்

*

உயிர்மை விழாவில் பேச்சாளர்கள் என்னை வசைபாடினார்கள் என்று சொல்லி சில மின்னஞ்சல்கள். நம்மூர் எழுத்தாளர்களில் மேடைதேடிகளே அதிகம். மனுஷ்யபுத்திரன் இப்போது விரும்புவது இதை என நான் எழுதியிருந்தேன். இவர்கள் அதைப்பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதற்காக போட்டியிட்டு முண்டியடிப்பார்கள். காலச்சுவடு மேடையிலும் இதேதான் நிகழ்கிறது. பரவாயில்லை, எழுத்தை நம்பாத எளியோரின் வழி அது.

நான் சொன்னதை சமீபத்தில் வெளிவந்த சில நாவல்களை வாசித்தபோது மீண்டும் உறுதிசெய்துகொண்டேன். மிகமிகச்சுமாரான படைப்புகள். படைப்புகள் சரியாக வராது போவது எவருக்கும் நடக்கக்கூடியதுதான். ஆனால் இவை முயற்சிகளேகூட அல்ல. வணிக எழுத்தை வாசித்து அதை முன்மாதிரியாகக் கொண்டு திறனின்றி எழுதி அந்த சுவாரசியத்தையும் உருவாக்க முடியாது போனவை. அவற்றிலுள்ள சில விவாதங்கள் டீக்கடை அரட்டை தரத்தைச் சேர்ந்தவை. இந்தவகையான எழுத்துக்களை எழுதுபவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள சுஜாதாவை ஒரு ‘பெஞ்ச்மார்க்’ ஆக முன்வைக்கிறார்கள்.

சுஜாதா திறமையான எழுத்தாளர் என ஒருவர் சொல்லலாம். தனக்குப்பிடித்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் சுஜாதா ‘நம் காலத்து இலக்கிய நாயகன்’ என ஒருகூட்டம் சொல்லும் என்றால் அதற்கு எதிராகத் தமிழ்ச்சூழலில் இருந்து ஒரு குரலும் எழாது போகும் என்றால் அதைவிடப் பரிதாபம் வேறென்ன? அந்த எதிர்ப்பு இங்கே ஒருநூற்றாண்டாக உருவாகி நீடிக்கும் நவீன இலக்கியத்தின் தரப்பு. அதைப்பதிவுசெய்தமைக்காகத்தான் இந்த வசைகள்.

இந்த ஒருங்கமைக்கப்பட்ட வசைகளுக்குப்பயந்தே எவரும் வாய் திறப்பதுமில்லை. ஆகவே வேறு வழியில்லை. ‘இவரு இலக்கியவாதி இல்லேன்னு யாரு சொல்றது? காலம் சொல்லட்டும்’ என்று சொல்லி வரும் ஒரு அப்பாவிக்கூட்டம் உண்டு. அவர்கள் எவரும் ஒரு பண்பாட்டின் ஒரு காலகட்டத்தின் நாயகன் என ஓர் எளிய வணிக எழுத்தாளர் முன்வைக்கப்படும்போது மறுத்துச் சொல்வதில்லை.

இலக்கியம் என்பது ஆர்வமூட்டும் கதை அல்ல. சுவாரசியமான பத்தி எழுத்து அல்ல. அது வாழ்க்கையின் ஒரு பகுதியாகத் தொடங்குவது. வாழ்க்கையைவிடப் பெரிதாக விரிந்து கனவுகளை நிறைப்பது. மொத்தப்பண்பாட்டையும் வரலாற்றையும் பிறிதொன்றாக்கி செறிவாக்கி அளிப்பது. தத்துவம், ஆன்மிகம் அனைத்தையும் தன்னுள் அடக்கியது. வாசகனிடமிருந்து உழைப்பையும், கற்பனையையும் கோருவது.

சுஜாதாவை ‘நம்காலகட்டத்தின் இலக்கியநாயகனாக’ நினைத்து அந்த இலக்கை எட்டமுயலும் ஒரு அமெச்சூர் கோஷ்டி உருவாகி நீடிப்பதில் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. ஆனால் பாரதிமுதல் புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், ப.சிங்காரம், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் என நீளும் இன்னொரு நீண்ட வரிசை உள்ளது என்று இளம்வாசகர்களில் ஒருசாராருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஓர் எழுத்தளனாக அவர்களை தொடர்ச்சியாக பேசிப்பேசி நிலைநிறுத்திவருபவன் என்பதை என் இணையதளத்தை வாசிக்கும் எவருக்கும் அறியலாம். நான் எழுதுவது அந்தப்பணியின் நீட்சியாகவே.

*

கேபிள் சங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பர் இணையத்தில் வசனகர்த்தாவாக என் சம்பளம் பற்றி எழுந்த விவாதத்தை வாசித்துக்காட்டினார். இன்னொருவர் இணையத்தில் தீவிரம் கக்கும் இளம்இலக்கிய முயற்சியாளர் ஒருவர் எப்படியாவது சினிமா அல்லது டிவியில் எழுதும் வாய்ப்புக்காக மன்றாடியதைப்பற்றிச் சொன்னார். உண்மையில் இங்கே இணையத்தில் என்மீது கொட்டும் காழ்ப்புகளுக்கான பின்னணி இதுவே.

இங்கே பெரும்பாலானவர்களுக்கு அந்தரங்கக் கனவு என்பது சினிமாதான். தங்களை தீவிரமான கொள்கைக்குன்றுகளாக தியாகச்செம்மல்களாகக் காட்டிக்கொள்ளும் பலருக்கு வாழ்க்கையின் உச்சகட்ட லட்சியமே அதுதான். அவர்கள் பாட்டு எழுத, வசனம் எழுத வணிகசினிமாவில் வந்து நின்று கெஞ்சுவதை தொடர்ந்து அறிந்துகொண்டிருக்கிறேன். மறுபக்கம் வணிக சினிமாவை காய்ச்சிக்கொண்டும் இருப்பார்கள்.

சினிமாவில் முட்டிக்கொண்டிருப்பவர்கள், முட்டித்தோற்றவர்களின் வன்மங்களே அதிதீவிர கொள்கைநிலைபாடுகளாக இலக்கிய அபிப்பிராயங்களாக வெளிப்படுகின்றன. சினிமா என்றால் இவர்களின் கோணத்தில் கலை அல்ல. அது எளிதாகக் கிடைக்கும் பெரும்பணம் மற்றும் கேளிக்கை மட்டுமே. அதற்குத் தனக்கும் தகுதி இருப்பதாகவும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆகவே நான் அவர்கள் விழைவதை அடைந்துவிட்டவன் என்று எண்ணி எரிகிறார்கள். நானாவது கருத்துக்கள் சொல்கிறேன். வாயே திறக்காத எஸ்.ராமகிருஷ்ணன் மீதும் இணையான காழ்ப்பு இருக்கக் காரணம் இதுவே.

பெருந்தொகையை நான் பெறுவதாக ஒருவர் சொல்கிறார். இன்னொருவர் இல்லை உண்மையில் இதுதான் பெறுகிறார் என்று மிகச்சிறிய தொகையைச் சொல்கிறார். மாறிமாறி இருவருமே ஒரே வகையான ஆற்றாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். உண்மையில் நான் பெறும் தொகையைச் சொன்னால் ஆறுமாதம் தூங்கமாட்டார்கள். என் பெயரில் வெளியான படங்களில் மட்டும் அல்ல என் பெயர் இல்லாத மாபெரும் வணிகவெற்றிப்படங்களில் பணியாற்றித்தான் இவர்களின் கணக்குகள் சென்றடையாத பணத்தை நான் பெற்றிருக்கிறேன். தமிழ்சினிமாவில் எவரும் எழுத்துக்காக என்னளவு பெருந்தொகை பெற்றுக்கொண்டதில்லை.

வணிகசினிமாவுக்காக எழுதினால் அதை தொழில்முறையாக முழுமையாக செய்து வெல்வதே என் வழி. பின்னால் நிற்பது அல்ல. திரைஎழுத்துக்கு நான் அளிக்கும் பங்களிப்பு என்ன என்பது இயக்குநர்களுக்குத் தெரியும் என்பதனால் அது தேடிவருகிறது.

வணிகசினிமா என்பது ஒரு மாயமோகினி. ஏங்கித்தவித்துப்பின்னால் செல்பவர்களை அது பெரும்பாலும் திரும்பிப்பார்ப்பதில்லை. அதை வெல்ல வாய்ப்புக்கிடைப்பது என்பது தற்செயல். அதை வென்றவர்கள் சிறிதுகாலம் நினைத்ததை எல்லாம் அடையலாம்.

*

ஒரு நாவல் முடிந்து இன்னொன்று தொடங்கும் இடைவெளி என்பது ஒரு சொற்களின் நரகம். முற்றிலும் வேறுவகை எழுத்துக்களை வாசித்தேன். எழுதிப்பார்த்தேன். இரு கதைகள் வழியாக கொஞ்சம் மீண்டேன். ஆனால் நாவல் அமையாதபோது ஒரே எரிச்சல் கோபம் கொந்தளிப்பு. நல்லவேளையாக வீட்டில் இல்லை.

சென்னை விடுதியில் கொலைவெறியுடன் இருப்பதாக அரங்கசாமியிடம் சொன்னேன். ‘ராஜகோபாலனை அனுப்பறேன் சார். கைத்தவறுதலா போட்டுத்தள்ளிட்டாக்கூட பார்ப்பான்தான். மைனாரிட்டி சாதி, சமாளிச்சுக்கலாம்’ என்றார். ராஜகோபாலன் வந்தபோது அதைச் சொன்னேன். ‘சார், அந்த ஆள் என்னை இப்டியே கொலைக்களத்துக்கு அனுப்பிட்டிருக்கான் சார்’ என்றார். நான் பார்ப்பனர்களைக் கொல்வதாக இல்லை. சுப்ரமணியம்சுவாமியின் டிவீட்க்ளைக்கூட தாங்கிக்கொள்ளலாம். பத்ரி சேஷாத்ரியின் கட்டுரைகள்தான் கஷ்டம்.

இன்று ஒரு வழியாக ஐஸ்க்கட்டி உடைந்து எழுதத்தொடங்கிவிட்டேன்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]
அடுத்த கட்டுரைஅஞ்சலி: சந்திரசேகர்