தமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்

1

பி.ச.குப்புசாமி அவர்கள் எனக்கும் ஜெயகாந்தனுக்குமான உறவைப்பற்றி தமிழ்ஹிந்துவில் எழுதியிருக்கிறார். நான் அவற்றில் சொல்லப்பட்ட எந்த விஷயத்தைப்பற்றியும் கட்டுரைகளிலோ நேஎர்ப்பேச்சிலோ எதுவுமே சொன்னதில்லை என்று சுட்டிக்காட்டி பல நண்பர்க்ள் அது ஏன் என்று கேட்டிருந்தனர். அவை பதிவுசெய்யப்படவேண்டியவை என்று சிலர் எழுதியிருக்கிறார்கள்.

மூத்தபடைப்பாளிகளைப்ப்ற்றி அவர்கள் இருக்கும்போதோ மறைந்தபின்னரோ நான் எழுதிய குறிப்புகள் அனைத்திலும் ஓரு பொதுக்கூறைப் பார்க்கமுடியும். அவர்களின் புனைவுலகைப்புரிந்துகொள்ள உதவக்கூடிய அளவில் அவர்களின் தனியாளுமையை நானறிந்தவகையில் முழுமையாகச் சொல்ல மட்டுமே முயன்றிருப்பேன். அப்பதிவுகள் அவர்களோ பிறரோ முன்னரே எழுத்தில் பதிவுசெய்தவற்றுக்கு ஒத்துப்போகும் என்றால் மட்டுமே எழுதுவேன். ஒத்துப்போகாத செய்தி என்றால் வலுவான ஆதாரம் இருந்தால் மட்டுமே எழுதுவேன்

நான் எழுதிய மூத்தபடைப்பாளிகள் பலரைப்பற்றி மேலும் அந்தரங்கமான தகவல்களை அணுக்கம் காரணமாக அறிந்திருப்பேன். தனியுரையாடலில் சொல்லப்பட்டவை, உடனிருந்து அறிந்தவை. அவற்றை ஒருபோதும் பதிவுசெய்யமாட்டேன். அவை அவர்களின் புனைவுலகைப்புரிந்துகொள்ள எவ்வகையிலும் உதவாதவை என்பதே காரணம். தனிப்பட்ட சிலையுடைப்புகளில் எனக்கு நம்பிக்கையில்லை.

உதாரணமாக , பிரமிளுக்கும் தனக்கும் இருந்த கசப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பதை ஜெயமோகனிடம் மட்டுமே சொல்லியிருக்கிறேன் , வேறு எவரிடமும் சொன்னதில்லை என்று சுந்தர ராமசாமி பிரமிள் பற்றிய நூலில் எழுதியிருக்கிறார். அது என்ன என்று என்னிடம் தொடர்ச்சியாக வாசகர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சுந்தர ராமசாமியே அதைப்பதிவுசெய்யவில்லை. பதிவுசெய்யும் நோக்குடன் என்னிடம் சொல்லவும் இல்லை. அது பிரமிளின் கவிதைகளைப்புரிந்துகொள்ள உதவுவதும் அல்ல. ஆகவே அதைப்பற்றிப் பேசவேண்டியதேயில்லை என்பதே என் உறுதியான எண்ணம். நெருக்கமான நண்பர்களிடம் கூட நான் அதைச் சொன்னதில்லை

சுந்தர ராமசாமிக்கும் எனக்குமான தனிப்பட்ட கடிதங்களிலேயே சுவாரசியமான பலவிஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவருடைய தொழில்சார்ந்தவை, தனிப்பட்ட உறவுகள் சார்ந்தவை. நானும் தலையிட்ட பல நிகழ்ச்சிகளை நண்பர்களும் அறிவார்கள். அவை பொதுப்பார்வைக்கு உரியவை அல்ல. சுஜாதா எழுதிய கடிதங்களிலேயே பல தனிப்பட்ட செய்திகள் உள்ளன. அவையும் சுஜாதா என்ற எழுத்தாளரைப்புரிந்துகொள்ள உதவக்கூடியவை அல்ல.

சுந்தர ராமசாமி, சுஜாதா, ராஜமார்த்தாண்டன் , ஜெயகாந்தன், கந்தர்வன் போன்றவர்கள் என் புனைவுகளைப்பற்றிய மதிப்பை தொடர்ச்சியாக பதிவுசெய்தவர்கள். ஆனால் அவர்கள் பதிவுசெய்யாத தனிப்பட்ட கூற்றுக்களை கடிதங்களை நான் பதிவுசெய்யவில்லை. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் போன்றவர்கள் தொடர்ந்து என் புனைவுகளை பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் தெளிவாக பொதுமேடையில் எழுத்தில் முன்வைக்கும் கருத்துக்களே நான் கூறிக்கொள்ளத்தக்கவை. பிறகருத்துக்கள் தனிப்பட்ட முறையிலானவை மட்டுமே.

இது எதிர்மறைக்கருத்துக்களுக்குப் பொருந்தாது. சுந்தர ராமசாமி தனிப்பட்டமுறையில் சொன்ன எதிர்மறைக்கருத்துக்களை பதிவுசெய்திருக்கிறேன். நான் எவருக்கும் செய்த உதவிகளைப் பதிவுசெய்ததில்லை. அவர்கள் செய்த உதவிகளை மட்டுமே பதிவுசெய்திருக்கிறேன். ஒரு தனிப்பட்ட பண்பாக இதை எண்ணுகிறேன்.ஆனால் இங்கே பெரும்பாலான படைப்பாளிகள் இந்த மரபைப்பேணுவதில்லை என்பதையும் காணலாம்.

ஜெயகாந்தனிடம் என் புனைவுகள், கட்டுரைகள் பற்றிப்பேசியிருக்கிறேன். ஏழுவிமர்சனநூல்கள், ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், காடு, இன்றையகாந்தி பற்றி. அவர் இன்றையகாந்தி பற்றி தொலைபேசியில் கூப்பிட்டுப்பேசினார். அவர் என்னிடம் தொலைபேசியில் பேசிய ஒரே தருணமும் அதுவே. ஆனால் அவற்றை அவர் மேடையில் சொல்லவில்லை. பி.ச.குப்புசாமி பதிவுசெய்தமையால் இதைச் சொல்கிறேன்.

*

திரு நியாஸ் அகமது அவர்களின் கட்டுரையை சற்றுப்பிந்தி வாசித்தேன்.
அவரது தந்தை வல்லம் தாஜுபால் அவர்களை எனக்குத்தெரியும். தஞ்சைப் பல்கலை நிகழ்ச்சியிலும் பின்னர் தஞ்சைப்பிரகாஷ் அவர்களைச் சந்திக்கச்சென்ற ஒரு நிகழ்ச்சியிலும் சந்தித்துப்பேசியிருக்கிறேன். அவரது மகன் எழுதிய அக்கட்டுரை மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு செய்தியாளராக மட்டும் அல்லாது சுதந்திரமான வாழ்க்கையைத் தெரிவுசெய்தமைக்காகவும் வாழ்த்துக்கள்.

நான் உங்கள் ரசிகன் அல்ல. சொல்லப் போனால், உங்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது; காரணம் ஏதும் இல்லை. என்ற வரிதான் சற்றுத் தொந்தரவுசெய்தது. ஆர்வம் இல்லை, தெரிந்துகொள்ளவில்லை என்பதைப்புரிந்துகொள்ள முடிகிறது. ஏன் தெரிந்துகொள்ளாமலேயே பிடிக்காமலாகிறது? அவரது தந்தையின் நண்பர் நான் என்றபோதிலும்கூட?

இன்று இந்த மனநிலையை கணிசமான இஸ்லாமியரிடம் காணமுடிகிறது. இஸ்லாமிய ஆதரவாளர் என்ற முத்திரை இல்லாத அனைவரையுமே முன்கூட்டியே வெறுக்கும்படி அவர்கள் இங்குள்ள ஒரு சிறு கும்பலால் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய அடிப்படைவாதம் உட்பட அனைத்துக்குமே ஒரு வணக்கத்தை முன்னரே போட்டுவைக்காத அத்தனை எழுத்தாளர்களையும் ஐயத்துடனும் கசப்புடனும்தான் இவர்கள் அணுகுகிறார்கள். அப்படி ஓரு மதக்காழ்ப்பைக்கொண்டிருப்பது ஓர் இழிவு என்று அவர்களுக்குத் தெரியவில்லை, அது முற்போக்கான மனநிலை என்றுகூட நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டுநாட்களுக்கு முன் ஓர் இஸ்லாமிய வாசகர் அவர் அசோகமித்திரனின் எந்தக்கதையையுமே வாசித்ததில்லை என்றும் தற்செயலாக புலிக்கலைஞன் வாசித்து நெகிழ்ந்தபின் அசோகமித்திரனை வாசித்ததாகவும் அசோகமித்திரனைப்பற்றியும் புலிக்கலைஞன் பற்றியும் நான் எழுதியிருந்ததை வாசித்தபின்னரே என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்ததாகவும் சொன்னார். அசோகமித்திரன் ஒரு இஸ்லாமிய எதிரி என்று இருபதாண்டுக்காலமாக நினைத்துவந்தாராம்.

நான் கேட்டேன், ‘சரி இஸ்லாமிய எதிரியாகவே இருக்கட்டும், ஏன் வாசிக்கக்கூடாது?’ அவருக்குப் பதில் இல்லை. ‘அவரை இஸ்லாமிய எதிரி என்று சொன்னவர்கள் யார்? அவர்கள் அளிக்கும் சான்றிதழ்பெறாதவர்களை இஸ்லாமியர் வாசிக்கமாட்டீர்களா?’ என்றேன். “ஆனா அப்டித்தான் இருக்கு நிலைமை” என்றார் அவர்.

என்னிடம் வரும் பெரும்பாலான இஸ்லாமிய வாசகர்கள் ‘ரொம்பகாலம் உங்களை வாசிக்கக்கூடாதுன்னே இருந்தேன் சார். ஒரு நண்பர் ரொம்ப வற்புறுத்திக் குடுத்ததனாலத்தான் வாசிச்சேன். அப்றம்தான் பிடிச்சுப்போச்சு” என்றுதான் ஆரம்பிப்பார்கள். அதுகூட சோற்றுக்கணக்கு கதையாகத்தான் இருக்கும். அந்த நண்பர் அசோகமித்திரனை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அது டைகர்பைட் காதர் பற்றிய கதை என்பதுதான்.

இவர்கள் வாசகர்களாக அணுகியபின் கேட்டால் ‘நீங்க கீதையப்பத்தி பேசுறீங்க அதனாலத்தான் இஸ்லாமிய எதிரின்னு தோணிச்சு’ என்பார்கள். கீதையை பற்றிப் பேசுபவன், மகாபாரதம் எழுதுபவன், ஒரு இந்து இஸ்லாமியவெறுப்பாளனாகவே இருப்பான் என ஏன் தோன்றுகிறது? யார் அதை இங்கே கட்டமைக்கிறார்கள்?

காரணமற்ற வெறுப்பு என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. அது ஒரு பெரிய அரசியல் வலை. அதைப்பற்றித்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இஸ்லாமியர் இந்த தேசத்தின் அனைத்து மைய ஓட்ட பண்பாட்டுக்கூறுகளையும் கரணமில்லாமல் வெறுக்கும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இஸ்லாமியர்களின் உள்ளங்களை திரிபுபடுத்துவது இங்குள்ள குறுங்குழு அரசியலின் பெருந்திட்டங்களில் ஒன்று. ஆனால் இதன் இழப்பு இஸ்லாமியருக்கே.

இப்படி சில தற்செயல்கள் வழியாக பனிக்க்கட்டித்திரை உடைவது மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால் அந்த பனிக்கட்டி எவரால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது, அதன் நெடுங்கால விளைவுகள் என்ன என்பதுதான் சங்கடமான வினா.

முந்தைய கட்டுரைகாடு வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரைமுந்நூறில் ஒருவர்