அந்த முந்நூறு பேர்

1

ஹரன் பிரசன்னா நான் தங்கியிருந்த விடுதிக்கு பிரயாகையின் செம்பதிப்பின் முந்நூறு பிரதிகளைக் கொண்டுவந்தார்.முதல் பதினாறு அச்சுப்பக்கங்கள்மட்டும். அவற்றைப் பெறுபவர்களின் விலாசமும் பெயரும் அடங்கிய அச்சுக்குறிப்பு தனியாக இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பெயர் எழுதிக் கையெழுத்திட்டேன். முதற்கனலின் செம்பதிப்பு கேட்டவர்களுக்கு அச்சிடப்பட்டு அளிக்கப்படுகிறது. அதன் ஐம்பது பிரதிகளில் கையெழுத்திட்டேன்

கையெழுத்திடும்போது பலருடைய பெயர்களைச் சுருக்கிக் கையெழுத்திட்டேன். உதவியாக வந்த கிழக்கு ஊழியர் ‘சார் பேரு வேற மாதிரி இருக்கே’ என்றார். ‘இல்லை, இதான் அவரை நான் கூப்பிடுற பேரு’ என்றேன். ‘நேர்லே தெரியுமா?’ என்றர் ஹரன். ‘தெரியாது. ஆனா கடிதங்கள் வழியா பேசிட்டே இருக்கோம்’ என்றேன்.

வெண்முரசு இப்போது ஒன்றரை வருடங்களாக வந்துகொண்டிருக்கிறது. முதற்கனல் செம்பதிப்பு 600 பிரதிகள் முன்விலையில் வாசகர்களால் வாங்கப்பட்டது. அதன்பிறகு வந்தவை மும்மடங்கு விலைகொண்ட பெரிய நாவல்கள். அவை 400 பிரதிகள் செம்பதிப்பு முன்பதிவுசெய்யப்பட்டன. பிரயாகை 300. மேலும் நூறு பிரதிகள் விற்கப்படலாம்.. இதுதான் இதன் நிலையான எண்ணிக்கை. தோராயமாக நாநூறு. விரிவாக்கினால் ஐநூறு.

செம்பதிப்பை வாங்குபவர்களை அன்றுமுதல் கவனித்துவருகிறேன். வெண்முரசை பல்லாயிரம்பேர் இணையத்தில் வாசிக்கிறார்கள். அதன் வாசிப்பு எண்ணிக்கை முதலில் இருந்தே சீராக இருந்துவருகிறது. நீலம் கூட அந்த எண்ணிக்கையைக் குறைக்கவில்லை. பிரயாகைக்குப்பின் அது கூடியிருக்கிறது. காண்டவத்தில் குறையலாம்.அதன் சாதாரண நூல்வடிவும் ஆயிரங்களில் விற்கிறது. முதற்கனல் மறுபதிப்பு வந்துவிட்டது. மழைப்பாடல் வரப்போகிறது. மற்றவை இவ்வருடம் இறுதியில் வரும்.

ஆனால் செம்பதிப்பு முன்பதிவுசெய்பவர்கள் வேறு ஒரு சமூகம். அவர்களில் ஏறத்தாழ அனைவருமே தொடர்ச்சியாக இணையத்தில் வெண்முரசை வாசித்துக் கடிதம் போட்டுக்கொண்டிருப்பவர்கள். சிலர் சுருக்கமான பெயர்களில். சிலர் வேறுபெயரில்.அவர்களை கடிதங்கள் வழியாக எனக்கு நன்றாகத் தெரியும். இணையத்தில் வாசித்து விவாதித்தபின்புதான் நூலையும் வாங்குகிறார்கள்.அப்படி இணையத்தில் வாசிக்காமல் நூலாகவே முன்பதிவுசெய்து வாங்குபவர்கள் இந்த முந்நூறில் இருபதுபேர்கூட இல்லை.

இவர்களை ஒருவகை அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் என்று சொல்லலாம். வாசகராக அன்றி வேறெவ்வகையிலும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். மிகச்சிலருடன் மட்டுமே வெண்முரசுக்கு அப்பாலும் ஓர் உறவு உள்ளது. சிலரை பயணங்களுக்கோ நிதி வசூல் செய்வதற்கோ பயன்படுத்துகிறேன். மற்றபடி அவர்கள் வெண்முரசின் வாசகர்கள் மட்டுமே

இவர்களில் ஐம்பதுபேர் மட்டுமே சொல்புதிது குழுமத்தில் உள்ளவர்கள் என்பது இன்னொரு ஆச்சரியம் . ஐநூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் சொல்புதிது குழுமத்தில் இருக்கிறார்கள். அவர்களில் முந்நூறுபேராவது வெண்முரசை வாசிக்கிறார்கள், அவ்வப்போது எதிர்வினையாற்றுகிறாகள். ஆனால் பத்தில் ஒருவரே நூலை முன்பதிவில் வாங்குகிறார்கள். செம்பதிப்பின் விலை அதிகம் என பலர் எண்ணுவதாகச் சொன்னார்கள்.

முன்விலைத்திட்டத்தில் வெண்முரசு வாங்குபவர்களில் மூன்றில் ஒருபங்கினர் பெண்கள். ஆனால் வாசகர்கடிதங்களில் பத்தில் ஒன்றுகூட பெண்கள் எழுதுவதில்லை. திரும்பத்திரும்ப ஒரு எட்டுபேர்தான் பெண்களில் எதிர்வினையாற்றுகிறார்கள்.

இந்த முந்நூறுபேரின் கடிதங்களைப்பார்த்தால் இவர்களில் நாலைந்துபேர் மட்டுமே மதம்சார்ந்த பின்னணி வாசிப்புப் உடையவர்கள், மதம் சார்ந்த மனநிலையுடன் வெண்முரசை வாசிப்பவர்கள்.மற்ற அனைவருமே இலக்கியவாசகர்கள். பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் நிறைய வாசிப்பவர்கள். சமீபத்தில் இணையம் வழியாகத் தமிழிலக்கியத்தை அறிந்தவர்கள். மகாபாரதமே வெண்முரசின் வழியாகத்தான் அவர்களுக்கு விரிவாக அறிமுகமாகிறது.

ஆனால் ஓரிருவர் மிக விரிவான பின்னணி வாசிப்பும் மரபார்ந்த ஞானமும் கொண்டவர்கள். இருவரை வைணவ அறிஞர்கள் என்றே சொல்லமுடியும்.அவர்கள் அனைவரிடமும் நேரடியான தொடர்பு கொண்டு வெண்முரசின் ‘ஆய்வு வழிகாட்டி’களாக ஆக்கிக்கொண்டேன். இவர்களில் சிலர் எழுதியதும் பிரசுரமாகும் முன்னரே வாசிப்பவர்கள். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்படி மரபை ஆழ்ந்து அறிந்தவர்களில் வயதானவர்கள் இருவர் மட்டுமே. மீதி அனைவருமே என் வயதை ஒட்டியவர்கள் அல்லது என்னைவிட இளையவர்கள்.

இந்த முந்நூறு பேரையும் ஒரு குட்டிச் சமூகமாக நினைக்கிறேன். இவர்களைப் பலகோணங்களில் புரிந்துகொள்ள விரும்புகிறேன். இவர்களில் கிட்டத்தட்ட பத்து இஸ்லாமியர் உள்ளனர். கிறிஸ்தவர்களும் அதே எண்ணிக்கையில் உள்ளனர். கிறிஸ்தவர்கள் சிலருடன் நேர்ப்பழக்கமுண்டு, அனைவருமே மீனவச் சமூகத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள். இஸ்லாமியர்கள் அனைவருமே மரைக்காயர்கள். கோவையின் மிகப்பெருந்தொழிலதிபர்கள் இருவர் இவர்களில் உண்டு. இருவர் மாலுமிகள். ஒருவர் எனக்கு முதுகுவலிக்கு பயிற்சிகள் சொல்லித்தர நேரில் வந்தார். கணிசமானவர்கள் கணிப்பொறி சார்ந்த தொழில் செய்பவர்கள் அல்லது தணிக்கை முதலியதுறைகளைச் சார்ந்தவர்கள். பிராமணர்கள் எண்ணிக்கையில் ஒப்புநோக்கக் குறைவு என்பது ஓர் ஆச்சரியம்.

இந்த முந்நூறுபேரையும் நேரில் சந்திக்கவேண்டும் என்று ஓர் ஆசை. ஆனால் அது எளிதல்ல. அவர்கள் தங்களை ஒரு திரைக்கு அப்பால் வைக்கவே விரும்புகிறார்கள். காரணம் அவர்களின் தொழிலையும் தனிவாழ்க்கையையும் இதனுடன் இணைக்க விரும்புவதில்லை. அவர்களை எவ்வகையிலேனும் திரட்ட முயல்வதே ஓர் அத்துமீறல். இவர்களில் பலருக்கு நான் எழுதும் கட்டுரைகள், என் கருத்துலகம் எதிலும் பெரிய ஆர்வம் இல்லை. அவற்றை அவர்கள் வாசிப்பதுகூட இல்லை. பலருக்கு உண்மையில் இலக்கியபூசல்கள் கருத்துவிவாதங்கள் எதுவுமே தெரியாது. பெண் எழுத்தாளர்கள் பற்றிய விவாதம் உச்சத்தில் இருந்தபோது ஒரு வாசகி அதைப்பற்றி ஒன்றுமே தெரியாமலிருந்ததைக் கண்டு திகைப்படைந்தேன்.

ஏதோ ஒருவகையில் அவர்களுக்கு வெண்முரசுதான் முக்கியம், நான் அல்ல.அதில் ஓர் அழகு உள்ளது. எழுத்தளனின் எழுத்துக்களால் மட்டுமே அவனுடன் தொடர்பில் இருத்தல். அதை மட்டுமே கொண்டு அவனை அறிதல். அது ஒருவகை இலட்சிய உறவுதான்.

ஒருவகையில் வெண்முரசே இந்த முந்நூறுபேருடனான நுண்ணிய உறவாக ஆகிவிட்டிருக்கிறது. பெரும்பாலும் பண்பாட்டு உட்குறிப்புகளால் இயங்கும் ஒரு படைப்பு வெண்முரசு. மறுஆக்கம் செய்யப்படாத ஒரு தொன்மம் கூட இதில் இல்லை. அந்த மறு ஆக்கம் ஒட்டுமொத்த மகாபாரதத்திற்கும் ஒட்டுமொத்த இந்தியப்பண்பாட்டுக்கும் எதை அளிக்கிறது என்பதை அறிய ஒரு நுண்வாசிப்பு தேவை. சொல்லப்படாதவற்றை நோக்கிச் செல்லும்கற்பனை தேவை. அதை வாசகர் எப்படி உள்வாங்குகிறார் என்ற ஒரு பதற்றம், உள்வாங்குவதை கடிதம்மூலம் அறியும்போது உவகை, இதுதான் வெண்முரசை எழுதவைக்கும் விசை.

ஆனால் இத்தனை விளம்பரங்களுக்குப் பின்னரும் பத்துகோடித் தமிழர்களில் அவர்கள் முந்நூறுபேர்தான். இணையம் எல்லாம் இல்லாமலிருந்தபோதும் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது முன்விலைத்திட்டத்தில் முந்நூறு பிரதிகள் விற்றது. கிழக்கு மிகவிரிவாக விளம்பரம் கொடுத்தும்கூட இந்த வழக்கமான முந்நூறுபேர்தான்.அந்த எண்ணிக்கை ஏறவும் இல்லை இறங்கவுமில்லை.

அதை ஏமாற்றத்துடன் சொன்னபோது இன்னொரு நண்பர் சொன்னார், முந்நூறு அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் என்பது தமிழின் சூழலில் வேறு எவருக்குமே அமையாத மிகப்பெரிய அதிருஷ்டம் என்று. உண்மையாக இருக்கலாம். அவர்களுக்கு நன்றி.

முந்தைய கட்டுரைஃபைல்கள்
அடுத்த கட்டுரைகாடு வாசிப்பனுபவம்