பண்பாட்டாய்வும் எம்.டி.எம்மும்

1

ஜெமோ

உங்கள் தளத்தில் வரலாறு பற்றிய விவாதம் பார்த்தேன். எம்.டி.முத்துக்குமாரசாமி உங்கள் திருப்பூர் உரைபற்றி எழுதிய இந்தக்குறிப்பைப் பார்த்தீர்களா? இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா? அதிலுள்ள கேள்விகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று அறியவிரும்பினேன்.

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

அதை அப்போதே பார்த்தேன். ஒரு புன்னகையுடன் கடந்து வந்துவிட்டேன்

முதல்விஷயம் இதைப்பற்றியெல்லாம் ஆய்வாளராக நின்று ‘அதிகாரபூர்வமாகப்’ பேசும் தகுதி எம்.டி.முத்துக்குமாரசாமிக்குக் கிடையாது. அவர் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். ஓர் ஆங்கிலப்பேராசிரியர். எண்பதுகளில் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி சவேரியார் கல்லூரி நாட்டாரியல் மையத்திற்கு வந்தபோது பலர் திடீர் நாட்டாரியலாளர்களாக ஆனார்கள். அவரும் அதில் ஒருவர்.

அதன்பின் சில தனிப்பட்ட வாழ்க்கைச்சிக்கல்களால் அப்பணியில் இருந்து வெளியேறி ஃபோர்டு ஃபவுண்டேஷன் நிதியால் நடைபெற்ற ஒரு நாட்டாரியல் ஆய்வு அமைப்பில் சிலகாலம் டிரஸ்டியாக இருந்தார். அந்த அமைப்பு பெரும் நிதிபெற்று ஒப்புக்குச் சில தரவுகளைத் திரட்டி ஆவணப்படுத்திய ஒரு நிறுவனம்.

அந்தத் தரவுகளை சம்பிரதாயமான கட்டுரைகளாக ஆக்கி அவற்றை அவர்களே உலகளாவிய ஒரு குழுவாக நடத்திக்கொள்ளும் இதழ்களில் பிரசுரித்தார். அவர்களே நடத்திக்கொள்ளும் கருத்தரங்குகளில் பங்கேற்று அவற்றை முன்வைத்தார். நாட்டாரியலிலோ வரலாற்றிலோ ஒரு கருத்துச்சொல்லும் அளவுக்கு அல்லது ஒரு ஆய்வாளரால் கருத்தில்கொள்ளப்படும் அளவுக்கு அவர் முக்கியமான ஆய்வாளரோ மதிக்கப்படும் நூல் எதையும் எழுதியவரோ அல்ல.

இந்த எல்லை அவருக்கு உள்ளூரத்தெரியும். பொதுவாக இணையம் ,ஃபேஸ்புக்கில் கொஞ்சம் ஃபிலிம் போடுவது நம்மூர் வழக்கம். அதைச்செய்கிறார், செய்யட்டும் என்பது என் எண்ணம். இந்த தன்னுணர்வு காரணமாக விவாதங்களில் ஒரு மேட்டிமைத்தனத்தை பாவனைசெய்கிறார். எதையும் நக்கலும் நையாண்டியுமாகப் பேசும்போது அவர் ஞானத்தின் உச்சியில் நின்றுகொண்டிருப்பதாக அவருக்குத் தோன்றுகிறது. அவரால் ஒரு தெளிவான பார்வையை அளிக்கும் கட்டுரையை, வாசிக்கத்தக்க புனைவை எழுதமுடியவில்லை என்ற குறையை அதன்மூலம் அவர் கடப்பதாக நினைக்கிறார்.

அவர் சொல்லிக்கொள்ளும் அல்லது பாவனைசெய்யும் இடம் அவருக்கு இல்லை என்று தெரிந்தாலும், நான் மதிக்கும் நாட்டாரியல்- பண்பாட்டாய்வு அறிஞர்களின் வரிசையில் அவரை நினைத்துக்கூட பார்க்கமுடியாது என்றாலும், வாசிப்பவர், இயல்பான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர் என்பதனால் தனிப்பட்ட முறையில் அவர்மேல் எனக்கு மதிப்புண்டு. அவரது தோரணைகளில் இருந்து கொஞ்சம் இயல்புநிலைக்கு வரமுடிந்தால் சில நல்ல கட்டுரைகளை அவர் எழுதமுடியும் என்பது என் எண்ணம்.

அவரது இந்தக்குறிப்பை நான் கடந்துபோகக் காரணம் ஓர் உலகப்பேரறிஞர் எளிய தமிழ் எழுத்தாளனைக் குனிந்து பார்த்து நையாண்டி செய்யும் பாவனையில் இது எழுதப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில் சொல்வது? இந்தப்பாவனையைத்தான் முதலில் உடைக்கவேண்டும். அவர் மீதிருந்த பிரியத்தால் அதைச்செய்யத் தோன்றவில்லை

முதலில் உண்மையிலேயே ஆய்வுகள் செய்யும் மதிப்புக்குரிய ஆய்வாளர்கள் புனைவெழுத்தாளனின் அவதானிப்புகளை அந்த வகையான நையாண்டியுடன் பார்க்கமாட்டார்கள். அவன் சொல்லக்கூடிய தளம் ஒன்று உண்டு என அவர்களுக்குத்தெரியும். அ.கா.பெருமாள் போல திரிவிக்ரமன்தம்பி போல சாதனைகளைச் செய்த ஆய்வாளர்களை நான் பல்லாண்டுகளாக நேரடியாக அறிவேன். அவர்களின் ஆய்வுகள் அனைத்திலும் என் சிறு பங்களிப்பும் உண்டு. புனைவெழுத்தாளனின் பார்வையை அவர்கள் தங்கள் துறையின் முறைமைக்கு உட்பட்டு பரிசீலிப்பார்கள். எம்.டி.எம்மின் தோரணை தனக்கென அடையாளம் கோரும் அமெச்சூர் பேராசியருக்கு உரியது

அவரது இந்தக்கட்டுரையையே எடுத்துக்கொள்வோம். சங்குக்குள் கடல் என்ற தலைப்பு பாதசாரியின் மீனுக்குள் கடல் என்ற தலைப்பில் இருந்து எடுக்கபட்டது என்கிறார். சரி அறியாமை, இருக்கட்டும். அந்த மொழியைப்பாருங்கள். மீனுக்குள் கடல்’ கவிதைத் தொகுதியை எழுதிய பாதசாரி தன் கவிதையின் தலைப்பு சங்குக்குள் ஓலமிடும் கடலாக ஜெயமோகனால் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து நெஞ்சில் அடித்துக்கொண்டு விம்மியிருக்க வேண்டும் எதைப்புரிந்துகொண்டு இந்த நக்கலைச் செய்கிறார்? இது அறியாமையின் ஒரு பிரகடனம் அன்றி வேறென்ன?

சங்குக்குள் கடலின் ஓசை உண்டு என்றும் அதைக் காதில்வைத்தால் கேட்கமுடியும் என்றும், சங்கின் ஒலி கடலின் ஒலியே என்றும் கூறப்படுவது மகாபாரதம் முதலே இந்தியப் புராணமரபில் இருந்துவரும் படிமம். அந்தக் குறிப்புதான் இங்கே அளிக்கப்படுகிறது. மேலும் சங்கு என்பது குழந்தைக்கு அமுதூட்ட பயன்படுத்துவது. அதனுள் கடல் என்பது வாசகன் கற்பனையில் மேலும் விரிவடையும் ஒரு படிமம். அந்த உரையின் சாரம் அது. என் உரை என்பது கல்வித்துறை சார்ந்த வரலாறு பண்பாட்டு ஆய்வு அல்ல. அது எழுத்தாளனின் உரை. அது படிமங்கள், கவித்துவக்கூற்றுக்கள் வழியாகத் தொடர்புறுத்துவது.

சங்குக்குள் கடல் என்பதை ஒரு பேராசிரியர் அறியாமலிருப்பது அல்லது மேற்கொண்டு கற்பனை செய்யமுடியாமலிருப்பது பெரியபிழை இல்லை. ஆனால் தான் அறியாமலிருக்கவும் முடியும் என்ற எண்ணம் ஓர் அடிப்படைத்தன்னடக்கம் இருக்கலாமில்லையா? பாவனையான ஞானபீடத்தின் உச்சியில் அமர்ந்திருந்து நக்கலடிக்கையில் இவரிடம் எதைத்தான் சொல்லமுடியும்? அவரது அந்தப்பாவனைக்குள் உள்ள தாழ்வுமனப்பான்மையை எப்படிக் கையாள்வது?

எம்.டி.எம்மின் அந்த கட்டுரையின் அத்தனை வரியும் பொத்தாம்பொதுவான புரிதலின் விளைவான அபத்தம். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப்பேச எனக்குப் பொறுமை இல்லை. ஒன்றமட்டும் சொல்கிறேன். நீலி ஓர் அழிவுசக்தியாக இருப்பதனால் அவள் அன்னை தெய்வம் அல்ல என்று சொல்கிறார்.

இந்தியாவின் அனைத்து அன்னைதெய்வங்களும் அழிவுசக்திகளும்கூடத்தான். ஆக்கமும் அழிவும் இருபக்கங்களாக கொண்டவளாகவே அன்னைதெய்வங்கள் அனைத்தும், காளி உட்பட, உருவகிக்கப்பட்டுள்ளனர். குமரிமாவட்ட ஆலயங்களில் அக்கா தங்கை என இரு தெய்வங்களாக அவர்கள் இருப்பார்கள். அக்கா அருள்வடிவமும் தங்கை கொலை வடிவமும் கொண்டிருப்பள். அந்தத் தங்கைதான் குழந்தையை வாயில் கடித்திருப்பாள். அதுவும் அன்னைதான். அந்தத் தரிசனத்தை என் புனைகதைகளிலேயே பலமுறை எழுதியிருப்பேன்.

இந்த அழகிய முரண்பாடு இந்திய சாக்தமரபின் சாரம். இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் களஆய்வு செய்யவேண்டும். பண்பாட்டின்முன் கொஞ்சம் பணிவுவேண்டும். ஆங்கிலநூல்கள் வழியாக தமிழ்ப்பண்பாட்டை அறிந்து அசட்டுத்தெனாவெட்டு ஒன்றை பாவனை செய்வதன் விளைவு எம்.டி.எம்மின் எழுத்து. இத்தகைய நுட்பமான ஒரு விஷயத்தை எப்படி அவரது அந்தப்பாவனையுடன் விவாதிக்கமுடியும்? ஆகவே தவிர்த்துச்சென்றேன்

நீலி போன்ற ஒரு படிமத்தை ஆய்வாளன் அதன் கிளைகள் வழியாக சென்று தொகுத்து ஆராயலாம், அது அவன் வழி. ஆனால் அச்சொல்லில் இருந்து, அகஅனுபவங்களில் இருந்து செல்லும் ஒருபயணம் புனைவெழுத்தாளனுடையது. அது நீலி என்ற ஆழ்படிமம் நோக்கிச் செல்கிறது. அந்த ஆழ்படிமத்தின் பல்வேறு வடிவங்களே நீலியின் பல்வேறு கதைகள் என அது அறிகிறது.

எழுத்தாளன் தரவுகளைத்திரட்டி தொகுத்து முடிவுகளுக்கு வரும் வரலாற்றாய்வுமுறைமையைக் கொண்டவன் அல்ல. அதாவது செங்குத்தான, மரம்போல எழுந்துவளரும் ஆய்வுமுறை அல்ல அவனுடையது. அவன் முன்வைப்பது கிடைமட்டமான, கொடிபோலப் பரவிச்செல்லக்கூடிய ஓர் ஆய்வுமுறை. தனிமனித அனுபவமும் அதன்மீதான உள்ளுணர்வுசார்ந்த திறப்புகளும்தான் அதன் வழிமுறை. உணர்வுசார்ந்த அணுகுமுறை அது.

அது முறைமைசார் ஆய்வு அல்ல. முறைமைக்கு வெளியே உள்ள இன்னொருவகை ஆய்வு. நவீன வரலாற்றாய்வை, பண்பாட்டாய்வை அறிந்த எவரும் அந்த அணுகுமுறையை நிராகரிக்கமாட்டார்கள். அதன் முறைமையின்மையே அதன் வலிமை என்று எண்ணுவார்கள். ஷோப்பனோவர் முதல் டில்யூஸ் வரை இதை பலகோணங்களில் பலதிறப்புகளுடன் பலர் எழுதியிருக்கிறார்க்ள்.

எம்.டி.எம் மேற்கோள்காட்டும் வெள்ளைக்கார ஆய்வாளர்கள் ஒருவேளை அதை அறிந்திருப்பார்கள். அவர்களிடம் நான் பேசலாம். எம்.டி.எம்மிடம் பேசமுடியாது. நிலவில் ஆம்ஸ்டிராங் காலைவைத்தபோது சிவபெருமானின் தலையை வெள்ளைக்காரன் மிதித்துவிட்டான் என்று புளகாங்கிதம் அடைந்த ஓர் ஆசிரியர் எனக்கிருந்தார். அந்த மனநிலைகொண்ட எளிய இந்தியப்பேராசிரியர் அவர். நான் பேசிக்கொண்டிருக்கும் தளத்திற்கு அவர்கள் வந்துசேர நாட்களாகும்

எம்டி.எம் அவர் வாசித்த ஆங்கில நூல்களை மேற்கோளாக்கிப் பேசும்போது எனக்கு அது எப்போதும் உதவியாக இருக்கிறது. ஆகவே அவர்மேல் மதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரது சினிமா விமர்சனங்களைக் காணும்போது இவரது உண்மையான எல்லை இதுதானோ என்ற எண்ணமும் எழுகிறது. இதுபோன்ற கட்டுரைகள் அதை உறுதிப்படுத்துகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி: சந்திரசேகர்
அடுத்த கட்டுரைஇசைக்குள் பிராமணர்கள் எப்போது வந்தனர்?